வெள்ளி, நவம்பர் 15, 2019

கட்டப் பஞ்சாயத்து (அ) பாபரி மஸ்ஜித் தீர்ப்பு 2.0

கடந்த 9/11 2.0 19இல் பாபரி மஸ்ஜித் நிலத்துக்கு இரண்டாவது கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வந்திருக்கிறது - இம்முறை உச்ச நீதிமன்றத்திலிருந்து.

முதல் கட்டப் பஞ்சாய்த்துத் தீர்ப்பைப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள இங்குச் சொடுக்குக!


சனி, ஜூன் 18, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 32

பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட ஈஸா நபி (அலை) அவர்களைக்கூட இந்த ஸூஃபி அறிவிலிகள் அத்துவைதச் சிலுவையில் அறையத் தவறவில்லை. அவரையும் கடவுளாக, கர்த்தராக வழிபடுபவர்கள்தாம் இன்று பெரும்பான்மை ஜனத் தொகையினராவர்.

இந்த அத்துவைதக் கோட்பாட்டை அடித்துத் தகர்த்துவிட்டு, இறுதி நாள்வரை ஏகத்துவ வழிபாடு ஒன்றை மட்டுமே இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக இறைவனால் நபியாக அனுப்பப் பட்டவர்கள்தாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார். அவர்கள் தம் காலத்திலேயே இந்தத் தூய பணியை நிலை நிறுத்தி, அதில் மகத்தான பெருவெற்றியும் கண்டார்கள். அத்துவைதத்துக்கு அடிகோலக் கூடிய சிலைகள் தகர்ந்தன. தரை மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருந்த சமாதிகள் தவிடு பொடியாயின. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் எனும் கொள்கை ஓங்கி வளர்ந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார் எவருமிலர். இருப்பினும் அவர்கள்கூட அல்லாஹ்வின் அடிமையாகிய அடியார்தாம் என்பதை இஸ்லாம் மிக அழுத்தந் திருத்தமாக வரையறுத்து வலியுறுத்திக் கூறியுள்ளது.

நம்முடைய ஈமானைப் பறை சாற்றும் உயிர்க் கலிமாவின் உன்னத வாசகங்களைப் பாருங்கள்:

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ;
வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியுரைக்கிறேன். அவன் ஏகன்; அவனுக்கு இணை கிடையாது. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நிச்சமாக அவனுடைய அடியாரும் தூதருமாவார் எனவும் சாட்சியுரைக்கிறேன்.

இதுதான் நமது மூல மந்திரத்தின் முழுப் பொருளாகும்.

இந்தக் கலிமாவில் அல்லாஹ் யார்? நபி ஸல்லல்லாஹி அலைஹி வ ஸல்லம் யார்? என்பது மிகத் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப் பட்டுள்ளனர். அல்லாஹ்வுக்குரிய சிறப்பான தன்மைகள் இரண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சிறப்பான தன்மைகள் இரண்டும் இங்குப் பளிச்செனக் காணக் கிடக்கின்றன.

அல்லாஹ் ஒரே ஒருவன்தான். அவனுக்கு எத்தகைய கூட்டும் இல்லை என்பது அல்லாஹ்வுக்குரிய சிறப்பியல்புகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்தாம்; அவர்கள் அவனுடைய தூதராயிருக்கிறார்கள் என்பது நபிகளாரின் சிறப்பியல்புகளாகும்.

இந்தக் கலிமா, அத்துவைதக் கோட்பாட்டைப் புதை குழிக்கு அனுப்புவதற்காகவே புறப்பட்டு வந்தது போல் இல்லையா? ஆம். அதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களுமான ஸஹாபாப் பெருமக்களும் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள் என்பது இஸ்லாமிய வரலாறாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைவிட அல்லாஹ்வுக்கு நெருங்கிய மனிதர் வேறு யார் இருக்கிறார்கள்? அவர்களே அல்லாஹ்வின் அடியார்தாம் என்பதை நாம் சாகும் தறுவாயிலுங்கூட நினைவில் இருத்தத் தவறக் கூடாது.

இந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் அல்லாஹ் வந்து குடியிருந்து கொண்டான் என்றும் எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அல்லாஹ்தான் அல்லது அல்லாஹ்வின் ஒரு கூறுதான் என்றும் எவராவது கருதுவாரானால் அவர் கலிமாவைச் சரியாக விளங்காத பித்தராகத்தான் இருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு அல்லாஹ்வை இணைத்து அத்துவைதம் பேசுவதே மாபெரும் பாவ காரியமாக இருக்கும்போது, வேறொரு மனிதரைக் கொண்டு அல்லாஹ்வுடன் கூட்டாக்கி அத்துவைத அவியல் சமைப்பது எவ்வளவு தவறான செயல்?

இந்தத் தவறான விஷ உணவுதான் குணங்குடி மஸ்தான் பாடல் முழுக்கப் பரிமாறப் படுகிறது. குணங்குடி மஸ்தான் நூலின் முதற்பாடலை இங்குப் பார்ப்போம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மார்ச் 24, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 31

றைவனைத் தவிர உள்ள மற்றெல்லாமும் அவனது படைப்புகளே. அவனே படைப்பாளன். மற்றவை அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவனைப்போல எதுவுமில்லை. தன்னுடைய எல்லாப் படைப்புகளின் எல்லா இயக்கங்களையும் படைத்தவனாகிய அந்த அல்லாஹ் அனைத்தையும் உற்று நோக்குகின்றான்; நன்கு செவியுறுகிறான்.

இஃது இங்ஙனமிருக்க, குணங்குடி மஸ்தானோ படைப்புகள் யாவும் அல்லாஹ்வாகவே இருப்பதாகப் பிதற்றுகிறார். அவனே சூரியனாக, சந்திரனாக, ஒன்றாக, இரண்டாகவெல்லாம் இருப்பதாகக் கூறி இஸ்லாத்தைப் பரிகசிக்கிறார். மஸ்தான் எனும் இந்தப் பித்தருடைய இப்பிதற்றல்களுக்கு வேறுபல சுவையான பின்னணிகள் இருக்கின்றன.

குணங்குடி மஸ்தானுடைய ஆன்மீகக் குருநாதர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஆவார். முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை இவர் அல்லாஹ்வுக்கு இணையானவர் என்றே கருதுகிறார், கதை விடுகிறார். இவருடைய பாடல்களில் பெரும்பாலானவற்றில் 'குணங்குடி ஆண்டவன்' என்று இவர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியையே சுட்டுகிறார்.

'குணம்' என்பதை அல்லாஹ்வாகவும் அந்த அல்லாஹ்வாகிய குணம் முழுவதையும் தன்னுள் குடியிருத்திக் கொண்டவர் முஹைதீன் அப்துல் காதிர் எனவும் கருதுகின்றார் குணங்குடி மஸ்தான். எனவேதான் "குணங்குடி வாழும் முஹையித்தீனே!" என, பாட்டுக்குப் பாட்டுப் பாடிச் செல்கிறார்.

அதாவது, முஹையித்தீன் அப்துல் காதிரிடம் அல்லாஹ்வே குடியிருந்தான் என்ற அத்துவைதக் கோட்பாடுடையவர் இந்த வழிகெட்ட கவிஞர். அத்துவைதம் என்றால் என்னவென்று இங்குத் தெரியக் கடமைப் பட்டிருக்கிறோம்.

'துவைதம்' என்பதன் எதிர்ச் சொல்லே 'அத்துவைதம்' ஆகும். ஆண்டவன் (பரமாத்மா) வேறு; அடியான் (ஜீவாத்மா) வேறு; இவையிரண்டும் தனித்தனியானவை. ஒன்றோடொன்று எக்காலத்திலும் கலக்க முடியாதவை என்னும் கொள்கையே 'துவைதம்' எனப்படும். இந்தக் கொள்கையின்படி ஆண்டவன், எப்போதும் ஆண்டவனேதான். அடியான், எப்போதுமே அடியானேதான். அடியான் எவ்வளவுதான் புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டு எம்பிக் குதித்தாலும் - அதிகபட்சம் - ஆண்டவனுக்கு மிகமிக நெருக்கமான அடியானாகத்தான் ஆகமுடியுமேதவிர ஆண்டவனுக்கு இணையானவனாக, ஆண்டவனோடு கலந்துவிட்டவனாக ஆகவே முடியாது.

ஆனால், இதற்கு நேர் மாற்றமான கொள்கையைக் கொண்டுள்ளது அத்துவைதம் ஆகும். ஆண்டவனும் (பரமாத்வாவும்) அடியானும் (ஜீவாத்மாவும்) வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றேதான் என்பதே அத்துவைதக் கோட்பாடாகும். இந்த அத்துவைதக் கோட்பாட்டுக்காரர்கள் ஆண்டவனுக்கு உகந்தவர்களாக இவர்கள் நம்பும் அடியார்களையும் ஆண்டவனாகவே காண்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே இந்த அத்துவைதக் கோட்பாடு, பல வடிவங்களில் பாரெங்கும் பரவியிருந்தது.

