நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்லாம் குறித்துத் திண்ணையில் எழுத வந்த குலாம் ரஸூல், அது குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொண்டு எழுதியிருந்தால் எதிர்வினை புரிவதற்கான வாய்ப்பின்றிப் போயிருக்கும் எனக்கு. குலாமுடைய வழக்கமான வளவளாக்களை வடிகட்டிவிட்டோமெனில், அவர் என்ன சொல்ல முயல்கிறார் என்று ஒருவாறு முடிவுக்கு வந்து விடலாம். அவர் சொல்ல வரும் செய்தியை வாசகர்களின் வசதிக்காகக் கீழ்க்காணுமாறு 14 பத்திகளில் சுருக்கி வகைப் படுத்திக் கொள்வோம்:
01. இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபி முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு புதுக்கொள்கை.
02. அந்தக் கொள்கை அறிமுகப் படுத்தும் ஓரிறைக் கோட்பாடு என்பது சுயத்தன்மை அற்றது. கி.மு 7-4 கால கட்டத்தைச் சேர்ந்த இந்து சமூகத்தின் வேத, உபநிடங்களிலிருந்தும் கி.மு. 500 வாக்கில் தோன்றிய பாரசீக மதமான ஜெராஷ்டிரியத்திலிருந்தும் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட திருக்குறளிலிருந்தும் காப்பியடிக்கப் பட்டதுதான் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கோட்பாடு.
03. அல்லாஹ் என்பது முஸ்லிம்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கும் சந்ததியற்ற இறைவன் அல்லன். அரபுப் பழங்குடி மக்கள் வணங்கியப் பல தெய்வங்களின் தந்தையான சந்திரக் கடவுள்தான் அது.
04. அர்ரஹ்மான் என்பதும் முஸ்லிம்களின் இறைவனுடைய இன்னொரு பெயரன்று; மாறாக ஏமன் மக்கள் வணங்கி வந்த ஒரு சிலையின் பெயராகும்.
05. தற்போது முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள, ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகை என்பதும் சிரியாவில் வாழ்ந்த சாபியீன்களின் நாளொன்றுக்கு எழுவேளை வணக்கம் என்பதன் சுருக்கக் காப்பிதானேயொழிய வேறில்லை.
06. முஸ்லிகளின் தொழுகைச் செயல்முறைகள் மட்டும் நபி முகமது காட்டித் தந்ததா என்ன? அதுவும் மிகப் பழமை வாய்ந்த வைதீகச் சாதிமரபுகளுக்கு ஒரு மாற்று ஏற்பாடான, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாசரின் பதஞ்சலியின் யோக சூத்திர விரிவுரையான வியாச பாஷ்யத்தை எப்படியோ தெரிந்து கொண்டு (அல்லது ரகசியமாகப் படித்துப் பார்த்து) அதைத்தான் 'முஸ்லிம் தொழுகை' என்று நபி முகமது கற்றுக் கொடுத்தார்.
07. ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்கள், கஃபாவைச் சுற்றி வலம் வருவதைக் கோயிலைச் சுற்றி வலம் வருவதாகவும் ஹஜருல் அஸ்வதுக் கல்லை முத்தமிடுவதைக் கருப்புக் கல்லை வணங்குவதாகவும் முடி களைவதைக் கோயில் கடமைகளை முடித்து விட்டு மொட்டை போடுவதாகவும் 'அர்த்தப் படுத்திப் பார்க்க' சாத்தியமுள்ளதாக மானுடவியல்(?) ஆய்வாளர்கள்(??) ஒரு குழுவாக வந்து சொல்லி விட்டுப் போய்விட்டார்களாதலால் வரலாற்றுச் சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்து ஹஜ்ஜின் செயல்பாடுகளைக் கோயில் சார்ந்தே அணுக வேண்டும்.
08. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இபுறாகீம் நபிக்கு ஓர் ஆடு கிடைத்தது - அதுவும் ஓசியில். அதை அவர் அறுத்தார். அவருடைய அந்தச் செயல் நம்முடைய கிராமப்புற தெய்வங்களுக்காக அறுக்கப் படும் பலிகளின் அகவடிவம்தான் என்பதை இந்தக் காலத்தில் ஹஜ்ஜுக்குப் போகும் உலக முஸ்லிம்கள் - குறைந்த பட்சம் தமிழகத்திலிருந்து ஹஜ்ஜுக்குப் போகும் முஸ்லிம்கள் - மிகக் குறைந்த பட்சம் ஹஜ்ஜுக்குப் போகும் திண்ணை வாசக முஸ்லிம்கள் உணந்து, அதைக் கைவிட முன்வர வேண்டும்.
09. உபவாசம் என்ற பெயரால் இஸ்லாமுக்கு முந்தைய யூத-கிருத்துவர்களின் நடைமுறையில் இருந்ததும், இந்து சமய விரதங்களான கார்த்திகை விரதம், அவ்வை நோன்பு போன்றவற்றின் அப்பட்ட காப்பியும்தான் முஸ்லிம்களின் ரமலான் நோன்பு.
10. இந்தக் காலத்து முஸ்லிம்கள் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்குக் கத்னா செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு முந்தைய சமுதாயமான யூத-கிருத்துவ மக்களிடமிருந்து பெறப் பட்ட பழக்கம்தான்.
11. இறந்தவர்களைப் புதைப்பது என்ற புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின் தொன்று தொட்ட வழக்கத்தைத்தான் இஸ்லாமிய மரபாக நபி முகமது திரித்து விட்டார்.
12. பழந்தமிழ்ச் சமூகத்தின் வழக்கமான பரிசப் பணத்தைத்தானே 'மஹர்' என்ற பெயரால் முஸ்லிம் மணமகன், மணமகளுக்குக் கொடுக்கிறான்?
13. பெண்கள் சொத்துரிமை பெறுவதற்கு அரேபிய முற்காலச் சூழ்நிலைதான் காரணமேயன்றி, நபி முகமது எடுத்து வைத்த குர்ஆன் காரணமல்ல.
14. இவ்வாறாக, எல்லாவற்றிலிருந்தும் காலத்திற்குத் தகுந்தவாறு நபி முகமதுவால் காப்பியடிக்கப் பட்டதுதான் குர் ஆனும் இஸ்லாமும் என்பதே 'ஆழமான செய்தி' ஆகும்.
***
ஆயிற்றா? இனி, "நான் எழுதாததை எழுதியதாகக் குறிப்பிட்டு வாசகர்களைக் குழப்பப் பார்க்கிறார் வஹ்ஹாபி" என்று அடுத்த வாரம் இங்கு வந்து குலாம் புலம்பக் கூடாது என்பதற்காக, இதையும்
அவருடைய திண்ணைக் கட்டுரையையும் மீண்டும் ஒருமுறை வாசகர்கள் படித்து, ஒப்பிட்டுத் தெளிந்து கொள்ள வேண்டுகிறேன்.
"வெறும் 14 பாயிண்டுகளை வைத்துக் கொண்டு வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காக வஹ்ஹாபி முயலுகிறார்" என்ற குற்றச்சாட்டை குலாம் வைப்பாரெனில் அதை நிரூபிப்பதும் நான் குழப்பம் செய்வதை வாசகர்களுக்கு இனங்காட்டுவதும் மிகமிக எளிது. "வஹ்ஹாபி எழுதிய 14 பாயிண்டுகளுக்கும் எனது கட்டுரைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. அவைகளுக்கு நேர் எதிரானதுவே எனது கருத்துகள்" என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டால் போதும்; திண்ணையும் அதன் வாசகர்களும் உண்மையை உணர்ந்து வஹ்ஹாபியைத் தோலுரித்து ஓரங்கட்டி விடுவார்கள். சொல்வாரா குலாம்?
***
அவர் புலம்பினாலும் விளம்பினாலும் கட்டுடைப்பின் நிலைப்பாடு மாறப் போவதில்லை. ஏனெனில் அவை சான்றுகளின் அடைப்படையில் அமைந்தவை. எனவே, உடைப்போம்; ஒவ்வொன்றாய்:
- சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 சுட்டி 2]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:031, 007:025 சுட்டி 2].
- "ஏக இறைவனான அல்லாஹ்வையன்றி வேறெவரையும்/எதையும் நீங்கள் வணங்கக் கூடாது" என்று தம் சமுதாய மக்களுக்கு எல்லா நபிகளும் எச்சரிக்கை விடுத்தது போலவே நபி நூஹ் (நோவா) அவர்களும் எச்சரித்தார் [011:025-026 சுட்டி 2]. இஸ்லாமுடைய தோற்றத்தின் காலகட்டத்தை வரையறுத்து, ஓரிறைக் கோட்பாட்டுக்கென்று கி.மு.7ஐத் தேர்ந்தெடுத்த குலாம், ஓரிறைக் கோட்பாட்டுக் காரரான நூஹ் நபியவர்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பிறந்தார் என்பதை நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.
- "அல்லாஹ்வுக்குப் பிள்ளைகளா? அவ்வாறு சொல்பவர்களுக்கு இழிவும் தண்டனையும் நிச்சயமாக உண்டு" [002:116, 010:068-069, 018:004 சுட்டி 2]. சந்திரக் கடவுள், இளம்பிறை அடையாளம் போன்ற உளறல்களுக்கான ஆதாரங்களை வாசகர்கள்முன் குலாம் வைக்க வேண்டும்.
- "அல்லாஹ்வும் அர்ரஹ்மானும் அவன் பெயரே!" [017:110 சுட்டி 2]. ஏமன் சாமியான அர்ரகுமான் கி.மு/கி.பி எந்த ஆண்டுக்காரர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.
- நஜ்துப் பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்" என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் கடமையாக்கிய தொழுகை (நாளொன்றுக்கு) ஐவேளைகள்தாம். மேற்கொண்டு தொழுவது உன் விருப்பத்தைப் பொருத்தது ..." என்று சொன்னார்கள். இதில் "அல்லாஹ்", "கடமையாக்கியுள்ள", "தொழுகை" எனும் சொற்கள் அடிக்கோட்டுக்கு உரியன. சாபியீன்களுக்கு ஏழுவேளைத் தொழுகையை எந்தச் சாமி கடமையாக்கியது என்பதை குலாம் தெளிவாக்க வேண்டும்.
- அல்லாஹ்வை வழிபடும் தொழுகையின் செயல்முறைகளை அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கற்றுத் தரும்போது கூறினார்கள்: வரிசையாக நின்று கொள்ளுங்கள். உங்களுள் ஒருவர் தொழுகைக்குத் தலைமை ஏற்கட்டும். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறி(க் கைகட்டுவாரா)னால் நீங்களனைவரும் அவ்வாறே செய்யுங்கள். அவர் அல்ஹம்து ஓதி முடித்தால் நீங்கள் "ஆமீன்" என்று சொல்லுங்கள். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறிச் சிரம் தாழ்த்தும்போது நீங்களும் தாழ்த்துங்கள். அவர் எழுந்து, "ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்" எனச் சொன்னால் நீங்களும் எழுந்து "அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து" என்று சொல்லுங்கள். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறி கூறித் தரையில் தலைபட வணங்கும்போது நீங்களும் அதுபோன்றே வணங்குங்கள். அவர் "அல்லாஹு அக்பர்" எனக்கூறி எழுந்தமர்ந்தபின் நீங்கள் எழுந்தமருங்கள் ... வியாச பாஷ்யத்தின் எத்தனையாவது பக்கத்தில் இந்த விளக்கங்கள் உள்ளன என்றும் குலாம் சொல்ல வேண்டும்.
