நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 04, 2006

நன்றி, இபுனு பஷீர் - 2

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது: 



1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், " திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் ." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  

இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா? 

2. "அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்." என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா? 

-நன்றி: திண்ணை 

இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி! 
3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை! 
ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,  
சில தூண்டி விடப்பட்டு.. 
சில தூண்டிலில் இடப்பட்டு.. 
நரிகளும் ஓநாய்களும் கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன, 
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/06/02/hgrasool2/

சனி, ஜூன் 03, 2006

நன்றி, இபுனு பஷீர் - 1

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது:

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். (முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.) ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’ 
இஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா? இல்லவே இல்லை! குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது! அத்தியாயம் 3 வசனம் 8 "இன்னக அன்தல் வஹ்ஹாப்" என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!’ என்பதாகும். மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: "நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும். 

ஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.' 

இதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல். 

இங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது. இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான்! இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும். 

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்! 

பின்குறிப்பு: "இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்." - நேசகுமார். நல்ல ஜோக்! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/05/17/hgrasool/

சனி, பிப்ரவரி 18, 2006

ஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -அருளடியான்

சகோதரர் அருளடியான் அவர்களின் திண்ணைக் கடிதம் அவருடைய அனுமதியோடு இங்கு மறுபதிவு செய்யப் படுகிறது. அவருக்கு நன்றி!

-வஹ்ஹாபி

ஃ ஃ ஃ

'முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது' என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச். ஜி. ரசூல் "தர்கா வழிபாட்டினர் முஸ்லிம்களில் ஏழைகளைப் பிரதிநிதித்துவப்படுத்து"வதாக எழுதியுள்ளார். இது தவறான தகவல் மட்டுமல்ல; மிகவும் நகைச்சுவையான செய்தியும் கூட.

முஹமது நபி(ஸல்) அவர்கள் தானும் தன் குடும்பத்தினரும் இஸ்லாமிய அரசு வசூலித்த ஜகாத் நிதியில் இருந்து எதுவும் எடுக்கக் கூடாது என தடை செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய தர்கா நிர்வாகிகள், தர்காவில் வசூலாகும் தொகை தர்கா நிர்வாகிகளின் குடும்பத்தை தவிர யாருக்கும் கிடையாது என விதிமுறை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் ஏழை முஸ்லிம்களுக்கு என்ன பயன்?

ஓரிறைக் கொள்கையில் உறுதியாய் உள்ள இலட்சக் கணக்கான ஏழை முஸ்லிம்கள் உள்ளனர். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜாக் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினருமே. வளைகுடா நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களாய் உள்ளவர்களும் ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினருமே. செல்வந்த குடும்பத்தினர் மிகச்சிலர் மட்டுமே.

தர்கா வழிபாட்டுக்கு இலட்சக்கான ரூபாய் கொட்டித் தருபவர்களில் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினரும் இதைவிட சற்று அதிகமாக தர்காவழிபாட்டில் உள்ளனர் என்பது உண்மைதான். அந்த பகுதிகளில் கல்வியறிவு வளரும் போது, அந்த குடும்பங்களில் இளைய தலைமுறை தர்கா வழிபாட்டில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறது.

ஹெச். ஜி. ரசூல் மக்காவில் நடைபெறும் ஹஜ் சடங்குகளையும், தமிழ் நாட்டின் தர்கா வழிபாடுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். ஹஜ்ஜில் நிறைவேற்றப்படும் சடங்குகள் குர்ஆன், நபிகளாரின் வழிமுறையான ஹதீஸ் ஆகிய மூல நூல்களின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்படுபவை. தர்கா வழிபாடு அவ்வாறு அல்ல. இறைவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை, இறந்த ஒரு மனிதருக்கும் இருப்பதாக நம்புவதும் அவரிடம் நம் தேவைகளை கேட்பதும் இஸ்லாத்தில் இல்லாத புதுமைச் செயல் மட்டுமல்ல; இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவமாகும்.

ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்பது தமிழ் நாட்டின் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரான பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கருத்தாகும். அவர் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இக்கொள்கையை ஏற்றுள்ளனர். இதனை பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் மக்களும் ஏற்கவில்லை. ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு பல தவறான தகவல்களை எழுதி தன் தர்கா வழிபாட்டுக் கொள்கைக்கு ஆதரவு தேடியுள்ளார்.

