வெள்ளி, ஜூன் 26, 2009

இன்னும் கொஞ்சம் ... நட்புடன்!


வெ.சாவுக்கான வலக்கர விளக்கம் என்ற எனது கட்டுரைக்குப் பின்னர், தாம் குறிப்பிட்ட, "023:006 இறைவசனத்தில் பெண்களை ஏலம் போடுவது இல்லைதான்" என்று வெ.சா ஒப்புக் கொண்டிருக்கிறார் [சுட்டி-1]. அவருக்கு நன்றி!
"குர்ஆன் என்ன எங்கும் கிடைக்காத ஒன்றா? யாருக்கு தைரியமிருக்கு என்று தொடை தட்டுவதற்கு முன் '23:6' என்று இண்டெர்நெட்டில் ஒரு தட்டுத் தட்டியிருந்தா கிடைத்திருக்குமே" என்று திண்ணை வாசகனான என் நண்பன் என்னைக் கேட்டான்.
"அப்படிச் சொல்லாதே! பிழையை ஒப்புக் கொள்வதற்குப் பெருந்தன்மை வேண்டும். அது வெ.சாவிடம் இருக்கிறது. அதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்" என்று நண்பனின் வாயை அடைத்து விட்டாலும் அடிமைச் சந்தையை இஸ்லாம் ஆரம்பித்து வைத்ததைப்போல் //ஆனால் இதில் தேர்வு, ஈட்டுத் தொகை என்றெல்லாம் பேசப்படும் இடத்தில், 7-நூற்றாண்டு அரேபியாவில் இன்றைய ஏலத்தின் ஆரம்பங்களைத் தானே பார்க்கிறோம்?// வெ.சா எழுதியிருப்பதைப் படித்ததில் என் நண்பனுக்கு நான் கூறியதில் எனக்கே ஐயம் ஏற்பட்டு விட்டது.

ஏனெனில்,
//முகம்மது நபி, ஸ·பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளைப் பார்த்ததும், தோழர் சரியாகத்தான் சொல்கிறார் என்று தெரிந்து ஸ·பியாவை தனக்கு என வைத்துக் கொள்கிறார். திஹ்யாவின் ஏமாற்றத்தைத் தவிர்க்க, திஹ்யாவைப் பார்த்து கருணை கூர்ந்து "உனக்குப் பிடித்த வேறொரு பெண்ணை எடுத்துக்கொள்" என்று சொல்கிறார். (புடவைக் கடையில் "இந்தக் கலர் எனக்கு இருக்கட்டும், அதை வேணா நீ எடுத்துக்கோ" ங்கற மாதிரி)//என்று வெ.சா. குறிப்பிடுவதில், யூதமதத் தலைவனின் மகளைத் திருமண உறவில் இணைப்பதை, இரு சாராரிடையே இணக்கம் வளரும் வாய்ப்பாக எம் தலைவர் முஹம்மது (ஸல்) கருதியது மறைக்கப் பட்டிருப்பதோடு வேறு உள்நோக்கமான திசைதிருப்பலும் நடந்திருக்கிறது.
கைபர் போர் முடிந்தவுடன், "பெண் கைதிகள் எல்லாரையும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்துங்கள்; எனக்குப் பிடித்த புடவையை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்" என்று வெ.சா. குறிப்பிடுவதைப்போல் ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் அந்த அரசாணைக்கு மறுப்பேதும் இருந்திருக்குமா? அப்படி ஏதும் நடக்கவில்லையே? கைபர் போரின் போது அண்ணலாரின் வயது 60. அன்னை ஸஃபிய்யா ஏற்கனவே இருமுறை திருமணமானவர். கைபர் போருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் எம் தலைவரின் ஆட்சியின் கீழ் மதீனாவில் வசித்து வந்தவர். நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி அன்னை ஸஃபிய்யா கூறுகிறார்:
"I was my father's favorite and also a favorite with my uncle Yasir. They could never see me with one of their children without picking me up. When the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) came to Medina, my father and my uncle went to see him. It was very early in the morning and between dawn and sunrise. They did not return until the sun was setting. They came back worn out and depressed, walking with slow, heavy steps. I smiled to them as I always did, but neither of them took any notice of me because they were so miserable. I head Abu Yasir ask my father, 'Is it him?' 'Yes, it is.' 'Can you recognize him? Can you verify it?' 'Yes, I can recognize him too well.' 'What do you feel towards him?' 'Enmity, enmity as long as I live.'
The significance of this conversation is evident when we recall that in the Torah of the Jews, it was written that a Prophet would come who would lead those who followed him to victory (இபுனு கஸீர்).
நமது பேசுபொருளான 'வலக்கரம்' குறித்து வெ.சா. எழுதியிருப்பதற்கான 'இன்னும் கொஞ்சம்' மட்டுமே மேற்காண்பவை. இவை தவிர, குர்ஆனைப் பற்றி அவர் எழுதியிருப்பதிலிருந்து அதுகுறித்து அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதை அவரே பெருந்தன்மை மாறாமல் ஒப்புக் கொள்கிறார்.
மற்றபடி, உருதுக் கவிதை, ஸூஃபி இசை, ஷேக் சின்ன மவ்லா கச்சேரி ஆகியவற்றுக்கும் நமது பேசுபொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று எண்ணுகிறேன்.
***
இந்தவாரக் கொசுறுகள்:
"வலக்கரம் உரிமையுடைய என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை, பொறுப்பிலுள்ள என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம்" என்று எனது கட்டுரையில் குறிப்பிட்டதை மறுப்பதற்காக வேண்டி, "வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?" [சுட்டி-2] எனக் கேட்டு மலர் மன்னன் சென்ற வாரம் திண்ணையில் எழுதி இருக்கிறார்.
என் மனைவியின் உரிமையாளன் நான். அவருக்குத் தேவைப்படும் அத்தனையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இந்த எளிய கருவைப் புரிய முடியாமல் மலர் மன்னன் என்னென்னவோ எழுதி நிரப்பி இருப்பதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது!
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற நம் முன்னோரின் வாக்கு உண்மைதான். அதற்காக முழங்காலைச் சுற்றி மூக்கைத் தொட முயல்வது அறிவுடமையா எனத் தெரியவில்லை.
எனது வலக்கர விளக்கம் சிரிப்பை வரவழைத்தாக நரேன் என்பவர் [சுட்டி-3] குறிப்பிட்டிருக்கிறார்.
சிரிப்பது உடம்புக்கு நல்லதுதானே!
இப்படித்தான், தெளிந்த தமிழ் என்று நம்பிக் கொண்டு 'குழந்தைப் பிறப்பை'ப் பற்றித் திண்ணையில் முன்னர் நான் எழுதியபோது, புரியாத மொழியில் நான் ஏதோ எழுதியிருந்ததாகவும் அது தன்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்ததாகவும் ஒருவர் எதிர்வினை செய்தார்.
"புரியாமலே எப்படிச் சிரிச்சீங்க?" என்று அடுத்த வாரம் கேட்டு வைத்தேன்.
அதற்குப் பிறகு அவர் சிரித்ததாகத் தெரியவில்லை.
நன்றி!
ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80906254&format=html
சுட்டிகள்:

