எனது 03.02.2006 திண்ணைக் கடிதத்தில் "சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் இஸ்லாமோடு என்ன தொடர்பு?" என்று குலாம் ரஸூலுக்கு ஒரு வினா வைத்திருந்தேன் [சுட்டி-1]. ஆறு மாதங்களாகியும் அதற்கு விடை சொல்ல முடியாமல் இப்போது 'பித் அத்' என்ற சொல்லாடலுடன் புதிதாக ஒரு அதி நவீனக் கண்டு பிடிப்பொன்றை, நான் ஏற்கனவே பதில் [சுட்டி-2] அளித்து விட்ட முஜீபு ரஹ்மானின் தலைப்பை[சுட்டி-3]க் காப்பியடித்து குலாம் வெளியிட்டிருக்கிறார்.
கருவிற்குள் புகுமுன் குலாமுக்கு இன்னொரு வினா: நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை? இனி 'பித் அத்' என்றால் என்னவென்று அறிந்து தெளிவோம். எல்லாரையும் போலவே சமகால முஸ்லிம்களும் கணிணியைப் பயன் படுத்துகின்றனர்; சடுதியில் பயணிக்கும் நில-நீர்-வான் ஊர்திகளைப் பயன் படுத்துகின்றனர். அச்சிடப்பட்ட திர்ஹம், தினார், ரியால் மற்றும் பெட்ரோல் கைக்கடிகாரம், கண்ணாடி போன்று நாளாந்தம் கண்டு பிடிக்கப் படுகின்ற அறிவியல் சாதனங்கள் ஆகியனவும் மற்றவர்களைப் போலவே முஸ்லிம்களாலும் பயன் படுத்தப் படுகின்றன. இவை போன்ற எண்ணற்ற இன்ன பிறவும் நபிகள் நாயகம் காலத்தில் இல்லாதிருந்து 'புதிதாக உருவான புதுமைகள்'தாம். 'பொல்லாப் புதுமை - பித் அத்' என்று முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) கூறும் மவ்லிதுக்கும் மீக்கூறியப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் என்ன தொடர்பு? கணிணியும் மவ்லிதும் நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லாத, அண்மைக் கால 'கண்டு பிடிப்புகள்' என்றாலும் கணிணியைப் பயன் படுத்துவது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தர வல்லது என்று எந்த முஸ்லிமும் (அல்லது வஹ்ஹாபியும்) நம்புவதில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிகளுக்கு அவ்வாறு சக்தி இருப்பதாக மவ்லிதுப் புரோகிதர்களால் பாமர முஸ்லிம்களிடம் மூடநம்பிக்கை போதை ஏற்றப் பட்டு, புரோகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர் முயற்சி நடக்கிறது.
"எனது தாய் மொழியான அரபியைப் பேசுவோருக்கு வறுமை நீங்கும்; வளம் பெருகும். பிணிகள் அவியும்; நலன்கள் குவியும். அரபு மொழி மட்டுமே அல்லாஹ்வின் அருள் பெற்றது; மற்றவை அனைத்தும் பொருளற்றது" என்பதாக மனிதர்கள் பேசுகின்ற மொழிகளில் நபிகள் நாயகம் உயர்வு-தாழ்வு கற்பிக்கவில்லை. எனவே, வஹ்ஹாபியின் தாய்மொழியான தமிழோ வேறெந்த மொழியுமோ 'பித் அத்' பட்டியலில் வருவதற்கு வாய்ப்பேயில்லை. ஆனால் மவ்லிதுக் கச்சேரிக்கு அத்தனை ஆசை வார்த்தைகளும் கூறப் படுகின்றன. இன்னதென்று பொருளறியாது எழுதித் தள்ளுவதை விட மேற்காணும் இரு உவமைகளே திண்ணை வாசகர்களுக்குப் போதும். அவர்களுடைய புரிதலின் நீட்சி குறித்து எனக்கு நம்பிக்கை உண்டு.
மனிதகுலத்துக்குப் பலனளிக்கும் 'நல்ல புதுமைகளை' இஸ்லாம் புறந்தள்ளச் சொல்லவில்லை; மாறாக, அவற்றுக்கு இஸ்லாமியப் போலி முத்திரை குத்தி, அவை இம்மை/மறுமை வாழ்க்கைகளில் இறைவனின் அருளைப் பெற்றுத் தர வல்லவை என்று பம்மாத்துச் செய்யும் செயலைத்தான் 'பித் அத் - பொல்லாப் புதுமைகள்' என்று இனங்காட்டுகிறது.
"வார்த்தைகளில் வாய்மையானது அல்லாஹ்வின் வேத(வார்த்தையா)ம். வழிமுறைகளில் சிறந்தது முஹம்மதின் வழிமுறை. செயல்களில் தீயது மார்க்கத்தில் புதிதாக ஒன்றைப் புகுத்துவதாகும். எல்லாப் புதுப் புகுத்தலும் பொல்லாப் புதுமைகளாம். பொல்லாப் புதுமைகள் எல்லாமும் வழிகேடே! எல்லா வழிகேடும் பொல்லா நரகில் சேர்க்கும்"
என்பதுதான் அண்ணலாரின் எச்சரிக்கை [சுட்டி-4]. ஆனால், "தமிழ் பேசினால் நரகம்தான்" என்று வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் திருகுதாள திரிபுவாதம் செய்ய முயல்கிறார் குலாம். பிஸ்கட் முதல் பிரியாணி வரை மவ்லிதுக் கச்சேரிகளில் வழங்கப் படும் பிரசாதங்கள் வஹ்ஹாபிகளுக்கு மட்டும் சுவைக்காதா என்ன? பின் ஏன் மவ்லிதுகளை மறுக்க வேண்டும்? கச்சேரிக்குள் புகுந்து விட்டால் புரிந்து விடும்.
போவோம், வாருங்கள் வாசகர்களே!
அண்ணலாரின் காலத்துக்கும் முன்னர் இயற்றப் பட்டத் "திருக்குறளின் ஆசிரியர் யார்?" என்று கேட்டால், ஆரம்பப் பள்ளி மாணவ-மாணவியர்கூட "திருவள்ளுவர்" என்று விடை கூறிவிடுவர். ஆனால், முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட மவ்லிதுகளின் ஆசிரியர் இன்னார்தான் என்று எவருக்கும் தெரியாது என்பதுதான் இன்றுவரை உண்மை. எனினும் இஃது ஒரு பெரிய கெடுதியில்லைதான். கெடுதிகளெல்லாம் பின்னால் வருகின்றன. மவ்லிதுக் கச்சேரிகளில் இரு கண்ணிகளுக்கிடையில் 'ஹிக்காயத்' என்னும் மவ்லிது நாயகர்கள் குறித்தச் 'சிறப்புச் செய்திகள்' வாசிக்கப் படும். அரபு மொழிச் சொற்களால் பாடப் பட்டுள்ள மவ்லிதுகள் திண்ணை வாசகர்களுக்கு அலுப்பூட்டக் கூடும் என்று நான் அஞ்சுவதால், 'சிறப்புச் செய்திகளை' மட்டும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். ("அரபுச் சொற்கள் எங்களுக்கு அலுக்காது" என்ற உறுதிமொழியுடன் வாசகர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வற்புறுத்தினால் அரபியையும் எழுதுவேன்). சிறப்புச் செய்தி-1
நாக் என்னும் ஊரில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் மனைவி இருந்தாள். அவள் பெயர் தாரியா. அவள் ஒருமுறை நாகூர் ஷாஹுல் ஹமீது வலீயின் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றாள். திருவிழாவை முன்னின்று நடத்திய முஜாவிர், அவளுக்குரிய மரியாதை செய்யவில்லை. தனியிடமோ உண்ண உணவோ வழங்கவில்லை. அதனால் அவள் சினங் கொண்டாள். வஞ்சினத்துடன் திட்டித் தீர்த்தாள். தனது வலக் கரத்தை உயர்த்தியவளாக, "திண்ணமாக இந்த ஷாஹுல் ஹமீதின் சமாதியை நாசமாக்குவேன். எனது குருவான அத்தீகுல்லாஹ் இறந்த பின்னர் அவருக்கு அழகிய சமாதி ஒன்றைக் கட்டுவேன். கூட்டங் கூட்டமாக மக்களை அங்கு வரவழைப்பேன். அவர்களைக் கண்ணியப் படுத்துவேன். அப்படிச் செய்யவில்லை என்றால் எனது இரு முலைகளையும் வெட்டி நாய்க்குத் தூக்கி எறிவேன்" என்று சபதமேற்றாள்.
(முஜீபு ரஹ்மானின் 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற காப்பியடிக்கப் பட்டத் திண்ணைத் தலைப்புடன் இணைத்து, இதைத்தான் 'வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகள்' என்று படிமமாக குலாம் கூறுகிறாரோ என்ற ஐயம் எனக்குண்டு).
அவளது சினம் தணிந்தபோது ஷாஹுல் ஹமீது வலீயை அவமதித்துச் சபதமிட்டதை எண்ணி அச்சமுற்றாள். சபதத்திலிருந்து விடுதலை பெற வேண்டி, உள்ளூர் சாபு (அவரும் வலீ) ஒருவருக்குத் தன்னிடமுள்ள பணத்திலிருந்து லஞ்சம் கொடுத்தாள். என்றாலும் பயனில்லை. அன்றிரவு அவள் தூங்கும்போது அவளுடைய இரு முலைகளையும் ஒரு நாய் கடித்துச் சென்றது. மூன்றாம் நாள் அவள் செத்துப் போனாள்.
கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் ஏழாவது கண்ணி 27 முதல் 32 வரிகளில் முப்பதாவது ஹிக்காயத்தாக இச்சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. "பாதுகாக்கப் படவேண்டும்" என்று குலாம் பதறித் துடிக்கின்ற 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில்தான் மேற்காணும் 'சிறப்புச் செய்தி' இடம் பெற்றுள்ளது. இதுபோல் நிறையச் சிறப்புச் செய்திகள் 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிது நூலில் உள்ளன. வாசகர்களின் ஆர்வத்தைப் பொருத்து ஒவ்வொன்றாய் வெளிவரும், இன்ஷா அல்லாஹ்.
கூர் மழுங்கிய வாட்களை இனிமேல்தான் தீட்டத் தொடங்க வேண்டும்.
ஃஃஃ