- சரக்கு இல்லாத காரணத்தால், ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து அரைத்த மாவையே [சுட்டி 5] குலாம் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார். ஹஜ்ஜுக் கடமையின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்து, தெளிவான ஒரு கேள்வியையும் அவருக்காக அங்கு வைத்திருந்தேன் [சுட்டி 6]. ஓராண்டைக் கடந்து, பல மாதங்களுமாகி விட்டன; இன்னும் பதில் வரவில்லை.
- அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதலை முதன்முதலாகத் தொடங்கியவர்கள் என்று ஆதமுடைய இரு மகன்களை, முஸ்லிம்கள் நம்பும் இறைவனுடைய வேதம் சுட்டுகின்றது [005:027 சுட்டி 2]. நம்முடைய கிராமப்புற தெய்வங்களின் பலித் தொடக்கம் கி.மு. எத்தனை என்பதையும் அவை அல்லாஹ்வின் நபி ஆதமுடைய மகன்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் இருந்தது என்பதையும் சான்றுகளோடு குலாம் சொல்ல வேண்டும்.
- முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் பின்வந்த முஸ்லிம்களுக்கும் நோன்பை விதியாக்கியவன், அல்லாஹ் என்ற ஒரே இறைவன்தான் [002:183 சுட்டி 2]. இதில் யூத-கிருத்துவர்கள் மட்டுமின்றி அவ்வையும் வந்து கலந்து கொண்டால் அவனுக்கென்ன? ஈசா (இயேசு) நபியின் தாயான மர்யம் அவர்களுக்கு, "நான் அர்ரஹ்மானுக்காக (ஏமன் சாமிக்கல்ல) நோன்பிருக்கிறேன் என்று சொல்" என்ற கட்டளையை அனுப்பி வைத்தவனும் அவன்தான் [019:026 சுட்டி 2]. அன்னை மர்யமுக்கும் முன்னர், கி.மு. எத்தனையில் கிருத்துவர்கள் நோன்பிருந்தார்கள் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.
- கத்னா செய்வதை முதன்முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தவர் என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரும் பாட்டனார் அண்ணல் இபுறாஹீம் நபியை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றனர். அண்ணல் இபுறாஹீம் அவர்கள் யூத-கிருத்துவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார் என்பதையும் குலாம் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும்.
- இறந்துபோன ஒருவரைப் பூமியில் முதன் முதலாகப் புதைத்தவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற இறைவனின் வேதம் சுட்டிக் காட்டுவது அல்லாஹ்வுடைய நபியாகிய ஆதமுடைய இரு மகன்களுள் ஒருவரை [005:031 சுட்டி 2]. அவ்விருவரும் 'புராதன ஐரோப்பிய, ரஷ்ய, முற்பட்ட அரேபிய, புராதன தமிழ் இன மக்களின்' காலத்திற்குப் பிறகு எத்தனை வருடம் கழித்துப் பிறந்தனர்; எந்த கி.மு/கி.பி இல் மறைந்தனர் என்பதையும் குலாம் தெளிவாக்க வேண்டும்.
- "அவர்களுடைய (உரிமையான) மணக்கொடையை அவர்களிடம் கட்டாயம் செலுத்தி விடுங்கள்" என்று [004:024 சுட்டி 2] சட்டம் போட்டு, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணின் உரிமையை, முஸ்லிம்கள் நம்பும் இறைவனின் வேதம் நிலைநாட்டி இருப்பதால்தான் இன்றளவும் அச்சட்டத்தை எவராலும் மாற்ற முடியாமலிருக்கிறது. பழந்தமிழ்ச் சமூகத்தின் பரிசப் பண 'வழக்கம்' கி.மு/கி.பி எத்தனையில் செத்துப் போனது என்பதையும் குலாம் சொல்ல வேண்டும்.
