திங்கள், ஜனவரி 15, 2007

சிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்

முஸ்லிம்களின் வாழ்க்கை நெறியான இஸ்லாமுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, இஸ்லாமுக்கு எதிரான கொள்களை உள்ளடக்கிப் புனையப் பட்டு, இஸ்லாமியப் பயிர்களுக்கு இடையில் வளர்ந்த 'மவ்லிது' எனும் விஷச் செடிகளை வேரறுப்பதற்காக அதிலுள்ள அழுகல் கருத்துகளைச் 'சிறப்புச் செய்திகள்' என்ற தலைப்பில் திண்ணை வாசகர்களுக்காக எழுதி வருகிறேன். இஸ்லாமியப் பயிர்களோடு வளர்ந்து விட்ட விஷக்களைகளை 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' என்று தலைப்பிட்டு, குலாம் ரஸூல் என்பவர் திண்ணையில் புனிதம் கற்பிக்க முனைந்ததால், மவ்லிதுகளின் 'பண்பாடு' எத்தகையது என்று இனங் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டேன். மவ்லிதுகளின் கருவிற்குள்கூட நுழையாமல், அதிலுள்ள வெறும் சிறப்புச் செய்திகளைச் சான்றுகளோடு நான் திண்ணையில் எழுதத் தொடங்கியதுமே குலாம் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்க்கி விட்டார். குலாமுடைய கொ.ப.செ. ஆகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட சூபி என்னும் ஒரு காவி, எனக்குப் பதில் சொல்லப் போவதாக வெற்றுச் சவடாலோடு வந்து நின்றது. ஆனால், பதில்தான் தரவில்லை. சூபிக்கு எனது 'சிறப்புச் செய்திகள்' படிக்கக் கிடைக்காதிருக்கலாம். எனவே, கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்டு, எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5 என்ற முகவரியுடைய ஷாஹுல் ஹமீதியா பதிப்பகத்தார் வெளியிட்ட 336 பக்கங்கள் அடங்கிய மவ்லிது புத்தகத்திலிருந்து மீள் பதிவு: சிறப்புச் செய்தி-1
நாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, "திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்" என்று சபதமேற்றாள். அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.
சிறப்புச் செய்தி-2
தென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து (!) நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்.
சிறப்புச் செய்தி-3

தன்னைச் சுற்றிக் கூடியிருந்த சீடர்களிடம் முஹைதீன் ஆண்டவர் கூறினார்: "காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் என்னிடம் வந்து ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை எனக்கு அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து அந்த ஆண்டில் நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் தம்மிடம் என்னென்ன மறைவான விஷயங்கள், ரகசியங்கள் (இரண்டும் ஒன்றுதானே என்று யாரும் கேட்கக் கூடாது) நடக்கவுள்ளன என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன".

சிறப்புச் செய்தி-4

ஷாஹுல் ஹமீது வலீ, ஹஜ்ஜுக்குப் போகும் வழியில் லாகூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது லாகூரின் முஃப்தியாக இருந்த ஷேக் நூருத்தீன் என்பார் (ஷாஹுல் ஹமீது வலீயைப் போலவே) பிள்ளைப் பேறற்று இருந்தார். தனக்குப் "பிள்ளைப் பேறு வழங்க வேண்டும்" என்று முஃப்தி ஷேக் நூருத்தீன் (பிள்ளைப் பேறற்ற) ஷாஹுல் ஹமீது வலீயிடம் வேண்டினார். அதற்கு, விடலைப் பருவத்தில் இறந்துபோன தம் சகோதரர் யூஸுஃப் என்பாரின் பெயரை முதலில் பிறக்கும் ஆண் மகவுக்கு இட வேண்டும் என்று ஷாஹுல் ஹமீது வலீ நிபந்தனை விதித்தார்; அதையும் முஃப்தி ஏற்றுக் கொண்டார். ஷாஹுல் ஹமீது வலீ வெற்றிலைக்குள் ஒரு பொருளைச் சுருட்டி வைத்துக் கொடுத்தார். அந்தப் பொருளினால் முஃப்திக்கு நான்கு ஆண் மக்களும் சில பெண் மக்களும் பிறந்தனர்.

இவை போக, சிறப்புச் செய்தி-1இல் இடம்பெற்ற தாரியா மற்றும் அவளது வலீ குறித்தத் தொடர்ச்சியாக இம்மடலில் சிறப்புச் செய்தி-5
தாரியா சூளுரைத்தபடி நடக்கும் என்று எதிர்பார்த்தது நடக்க வில்லை. அது மட்டுமா? அவளது அன்பிற்குரிய வலீ அதீக்குல்லாஹ் உணவருந்த உட்காரும்போதெல்லாம் சாரை சாரையாக எறும்புகள் ஓடிவந்து அவரது உணவைத் தூக்கி(?)ச் சென்று விடுவது வழக்கமானது. விடாது துரத்தும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க ஊர் முழுதும் ஓடி அலைந்தார். இறுதியாக நாக் மலையின் உச்சிக்கு ஓடிப் போனார். (31ஆவது ஹிக்காயத், கண்ணி 7, வரிகள் 33-35).
சூபியின் உளறல்களுக்குச் சான்றுகளையும் அவற்றுக்கான சுட்டிகளையும் குறிப்பிட்டு இதுவரை விளக்கி இருக்கிறேன்; இனிமேலும் விளக்குவேன். ஆனால், "நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து, நாமிருவரும் ஊதி-ஊதித் திண்ணலாம்" என்ற கதை இனியும் நடக்காது. மேற்காணும் ஐந்து சிறப்புச் செய்திகளுக்கும் 'பண்பாட்டு'க்கும் உள்ள தொடர்பை சூபி விளக்கிய பிறகு யூனுஸ் நபி வாழ்ந்த வயிற்றுக்குச் சொந்தமான மீனைக் குறித்து எனது விளக்கம் கண்டிப்பாகக் கிடைக்கும். அதுவரை இம்மடலே சூபிக்கு மீண்டும்-மீண்டும் மீள்பதிவு மடலாகும். முன்னொருமுறை நான் திண்ணையில் குறிப்பிட்டிருந்ததை சூபிக்கு இங்கு நினைவூட்டுவது சாலப் பொருந்தும்: விளையாடுவது எனக்கு விருப்பமானதே - சிறுவர்களோடு; பூனைக் குட்டிகளோடும் - அவை காவி நிறமாக இருந்தாலும் சரியே!
ஃஃஃ