பழமையான கிரேக்க, ஃபார்ஸித் தத்துவங்களும் நம் நாட்டு சைவ-வைணவச் சித்தாந்தங்களும் இந்த அத்துவைதக் கோட்பாடுகளையே மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களை அவர்கள் காலத்துக்குப்பின் மக்கள் கடவுளாகக் கருதி வழிபடலாயினர். அதற்கு அடிப்படையான காரணம், இந்த அத்துவைதக் கொள்கைதான். அல்லாஹ் வேறு, அடியார் வேறு என்பதல்ல; அல்லாஹ்வும் அடியாரும் ஒருவரேதான் என்று அம்மக்கள் எண்ணலாயினர்.

எனவே, திசைமாறிய மானுடர்கள் ஏகத்துவ விதையை வீசியெறிந்து விட்டு, பலதெய்வ வழிபாட்டுக் காளான்களை விளைத்தெடுத்துக் கொண்டார்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜனவரி 15, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 30

"னாகி, ஊனில் உயிராகி ..." எனத் தொடங்கும் பாடலில் வானாகி, கானாகி என்றெல்லாம் யாரைச் சொல்கிறார் குணங்குடி மஸ்தான்?

அல்லாஹ்வைச் சொல்கிறாரா? நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சொல்கிறாரா? முஹ்யித்தீன் அப்துல் காதிரைச் சொல்கிறாரா?
அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

யாரைச் சொல்வதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைப்படி இது மாபெரும் முரணுடையதாகும்.

"இப்பாடலில் இறைவனைத்தான் ஊனாகி, உயிராகி ... என்றெல்லாம் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்" என எஸ்.எம். சுலைமான் ஐஏஎஸ் தமது 'இசுலாமியத் தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்' எனும் நூலில் 'ஞான இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு' எனும் தலைப்பில் குறிப்பிடுகிறார்.

ஊனாக இருப்பவனும் இறைவன்தான்; உயிராக இருப்பவனும் அவன்தான்; ஒன்றாக இருப்பவனும் அவனே; இரண்டாக உள்ளவனும் அவனே; உள், வெளி, ஒளி, இருள், ஊர், பேர், காடு, மலை, கடல் ஆகிய எல்லாமாகவும் அவனே இருக்கிறான். காட்டு விலங்குகளாக இருப்பவனும் அவன்தான். இரவு, பகல், சூரியன், சந்திரன் மட்டுமின்றி, காணும் பொருட்கள், நான், நீ அவன், அவள், நாதம், பூதம் இவை ஒவ்வொன்றாக இருப்பவனும் அவன்தானாம்.

இதன்படி சூரியனை, சந்திரனை, மலையை, கடலை, ஒளியை, இருளை, ஒன்றை, இரண்டை, யாரோ ஓர் அவனை அல்லது அவளை, நாதத்தை, பூதத்தை, காட்டிலுள்ள யானை, புலி, சிங்கம் முதலிய விலங்குகளை, கல்லை, மண்ணை, கண்ட கண்ட பொருட்களை எதை வணங்கினாலும் அல்லாஹ்வை வணங்கியதுபோல்தான் என்று ஆகவில்லையோ?

"அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை; எதுவுமில்லை. அவன் ஏகன், அவனுக்கு இணையாக யாருமில்லை; எதுவுமில்லை எனச் சான்றுரைக்கிறேன்" எனும் இந்த உயிரினும் இனிய உறுதிப் பிரமாணத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி வெளிப்படையாக ஒத்துக் கொண்ட எவரும் இப்படிக் கூறத் துணிவார்களா?

"(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான். ... மேலும் அவனுடன் ஒப்பிடத் தக்கது எதுவுமேயில்லை" (அல்குர் ஆன் 112:001-004).
"அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். உங்களிலிருந்தே (உங்கள்) ஜோடிகளையும் அவன் உங்களுக்காகப் படைத்தான். கால்நடைகளையும் ஜோடி-ஜோடியாகப் படைத்தான். உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்" (அல்குர் ஆன் 042:011).
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, நவம்பர் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 29