வெள்ளி, ஜூன் 12, 2009

வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்

டந்த மாத இறுதியில் வெளியான திண்ணை (28.05.2009) இதழில் வெ. சா, 'பேராசிரியர் ஏ. எஸ். முகம்மது ரஃபி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்' வைத்திருந்தார்.

அங்கதம் என்று நினைத்துக் கொண்டு சே குவேரா, ஹோஸி மின், லெனின், சுபாஷ் சந்திர போஸ், வ. வே. சு ஐயர், ஆகியோரெல்லாம் நாகூர் ரூமியைப் போல் தைரியசாலிகள் அல்லர் என்று என்னென்னவோ எழுதியிருந்தார் வெ. சா. [சுட்டி-1].

அவற்றுக்கு பதில் சொல்வது என் வேலையல்ல. நாகூர் ரூமி என்ற தனிமனிதரைப் பற்றி எழுதிய வெ. சாவாச்சு; ரூமியாச்சு.

கடந்த வாரத் திண்ணை இதழில், குர் ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை வெ. சாவுக்குத் தருவதாக உறுதியளித்திருந்தேன். அதை இங்குக் காண்போம்.
இறைவணக்கத்தை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுகின்ற, வீணான பேச்சு/ செயல்களை விட்டு ஒதுங்கி விடுகின்ற,
தவறாது வளவரி செலுத்துகின்ற, தங்கள் மனைவியர் அல்லது தங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்களைத் தவிர வேறெவரிடமும் உறவு கொள்ளாமல் கற்பொழுக்கம் பேணிக்கொள்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டனர் - குர்ஆன் 023:001-006.
மேற்காணும் வசனத்தில் உள்ள 'வலக்கரம் உரிமையுடைய பெண்கள்' என்றால் போரில் கைது செய்யப் பட்ட அடுத்த வினாடி படுக்கையில் கிடத்தப் படுகின்ற பெண்கள் என்ற மிகத் தவறான கருத்துருவாக்கம் பரவலாக விதைக்கப் படுகிறது.

அந்தக் கருத்துருவாக்கம் எப்படித் தவறானது என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்னர் "வலக்கரம் உரிமையுடைய" என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை "பொறுப்பிலுள்ள" என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம். ஏனெனில், அரபியர் ஒருவர் ஒரு பெண்ணைப் பற்றி, "அவள் என் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பவள்" என்று அவரது மொழியில் குறிப்பிட்டால் அவரது மடியைத் தேடிப் பார்த்தலாகாது. அவரது கூற்றுக்கு, "அவள் என் வளர்ப்பு மகள்" என்பது எளிய பொருளாகும். 

போலவே,
வலக்கரம் உரிமையுடைய = பொறுப்பிலுள்ள.
இனிமேல் இங்கு எழுதப் படும் 'வலக்கரம் உரிமையுடைய' என்பதற்கு, 'பொறுப்பிலுள்ள' என்பது பொருளாம்.

போரில் கைது செய்யப்படும் பெண்கள் அனைவரையும் 'வலக்கரம் உரிமை' ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. மேலும், போரில் கைது செய்யப் படுபவர்களுள் பெண்களைவிட ஆண்கள்தாம் அதிகமிருப்பர். ஆண்களும் 'வலக்கரம்தான்' அதாவது வெற்றி பெற்ற போர்வீரர்களுடைய பொறுப்பின்கீழ் வருபவர்தாம்.

குவாண்டனாமோ, அபூகுரைப் போன்ற சிறைக்கூடங்களும் சித்திரவதைகளும் இஸ்லாத்தில் இல்லை. போர்க்கைதிகளைப் பொருத்த மட்டில் இஸ்லாத்தில் கீழ்க்காணும் மிக எளிய தீர்வுகளே பின்பற்றப் பட்டன:
  1. ஈட்டுத் தொகை எதுவுமின்றி விடுதலை செய்யலாம்.
  2. ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு விடுதலை செய்யலாம்.
  3. கல்வி கற்றுக் கொடுப்பவரைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விடுதலை செய்யலாம்.
  4. மீந்திருப்போரை முஸ்லிம் வீரர்களுடைய கட்டுப்பாட்டுப் பொறுப்பளித்துப் பகிர்ந்தளிக்கலாம்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் போரான பத்ருப் போரில் முஸ்லிம் வீரர்களால் கைது செய்யப் பட்டவர்களுள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஜைனப் (ரலி) உடைய கணவரும் நபிகளாரின் மருமகனுமான அபுல்ஆஸ் என்பவரும் இருந்தார். அவரை விடுவிப்பதற்காக நபியவர்களின் மனைவி கதீஜா (ரலி) அணிந்திருந்து, பின்னர் மகள் ஜைனபுக்கு அன்பளிப்புச் செய்த தங்கமாலை, பத்ருக்கைதி அபுல்ஆஸுடைய விடுதலைக்கான ஈட்டுப் பொருளாக வந்தது. அந்தத் தங்கமாலையைப் பார்த்த நபிகளாரின் உள்ளம் உருகியது. தங்கள் தோழர்களிடம் அபுல்ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்ய அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர, "மகள் ஜைனப் (ரலி) அவர்களை மதீனாவிற்கு வர அனுமதிக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள். முழுதும் படிக்க [சுட்டி-2].

ஹுனைன் போர்க்கைதிகளிடம் நபிகளார் கருணை காட்டி மக்காவில் வைத்து அவர்களை விடுதலை செய்தார்கள். கைதிகள் சுதந்திரமாக மக்காவின் தெருக்களில் சுற்றித் திரிவதைக் கண்ட நபித்தோழர் உமர் (ரலி), தமக்கு ஹுனைன் போரில் கிடைத்த இரு அடிமைப் பெண்களையும் விடுதலை செய்துவிடுமாறு தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு உத்தரவிட்டார் (புகாரீ - பாகம் 3, அத்தியாயம் 57, ஹதீஸ் எண் 3144) [சுட்டி-3].

