குணங்குடியாருடைய வாழ்க்கைமுறை பற்றியும் அவருடைய ஆன்மஞான பரிபாஷைகள் பற்றியும் அவர் வாய்மொழியாகவே நிறைய பாடல்களைப் பார்க்கின்றோம். குணங்குடியாரின் வாழ்க்கை முறைகள் அவருடைய ஒரிஜினல் வாழ்க்கையன்று. மாறாக, அது வேறொரு மூலபாடத்தின் மறுபதிப்பேயாகும். இப்படிப்பட்ட மறுபதிப்பு வாழ்க்கையைக் குணங்குடியாரிடம் மட்டுமல்ல, இன்னும் பல இஸ்லாமிய ஸூஃபிக் கவிஞர்களிடமும் நாம் நிறையவே காணலாம்.
தமிழ்நாட்டின் சில ஞானிகளுக்கே உரிய இத்தகைய வாழ்க்கை முறைகளைத்தான் நம் தமிழகத்தின் தர்காக்களின் ஸூஃபிக் கவிஞர்களும் கடைப்பிடித்துள்ளனர்.
குணங்குடியாரின் ஆன்மீக வாழ்க்கைமுறை எப்படி இருந்தது? என்பதற்கு விடைகாண வேண்டுமென்றால் தாயுமானவரின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டாலே போதுமானதாகும். ஆகவே, தாயுமானவரின் வாழ்க்கை முறையைப் பற்றி இங்கு நாம் சுருக்கமாகக் காண்போம். இதைக் காண்பதன் மூலம் பின்வரும் பகுதிகளில் குணங்குடியாரை மட்டுமின்றி பீரப்பா போன்றோரையும் நாம் எளிதில் புரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.
‘தாயுமானவர் திருப்பாடல் திரட்டு’ (அமெரிகன் டைமன் அச்சகம், சென்னை. 1919) என்னும் நூலின் 13ஆவது பக்கத்தில் தாயுமான சுவாமிகள் சரித்திரத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
தாயுமானவர் சிவயோகமும், சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்றலாகிய அத்துவைத சாயுச்சிய ஆனந்தமும் கைவரப் பெற்றவர். தாயுமானவருடைய குருவாகிய மௌனகுரு சுவாமிகள் தாயுமானவரை நோக்கி, “சும்மா இரு” எனத் திருவாய் மலர்ந்தருளி உபதேசித்தார். பின்னர் ஒருமுறை தாயுமானவரை அருகழைத்து அவருக்கு ஆன்ம ஞானத்தைப் போதித்து, “ஏ மாணவா! நீ அஞ்செழுத்தால் சில ஆகமப் பூஜைகளை செவ்வனே செய்து முடித்து, வெளிப்புலன்களிலே சிந்தை நாடா வண்ணம் சரீரத்தை, சிரசு, கழுத்து, இடை முதலிய அவயங்கள் நேராகத் தம்பத்தைப் போல் அசையாது நிறுத்தி, இடை பிங்கலைகளின் வழித்தாக இயங்கா நின்ற பிராணவாயுவை அம்ச காயத்திரியாகிய அஜபா மந்திரத்தினாலே தடுத்து, சுழுமுனை நாடியின் வழியாகச் செலுத்தி, இருகண்களும் புருவ மத்தியே நாடியவண்ணமாகச் சிதாகாயமாகிய ஆன்ம நிலய அந்தர் முக நாட்டத்தில் மனத்தை நிலைநிறுத்தித் தியானமாகச் சமாதியிலிருந்து சதா நிஷ்டை புரிந்து வருவாயாக! இதுவே மெஞ்ஞான நிட்டையாகிய சிவயோகமாம். இங்ஙனம் சதா நிஷ்டையிலிருந்து வருங்கால் அந்தர் முகத்திலே நாத ஒலிகளும் விந்து ஒலிகளும் தோன்றும். அவற்றுள் அழுந்தாது ஆன்மாவின்கண் அழுந்தி உறைந்து நிற்றல் வேண்டும். அப்போது அகண்ட பரிபூரணாகார சிற்சிகோதய சின்மயானந்த வஸ்துவாகிய சிவோதயப் பிரகாசமுண்டாகி உன்னை விழுங்கி நிற்குமாதலால், அந்நிலையில் உன் செயல் ஒழிந்து, நீ சிவத்துடன் இரண்டறக் கலந்து, அத்துவைத நிலையடைந்துவிடுவாய். அப்போது எங்கும் நீ நிவனொன்றையே காண்பாய். இதுவே சித்தாந்த மஹாவாக்கிய உண்மைப் பொருளாகும். இந்நிலையே சலியாது நிலை பெறுக!”
மௌனகுரு சுவாமிகள் தாயுமானவருக்குப் போதித்த இந்த வாழ்க்கையைத்தான் குணங்குடியாரும் மேற்கொண்டிருக்கின்றார். நபி (ஸல்) நமக்குப் போதித்துத் தந்த வாழ்க்கையைப் பற்றி இவர் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.
… தொடரும்