இவருக்குக் 'குணங்குடியார்' என்ற பெயர் ஏன் வந்தது? இவர் அதை ஒரு குறிச்சொல்போல் தமது பாடல்களில் கூறுகிறார். அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லும்போது குணங்குடி ஆண்டவன் என்கிறார்:
ஆண்டவன் என்செய்வானோ - குணங்குடி
ஆண்டவன் என்செய்வானோ
ஆண்டவன் அணைத்து என்னை அருகில் வைத்திடுவானோ
தீண்டியும் பார்க்காமல் தெருவில் விட்டிடுவானோ
எனப் பாடுகிறார்.
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே
எனப் போற்றும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்குக் குணங்குடி என்ற அடையைக் கொடுக்கிறார்.
சற்குணங்குடி கொண்ட ஷாஹுல் ஹமீதரசரே
எனச் சொல்லும்போது நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களோடும் குணங்குடியை இணைத்துப் பேசுகின்றார்.
இனி, தன்னைப் பற்றிப் பாடும்போதும் குணங்குடியான் எனச் சுட்டுகிறார்:
ஐயன் குணங்குடியானை அன்றி வேறு
உண்டென்று உள்ளாய்ந்து பார்த்தேன்
ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும்
என்னுள்ளாய்க் காணேன்
ஐயன் குணங்குடியானே யானே
என்று அறிந்த பின்பு, என் அறிவாய் நின்ற ஐயன்
குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே
என அமைகிறது பாடல்.

ஆக, இவருடைய பார்வையில் அல்லாஹ், முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாஹுல் ஹமீது ஆகியோரும் இவரும் குணங்குடியார்கள்தாம். இவருடைய பாடல் போக்கைப் பார்த்து, இந்த நால்வருள் யாரைக் குணங்குடியான் எனச் சுட்டுகிறார் என்பதை, படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ரு சோற்றுப் பதமாக இங்குத் தரப்பட்டுள்ள பாடல்களையும் இவரது நூலிலுள்ள இன்னபிற பாடல்களையும் ஒருங்கு நோக்கிப் பார்க்கும்போது, "எல்லாரும் அல்லாஹ்வே" என்ற கொள்கையை - வஹ்தத்துல் உஜூத் - எனும் அத்துவைதக் கொள்கையை உடையவராகக் குணங்குடி மஸ்தான் இருந்துள்ளார் எனும் முடிவுக்கு வருகின்றோம்.

இதன்படி முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களும் இவருடைய பார்வையில் அல்லாஹ்வாகவே படுகின்றனர். இவருடைய உள்ளத்தில் அல்லாஹ் இருக்கிறானாம். அதனால் இவரும் அல்லாஹ் ஆகிவிடுகின்றார்.

"ஐயன் குணங்குடியானே யானே என்று அறிந்த பின்பு ..." எனும் வரியில் குணங்குடியாகிய அல்லாஹ் நானே என்பதைத்தானே சுட்டுகிறார். இன்னும் காண்கின்ற பொருள் எல்லாமே இறைவன்தான் என்பதைப் பறைசாற்றும் பித்தன் மஸ்தானின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்:
ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய் ஒன்றாய் இரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகிக்
கானாகி அலையாகி அலைகடலுமாகி மலை
கானக விலங்குமாகிக்
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள் எவையுமாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி
நாடும் ஒளிபுரிய அடியெனும் உமை நம்பினேன் நன்மை செய்து ஆளுதற்கே
வானோரும் அடிபணிதலுள்ள நீர் பின்தொடர வள்ளல் இரசூல் வருகவே
வளரும் அருள் நிறை குணங்குடி வாழும் என் இரு கண்மணியே முகியித்தீனே.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், செப்டம்பர் 30, 2010

கட்டப் பஞ்சாயத்து (அ) பாபரி மஸ்ஜித் தீர்ப்பு

ந்திய வரலாற்றில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற 'பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?' எனும் (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் இன்று (30.09.2010) அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னவ் பெஞ்ச் தீர்ப்பு(கள்) வெளியிட்டிருக்கிறது.
http://www.youtube.com/watch?v=JIO6nme7EuA
தீர்ப்பின் சுருக்கம் என்னவென்றால், பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதற்கு பாபரின் பெயரால் பத்திரப்பதிவு (ரிஜிஸ்ட்ரேஷன்) இல்லை; பட்டாவும் இல்லை. அதனால் அதை 3 பங்கு வைத்து, அதில் ஒரு பங்கை போனால் போகிறதென்று முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் மீதி இரண்டு பங்கையும் இந்துக்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் தீர்ப்பாகியுள்ளது.