தாயிஃப் போரில் முஸ்லிம்களால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களுள் ஷீமா பின்த் ஹாரிஸ் அல் ஸஃதியா என்ற பெயருடைய பெண்ணும் இருந்தார். அவர் நபிகளாரின் பால்குடிச் சகோதரியாவார். அவர் நபிகளாரிடம் அழைத்து வரப்பட்டார். அப்பெண்மணி நபிகளாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஓர் அடையாளத்தின் மூலம் அப்பெண்மணியை நபிகளார் அறிந்து கொண்டார்கள். அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் தமது போர்வையை விரித்து அவரை அமர வைத்தார்கள். அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து அவரது கூட்டத்தாரிடமே திருப்பி அனுப்பி வைத்தார்கள் [சுட்டி-4].

ஆண்களும் பெண்களும் அடங்கிய அவ்தாஸ் போர்க்கைதிகளை ஈட்டுத் தொகையின்றி முஸ்லிம் வீரரகள் விடுவித்தது பற்றிய வரலாற்றுச் சுருக்கம்:
"எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் உங்களுக்கு வழங்கி விடுகிறேன். மேலும், உங்களுக்காக மக்களிடமும் கேட்கிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். அதைக் கேட்ட முஹாஜிர்களும் அன்சாரிகளும் "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்குச் சொந்தமானதுதான்'' என்று கூறினார்கள். ஆனால், அக்ரா இப்னு ஹாபிஸ் "நானும் தமீம் கிளையினரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். உயைனா இப்னு ஹிஸ்ன், "நானும் ஃபஸாரா கிளையினரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். இவ்வாறே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்பவரும் எழுந்து, "நானும் ஸுலைம் கோத்திரத்தாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறினார். ஆனால், ஸுலைம் கூட்டத்தார் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குரியதை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்'' என்று கூறி தங்கள் தலைவன் பேச்சை மறுத்து விட்டனர். இவ்வாறாக அவ்தாஸ் போர்க்கைதிகளுள் பெரும்பாலோர் எவ்வித ஈட்டுத் தொகையுமின்றி விடுதலை செய்யப் பட்டனர். முழுதும் படிக்க [சுட்டி-5].
***
இஸ்லாத்தில் மரபுவழித் திருமணங்கள் என்பன மணமகனுக்கு அதிகச் செலவுக்குரியதாகும். மரபுவழித் திருமணங்களுக்கென்று நான்கு முக்கிய நிபந்தனைகள் இருக்கின்றன:
  1. மணமக்களின் ஒப்புதல்
  2. மணமகளுக்கு மணமகன் செலுத்த வேண்டிய மஹர் எனும் பரிசத் தொகை
  3. மணமளைத் திருமணம் செய்து தரும் பொறுப்பாளர்
  4. (குறைந்தது) இரு சாட்சிகள்
 இவற்றுள் இரண்டாவதான மஹர்த்தொகை என்பது, சுதந்திரமான மணமகள் முடிவு செய்யும் தொகையாகும். மஹர் கொடுத்து மணம் புரிந்து கொள்ளும் வசதி இல்லாத இளைஞர்கள், தவறான வழிகளைத் தேடலாகாது என்று இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது. கூடவே, ஒழுக்க வாழ்விற்கு வழிவகையும் செய்கிறது:
"அல்லாஹ் தன் அருளினால் வளமாக்கும்வரை (மரபுவழித்) திருமணம் செய்து கொள்ள(ப் பொருளாதார) வசதியற்றோர் ஒழுக்க வாழ்வு வாழட்டும் ..." - குர்ஆன் 024:033.
அல்லது,
"... உங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்ணை (மணந்து) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும் ..." (குர்ஆன் 004:003).
சுதந்திரமான பெண்களைப் போன்றே 'வலக்கர'ப் பெண்களை மணப்பதிலும் உறவு முறைகள் பார்க்கப்படும். காட்டாக, தாயும் மகளும் ஒருவருடைய பொறுப்பில் இருந்தால், தாயை மட்டும் மணந்து கொள்ளலாம். அந்தத்தாயின் மகள் சொந்த மகள் போலாவார். எனவே, அவரை(யும்) மணக்க முடியாது. மகளை மணந்தால், அவளின் தாய் மாமியாராகி விடுவார். இஸ்லாத்தின் பார்வையில் மாமியாருக்குத் தாயின் நிகர்நிலை உண்டு. சுதந்திரமான இரு சகோதரிகளை ஏக காலத்தில் மணக்க முடியாது. போலவே, தம் பொறுப்பிலுள்ள 'வலக்கர' சகோதரிகள் இருவரை ஏக காலத்தில் மணக்க முடியாது (குர்ஆன் 004:023).

சின்னத்திரையின் சீரியல்கள் ஏற்படுத்தும் சீரழிவுகளால், அண்மைக் காலத்தில் திருமணமான பெண்கள் வேறொருவனோடு உடன்போக்குக் கொள்வது மிகப் பரவலாகி வருகின்றது. ஆனால் திருமணமாகி, கணவன் உயிருடனிக்கும் சுதந்திரமான பெண்களை மணப்பதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கிறது. ஆனால், 'வலக்கர'ப் பெண்களின் கணவன் போரில் கொல்லப் பட்டிருந்தாலும் தப்பியோடி இருந்தாலும் விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பி உயிருடன் இருந்தாலும் 'வலக்கர'ப் பெண்ணுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் அவளைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டுள்ளது - இன்னொருமுறை - அனுமதிக்கப் பட்டுள்ளது. அதாவது, சூழலைக் கருத்தில் கொண்ட அனுமதிதான்; கட்டாயமன்று (குர்ஆன் 004:024).

மணந்து கொள்ள விருப்பமில்லாத அல்லது காலம் முழுக்க உரிய முறையில் பராமரிக்க இயலாத 'வலக்கர'ப் பொறுப்பாளருக்கும் இறைவசனம் தீர்வு சொல்கிறது:

" ... உங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்களிடம் உரிமை விடுவதற்குரிய தகுதியைக் கண்டறிவீர்களாயின் அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் செல்வத்திலிருந்து (இயன்றதை) அவர்களுக்குக் கொடு(த்து அனுப்பிவிடு) ங்கள் ..." - குர்ஆன் 024:033.

