ஒரு காலத்தில் பாமரத் தமிழ் முஸ்லிம்களைச் சுரண்டிக் கொழுத்த அரபுப் பாட்டுக் கச்சேரிகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டி, 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' செய்வதற்கு குலாம் ரஸூல் திண்ணையில் குட்டிக் கரணமெல்லாம் போட்டுக் காட்டிப் படாத பாடு பட்டிருக்கிறார் [சுட்டி-1].
இஸ்லாத்தின் எதிரிகளாகத் திகழ்ந்த குரைஷியர்கள், அரபுக் கவிதைகளாலும் இஸ்லாத்தை இழித்துரைத்த காலகட்டத்தில், "அவர்களுக்கு(க் கவிதையால்) பதிலடி கொடுப்பீராக, உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" [சுட்டி-2] என்று ஹஸ்ஸான் என்ற தம் தோழருக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டதை, குலாம் எவ்வாறு திரிக்கிறார் பாருங்கள்:
"... நபிகள் நாயகத்திற்கென அமைக்கப்பட்ட தனிமிம்பாரில் (மேடை) நபிநாயகத்தை புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் கவிதை பாட அல்லாஹ்வின் தூதரைப் புகழும் காலமெல்லாம் பரிசுத்த ஆவியைக் கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துகிறான் என நபிகள் நாயகம் வாழ்த்தியதும், ஹதீஸ்கிரந்தங்களின் சரித்திர சம்பவங்களாக நிலை பெற்றுள்ளன"
'ஹதீஸ் கிரந்தங்கள்' என்ற பெயரில் புரோகிதர்கள் 'புருடா' விட்டதெல்லாம் மலையேறி நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதை அவர் புரிந்து கொள்வது நலம் பயக்கும்.
நபித்தோழர்களில் ஓரிருவர் - வாதத்தைத் தொடர்ந்து முடிவை எட்டுவதற்காக - நபியைப் புகழ்ந்து பாடியதாகவே இருக்கட்டும். அந்தப் புகழ்ப் பாக்களை, "உங்கள் வீட்டில் பாடினால் செல்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொட்டும்; நோய்கள் ஓடிப்போம்; மகிழ்ச்சி தாண்டவமாடும்" என்றெல்லாம் கடந்தகாலப் புரோகிதர்கள் கதையளந்து, சமகாலப் பாமர முஸ்லிம்களை ஏமாற்றியதுபோல், எந்த நபித்தோழரும் பாட்டுப்பாடி வயிறு வளர்க்கவில்லை.
நபித்தோழர்களின் வசைக் கவிகளின் நீட்சிதான் மவ்லிது என்னும் - ஐந்திற்கும் பத்துக்கும்; ஐம்பதுக்கும் நூறுக்கும், கூலி வாங்கிக் கொண்டு, பேசிய கூலிக்குத் தகுந்தாற்போல் கச்சேரியின் நேரத்தைச் சமன் செய்து கொண்டு பாடப்படும் - 'பிறந்தநாள்' புகழ்ப் பாடல்கள் என்பது கடைந்தெடுத்த புரட்டல்லாமல் வேறென்ன?
"மவ்லாய ஸல்லி வஸல்லிம் தாஇமன் அபதா" (எம் தலைவா! என்றென்றும் எப்போதும் அருள்மழை பொழிவாயாக) என்பது மவ்லிதின் தலையாய ஒரு வரி. ஓர் அங்கீகாரத்துக்காக மவ்லிதில் புகுத்தப் பட்ட, கவிஞர் பூஸரீயின் 'கஸீதத்துல் புர்தா'வின் முதல் வரிதானது. ஒரு காவியத்தைப் புனையத் தொடங்கிய, அரபு மொழியில் வியக்கத் தக்கப் புலமை பெற்றிருந்த பூஸரிக்கு, இரண்டாவது அடி எழுத முடியவில்லையாம். அப்புறமென்ன? புராணத்துக்கு 'இஸ்லாமிய முத்திரை' பெறுவதற்காக அவர் கனவு காண வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டார்.
"அலா ஹபீக்க கைரில் கல்கி குல்லி ஹிமி" (அனைத்துப் படைப்புகளிலும் சிறந்தவரும் அதிமுக்கியமானவரும் உன் அன்புக்குரிய[நபிய]வரின் மீது) என்ற இரண்டாவது அடியை எடுத்துக் கொடுக்கக் கவிஞரின் கனவில் நபியே வந்து தற்புகழ்ச்சி செய்து கொண்டதும் அதுவே தமிழில் 'புரவலர் போர்த்திய பொன்னாடை'யுமானதும் பழங்கதை.
ஆனால், உண்மை நிலை நேரெதிர்:
கவிதையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்கவில்லை; அவருக்கு அது தகுதியானதன்று"
என்று அல்லாஹ் [036:069] அறுதியிட்டுக் கூறுகிறான்.
மேலும் சொற்களுக்குச் சொந்தக்காரன் சொல்கிறான்:
"இஃது ஒரு கவிஞனின் சொல்லன்று ..." [069:041];
குலாமோ "திருக்குர்ஆனே தன்னை கவிதையாக அடையாளப்படுத்திக் கொள்கிறது" என்று திருகுதாளம் செய்யப் பார்க்கிறார்.
1400 ஆண்டுகளுக்கும் முன்னர் நிறைவடைந்து விட்ட இஸ்லாத்திற்குள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து புகுந்து ஆட்டம் போட்டு ஓய்ந்து, களையிழந்துபோன மவ்லிதுக் கச்சேரிகளுக்குக் களையூட்டுவதற்காகக் குர்ஆனுடைய சொற்களைக் குப்பையில் வீசும்படி குலாம் வழங்கும் அறிவுரை, நம்மைப் பொருத்தவரை செல்லாக் காசுதான்.
***
உலகத்தில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை ஒன்றுதான்.
"அண்மையில் சுன்னத் வல் ஜாமாத்துக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜாமத்துக்கும் இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதத்தில் சுன்னத் வல் ஜாமத்தின் மௌலவி ஜாமாலி நன்றாக பதில் சொல்லியிருக்கிறார். விவாத சி.டிக்கள் விற்பனையில் உள்ளது வஹ்ஹாபி வாங்கிபடித்து தெளிவடைவாரென்று நம்புகிறேன்"இது முஜீபுரஹ்மான் எனக்குத் திண்ணையில் வழங்கிய அறிவுரை [சுட்டி-3]. அவருக்கு என் நன்றி!
முயன்றும் முடியவில்லை என்பதால் என்னுடைய தோல்வியை இங்கு நான் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்; அதுதான் எழுத்து நேர்மையுங்கூட.
சீ.டீக்களை என்னால் 'படிக்க' முடியவில்லை; ஆனால் நல்லவேளை பாருங்கள், என்னுடைய சீ.டீ. ரோம் படித்தது! எனவே, என்னால் பார்க்க-கேட்க முடிந்தது. ஒளிப்பதிவு சுமார் ரகம்தான் என்றாலும் ஜாமாலி வகையாராக்களின் முகங்களில் தோன்றிய திடுக்கங்களின்போது தெளிவாகவே இருந்தது. நான் மட்டும் பார்த்தால் போதுமா? ஆர்வமும் நேரமும் உள்ள திண்ணை வாசகர்களும் பார்த்து-கேட்டுப் பயனடையட்டுமே! [சுட்டி-4].
ஆர்வமிருந்தும் நேரம் அதிகமில்லாதவர்களுக்கு விவாதச் சுருக்கம் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-5] என்பதாக சீ.டீ. கொடுத்த அன்பர்கள் தெரிவித்தனர், அவர்களுக்கும் என் நன்றி!
***
"கடவுள் இல்லை" என்று சொல்லும் நாத்திகர்கள் யாரும் அதற்குச் சான்றுகள் தர வேண்டியதில்லை. "உண்டு" என்று வாதிப்பவரே சான்றுகளை முன்வைக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும், "இல்லை என்று நிரூபிக்கட்டும் பார்கலாம்" என்று 'மண்ணாந்தை'த் தனமாக சூபி வெற்றுச் சவடால் விடாமல் சற்றே அறிவைப் பயன்படுத்தி எழுத முன்வந்தால் மேற்கொண்டு பதில் தரலாம்.
இன்னொரு விண்ணப்பம்: கபா, அல்லா, இபுராகீம் முதலிய இஸ்லாம் தொடர்புடைய சொற்களை முஸ்லிம்கள் யாரிடத்திலாவது கேட்டு எழுதினால் என் திண்ணை வாசக நண்பருக்கு நான் விளக்கம் சொல்லும் நேரம் மிச்சமாகும்; நன்றி!
ஃஃஃ