சனி, ஆகஸ்ட் 16, 2025

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 43

 

‘மெளன குரு வணக்கம்’, ’சின்மயானந்த குரு’ என்னும் தலைப்புகளின் கீழ் தாயுமானவர் பாடியுள்ள பல்வேறு பாடல்களில்,

 தட்சிணா மூர்த்தியே. சின்மயானந்த குருவே,

எனவும்

சின்மயானந்த சுகவெள்ளம் படிந்து நின்

திருவருள் பூர்த்தியான …………

மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில்

வரு மெளன குருவே

எனவும் தன்னுடைய மெளன குருவைக் கூப்பிடுகின்றார், இந்தக் கூப்பாட்டின் எதிரொலிதான் குணங்குடியில் கேட்கின்றது.

தாயுமானவர், தன்னுடைய குருவான மெளன சுவாமிகளையும் அவருக்கும் குருவான திருமூலரையும் சேர்த்து, ‘சித்தர் கணம்’ எனும் தலைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதிலொரு பாடல் :

திக்கொடு திகந்தமும் மனவேகமென்னவே

சென்றோடியாடி வருவீர்,

எனத் தொடங்கும் அப்பாடல்

…… கையில் உழுந்து அமிழும் ஆசனமாய் ஓரேழு

கடலையும் பருக வல்லீர்

இந்த்ரனுலகும் அயிராவதமுமே கைக்கெளிய

பந்தாயெடுத்து விளையாடுவீர்

ககன வட்டத்தையெல்லாம் கடுகிடையிருத்தியே

அஷ்டகுலவெற்பையும் காட்டுவீர்

மேலும் மேலும் மிக்க சக்திகளெல்லாம் வல்ல நீர் அடிமை

முன் விளங்கலருசித்தியிலரோ

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச்

சித்தர்கணமே

என முடிகிறது.

இதன் தொடக்கவரி குணங்குடியாரின், ‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து’ எனும் பாடலை நினைவுபடுத்தும் அதேவேளையில் ஏனைய வரிகள் மற்றொரு பாடலை நினைவூட்டுகின்றன. அப்பாடலுக்கு வரும்முன் இந்தத் தாயுமானவருடைய பாடலின் பொருளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

தொடரும்.