இந்துக்களிடம் பத்திரமோ பதிவோ பட்டவோ இருக்கிறதா? என்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ஏனெனில், தீர்ப்புக்கு முன்னரே "மத நம்பிக்கையில் நீதி மன்றங்கள் குறுக்கிடக் கூடாது" என்று இந்துமத அமைப்புகள் பலமுறை நீதிபதிகளை அன்புடன் எச்சரித்திருக்கின்றன. அந்த எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

அயோத்தியைப் பற்றிய உண்மையான இந்து மதநம்பிக்கை என்ன?
இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில்தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்தப் பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது.  16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை.
11ஆம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார். தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
- வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள 'வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும்' என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். 1990 வெளியீடு பக்கம்-34,35).
மத்திய காலம்வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தைவிட, சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில்தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது ...
- வரலாற்றாசிரியர் சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியது (இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89).

1850 வாக்கில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக ஆற்காட்டு மவ்லவீ அஹ்மதுல்லாஹ் ஷா தமிழகத்திலிருந்து புறப்பட்டு, சென்ற வழியிலேயே விடுதலைக்கான வீர உரையாற்றி ஆயிரக்கணக்கான இந்து-முஸ்லிம் இளைஞர்களைத் தம் "ஜிஹாது"ப் படையோடு அழைத்துக் கொண்டு அயோத்திவரை சென்று ஆங்கிலேயரை எதிர்கொண்டார்.

பிற்காலத்தில் எதிரியாலும் சிலாகிக்கப்பட்டது அஹ்மதுல்லாஹ் ஷாவின் "ஜிஹாத்" வீரம்:
"The Moulvie was a very remarkable man. Of his capacity as a military leader, many proofs were given during the revolt... No other man could boast that he has twice foiled Sir Colin Campbell in the field. -Colonel G.B. Malleson in his 'Indian Mutiny'.

ஒரு கட்டத்தில், ஆங்கிலேயர் படை இவரால் முற்றுகையிடப்பட்டு உண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் பட்டினி கிடந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் அனுமான் ஹண்ட் கோயில் பூசாரிகளால் உணவு வகையில் உதவியளிக்கப்பட்ட ஆங்கிலேயப்படை, பின்னர் அதற்குப் பிரதியுபகாரமாகப் பூசாரிகளுக்கு ஒரு பரிசு வழங்கினர் - பாபரி பள்ளி வளாகத்தில்.அதுதான் 'ராம் சபூட்ரா (இராமர் திண்ணை)'!
That much before 1855 Ram Chabutra and Seeta Rasoi had come into existence and Hindus were worshipping in the same. It was very very unique and absolutely unprecedented situation that in side the boundary wall and compound of the mosque Hindu religious places were there which were actually being worshipped along with offerings of Namaz by Muslims in the mosque.

"பஜனை பாடிக் கொள்ள" என்று கூறி வெள்ளைக்காரனிடம் 'பரிசு' வாங்கிக் கொண்ட ராம் சபூட்ராதான் 1992 டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் முதல் அடிப்படைக் கடப்பாறை.

"பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தின்கீழ் இராமனுக்குக் கோயில் இருந்ததா?" என்பதை விசாரித்துச் சொல்லுமாறு நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தைக் கேட்டபோது, "அது எங்கள் வேலையில்லை" என்று உச்சநீதிமன்றம் பதிலளித்து இருந்தது.

இப்போது அலஹாபாத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி ஷர்மா தனது தீர்ப்பில், "கடவுள் இராமன் பிறந்த இடத்தின் மீதுதான் பாபர் பள்ளிவாசல் கட்டினார்" என்று நேரில் நின்று பார்த்ததுபோல் சூடம் கொளுத்தி இருக்கிறார்

நீதிபதி ஷர்மாவுக்கு 'அனுபோகச்சட்டம்' என்றால் என்னவென்றும் தெரியவில்லை; இந்துமத நம்பிக்கை, வழிபாட்டு ஆகமம் போன்றவையும் தெரியவில்லை.

ஒரு கோயிலில் உள்ள சிலைக்கு 12 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் செய்யவில்லை என்றால் அந்தச்சிலை, கடவுள் சிலையாகக் கருதப்பட மாட்டாது. அது இருக்கும் இடத்தைக் கோயிலாகவும் கொள்ளக் கூடாது.

எனில், 22.12.1949 இரவில் திருட்டுத்தனமாக பாபரி மஸ்ஜிதுக்குள் வைக்கப்பட்ட சிலை கடவுளுமல்ல; அது இருந்த இடம் கோவிலுமல்ல.

போலவே, வழிபாடு நடந்து கொண்டிருந்த இராமன் கோயிலை இடித்துவிட்டு பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது எனும் குறிப்பு எங்குமே காணப்படவில்லை.

இவற்றையெல்லாம் மீறி, காவிக்கூட்டத்தின் ஊதுகுழலாகத்தான் நீதிபதி ஷர்மாவின் தீர்ப்பு அமைந்திருகிறது:
"... Justice D V Sharma ruled that the disputed site is the birth place of Lord Ram and that the disputed building constructed by Mughal emperor Babur was built against the tenets of Islam and did not have the character of the mosque ..."
"... Justice DV Sharma in his minority verdict said the “disputed structure cannot be treated as a mosque as it came into existence against the tenets of Islam ..."
  1. சர்ச்சைக்குரிய கட்டடம் ராமன் பிறந்த இடத்தில் கட்டப்பட்டது.
  2. சர்ச்சைக்குரிய கட்டடம் மொகலாய மன்னன் பாபரால் கட்டப்பட்டது.
  3. அந்தக் கட்டடம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிராகக் கட்டப்பட்டு, மஸ்ஜித் என்பதற்கு அருகதையற்றதாக இருந்தது.
  4. சர்ச்சைக்குரிய கட்டடம், மஸ்ஜிதாகக் கருதப்படக் கூடாது.
ஆகியன நீதிபதி ஷர்மாவின் காவிக்கருத்துகள்.

இந்திய முஸ்லிம்களின் கேள்வி என்னவென்றால், "மஸ்ஜிதாகக் கருதுவதா? வேண்டாமா? அங்குத் தொழுவதா? கூடாதா? என்பதெல்லாம் முஸ்லிம்களுடைய கவலைகள், பிரச்சினைகள். அதைப்பற்றிக் கருத்துச் சொல்ல நீ யார்?"

"1,2,3,4இல் உள்ளவற்றைச் சொல்லிவிட்டு, அப்புறம் என்ன ...க்கு 1/3 நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்று தீர்ப்புச் சொல்கிறாய்?"
  • 'பாபர் பள்ளிவாசல்' எனப் பிற்பாடு வழக்கில் வந்தது பாபரினால் கட்டப்பட்டது அல்ல என்பதும்
  • அந்தப் பள்ளியின் தொன்மைப் பெயர் 'லோடி மஸ்ஜித்' என்பதும்
  • "அயோத்தியை ஆட்சி செய்து கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468இல் கட்டப்பட்டது என்று அந்தப் பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது" என்று தொல்லியலாளர் ஷெர்சிங் (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162) ஆவணப் படுத்தியிருப்பதும்
நீதிபதி ஷர்மாவுக்குத் தெரியாது என்று நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறுவழி?

நீதியைத் தகர்க்கும் காவிக்கடப்பாறையின் இலக்கு அலஹாபாத்தோடு நின்றுவிடுமா அல்லது உச்சநீதிமன்றம் வரையும் பாயுமா? காத்திருப்போம்!

60 ஆண்டுகள் காத்திருந்த ஏமாளிச் சமுதாயம் இன்னும் சில/பல ஆண்டுகள் காத்திருக்காதா என்ன - மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு?

(குறிப்பு : மேற்காணும் தகவல்கள் சில பேரா. அருட்செல்வனின் 'பாபரி மஸ்ஜித் ராமஜன்ம பூமியா?' எனும் நூலில் இருந்து பெறப்பட்டவை)

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 28

சுல்தான் அப்துல்கதிர் என்பது குணங்குடி மஸ்தானின் இயற்பெயராகும். பிறப்பு 1207ஹி தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.
"அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் பதாகை (கோவணம்?) அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும்  நீங்கி விட்டனர்.
'முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்' - அப்துர் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1990 - பக்கங்கள் 456, 457.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில் ஹிஜ்ரீ 1254இல் அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான 'தொண்டியார் பேட்டை', இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.

இவர் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஸூஃபிக் கவிஞர் எனச் சுட்டப்படுகிறார். இறைவனையும் நபி (ஸல்) அவர்களையும் பற்றியும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்), நாகூர் ஷாஹுல்ஹமீது (ரஹ்) ஆகியோரைப் பற்றியும் இவர் பாடல்கள் பல பாடியுள்ளார். முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களைத் தம் ஆன்மீக குருவாகக் கொண்டிருந்தார் குணங்குடி.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.