வெள்ளி, ஏப்ரல் 14, 2006

மீண்டும் வெளிச்சம்

அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், "முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது" என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா?

மேற்காண்பது திண்ணையின் 30 மார்ச் 2006 பதிப்பில் வெளியான எனது கடிதத்தின் ஒரு சொற்றொடர்.

"அல்குர்ஆன் அரபு மொழி சார்ந்தது இல்லை என்று கூறி எவ்வளவு அப்பட்டமாக வாசகர்களை வகாபி குழப்பப் பார்க்கிறார்." இது சூபியின் குற்றச்சாட்டு

"இந்தக் குர் ஆனை அரபு மொழியில் அருளியிருக்கிறோம் - நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக" - இது அல் குர் ஆன் 012:002.
இலண்டன் ரெவரெண்ட் பாதிரியார் வீட்டுப் பிள்ளை மர்மட்யூக் பிக்தால் என்பாருக்கு அரபு மொழிப் பயிற்றுவிக்கப் பட்டது. எதற்காக? குர் ஆனைக் குறை காண வேண்டும் என்பதற்காக! குர் ஆனில் பிழை தேடப் புகுந்த அவர்தாம், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதோடு மட்டுமின்றி குர் ஆனுக்கு ஆங்கிலத்தில் விரிவுரையும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியும். 

சூபி எழுதியிருப்பதுபோல், அல்குர்ஆன் அரபு மொழி 'சார்ந்தது' (?) இல்லை; வஹ்ஹாபின் வார்த்தைகள் 'தெளிவான அரபு மொழி'யில் அருளப் பெற்றவைதாம் என்பது 'சூரியன்' நக்கீரன் வரைக்கும் தெரிந்த வெள்ளிடை மலை செய்தியாகும். நான் சூபியை இடைமறித்தது "முஸ்லிம்களின் அல்குர் ஆன்" என்று அவர் குறிப்பிட்டதைத்தான். அதற்காகத்தான் 081:027 வசனத்தையும் சான்றாக வைத்திருந்தேன்.

குர் ஆனை மேற்கோள் காட்டினாலே சூபிகளுக்கு மிரட்சி ஏற்பட்டு விடும். அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட முடியுமோ? "... இது மிகத் தெளிவான அரபு மொழியில் (அருளப் பெற்று) உள்ளது" 016:103. ஒரு கருப் பொருள் குறித்த முழு அறிவும் அடிப்படை அறிவும் யாவை என்பதற்கு ஓர் உவமையைப் பார்ப்போமா?

'தமிழில் எழுதுதல்' என்ற ஒரு கருவுக்குத் தமிழின் உயிர் எழுத்துகள் 12ஐயும் மெய் எழுத்துகள் 18ஐயும் உயிர்மெய் 216ஐயும் ஆய்தம் 1ஐயும் சேர்த்து 247 எழுத்துகள் பற்றிய 'முழு அறிவு' கட்டாயம் தேவை. தமிழைச் சீரிய முறையில் தெளிவாக எழுத, அடிப்படை அறிவுக்கு மேற்கொண்டு இலக்கணங்கள் தெரிந்திருக்க வேண்டும். சூபியைவிடச் சிறப்பாக எழுத அடிப்படை அறிவே போதும்.

காலத்திற்கேற்றவாறு வேதங்களில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களை, 'அல்லாஹ்வுக்கே முழு அறிவு இல்லை' என்றுக் கூற விழைதலைவிட அறியாமை ஏதுமுண்டா?.
 " ... இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்; என்னுடைய அருட்கொடை (இறைமறை)யையும் முழுமையாக்கி விட்டேன்; உங்களுடைய வாழும் வழியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்." என்று அல்லாஹ் கூறுகிறான் [005:003].
'இன்றைய நாளில்', 'நிறைவு', 'முழுமை' ஆகிய சொற்கள் உணர்த்துவது யாதெனில், 'இதற்கு முன்னர் முழுமை பெற்றிருக்கவில்லை' என்பதைத்தான்.

இது, சூபியின் சுரியானி, பிரியாணி போன்ற புதுக் கண்டுபிடிப்பன்று. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வஹ்ஹாபே கூறியவைதாம்.

ஹஜ்ஜின்போது பலி கொடுத்தல், முடி மழித்தல் ஆகிய அனைத்தும் அரபுவகைப் பட்டதல்ல என்று முன்பே நிறுவியிருக்கிறேன். ஏனெனில், அவையனைத்தும் அண்ணல் இபுராஹீம் நபி அவர்களின் வழிமுறை; அண்ணல் இபுராஹீம் அரபியரா? என்று கேட்டிருந்தேன். என் கேள்விக்கு பதில் தராமல் தன்னுடைய அறியாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சூபி உறுதியாயிருக்கிறார். அவருடைய உறுதியை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை!.

புதிதாக சூபி புகுத்தியிருப்பது 'இஸ்லாமிய ஆடை விதிகள்' (Dress Code) அரபுவகைப் பட்டன' என்பதாகும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் எல்லாரும் அரபியரைப் போன்று உடையணிந்து திரிவதாகக் கனவு கண்டிருக்கிறார். கிருத்துவப் பாதிரியார்களும் கன்னிகளும்தாம் அரபியரைப் போன்று உடையணிகின்றனர். கிழித்துக் கொண்டு திரிவது சூபிகளின் வழக்கமென்பதால் முழுக்க அணிவது முட்டாள்தனமாகத் தெரிகிறது போலும்.

மாறுபட்ட மொழிகள் பேசுவோர் வாழும் நம் நாட்டுக்கான தேசியப் பாடலாக, வங்கக் கவிஞர் தாகூரின் 'ஜன கன மன'வை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் - அது பிறந்த சூழலைக் கருத்திலெடுக்காமலேயே.

முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர் ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல. 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும். நபிகள் நாயகம் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர் ஆன் தமிழில்தான் அருளப் பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ் மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர். அப்போதும் சீனாவில் பிறந்த ஒரு பி-சூ மேதாவி, "சீன மொழியில் தொழுகை நடத்த தயாரா?" என்று வலையில் சவால் விட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து,

"ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்து கொள்ளலாம்" என்பது , 'காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனை'யன்று. மாறாக, வஹ்ஹாப் வஹ்ஹாபிகளுக்கு வழங்கியிருக்கும் அதிகளவில் வழக்கிலில்லாத அனுமதி - ஆம்; அனுமதிதான்; ஆணையன்று. கூடுதல் விபரங்களுக்கு:

1- பலதார மணம், பாவமா பரிகாரமா? - சுட்டுவிரல்

2- பலதார மணம் - இறைநேசன்

"நினைத்த நேரத்தில் முத்தலாக் சொல்லி பெண்ணை ஒடுக்குமுறை" செய்ய முடியாது. பாஸ்டன் பாலா அறிந்து வைத்திருப்பதைக்கூட அறியாத சூபியின் பார்வைக்கு: தலாக் ஒரு விளக்கம் - அபூ முஹை.

என்னுடைய சொத்தில் என் விருப்பத்திற்கு, நானே யாருக்கும் பங்கு கொடுக்க முடியாது. யாருக்கு எவ்வளவு என்று என் இறைவன் தன் மறையில் வகுத்திருக்கிறானோ அதன்படி அவரவர் எடுத்துக் கொள்வர் - நான் இறந்த பின்னர். அதில் சூபிக்குப் பங்கில்லை.

மேலும்,

தன் பிள்ளைகளின் அப்பன் பெயர் தெரியாத அம்மாப் பட்டியலை உள்ளடக்கிய 'பெண்ணிய இஸ்லாம்' போன்று இன்னும் எத்தனை இஸ்லாம்களை அறிமுகப் படுத்தினாலும் வஹ்ஹாபின் சட்டப்படி [003:019] இஸ்லாம் என்பது ஒன்றுதான் - ஒன்றே ஒன்று!

கருத்துகள் இல்லை: