ஸூஃபிஸம் என்ற போதை மருந்து
ஸூஃபித்துவக் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்.ஸூஃபித்துவம் என்பது பிளாட்டோவின் கருத்துக்களுடன் இந்து சமயத்தின் வேதாந்த சித்தாந்தங்கள் கலந்தது.மேலும் ஸூஃபித்துவம், போதை தரும் விஷம் கலந்த மதுபானம்.இக்கருத்துக்கள் குர்ஆனின் தெளிவான சட்ட திட்டங்களுக்கு முரண்பட்டது.
என்று பாடுகிறார் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை எடுத்தோதுவதற்கு முன்னர் அரபு மண்ணில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலோர் எழுத்தறிவற்ற 'உம்மி' களாக இருந்தனர். மூதாதையர் நெறியிலையே வாழ்ந்தனர். மேலும் அரபு நாடு பாலை நிலமாக இருந்ததால் அம்மண்ணில் வாழ்ந்தவர்கள் நிரந்தரக் குடியிருப்பை உடையவர்களாக இருக்கவில்லை. அவ்வப்போது வெவ்வேறு ஊர்களுக்குப் போய்வரும் நாடோடிப் பிழைப்பை உடையவர்களாக இருந்தனர். வேற்று நாட்டவர் அதிகமாக அந்த மண்ணை விரும்பிப்போய் அங்கு நிரந்தரமாக வாழ்ந்ததில்லை.
இந்நிலையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் வாழ்க்கைச் சட்டங்களை அம்மக்கள்முன் எடுத்து வைத்தபோது, அவர்கள் ஆரம்பக் காலத்தில் எதிர்த்த போதும் பின்னர் இஸ்லாத்தை முழுதுமாக ஏற்றுக்கொண்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலும் - அலீ (ரலி) அவர்களைத் தவிர்த்து - மூன்று குலஃபாயே ராஷிதீன்கள் காலத்திலும் மதீனாவே இஸ்லாத்தின் தலைநகராயிருந்தது. மட்டுமின்றி ஆட்சித் தலைமை யாரிடமிருந்ததோ அவர்களே சமயத்தலைமையும் உடையவர்களாயிருந்தனர்.
அவர்களது காலத்துக்குப் பிறகு உமைய்யாக்கள் காலத்தில் இஸ்லாமிய அரசின் தலைநகரமாக டமாஸ்கஸ்(சிரியா) திகழலாயிற்று. அதைத் தொடர்ந்த அப்பாஸிய கலீஃபாக்கள் காலத்தில் மெசபடோமியா, பாக்தாத் ஆகிய நகரங்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர்களாக ஆயின. அந்தலூசியா(ஸ்பெயின்), குராஸான்(ஈரான்), பஸரா, கூஃபா(இராக்), இஸ்தன்புல்(துருக்கி) முதலிய பெரு நகரங்களிலும் இஸ்லாம் தழைத்தோங்கத் தொடங்கியது.
மக்கா-மதீனா எல்லைகளிலிருந்து பரவத்தொடங்கிய இஸ்லாம் இவ்வாறாக ஆசிய-ஆப்பிரிக்கக் கண்டங்களின் பல்வேறு நிலப்பரப்புக்களுக்கும் விரிந்து வியாபித்தது. பல்வேறு மண்ணின் மைந்தர்கள் இஸ்லாம் என்னும் கோட்டைக்குள் பிரவேசிக்கத் தொடங்கினர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவர்களிடம் நிலவியிருந்த அந்தந்த நாட்டுச் சமயங்களின் தத்துவங்களிலிருந்து - மிகச் சிலரைத் தவிர - முழுதுமாக அவர்கள் விடுபட்டார்களில்லை.
அக்கால கட்டத்தில் மேலே கண்ட எல்லாப் பெரு நகரங்களிலும் அரிஸ்டாட்டில், பிளோட்டோ போன்றவர்களின் கிரேக்கத் தத்துவக்கல்வி ஓஹோ என்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஈரான் போன்ற நிலப்பரப்புக்களில் நிலவியிருந்த ஆரிய வேதாந்தக் கலாச்சாரத்தையும் இன்னமும் அங்கங்கே காணப்பட்ட புத்த-ஜொராஸ்டிர-யூத-கிறித்துவ- கலாச்சாரங்களையும் இஸ்லாம் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
இது ஒரு புறமிருக்க, உமைய்யாக்கள் காலத்திலும் அப்பாஸிகள் காலத்திலும் ஆட்சித்தலைமையை அனுபவித்தவர்கள் சமயத் தலைமைக்குரிய அருகதையுடையவர்களாகத் திகழ்ந்தார்களில்லை. விதிவிலக்குகளாக ஒரு சிலரே இந்த இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தனர்.
பெரும்பாலான ஆட்சியாளர்கள், ஆட்சித் தலைமையை மட்டும் ஏற்றுக் கொண்டு சமயத் தலைமையை முல்லாக்களிடம் ஒப்படைத்து விட்டனர். அதனால் இஸ்லாமியச் சமயத் தொடர்பிலிருந்து விடுபட்ட அந்த ஆட்சியாளர்கள் மனம் போன போக்கில் வாழத்தலைப்பட்டனர். கேளிக்கை, களியாட்டங்கள், சிற்றின்ப காம உணர்வைத் தூண்டும் கவிதைகள் முதலியவற்றில் அவர்கள் இலயிக்கத் தொடங்கினர். சில ஆட்சியாளர்கள், தாங்களே காமக் களியாட்டக் கவிதைகள் புனைபவர்களாகவும் திகழ்ந்தனர்.
இந்நிலையில், ஆட்சியாளர்களின் ஒழுக்கச் சீர்கேட்டையும் மக்களின் நிலைகுலைந்த வாழ்கையையும் கண்டு நொந்து போன முல்லாக்கள் சிலர் இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தைத் தேடலானார்கள்.
கிரேக்க - ரோமானிய-ஆரிய-யூத-கிறித்தவ-கலாச்சாரங்களும் தத்துவங்களும் வேரோடிப் போயிருந்த பெருநகரங்களின் நாகரிகம் ஒரு புறம்; சமய ஒழுக்கங்களைப் பற்றிக் கவலைப்படாத இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை மறுபுறம்; இவற்றைச் சீர்திருத்த குர்ஆன் ஹதீஸை மட்டுமே முல்லாக்கள் கைக்கொண்டிருந்திருக்கலாம்.
மாறாக, இதற்கு அப்பாலும் சென்று கிரேக்கத் தத்துவங்களிலும் ஆரிய வேதாந்தங்கள் போன்றவற்றிலும் அடைக்கலம் தேடினார்கள். பிறமதச் சித்தாந்தங்கள் கூறும் கருத்துகள் குர்ஆன், ஹதீஸிலும் கூறப்பட்டிருப்பதாகச் சப்பைக்கட்டு கட்டினார்கள்.
ஒரு சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தங்கள் கருத்துக்கிசைய அவர்கள் வளைத்துக் கொண்டார்கள். இதன் விளைவாகப் பிறந்த ஒரு புதிய வழிகேடுதான் ஸுஃபிஸம் ஆகும். அதாவது, கிரேக்கர்களின் கவைக்குவதவாத தத்துவங்களும் ஆரியர்களின் வெற்று வேதாந்தமும் திருச்சபை மடாலயங்கள் அளித்த நன்கொடைகளும் கலந்த ஒரு கலப்படச் சரக்காக-மிக்ஸராக- அமர்க்களமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பழைய போதை மருந்தை, 'ஸுஃபிஸம்' என்னும் புதிய பாட்டிலில் இட்டு நிரப்பினார்கள். இந்த பாட்டிலின் மீது 'இஸ்லாமிய ஞானப்பாட்டை' என்னும் போலி லேபில் மிகச் சாதுரியமாக ஒட்டப்பட்டது.
ஸுஃபிஸத்தின் தேற்றத்துக்கு மற்றொரு காரணமும் இருத்தல் கூடும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் ஆட்சித் தலைமையும் சமயத் தலைமையும் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றலாருக்கும் மட்டுமே கிடைத்தல் வேண்டும் எனக் கூறிக் கொண்டு உதயமானது ஒரு கூட்டம். இக்கூட்டத்தினர் " ஷீஅத்து அலீ" என்னும் அலீயின் கட்சிக்காக உடல் பொருள் ஆவியைக் கொடுக்கச் சித்தமாயினர். இன்றும் ஷியாக்கள் நிறைந்து வாழும் நாடாகிய ஈரானிலிருந்து தான் ஸூஃபிஸம் ஊற்றெடுத்தது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
ஆட்சித் தலைமை உமையாக்களின் கைகளுக்குப் போனதும் சமையத் தலைமையையாவது தாங்களே தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஷியாக்கள் சூழ்ச்சி செய்தனர். இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அலீ (ரலி) அவர்கள் பெயரால் பல புனைவுகளை இட்டுகட்டி, அவர்களுக்கு ஒப்புயர்வற்ற சிறப்பிடத்தை வழங்கத் தலைப்பட்டனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பாத்தின்' ஆன -ரகசியமான அகமிய- விஷயங்களை அலீ (ரலி) அவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுத்தார்களாம்; அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வெளிரங்கமான இஸ்லாத்தைத்தான் அறிந்திருந்தார்களாம்; அலீ (ரலி) அவர்கள்தான் உள்ரங்கமான இஸ்லாத்துக்குச் சொந்தக்காரர்களாம்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இஸ்லாமியப் பட்டணத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமானால் அலீ (ரலி) அவர்களுடைய ஞானப்பாட்டையின் வழியாகத்தான் நுழைய முடியுமாம். இப்படியாகச் சொல்லிக் கொண்ட ஷியாக்கள் ஈரானிலிருந்து ஒரு ஞானப்பாட்டைத் தீட்டினார்கள். ஏற்கனவே ஸுஃபிஸச் 'சரக்கை'ப் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த ஞானப்பாட்டையில் உருளுவது பேரானந்தத்தைக் கொடுத்தது.
இந்த ஞான போதையைப் பெறுவதற்குக் கண்டிப்பாக 'பீர்' இருக்க வேண்டும். 'பீர்' என்னும் ஃபார்ஸிச் சொல்லுக்குக் குருநாதர் என்பது பொருளாகும். இவர்களை 'தர்வேஷ்' என்றும் அழைத்தனர். இந்த பீர் அல்லது தர்வேஷ் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு புனிதம் சேர்ந்தது, அது 'தக்யா' எனப்பட்டது. இந்த ஃபார்ஸிச் சொல் தமிழில் தைக்கா என மருவியது. ' தக்யா'வில் இருந்த 'தர்வேஷ்' தைக்கா சாயிபு எனப்பட்டார். இந்த தர்வேஷ் செத்துப்போன பிறகு அந்தத் தைக்கா 'தர்கா' ஆனது. இவ்வாறாக, ஸூஃபிஸம் தொடர்புடைய சொற்கள் எல்லாவற்றுலும் ஃபார்ஸி மொழியின் ஆதிக்கம்தான்.
செத்துப் போன ஸூஃபியின் தைக்காவில் கல்லைறகளைக் கட்டி, கப்ரு பூஜைகள் நடத்தும் தர்காக் கலாச்சாரத்தை இஸ்லாமிய உலகுக்கு அளித்த பெருமையும் ஸூஃபிஸத்தையே சேரும்.
பிறமதச் சித்தாந்தங்களின் தாக்கம், ஆட்சியாளர்களின் அலங்கோலம் ஆகியவை இந்த ஸூஃபிகளை வேறொரு பாதைக்கும் இட்டுச் சென்றன. அது துறவுப் பாதையாகும். ஸூஃபிஸம் வலியுறுத்தும் துறவு வாழ்க்கைக்கு, உண்மையான இஸ்லாத்தில் இடமே இல்லை. மோட்சம் பெறுவதற்கு சம்சாரத்திலிருந்து விடுபட்டு சன்னியாச வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தக் கருத்தாகும். இப்படி சன்னியாசி ஆனவர்களை, சம்சாரிகள் கடவுளுடைய இடத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். சன்னியாசிகளுடைய வாக்கை, வேதவாக்காகக் கருதி அதற்குக் கட்டுப் பட்டார்கள் அதைப் பார்த்த நம்முடைய ஆசாமிகளும் இஸ்லாத்தில் இதுபோல ஒரு சன்னியாச நெறியை ஸுஃபிஸத்தின் மூலம் அரங்கேற்றினார்கள்.
இந்த ஸுஃபிச் சன்னியாசிகள்- தர்வேஷ்கள் வழியாகத்தான் சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டுப் பெற முடியும் என்ற எண்ணத்தைப் பாமரர்களிடம் பரப்பி வைத்தார்கள். இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக் கொள்ளும் முஸ்லிம்களும் பெருகினார்கள்.
- தொடரும், இன்ஷா அல்லாஹ்