எனக்குத் தெரிந்தவரை, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களே தர்கா வழிபாட்டாளர்களை விட ஏழைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.

- அருளடியான் aruladiyan@yahoo.co.in

வியாழன், பிப்ரவரி 16, 2006

ஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -பாபுஜி

திண்ணையில் ஹெச். ஜி. ரஸூல் எழுதிய கட்டுரைக்குத் திண்ணையிலேயே மேலும் மூவரால் எதிர்வினையாற்றப் பட்டிருக்கிறது. அவற்றை இங்கு மீள்பதிப்புச் செய்வது பொருத்தமாயிருக்கும். மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்த வகையில், முதலாவதாக அனுமதியளித்தச் சகோதரர் பாபுஜி அவர்களின் திண்ணைக் கடிதம் நன்றியோடு இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது. 

 -வஹ்ஹாபி 
ஃஃஃ

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன்.

இரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய முஸ்லிம்களைப் பொருத்த வரை, பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களாகத் தொடர்பவர்களில் சமீப காலங்களாகத்தான் சரியான இஸ்லாமை ஆய்ந்தறிந்து பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

இந்தியாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியப் போது ஆர்வத்தின் காரணமாக சில முஸ்லிம்களால் செய்துக்கொள்ளப்பட்ட 'சமாளிப்புகள்'(Adjustments) இஸ்லாமிய சமூகம் மீதான பண்பாட்டுத் தாக்குதலுக்கு வழி வகுத்தன.

இதன் விளைவாகத்தான் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமல்லாத பழக்க வழக்கங்கள் (எ.கா., தாலி, தர்கா வழிபாடு, அத்வைத கோட்பாடு போன்றவை) செல்லுபடியாயின. எனினும் அவை இஸ்லாமின் அடிப்படையான ஓரிறைக் கோட்பாட்டையும் சாதிகளற்ற, அடிமைத்தனமற்ற சமுதாயத்தையும் பெரிதாக பாதிக்க இயலவில்லை.

சமூக மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிய சக்திகள் கிறிஸ்தவத்திலும் சாதியை புகுத்தி இந்திய கிறிஸ்தவத்தை 'இந்து மயம்' ஆக்கியதைப் போல இஸ்லாமிய சமூகத்தில் சாதியை புகுத்துவதில் வெற்றி காண முடியாத நிலையில், 'கலாச்சார வண்ணத்தை' மாற்றிக்கொண்ட முஸ்லிம்களை (தற்காலிகமாக) விட்டு வைப்போம், சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களை முதலில் கவனிப்போம் என்று 'நேசமாக'ப் புறப்பட்டனர். 'அடிப்படை' விளங்காத தீவிரவாதிகளுடன் 'சரியான முஸ்லிம்களையும் இஸ்லாமையும் சம்பந்தப்படுத்தி 'தான் சார்ந்த' நலன்களுக்காக வரிந்து கட்டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் மு.பி.வாஜ்பேயியின் 'இரண்டு வகை இஸ்லாம்' பற்றிய பேச்சையும், 'இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ வேண்டுமானால் ராமனையும் கிருஷ்ணனையும் ஏற்றுக்கொண்டு வாழட்டும்' என்ற பரிவாரக் கூச்சல்களையும் நாம் பார்க்க வேண்டும். 

வஹாபிஸம் என்ற பெயரால் ஹெச்.ஜி.ரசூல்களால் பழிக்கப்படும் சரியான இஸ்லாம்தான் இன்றைக்கும் வரதட்சணை, புரோகிதம், வட்டி, சிசுக்கொலை, (பெண்)கருக்கலைப்பு போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி வருகிறது. (கிரெக்க புராண அத்வைத பூச்சுக்களிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்த ஒரு அறிஞரின் பெயராலாயே வஹாபிசம் என்ற வார்த்தை வழங்கி வருகிறது.)

இன்றைக்கு 'பண்பாட்டு இஸ்லாம்' என்பதை பேசுகிற ஹெச். ஜி. ரசூல்களின் கூப்பாடு சமூக மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் 'புரோகிதத்தை'யும் பூர்ஷ்வாதனத்தையும் வளர்க்க உதவும்.

- பாபுஜி