பொறுப்பாளர் விரும்பினால் 'வலக்கர'ப் பெண்ணின் கணவன் உயிரோடு இருந்தாலும் அவளைச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் மணந்து கொள்ளலாம்; இதுவும் கட்டாயமில்லை.

" இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது தடுக்கப்பட்டுள்ளது ..." (குர்ஆன் 004:024). இந்த இறைவசனம் 'மணமுடிப்பது' என்று தெளிவாகப் பேசுவது இங்குக் குறிப்பிடத் தக்கது.

சிலர் நினப்பதுபோல் பெண்களைக் கைதியாகப் பிடித்தவுடன் படுக்கப் போடவெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. பெண் கைதியின் மாதவிடாய் அறியப்பட வேண்டும்; அவள் திருமணமானவளாக இருப்பின் அவளது கருவில் அவளின் கணவனது வாரிசு இருக்கிறதா என்பதை, அவளுடைய மாதவிலக்குத் தடைபட்டிருப்பது/தொடர்வதன் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்; அவள் கருவுற்று இருந்தால், குழந்தை பெற்று, தூய்மையடைந்த பிறகே அவள் இன்னொரு திருமணத்துக்குத் தகுதி பெறுவாள். இவ்வாறாக, சுதந்திரமான பெண்ணை மணந்து கொள்ள வசதி இல்லாதோர் இத்தனை சோதனைகளுப் பின்னரே தம் பொறுப்பிலுள்ள 'வலக்கர'ப் பெண்ணை மணந்து கொள்ளலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

சுந்திரமான பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பாளர்/காப்பாளர் வரிசையில் அவளின் தந்தை/மாமன்/அண்ணன் ஆகியோர் வருவர். ஆனால், 'வலக்கர'ப் பெண்ணுக்கு எல்லாமே அவளது பொறுப்பாளர்தான்.

'வலக்கர'ப் பெண்ணுக்கு வழக்கிலுள்ளப் பரிசப் பணத்தில் (மஹர்) பாதி கொடுத்தால் போதும்.

"ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து, அவளுக்கு அவர் நன்கு கல்வி கற்பித்து, அவளுக்குச் சிறந்த முறையில் ஒழுக்கம் கற்பித்து, பிறகு அவளை விடுதலை செய்து, திருமணமும் செய்து கொண்டால் அவருக்கு இரண்டுவகை நன்மைகள் உண்டு ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். இன்னோர் அறிவிப்பில்,

"அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மஹ்ரும் கொடுத்(து மணமுடித்)தால் அவருக்கு இரண்டுவகை நன்மைகள் உண்டு" என்று காணப்படுகிறது. (புகாரீ - பாகம் 5, அத்தியாயம் 67, ஹதீஸ் எண் 5083; பாகம் 4, அத்தியாயம் 60, ஹதீஸ் எண் 3446) [சுட்டி-3].

'வலக்கர'ப் பெண்ணைத் தானே திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதே தவிர அது கட்டாயம் என்ற சட்டமெல்லாம் இல்லை. அப்பெண்ணுக்கு அவர் முழுப் பொறுப்பாளர்; அவ்வளவே. ஒரு பொறுப்பாளர்/காப்பாளர்/தந்தை ஒரு பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் 'வலக்கரம்' சொந்தமாக்கிக் கொண்டவருக்கு உண்டு.

"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாத(பெண்டிர், ஆட)வர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நல்லொழுக்கமுள்ள உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் மணம் செய்து வையுங்கள் ..." (குர்ஆன் 024:032).

"... உங்களில் எவரும் 'என் அடிமை; என் அடிமைப் பெண்' என்று கூற வேண்டாம்; 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்' என்று கூறட்டும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ - பாகம் 3, அத்தியாயம் 49, ஹதீஸ் எண் 2552) [சுட்டி-3].

"தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைப்பவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரீ - பாகம் 3, அத்தியாயம் 29, ஹதீஸ் எண் 2544) [சுட்டி-3].

இவ்வாறெல்லாம் அறிவுறுத்திய எங்கள் தலைவர், போரில் தமக்குக் கிடைத்த பெண் கைதியை என்னதான் செய்தார்?

யூத இனத் தலைவன் ஹுயையின் மகள் ஸஃபிய்யா, கைபர் போரின்போது போர்க்கைதியானார். எல்லாக் கைதிகளும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரலி) என்ற தோழர் நபிகளாரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், "உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!'' என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யாவை அழைத்துச் சென்றார்.

அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள் திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவரல்லர்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள், "அவரை ஸஃபிய்யாவுடன் திரும்ப அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே , நபிகளார் ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் "கைதிகளில் வேறொரு பெண்ணை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்குப்பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக (பரிசப் பணம்) ஆக்கினார்கள்.

நபிகளார் மதீனா திரும்பும் வழியில் ‘ ஸத்துஸ்ஸஹ்பா' என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரலி) மாதவிலக்கின்பின் தூய்மையடைந்தார். உம்மு ஸுலைம் (ரலி) என்ற நபித்தோழி, ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய் மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபிகளார் வலிமா (மணவிருந்து) அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபிகளார் தங்கினார்கள். முழுதும் படிக்க [சுட்டி-6].
***
இருநூறு ஆண்டுகளுக்கு முன்வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் அடிமைச் சந்தைகள் சக்கைப் போடு போட்டதாக விக்கி சொல்கிறது. கி.பி. 1806 வரைக்கும் அடிமைக் கொள்முதலும் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தியதும் ஆங்கிலேயர்களிடம் வழக்கில் இருந்திருக்கிறது. கி. பி. 1807 இல் அடிமை முறையை நீக்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்து அதன் நினைவாக இரண்டு பவுண்டு நாணயமும் வெளியிட்டது [சுட்டி-7].

கருப்பின அடிமைப் பெண்களின் நிறவேறுபாட்டையும் மறந்து, "வெள்ளையர்கள் தங்களது காதல் பசியைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்தினர். அக்காலத்து வெள்ளையர்களின் காமவெறியைத் தணிப்பது கருப்பின அடிமைப் பெண்களின் தீராப் பொறுப்பாக இருந்தது. வெள்ளையர்களின் இரத்தம் ஓடாத கருப்பினப் பெண்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது" என்று அண்மைக்கால வரலாற்றை அபூமுஹை என்பார் பதிவு செய்திருக்கிறார் [சுட்டி-8].

அடிமைப் படுத்துவதற்கு மனிதர்கள் விலை கொடுத்து வாங்கப் பட்ட காலத்துக்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அடிமைகளாக இருந்தவர்களை விடுதலை செய்வதற்கு முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கினர். ஏனெனில், அடிமைகளை விடுதலை செய்வதற்கு ஊக்கமளிக்கும் அல்லாஹ்வின் வசனங்கள் அருளப் பட்டன.

திண்ணை இதழில் 'சாகாத கருப்பு யானை' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையின் நாயகர் [சுட்டி-9] பிலால் (ரலி) என்பார் நபித்தோழர் அபூபக்ரு (ரலி) அவர்களால் விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்யப் பட்டவர்தாம். முழுதும் படிக்க [சுட்டி-10].

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பரீரா என்ற அடிமைப் பெண்ணை அவளது உரிமையாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கி விடுதலையளித்தார் (புகாரீ - பாகம் 2, அத்தியாயம் 34, ஹதீஸ் எண் 2168) [சுட்டி-3].

பிரபலமான ஹதீஸ் அறிவிப்பாளர் நாஃபிஉ என்பார் நபித்தோழர் இபுனு உமரால் விடுதலை செய்யப் பட்ட முன்னாள் அடிமையாவார். இபுனு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் விடுதலை செய்தவரது பெயர் இக்ரிமா என்பதாகும்.

இறைவசனம் 009:060இன்படி முஸ்லிம்களின் ஸக்காத் எனும் வளவரிக்கு உரியோரான எட்டு வகையினருள் அடிமைகளும் அடங்குவர். அடிமைகளை விடுதலை செய்ய வேண்டிய முஸ்லிம்களின் கடமை, இன்றும் வேறு வகையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகன விபத்து ஏற்படுத்தி, அதில் உயிரிழந்தவர்களுக்கு ஈட்டுப் பணம் கொடுக்க முடியாமல் சிறையில் அடைக்கப் பட்ட ஆண்/பெண் கைதிகளை முஸ்லிம் செல்வந்தர்கள், தங்கள் வளவரிப் பணத்தின் மூலம் விடுவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் சில நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாக, இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது முஹம்மது அவர்கள் நபியாக ஆவதற்கு முன்னர், தமக்குத் தம் துணைவி கதீஜா (ரலி) திருமணப் பரிசாக அளித்த ஜைத் என்ற அடிமையை உடனடியாக விடுதலை செய்து, உலகம் முழுதும் அப்போது வழக்கிலிருந்த அடிமை முறையின் சவப் பெட்டிக்கு முதல் ஆணியை அடித்தார். ஜைதை முஹம்மதின் மகன் என்றே மக்கா வாழ் அரபியர்கள் குறிக்கும் அளவுக்கு ஜைத் நபிகளாரிடம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார்.

இனி, பேசுபொருளுக்கு வருவோம்.
// கைது செய்யப்பட்ட பெண் ஏலத்திற்கு விடப்படலாம், பெண்டாடப்படலாம் அதை குரானே அனுமதிகிறது என்று நேசகுமார் சொல்கிறார். சு. ரா. 23.06 என்று ஆதாரமும் காட்டுகிறார்// என்று வெ. சா. குறிப்பிட்டு, நான் மேலே எழுதியுள்ள இறைவசனம் 023:006 இல் ஏலம் போடுவதற்கும் பெண்டாடுவதற்கும் ஆதாரம் ஏதும் இருக்கிறதா அல்லது நாகூர் ரூமி குறிப்பிட்ட, "நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ. சா" இருக்கிறாரா என்பதை முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பாகும்.

இன்னொன்று:
சான்றுகள் எதையும் தராமல் ஒற்றைச் சொல்லில் 'அவதூறு' என்று எதையும் வெறுமனே நான் சொல்வதில்லை. இது வெ. சாவுக்குத் தெரியாவிட்டாலும் திண்ணை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

இல்லாததைச் சொல்வது/எழுதுவது என்பதை 'அவதூறு' என்று நான் விளங்கி வைத்திருக்கிறேன். அவதூறுக்கு வேறு சொல்லை வெ. சா எனக்கு அறியத் தந்தால் நன்றியுடையவனாவேன்.

கொசுறு:
லிங்கம், யோனி, கம்பம் எல்லாம் பலமுறை விளக்கம் சொல்லப் பட்டுள்ள பழஞ்சங்கதி. இன்னொரு முறையும் சொல்வதில் தவறில்லை. அதற்கு முன்னர் திண்ணையின் 13.07.2006 இதழில் வெளியான ஹமீது ஜஃபர் என்பவரின் கட்டுரையோடு படங்களையும் வெ. சா பார்த்து வைத்துக் கொள்ளவும் [சுட்டி-11]. முடிந்தால், "கஅபா என்ற அந்த கட்டிடம் இருந்தாலும் அல்லது அழிந்தாலும் அல்லது இடிக்கப்பட்டாலும் அல்லது சேதப்படுத்தப்பட்டாலும் அல்லது வெறும் நிலமாக இருந்தாலும் கஅபா என்று சொல்லப்படும் அந்த இடத்தை நோக்கியே முஸ்லிம்கள் தொழவேண்டும் என்பது இறைக் கட்டளை" என்று ஹமீது ஜஃபர் எழுதியிருப்பதன் உட்பொருளையும் சிந்தித்துப் பார்க்கவும்.

மீண்டும் சந்திப்போம், நன்றி!
ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906114&format=html 
சுட்டிகள் :
1 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905283&edition_id=20090528&format=html
2 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#52
3 - http://chittarkottai.com/bukhari/tamil/
4 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_third_phase.htm#11
5 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_third_phase.htm#15
6 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#34
7 - http://en.wikipedia.org/wiki/Slave_trade
8 - http://abumuhai.blogspot.com/2007/04/1.html
9 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=308092510&format=html
10- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/second_stage.htm#6
11- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80607146&format=html

வெள்ளி, ஜூன் 05, 2009

செத்தும் கிழித்த கமலா சுரையா

கமலா சுரையா'மலாதாஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள மொழியில் சிறுகதைகளும் சுயசரிதமும் எழுதிய 75 வயதான கமலா சுரையா, புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் கடந்த 31.05.2009 அதிகாலை 2 மணியளவில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலையாள இதழ்களும் தொலைக்காட்சிகளும் அவரைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்தன. தன் மண்ணின் மகளுக்கு மலையாள உலகம் மரியாதை செய்வதில் வியப்பொன்றுமில்லை. அவருக்குத் தமிழ் இணைய உலகிலும் அஞ்சலிகள் செலுத்தப் படுவதைக் காணும்போது அவரது எழுத்தின் வலிமையை, பரவலை உணர முடிகிறது.
கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதி, சிறையில் இவருடைய எழுத்தை வாசித்தார். பிறகு தண்டனைக்குறைவு பெற்று விடுதலையாகி மாதவிக்குட்டியின் வீட்டுக்கு வந்து 'அம்மயுட மடியில் தலைவைத்துக் கிடக்கணும்' எனக் கோரினார்; அது நிறைவேறியது
என்று 'மாதவிக்குட்டிக்கு அஞ்சலி' என்ற பதிவில் நாகார்ஜுனன் குறிப்பிடுகிறார். மேலும் மாதவிக்குட்டியைத் தான் சந்திக்க நேர்ந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லும்போது,
டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு அகஸ்மாத்தாக நான் சென்றபோது அங்கே காரில் இவர் ஏறிக்கொண்டிருந்தார். உளவுத்துறை விசாரணை பற்றிய யோசனையிலேயே நான் சென்றதால் என் மோட்டார் சைக்கிள் இவர் காரை உரசிவிட்டது. ஓட்டுநர் என்னை ஏதும் சொல்வதற்குள் 'எந்தா மோனே..' என்று வந்து என் தோளைத் தட்டிச் சிரித்தார். நிறைய நகை அணிந்திருந்தார். கைவளை ஒலி காதுவரை சென்று மீண்டும் சிலிர்த்தேன். அப்போதுதான் தொட்டது மாதவிக்குட்டி என உணர்ந்தேன். "ஓ, என் தப்புதான்.. ஸாரி.... உங்கள் கதைகளை வாசித்திருக்கிறேன்..." "எந்தினா ஸாரி மோனே, என் கதைகளை வாசித்ததற்காகவா.." என் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு சட்டென்று காரில் ஏறிச் சென்றார்
என்று குறிப்பிட்டு விட்டு, மாதவிக்குட்டியின் நினைவாக அவரது "நெய்ப்பாயாசம்" கதையைத் தமிழாக்கித் தந்திருக்கிறார் நாகார்ஜுனன் (நன்றி!). ஏற்கனவே கீற்று இதழில் குருமூர்த்தியும் நெய்ப்பாயாசத்தை, மெருகேற்றிய தமிழில் தந்திருக்கிறார். அச்சிறுகதையின் இறுதிப் பகுதியான, "அவர்கள் சாப்பிடட்டும்.... அவளுடைய கைப்பட்ட சமையல் இனிமேல் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லையல்லவா" என்று முடிவதைப் படித்தபோது இனிமேல் கமலா சுரையா எழுதப் போவதில்லை என்ற உண்மையின் ஒலியும் நமக்குள் அங்குப் பேசாமல் பேசுகிறது.
பொதுவாக, ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளுமே தங்களது குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதும்போது, அது வறுமை நிறைந்த சூழலுடன் இருந்திருந்தாலும், தாங்கள் அனுபவித்த குழந்தைப் பருவத்தை ஒரு கனாக் காலமாகவே எழுதுவர். ஆனால், கமலாதாஸ் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி, 'Punishment in kindergarten' என்ற கவிதையில் எழுதும் அம்சம் முற்றிலும் மாறுபட்டது
என்று 'அஞ்சலியும் ஆசையும்' எனத் தலைப்பிட்டு 'குளோபன்' எழுதுகிறார். அந்தக் கவிதையில் கமலாதாஸின் உணர்ச்சிகள் ஆங்கிலப் புலமையோடு இரண்டறக் கலந்திருப்பதைக் காண முடிகிறது. மலையாளத்தில் அவர் எழுதிய சுயசரிதையான 'எண்ட கதா' (என் கதை) குமுதத்தில் தமிழில் தொடராக வெளிவந்தபோது தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை அது கிளப்பியது. "என் கதை"யை நீங்கள் எழுதியபோது மக்கள் அதிர்ந்து போயினரே? என்ற ரீடிஃப் ஷோபா வாரியர் விடுத்த கேள்விக்கு, "அதெல்லாமில்லை; அதிர்ந்ததுபோல் பாசாங்குதான் செய்தனர்" என்று தனது வெளிப்படையான எழுத்தை நியாயப் படுத்தினார் கமலா.
தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலாதாஸ் போல அடித்தவர்கள் யாரும் கிடையாது
என்று அவர் எழுதிய 'பொய்கள்' என்ற கதையை மேற்கோள் காட்டுகிறார் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் 'பொடிச்சி': பிள்ளையைத் தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?). அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை. அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதைத் தன் தாயிடம் தன்னுடைய மொழியில் இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுப் பிள்ளை சொல்லும்போதெல்லாம், பிள்ளை 'பொய்' சொல்வதாகவும் வரவர அவன் பொய்கள் கூடுவதாகவும் தகப்பன் சொல்லுவார். பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, "ஏதேனும் கனவு கண்டியோடா?" என தடவிக் கொடுப்பாள். "உண்மையாத்தான்" என அழுவான் மகன் - கதையின் முடிவு வரை! *** "அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!" "நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை" "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது" "நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், 'நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!' என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்தக் கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்" என்ற கமலா சுரையாவின் ஆசையை, தம் அஞ்சலிப் பதிவாக்கி இருக்கிறார் மரைக்காயர் என்ற முஸ்லிம் பதிவர். இதுவரைக்கும் எல்லாம் சரிதான். சுவையான 'நெய்ப்பாயாச'த்தில் கிடக்கும் பொடிக்கல்லைப்போன்ற ஒரு பதிவையும் படிக்க நேர்ந்தது. அது ஜெயமோகனின் பதிவு. கேரள சாகித்ய அகாடமி அலுவலகத்தில் கமலாதாஸைச் சந்தித்ததாகத் தொடங்கும் 'அஞ்சலி: கமலா சுரையா' என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள பதிவைப் படிப்பவர்களுக்கு அவர் கமலாதாஸைத்தான் சந்தித்தாரா அல்லது வேறு யாரையோவா என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் எழுதுகிறார்:
கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது
இதழ்கள், தொலைக்காட்சிகள் நமக்குக் காட்டுகின்ற இப்போதைய கிழவி கமலாவே ஜெயமோகன் குறிப்பிடும்படி 'அவலட்சணமாக' இல்லை என்பதால் அவரது அப்போதைய 'சந்திப்பு' நிகழ்வு என்பதே கற்பனையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்குக் கமலா சுரையாவின் படமும் இணைத்திருக்கிறேன். வாசகர்கள் முடிவு செய்யட்டும். இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் கைது செய்யப்பட்டபோதுமின்றி, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்ற பிறகும் "அவர் சத்தாம் அல்ல; அவரைப்போல் உருவம் கொண்ட டூப்ளிகேட்" என்று சொன்ன சில முஸ்லிம்களையும் அண்மையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் "மாவீரர் தினத்தன்று தோன்றுவார்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களையும் காணும்போது, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கும் மனப்பான்மை அவர்களிடம் குடிகொண்டிருப்பதை உணர்கிறோம். அதேபோன்ற தன் உள்ளக்கிடக்கையில் ஒளிந்து கொண்டிருக்கும் 'அல்ப ஆசை'களை ஜெயமோகன் வெளிப்படுத்துகிறார்:
"... அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே 'பாதுகாப்பான துணை தேடி' மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார்.
செத்துப் போனவர் திரும்ப வந்து மறுக்கப் போவதில்லை என்ற தைரியத்தில், நாலாந்தர எழுத்தாளனைப்போல் ஜெயமோகன் எழுதியிருப்பதைப் படிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது! இவ்வாக்கத்தின் தலைப்பை ஒருமுறை படித்துக் கொள்வோம். 'செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளல்' என்று சொல்வதுபோல் செத்த பிறகும் ஜெயமோகன் என்ற எழுத்தாளனின் முகமூடியைக் கிழித்தார் கமலா சுரையா. 'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். "என்னைப் பற்றி அவதூறுகள் பரப்புபவர்களையும் தவறாக எழுதுபவர்களையும் பலவேளைகளிலும் சபிக்க வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு அவர்கள் என்னைத் துன்பப்படுத்துகின்றனர். என் மீது இந்த அளவிற்கு அவர்களுக்கு வெறுப்பு வர நான் அவர்களுக்கு என்ன தீமை செய்தேன்?. அன்பு அல்லாமல், யார் மீதும் நான் வெறுப்பு காட்டியதே இல்லை. என்னைக் குறித்துத் தவறான கதைகள் எழுதியதைக் கேள்விப்படும்போது 'நாசமாப் போக' என்று சபிக்கத் தோன்றும். இந்துவாக இருந்திருந்தால் அதைச் செய்திருப்பேன். ஆனால், இப்போது என்னால் முடியாது! துன்பம் இழைப்பவர்களுக்கும் இஸ்லாம் நன்மை செய்யுமாறு கூறுகிறதே! அவர்கள் நன்றாக எழுதட்டும். என்னால் அவர்களைச் சபிக்க இயலாது!" மேற்காண்பவை, புனாவிலுள்ள கமலா சுரையாவின் மகன் ஜெயசூர்யாவுடைய வீட்டில் வைத்து (சென்ற மாதம்) கைரளி தொலைக்கட்சிக்குக் கமலா சுரையா அளித்த பேட்டியின்போது அவர் கூறியவையாகும். கடந்த 02.06.2009 இரவு கைரளி மக்கள் தொலைக்காட்சி அதை ஒளிபரப்பியபோது அவர் கூறியதாக மளையாள நண்பர் ஒருவர் எனக்குத் தமிழாக்கித் தந்தவை. எழுதி இரண்டு நாட்களுக்குள் ஜெயமோகனின் முகமூடி கிழிபட்டது இப்படித்தான். 

மேலும், "பூனாவில் சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்குக் கையில் போதிய பணம் ஏதும் இல்லை. அந்த அளவுக்குச் சேமிக்கவில்லை. எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கணவருக்கும் தனியாக நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்ததால், எனக்கு எழுத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு என் கணவரும் எவ்வித எதிர்ப்பும் காட்டவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது என்பதே தனி ஒரு மகிழ்ச்சி தானே?. கிடைப்பதை எல்லாம் நமக்கே என்று சேர்த்து வைத்து நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகமதிகம் கொடுக்க வேண்டும். ஒருவேளை நான் இஸ்லாத்திற்கு மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்குக் கொடுப்பதைச் சட்டமாக, கடமையாகவே ஆக்கி வைத்திருக்கும் மார்க்கம் அது. எவ்வளவு அழகான மார்க்கம்! வருமானத்தில் 2.5 சதவீதத்தைக் கட்டாயமாக சக்காத்தாக பிறருக்குக் கொடுக்க இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. முன்னரும் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது இன்னும் இன்னும் அதிகமதிகம் கொடுக்கிறேன். 2.5% அல்ல, என்னிடமுள்ளதில் பாதியைக் கொடுக்கிறேன்; இன்னும் காலம் செல்ல முக்கால் பாகம், ஏன் முழுவதையுமே நான் கொடுப்பேன். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோசம், அது ஒரு தனி ரகம்; அனுபவித்தவர்களுக்கே அது புரியும்!" என்று மூச்சுக்கு மூச்சு, தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாம் குறித்துப் பெருமை பொங்கப் பேசும் கமலா சுரையாவை, "மீண்டும் குருவாயூரப்பன் பக்தை"யாக்கிப் பார்ப்பதற்கு ஜெயமோகனுக்கு அற்ப ஆசை!

கமலா சுரையாவுக்குக் கொலை மிரட்டல்கள்/கொலை முயற்சிகள் இருந்தன என்பது உண்மைதான். அவை எங்கிருந்து வந்தன என்பதை அவரே கூறுகிறார்: "கொலை மிரட்டல்கள் ... அது ஏராளம். இஸ்லாத்திற்கு மாறிய நாளிலிருந்து ஆரம்பித்தது அது. இதனால் யாருக்கு என்ன நஷ்டம்?. அவ்வப்போது காவல்துறையினர் வந்து ஆலோசனைகள் கூறிச் செல்வர். இப்போதும் சில நாட்களுக்கு முன்னர், இங்குத் தொலைபேசியை மாற்றி வைத்து, நேரடியாகக் காவல்துறை கண்ட்ரோல் அறையுடன் இணைத்துள்ளனர். அழைப்பவர்களின் எண்ணும் தெரிவதுபோல் காலர் ஐடி மெஷின் வைத்துள்ளனர்." "எழுத்தச்சன் விருது வழங்க, என்னை அழைத்தனர். நான் வீட்டை விட்டு இனி எங்கும் போவதில்லை எனக் கூறி விட்டேன். முக்கியமாக பப்ளிக் மீட்டிங்குகளுக்கு நான் வருவதில்லை என அனைத்தையும் ரத்து செய்து விட்டேன். என்னைக் கொல்ல நினைப்பவர்கள், அந்த இடத்தில் ஒரு குண்டைக் கொண்டு வந்து போட்டு விட்டால் போதும்தானே? நான் இந்த வயசுக்குப் பிறகு இறப்பதால் எனக்கொரு இழப்பும் இல்லை. ஆனால், வாழ வேண்டிய இன்னும் ஒரு நூறு பேர் எனக்காக இறப்பதை நான் விரும்பவில்லை"

"கொச்சியில் இருக்கும் போதும் அப்படித்தான். ஆனால், அங்குக் காவல்துறைக்கும் மேலாக எனக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பாக இருந்தனர். அப்படித்தான் சொல்வேன். கமாண்டோக்கள்தான். 8 பிள்ளைகள். என்னை உம்மா என்றுதான் அழைப்பார்கள். என்.டி.எஃபைச் சேர்ந்தப் பிள்ளைகள். யாராவது உணவு தந்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி என்னைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். சில வேளைகளில் சில பெண்கள் வலுக்கட்டாயமாக என் வாயில் மிட்டாய்களைத் திணிப்பர். அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர்களை எதிர்ப்பதில்லை. வாயில் வாங்கிக் கொண்டு அவர்களைக் காணாமல், குளியலறைச் சென்று துப்பி விடுவேன். அந்தப் பிள்ளைகள் கண்டால் கொதித்து விடுவார்கள். பின்னர் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தப் பின்னரே என்னைச் சாப்பிட அனுமதிப்பர். ஒரு முறை அப்படித்தான், ஒரு பெண் கொண்டு வந்த மிட்டாயை உடனே சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சமது அதை வாங்கி முதலில் சாப்பிட்டுப் பார்த்தான். அதில் என்னைக் கொல்ல விஷம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேரம், பல மருத்துவர்கள் போராடி சமதைக் காப்பாற்றினர். இப்போதும் என்னால் அதை மறக்க முடியாது. மற்றொரு முறை, ஒரு பெண் பிரியாணி செய்து கொண்டு வந்திருந்தாள். அதையும் முதலில் சாப்பிட்ட சமது மீண்டும் ஒருமுறை அதே போன்று மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பினான். என்னைக் கொல்வதற்கு அப்படி என்ன நான் அவர்களுக்குத் துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. எனக்கும் இந்து மதம் தெரியும் தானே? அதில் அப்படி ஒன்றும் இல்லை." 

Kamala Das' son M D Nalapat, who has came to Kochi from Delhi, said that they had received a number of threatening telephone calls. The calls appeared to be from Hindu extremists, he added. One caller threatened that he would kill Kamala Das within 24 hours. Nalapat said that his mother had shown extraordinary courage in embracing Islam. 

*** 

'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருந்தேன். உயிரோடு இருந்தபோது கமலா சுரையா யாருடைய முகமூடியைக் கிழித்தார் என்று சொல்ல வேண்டுமல்லவா? 'முகமூடி கிழித்துக் கொண்ட வெ.சா' என்று தலைப்பிட்டு நாகூர் ரூமி கமலா சுரையாவைப் பற்றி, திண்ணை 29.09.2006 இதழில் எழுதியது:
"நான் கூறாத பலவற்றையும் அவர்கள் செய்தியாக்குகின்றனர். எனக்கு இஸ்லாம் மதம் மடுத்து என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக, யாருக்காக இதெல்லாம் செய்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. சில பத்திரிக்கையாளர்கள் இங்கு வந்து என் வீட்டின் சமையல்காரிகளிடம் பேசி விட்டுப் போவர். பின்னர் அவற்றையெல்லாம் நான் கூறியதாகக் கூறி செய்தியாக்குகின்றனர். பத்திரிகையாளர்கள் இத்தனை சதிகாரர்களாக மாறி விட்டனரே?" "எனக்கு வாழ்வில் தேடலின் தீர்வை அளித்த என் சமுதாயத்திற்கு நான் என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். எனக்கு மதம் மடுத்து என்று நான் கூறாததைப் பரப்பியது போல் ஒவ்வொருவரும் என்னைப்பற்றி நாளுக்கொரு பொய்யைப் புனைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு எறும்பைக்கூட வேதனைப்படுத்த நினைக்காத என்னை எதற்காக இவர்கள் இப்படி துன்புறுத்துகின்றனர்? எனக்குத் தெரியவில்லை".

"இஸ்லாத்தை மதமாக ஏற்றுப் பின்னர் அதனை எனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டேன். ஒரு மதத்தில் இருந்து தேடலின் தீர்வாக மற்றொன்றை ஏற்றுக்கொண்ட நான் இந்த சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்" "எனது எல்லாக் கேள்விகளுக்கும் கடைசியில் கிடைத்த ஒரே பதில்தான் இஸ்லாம். ஏளனப்படுத்துபவர் ஏளனப்படுத்தட்டும். பிரபஞ்சத்தின் நாயனாகிய அல்லாஹ்வை நான் விசுவசிக்கின்றேன். எல்லாவற்றையும் அவன் நிச்சயிக்கட்டும்." (மொழிபெயர்ப்பு அபூ சுமையா, திண்ணை, 7 செப்டம்பர், 2006). "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." என்று 02-07-06 தேதியிட்ட ஆனந்த விகடனிலும் அவர் பேட்டி கொடுத்திருந்தார். நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ.சா.
***
கடந்த 28.05.2009 திண்ணை இதழில் குர்ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை நாகூர் ரூமியிடம் வெ.சா கேட்டிருந்தார். நாகூர் ரூமி இவ்விதழில் விளக்கம் தராவிடில் அடுத்த வாரம் நிச்சயம் நான் தருவேன் என்று வெ.சாவுக்கு உறுதி தருகிறேன். 

நன்றி!

திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906046&edition_id=20090604&format=html

சுட்டிகள்: 1 - http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_31.html
2 - http://www.keetru.com/literature/short_stories/m_gurumoorthi_12.php
3 - http://globen.wordpress.com/2009/05/31/kamaladas/
4 - http://search.rediff.com/news/1996/3107edas.htm
5 - http://peddai.blogspot.com/2005_05_01_archive.html
6 - http://www.maraicoir.com/2009/05/blog-post_31.html
7 - http://jeyamohan.in/?p=2819
8 - http://www.rediff.com/news/1999/dec/13kamala.htm
9 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609221&format=html
10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html