சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட 'கண்கட்டு வித்தை' என்றே கூறலாம்.
கட்டுகளை அவிழ்ப்பதற்கு முன்னர் இங்கு ஆளப்படும் சில கலைச் சொற்களைச் சொல்லி விடுவது நல்லது:
வஹ்ஹாப்=இறைவன்/அல்லாஹ்,
வஹ்ஹாபிஸம்=வஹ்ஹாபினால் வழங்கப் பட்ட வாழ்க்கைநெறி/இஸ்லாம்,
வஹ்ஹாபி=வஹ்ஹாபிஸத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் /வஹ்ஹாபைச் சார்ந்தவர்/முஸ்லிம்.
வித்தையில் அவிழ்த்து விடப் பட்ட சொற்களை இங்கு எடுத்தாள வேண்டியிருப்பதால், பிராமணர்களின் சுட்டு விரல் என்னை நோக்கி நீளாது என்ற நம்பிக்கையோடு, மறுக்க முடியாத ஒப்பீடுகள் - சான்றுகளுடன்:
ஒவ்வொன்றாகப் பார்ப்போமெனினும் பிராமணீயம் என்று சொன்னவுடனே முதலாவதாக நினைவுக்கு வருவது புரோகிதம்தான்.
1. புரோகிதம் இஸ்லாமிய மார்க்க மேதைகளுள் நால்வரான இமாம்கள் மாலிக், அபூ ஹனீஃபா, ஷாபியீ மற்றும் இபுனு ஹன்பல் ஆகியோரின் பெயரை மட்டும் பயன் படுத்திக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான (இம்ரானா) தீர்ப்புகளைக் கூறி மக்களை மடையர்களாக்கும் முல்லாப் புரோகிதர்கள், சமாதிகளைக் காட்டிச் சுரண்டிப் பிழைக்கும் 'சாபு'ப் புரோகிதர்கள், ஒரேயொரு நேர்வழியான இஸ்லாத்தைப் பலவாறு துண்டிக்கத் துடிக்கும் எழுத்துப் புரோகிதர்கள் ஆகிய அத்தனைப் புரோகிதர்களுக்கும் எதிராக உரத்துக் குரல் கொடுப்பது வஹ்ஹாபிஸம் மட்டுமே.
முந்நூறுக்கும் மேற்பட்ட சிலைகளை இறையில்லமான கஃபாவைச் சுற்றிலும் வைத்து நடந்து கொண்டிருந்த புரோகிதத்துக்குச் சாவு மணி அடித்ததுதான் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி அவர்கள் செய்த அறப்பணிகளுள் தலையாயது.
அந்தப் பழைய புரோகிதர்கள் தங்கள் தொழிலுக்குச் சொன்னக் காரணம்: "...அல்லாஹ்விடம் எங்களை அண்மித்து வைப்பர் என்பதற்காகவே இவர்களை நாங்கள் வழிபடுகிறோம் ..." [039:003]. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் புரோகிதர்கள் தமிழகத்தில் அதிகமாகப் புழங்குவது 'பண்பாட்டு மரபியல்' என்று முன்,பின்,அதி,நவீனத்துவ அறிவுசீவிகளால் தூக்கி நிறுத்த முயலும் சமாதி வழிபாடு நடக்கும் தர்ஹாக்களில்தான்.
"எனக்கும் என் அடியானுக்கும் இடையில் யாரும் புரோகிதம் செய்யத் தேவையில்லை" என்று வஹ்ஹாப் தன் மறையில் அறிவுறுத்துகிறான் [002:186].
2. வர்க்க பேதம் முழு மனுக்குலமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் [004:001] என்றும் வஹ்ஹாபிஸத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எல்லா முஸ்லிம்களும் சகோதரர்களே [049:010] என்றும் வஹ்ஹாப் வரையறுத்துக் கூறி விட்டான்.
அடுத்து, "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்" என்று வஹ்ஹாபிகளின் தலைவரும் வர்க்க பேதத்தைத் தம் காலடியில் போட்டு மூடி விட்டார்.
திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2இல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சிறு பகுதி:
"இஸ்லாமியக் குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும் எந்த இனத்தை, எந்தக் குலத்தை, எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.அங்கே இன பேதமில்லை; நிற பேதமில்லை; புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை."
3. வேதம் ஓதுதல் "ஓதுவீர்!" என்ற முதல் சொல்லோடு அருளப் பட்ட வேதம் [096:001] உலகிலேயே வஹ்ஹாபிகளின் வேதம் மட்டுமே. "முழு மனுக்குலமும் ஓதி உணர வேண்டியது" என்று பல இடங்களில் [002:185], [047:24], [054:17], [081:027] தன்னுடைய வேதத்தை வஹ்ஹாப் பொதுவில் வைக்கிறான்.
4. தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துதல் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு தம்பட்டம் அடிப்பதற்கு வஹ்ஹாபிகளுக்குத் தடையிருப்பது [053:32] போலவே பிறரைப் பற்றி இல்லாத குறை கூறித் திரிவதைப் பற்றியும் [104:001] தடையிருக்கிறது.
5. மதிக்கப் படுதல் வட்டிச் சுரண்டல், வரதட்சணைக் கொடுமை, சமாதிகளைக் காட்டி நடக்கும் வழிப்பறிக் கொள்ளை, இஸ்லாத்தில் இடையில் புகுத்தப் பட்டப் பொல்லாப் புதுமைகள், மன்னிப்பில்லாப் பாவமான இறைவனுக்கு இணை கற்பித்தல் ஆகிய வன் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காகத் தொழ முடியாமல் தடுக்கப் பட்டவர்கள், அடி-உதைகளைப் பரிசாகப் பெற்றவர்கள், ஊர் விலக்கம் செய்யப் பட்டவர்கள், பொய் வழக்குகளால் சிறை வைக்கப் பட்டவர்கள் இன்னும் எத்தனையோ இன்னல்களை ஏற்றுக் கொண்டவர்கள் வஹ்ஹாபிகள்.
இது போன்ற எவ்வளவோ எதிர்மறைகள் பிராமணீயத்துக்கும் வஹ்ஹாபிஸத்துக்கும் உள்ளன என்பதுதான் யதார்த்தம். இவற்றையெல்லாம் அறியாமல், இரண்டும் ஒன்றுதான் என்று 'கண்கட்டு வித்தை' காட்டுகிற கட்டுரை இடம் பெற்ற திண்ணையின் அதே இதழிலேயே வித்தைக் காரரின் 'தேவதைகளின் சொந்தக் குழந்தை' விமர்சனக் கூட்டத்தில் நடந்தவை தொகுக்கப் பட்டு வெளியாகி இருந்தன.
அதில் கட்டுரையாளரின் எழுத்தைக் குறித்து யூசுப் என்பார் கூறுகிறார் "எதார்த்தம் தவறுதல் என்பது மனநிலை பிறழ்வேயாகும்".
ஃஃஃ
எடுத்தாளப் பட்டச் சுட்டிகள்: