பூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து, "வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப் போடுங்கள்" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்களாம்:
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.
அல்லாஹ்வின் கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்?
சுவனத்திலுள்ள 'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும் ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி, திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா?
வானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவா? அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும் ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச் சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).
உமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்!
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.