- 'அரேபிய முற்கால'த்தில் பெண்களே சொத்தாகத்தான் மதிக்கப் பட்டனர் - இலவசமாகவோ மலிவாகவோ. "தகப்பன் செத்து விட்டால், அவனுடைய மனையாள்களுள் தனக்கு விருப்பமானவள் மீது ஓர் ஆடையை எடுத்து வீசுவான் மகன்காரன். அக்கணமே அவனுடைய அனுபவத்திற்கான சொத்தாகி விடுவாள் அவள்" என்று அன்னை ஆயிஷா அறிவிக்கிறார். இவ்வழக்கம்தான் 'அரேபிய முற்கால' வழக்கத்திலேயே கண்ணியமான வழக்கமானதாம். பெண்பிறப்பே பாவமானது என்ற நம்பிக்கை கொண்ட ஒரு சமுதாயம்தான் 'அரேபிய முற்கால' சமுதாயம் [016:058 சுட்டி 2]. அந்தச் சமுதாயம் குறித்த குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், பரம்பரைப் பணக்காரியும் ஊர்த்தலைவரின் மகளுமான அன்னை கதீஜாவைச் சான்று காட்டுகிறார் குலாம். "தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - ஆண்களுக்குப் பங்குண்டு. அவ்வாறே, தாயோ தந்தையோ உரிமையுடைய உறவினரோ விட்டுப் போன சொத்தில் - அச்சொத்து சிறிதோ பெரிதோ - பெண்களுக்கும் பங்குண்டு" [004:007 சுட்டி 2] என்று அறுதியிட்டுப் பெண்களின் சொத்துரிமைக்கு உறுதியளித்த 'அரேபிய கலாச்சாரச் சூழல்' கி.மு/கி.பி எந்த ஆண்டில் நிலவியது என்றும் குலாம் குறிப்பிட வேண்டும்.
- என்றைக்கோ நிறைவடைந்து விட்ட [005:003 சுட்டி 2] அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் எவனுமில்லை [006:115 சுட்டி 2]. மீண்டும் மீண்டும் தலையைக் கொண்டுபோய் மலையில் முட்ட வேண்டாம்.
இங்கு குலாமுடைய ஒரு பாயிண்டு விடுபட்டுப் போயிருக்கிறது. அது என்னவென்று வாசகர்களால் ஊகிக்க முடிகிறதா? ஆ... அதுதான்! 'வணக்கஸ்தலமா? வரலாற்று அடையாளமா?' என்பதுதான். "அயோத்தியில் இருந்த பாபர் நினைவுச் சின்னத்தைப் போல் கஃபாவும் அரபுப் பழங்குடியனரின் பண்பாட்டுச் சின்னம்தான்" என்கிறார் குலாம் - வேறு சொற்களில் : "நபி முகமதுவுக்கு முற்பட்ட காலத்திலும் நாயக வாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது" என்று. சரி, இந்தப் பாயிண்டுக்குப் பதிலில்லையா? இருக்கிறது. ஆனால் அதை நான் சொல்லப் போவதில்லை. ஏனெனில், அதே பத்தியின் ஒருவரிக்கு மேலே "இப்ராஹீம் நபியும் அவர்தம் மகன் இஸ்மாயீல் நபியும் புதுப்பித்துக் கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம்" என்று அவரே ஸேம்ஸைடு கோல் அடித்துக் கொண்டதால் வழக்கம்போல் விளக்கம் மட்டும் தருவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
கஃபா விளக்கம்:
"திண்ணமாக ப(ம)க்காவில் உள்ளதுதான் மனிதர்களுக்கான முதலாவது இறையாலயமாகும் ..." [003:096 சுட்டி 2].
"... அந்தப் புராதன இல்லத்தை வலம் சுற்றி வாருங்கள்" [022:028 சுட்டி 2].
"நம்முடைய இல்லத்தின் அண்மையில் வசிக்கும்படி இபுறாஹீமுக்குப் பணித்து, எனக்கு எவரையும் இணையாக்கலாகாது என்றும் என்னுடைய இவ்வீட்டைச் சுற்றி வருகின்ற, நின்றும் குனிந்தும் தரையில் தலைவைத்தும் இங்குத் தொழுகை புரிகின்றவர்களுக்காக இதனைத் தூய்மைப் படுத்தி வைப்பீராக என்றும் கூறினோம்" [022:026 சுட்டி 2].
கஃபா என்பது அண்ணல் இபுறாஹீம் அவர்கள் புதிதாகக் கட்டிய ஒன்றன்று. அவர் 'புதுப்பித்துக் கட்டிய' புராதனமான, உலகின் முதல் இறையில்லமாகும்.
அண்ணல் இபுறாஹீம் பற்றிய, இங்குத் தேவைப் படும் குறிப்புகள்:
"எங்கள் இறைவா! என் வழித்தோன்றலாரை, உன்னையே தொழுது வருவதற்காக உன் மாண்புறு இல்லத்தின் அண்மையில் வசிக்கச் செய்திருக்கிறேன். அதுவோ பசுமையற்றதொரு பள்ளத்தாக்கு ..." [014:037 சுட்டி 2].
"... என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றலாரையும் சிலை வணக்கத்திலிருந்து காத்தருள்வாயக!" [014:035]
"தன் தந்தையான ஆஸரிடம், 'நீங்கள் சிலைகளைக் கடவுளர்களாக்கி விட்டீர்களன்றோ? திண்ணமாக நீங்களும் (சிலைவணங்கும்) உங்கள் சமுதாயத்தவரும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள் என்பதே என் கருத்து' என்று இபுறாஹீம் எடுத்துரைத்தார்" [006:074 சுட்டி 2].
"என்னருமைத் தந்தையே! எதையும் பார்க்க முடியாத, எதையும் கேட்க முடியாத, உங்களுக்கு ஏதேனும் ஒரு மிகச்சிறு தீங்கு ஏற்பட்டாலும் அதைத் தடுக்கச் சக்தியற்ற சிலைகளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?" [019:042 சுட்டி 2]
என்று தம் தந்தையிடம் தர்க்கித்து,
"என்னுடைய கடவுளர்களையா நீ மறுதலிக்கிறாய்? மாறிவிடு! இல்லையேல் உன்னை நான் கல்லாலடித்துக் கொல்லும் முன்னர் என் கண்முன் நில்லாமல் ஓடிவிடு" [0019:046 சுட்டி 2]
என்று, பெற்றதந்தையால் ஊரை விட்டு விரட்டப் பட்டார் இளைஞர் இபுறாஹீம்.
உலக வரலாற்றில், கடவுளர்கள் என்று கருதப் பட்டச் சிலைகளை உடைத்து நொறுக்கிய முதலாவது அஞ்சா நெஞ்சர் அண்ணல் இபுறாஹீம் அவர்கள்தாம். "தன் தந்தை மற்றும் (சிலைவணங்கும்) அவரது சமுதாயத்தவரிடம், 'நீங்கள் சிலைகளை வணங்க வேண்டிய காரணம்தான் என்ன?' என்று (இபுறாஹீம்) கேட்டார். 'இவைகளை எங்கள் மூதாதையர் வணங்கி வந்தனர்' என்று அவர்கள் பதிலளித்தனர். 'உங்கள் மூதாதையர் இருந்ததும் நீங்கள் இருப்பதும் வெளிப்படையான வழிகேட்டில்தான்' என்று இபுறாஹீம் கூறினார். 'என்ன, விளையாடுகிறீரா அல்லது சத்தியச் செய்தியுடன் எங்களிடம் வந்திருக்கின்றீரா?' என்று அம்மக்கள் வினவினர். 'நான் விளையாடவில்லை. (இச்சிலைகளில் எதுவும் உங்கள் இறைவன் அல்ல) வான்வெளிகளையும் பூமியையும் படைத்தவன் - அவற்றின் இறைவன் - அவனே உங்கள் இறைவன் என்று நான் உறுதிபட உரைக்கிறேன். (அது மட்டுமல்ல) நீங்கள் இங்கிருந்து சென்றபின் உங்கள் கடவுள் சிலைகளை நான் சிதைத்து விடுவேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை' என்றும் இபுறாஹீம் கூறினார். அவ்வாறே அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், சிலைகளுள் மிகப் பெரிய ஒரேயொரு சிலையைத் தவிர அனைத்துச் சிலைகளையும் உடைத்து நொறுக்கி விட்டுப் போய் விட்டார். (அந்நிகழ்வுகளை அறியாத சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு) 'எங்கள் கடவுளர்களை இவ்வாறு ஆக்கிய அநியாயக்காரன் எவன்?' என்று கொதித்தெழுந்தனர். 'இபுறாஹீம் என்ற ஓர் இளைஞர் இச்சிலைகளை இழித்துரைத்ததை நாங்கள் கேட்டிருக்கிறோம்' எனச் சிலர் கூறினர். 'அவரை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். (விசாரணைக்கு) மக்கள் சாட்சியாகட்டும்' என்றனர். இபுறாஹீமை அழைத்து வந்து நிறுத்தி, 'எங்களுடைய கடவுளர்களை இந்நிலைக்கு ஆளாக்கியது நீதானே?' என்று விசாரித்தனர். 'என்னைக் கேட்பதைவிட இதோ இருக்கும் பெரிய சிலையிடம் கேளுங்கள். ஒருக்கால் இதுதான் அவ்வாறு செய்திருக்கக் கூடும்' என்று பதிலளித்தார் இபுறாஹீம். இதைக் கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்று, 'நீங்கள்தான் இச்சிலைகளைக் கடவுளர்கள் என்று கூறி எங்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள்' என்றும் 'இல்லையில்லை அது நீங்கள்தான்' என்றும் தங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டனர். அவர்களின் தலைகள் தொங்கிக் கிடந்தன நீண்ட நேரம். பின்னர், 'இந்தச் சிலைகள் பேசாது என்பது உனக்குத் தெரியும்தானே?' என்று இபுறாஹீமிடம் கேட்டனர். 'அல்லாஹ்வையன்றி, உங்களுக்குக் கிஞ்சிற்றும் நன்மையோ தீமையோ செய்யவியலாத இவைகளையா நீங்கள் வணங்க வேண்டும்? சீ, கேவலம் நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளும்! உங்களுக்குக் கொஞ்சங்கூட புத்தியில்லையா?' என்று இபுறாஹீம் கேட்டார்" [021:052-067 சுட்டி 2].
இங்குக் கடைசிக் கேள்வி என்னவெனில், சிலை எதிர்ப்பாளர் அண்ணல் இபுறாஹீம் புனரமைத்த கஃபா கி.பி.யா? அல்லது அதில் 'கொண்டு வந்து வைக்கப் பட்ட சிலைகள்' அடங்கிய 'பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாள'மான கஃபா கி.மு.வா? இதற்கும் குலாம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.
இஸ்லாமைப் பற்றி, இஸ்லாமிய விழுமியங்கள் பற்றி எவ்வித ஆதாரமும் தராமல் என்ன வேண்டுமானாலும் எழுதிச் சேறடிக்கலாம் என்று மனப்பால் குடிப்பதை, இதற்குப் பிறகாவது நிறுத்திக் கொள்வது குலாமுடைய மானத்துக்கு நல்லது!
ஃஃஃ
குறிப்பு: இரண்டாம் சுட்டியில் அத்தியாய எண்ணும் வசன எண்ணுமிட்டுத் தேடினால், குர்ஆனுடைய எந்த வசனத்தையும் தமிழ் யுனிகோடில் பெற்றுக் கொள்ளலாம்.
சுட்டிகள்: