வெள்ளி, அக்டோபர் 20, 2006

சிறப்புச் செய்திகள்-3 அல்லது குருட்டுத்தனக் கட்டுடைப்பு

சென்றவாரம் (12.10.2006) திண்ணையின் அரசியலும் சமூகமும் பகுதியில் இடம் பெற்ற குலாம் ரஸூலின் 'திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள் ...' என்ற கட்டுரை, திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்கு வியப்பையோ சினத்தையோ அல்லது இரண்டையுமோ ஏற்படுத்தியிருக்கலாம். எனக்கு ஏற்படுத்தவில்லை! 

யானையைத் தடவிப் பார்த்து, தமக்குத் தோன்றியவாறு கூறிய குருடர்களைப் பற்றிப் படித்தபோது, யாருக்காவது வியப்போ சினமோ ஏற்பட்டதுண்டா? இனி, குருட்டுத்தனமான சங்கதிகளை ஒவ்வொன்றாய்க் கட்டுடைக்கலாம்: 

1. "இமாம் அபூபக்கரின் காலத்தில் இம்முயற்சி துவங்கி சைதுஇப்துதாபித் என்ற குர்ஆன் தலைமை எழுத்தாளாரின் முன்முயற்சியில் மனனம் செய்யப்பட்ட நபித்தோழர்களின் வசனங்கள் அவர்களின் முன்னிலையிலேயே உறுதி செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு முதல் கலீ·பா அபூபக்கர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தம் மரணத்திற்கு பிறகு மகளாரும் நபிமுகமதுவின் மனைவியுமான ஹப்சாவிடம் இப்பிரதி பாதுகாக்கப்பட்டு வந்தது" என்று கூறுவது யார் தெரிகிறதா? அன்னை ஹஃப்ஸா யாருடைய மகள் என்று கூடத் தெரியாத 'குர்ஆனை வரலாறு சார்ந்து அறிவு ரீதியாக அணுகு'வதாகப் பீற்றிக் கொள்ளும் குலாம்தான். 

அன்னை ஹஃப்ஸா, இரண்டாவது கலீஃபா உமர் அவர்களின் மகளாவார்; முதலாவது கலீஃபா அபூபக்ரு அவர்களின் மகளல்லர். குர் ஆனின் தொகுப்பு குறித்த வரலாற்றுச் சான்றுகளைப் படித்துப் பார்த்து, அவற்றை விளங்கி, பின்னரே எழுதத் துணிய வேண்டும். இல்லையெனில், இழுக்குதான். 

2. "ஒலிவடிவம் / எழுத்து வடிவமாகும்போதே ஒரு மாற்றத்திற்குள்ளாகிறது என்பதே முதல் உண்மை." மிகவும் மெனக்கெட்டு இந்த உண்மையைக் கண்டு பிடித்ததுபோல் குறிப்பிடுகிறார் குலாம் - பெயருக்கே உரிய சிறுபிள்ளைத் தனமாய். الله என்ற வரிவடிவத்தை "அல்லாஹ்" என்ற ஒலிவடிவத்தால் மொழியும்போது உண்டாகும் அந்த 'ஒரு மாற்றம்' என்னவோ? குலாமுக்கே வெளிச்சம். الله என்ற வரிவடிவத்தை 'அல்லாஹ்' என்று சரியாக எழுதத் தெரியாத குலாம்தான் 'வடிவ மாற்ற'ங்களைப் பற்றிய 'உண்மை'யை வெளிக்கொணர முயல்கிறார்; வேடிக்கையாயில்லை? 

3. "அரபு எழுத்து மரபில் ஸேரு, ஸபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா உள்ளிட்ட உயிர்க் குறிகள் சார்ந்து இலக்கணமுறைமைகளும், வாக்கிய அமைப்பு, தொகுப்பு, தலைப்பிடுதல் உள்ளிட்டவை பிற்காலத்தில் இணைக்கப்பட்டவையாகும்." என்று எழுத்து மரபெல்லாம் சொல்ல வருகிறார் குலாம். 'ஸேரு, ஸபரு, பேஷ்' ஆகியன அரபுச் சொற்களே அல்ல; மாறாக அவை உருதுச் சொற்கள். எகர-ஏகார ஒலி வடிவங்கள் அரபு மொழியில் இல்லாதவை என்ற அடிப்படை விதி, பாவம் 'ஸே'ரும் 'பே'ஷும் சொல்ல - அரபுப் பேராசிரியர் வேடமிட்டு - வந்திருக்கும் குலாமுக்குத் தெரியாததில் வியப்பொன்றுமில்லை. 

இந்தப் படத்தில் உள்ள இறைவசனங்களை அகர, இகர, உகரக் குறியீடுகள் எவையுமின்றி துல்லியமாகப் படிப்பதற்கு, வேண்டியதெல்லாம் அரபு மொழியறிவே! வேடம் பூண்டு வந்தால் விளங்கி விடாது; வேடம் கலைந்து விடும். 

4. "அல்லாஹ் தன்னையே தான் ஒருபோதும் புகழ்வதாக சொல்வதில்லை" என்று, அல்லாஹ்வின் வேதத்தைக் கரைத்துக் குடித்தவர்போல் அடித்துக் கூறுகிறார் குலாம். விரிவஞ்சி, மிகச் சில மறுப்புகள் மட்டும்: "வானங்களையும் பூமியையும் படைத்து, இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [006:001]; "எவ்விதக் கோணல் குறைபாட்டையும் கொண்டிராத இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மது) மீது அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [018:001]; "இரவிலும் பகலிலும் வானங்களிகளிலும் பூமியிலும் உள்ள அனைத்து(உயிரினங்களு)ம் போற்றும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [030:018]; "வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. திண்ணமாக அல்லாஹ் தேவையற்றவனும் மிகப் புகழுக்குரியவனுமாவான்." [031:026]; "புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே ... " [034:001]; "அகில உலகத்தாரையும் படைத்தாளும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [037:182]; "வானங்களின், பூமியின் மற்றும் அகிலத்தாரின் இறைவனுமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" [045:036].  

இவையன்றி, "தூய்மையானவன்", "அன்பு நிறைந்தவன்", "கருணையாளன்", "மன்னிப்பவன்" போன்ற தன் பண்புப் பெயர்களை அல்லாஹ் தானே எடுத்தியம்பிப் புகழ்ந்து கொள்ளும்/புகழக் கற்பிக்கும் ஏராள வசனங்கள் குர்ஆனில் உள - அவனுடைய சொற்களாகவே. 

5. "நபியே நீர் கூறும் என்பதான சிலபகுதி வசனங்களை அல்லாவின் வார்த்தைகளாக சிலர் ஆதாரம் காண்பிக்க கூடும். ஆனால் இவ்வார்த்தைகள் நபிமுகமதுவின் உள்மனக் குரலாகவே வெளிப்பட்டுள்ளது" என்றும் "திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளாகும்" என்றும் "திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகள்தான் என்பதற்கு திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பாத்திகாசூரா சுட்டிக்காட்டுகிறது" என்றும் "எனவே திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளென உறுதிப்பட கூறலாமென்ற கருத்தும் விவாதிக்கப்படுகிறது" என்றும் 'திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த சில கற்பிதங்களை கட்டுடைக்க' முயன்று தன் அகக் குருட்டைத் திண்ணையில் வெளிப்படுத்தும் குலாம், முதலில் தன்னுடைய குருட்டுத் தனத்தைக் கட்டுடைத்து விட்டு வர வேண்டும். இதைத்தான் என்னுடைய 24.02.2006 திண்ணைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். 

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: மேற்காணும் 1-5 எண்களிட்ட சொற்றொடர்களை முறையே, குருட்டுத் தனம்-1, குருட்டுத் தனம்-2 ... என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன். 

இனி, சிறப்புச் செய்தி-3: 
தன்னைச் சுற்றிக் கூடியிருந்த சீடர்களிடம் முஹைதீன் ஆண்டவர் கூறினார்: "காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் என்னிடம் வந்து ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை எனக்கு அறிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து அந்த ஆண்டில் நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் தம்மிடம் என்னென்ன மறைவான விஷயங்கள், ரகசியங்கள் (இரண்டும் ஒன்றுதானே என்று யாரும் கேட்கக் கூடாது) நடக்கவுள்ளன என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன." கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 189இல் 19-21 வரிகளில் மேற்காணும் மாயாஜாலச் சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. 
"(நபியே! அவர்களிடம் கூறுவீராக:) அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளனவென்று நான் கூறவில்லையே! மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நான் ஒரு வானவர் என்றும் உங்களிடம் கூறவில்லை. எனக்கு இறைச் செய்தி மூலம் அறிவிக்கப் படுவதையன்றி எதையும் நான் பின்பற்றுவதில்லை ... [006:050].

"மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறிய முடியாது ..." [006:059]. 
அகிலத்தின் அருட்கொடையாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே வழங்கப் படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மையை முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குச் சூட்டி அழகு பார்க்கும் 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிதை, குலாம் ஏன் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கிறார் என்று வாசகர்களுக்கு இப்போது விளங்கியிருக்கும். 

பெரிய-கொடிய மிருகங்கள் எல்லாம் மோதிப் பார்த்த மலைதான் குர்ஆன். அதில் மோதிச் செத்துப் போன மிருகங்களின் உக்கிப்போன எலும்புகள் அம்மலையின் அடிவாரத்தில் இன்னும் எஞ்சிக் கிடக்கின்றன. கழிவிடக் கொசுக்களின் கடிக்கெல்லாம், மலை அசைந்து கொடுத்து விடாது. 

கட்டுடைப்பு தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ

ஞாயிறு, அக்டோபர் 08, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 5

இஸ்லாம் என்பது சான்றாதரங்களாகிய 'இஸ்னாது' என்னும் தூண்களின் மீது நிறுவப் பட்ட வாழ்க்கை நெறியாகும். "நமக்கும் மற்றவருக்குமுள்ள வேறுபாடு, இஸ்னாது எனும் தூண்களாகும்" -அறிவிப்பவர்: இபுனுல் முபாரக், ஆதாரம்: முஸ்லிம். இஸ்லாத்தின் சான்றாதரங்களாகத் திகழும் குர்ஆன்-ஹதீஸ் என்னும் அடிப்படைகளைப் பற்றிக் கவலைப் படாமல், பொய்யும் புனைவும் கலந்து பாடப்பட்ட, மார்க்கத்துக்குப் புறம்பான பாடல்கள் பலவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழனியில் களைகளாக மலிந்துள்ளன. இன்று நம்மிடையே காணப் படுகின்ற இஸ்லாமிய இலக்கியங்கள் பல, இஸ்லாத்துக்கு வலு சேர்ப்பதைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை. இலக்கியத்தின் நாளங்களிலெல்லாம் இரத்தம் பாய்ச்ச வேண்டிய இவை, சீழைச் செலுத்தி இஸ்லாத்தை வியாதிப் படுத்த முயன்றுள்ளன. மார்கத்துக்கு முரணான இத்தகையக் கவிதைகளைப் பற்றி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளம் காட்டிச் சென்றுள்ளார்கள்.
"உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" புகாரீ-5688.
இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகளைக் குர்ஆன்-ஹதீஸ் முன்னால் நிறுத்தி நுணுகி ஆராயும்போது - ஸ்கேன் செய்து பார்க்கும்போது - அவற்றினுள்ளே எந்த அளவுக்குச் சீழ் மண்டியுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஒருவருடைய உடலில் எங்கேனும் சீழ் கட்டியிருப்பது அவருடைய முழு ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஊறு விளைவிப்பதாகும். எனவே, எத்துணை வேதனையாலும் தாங்கிக் கொண்டு, சீழை அப்புறப் படுத்தி, நலம் பெறுவதையே எவரும் விரும்புவர். இப்படியிருக்க, நம் உயிரினுமினிய இஸ்லாத்தின் மீது சீழ் நிரம்பியுள்ள எத்துணையோக் கவிதைக் கொப்புளங்கள் கிளம்பிப் புரையோடிப் போயுள்ளதை நம்மில் பலர் கண்டும் காணாது போகின்றனர். இந்தச் சீழ் வடியும் கவிதைகளைப் பிதுக்கிக் காட்டும்போது, இவர்கள் வேதனையால் துடித்துப் போகின்றனர். இவ்வேதனை எந்த விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளத் தக்கதுவே என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். இஸ்லாத்தைப் புண்படுத்தும் கவிதைகளை அடையாளம் காட்டுவோரை இவர்கள் புண்படுத்தத் தொடங்குகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத்துக்கு முரணான கவிதையைச் "சீழ்" என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, அத்தகையக் கவிதைகளைப் புனையும் கவிஞனை "ஷைத்தான்" எனவும் வெறுத்துக் கூறியுள்ளனர். அல்குர் ஆனின் 026:221ஆவது வசனத்தில் பொய் புனைபவர்களை ஷைத்தான் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றும் அமைந்துள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 'அர்ஜ்' என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்; உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, அவருடைய உள்ளத்தில் சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" என்று கூறினார்கள் - முஸ்லிம் 4193.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

புதன், அக்டோபர் 04, 2006

சிறப்புச் செய்திகள்-2

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முடவன், "வானம் ஏறி வைகுண்டம் போவேன்" என்று வாய்ச் சவடால் விட்டானாம். வாசகர்களுக்கு விளங்கியிருக்கும்! திண்ணையில் கடை விரித்து, குலாம் ரஸூல் விற்க முயன்ற மவ்லிதுச் சரக்கு [சுட்டி-1] எத்துணை உளுத்துப் போனது என்பதற்கு அவருடைய சரக்கிலிருந்தே நான் எடுத்துக் காட்டிய ஒரேயொரு சான்றான மவ்லிதுக் காவியத்தின் வில்லி தாரியாவின் 'முலையறு சபத'த்திற்கு [சுட்டி-2] பதில் சொல்ல வக்கற்ற குலாம், படைத்த இறைவனின் வேதச் சொற்களை ஏளனம் செய்வதைத் தொடர்கிறார். இதில் இவருடைய பெயர் குறித்து, திண்ணையின் பாதி இடத்தை அடைத்துப் பிலாக்கணமும் கூடவே. 

அது சரி, குலாம் என்ற 'யாரோ ஒருவரு'க்கு நான் அளிக்கும் விளக்கங்களுக்கு, மறுப்பு என்ற பெயரில் ஹெச்.ஜி. ரஸூல் என்பவர் ஏன் கிளை தாண்டிக் குதிக்க வேண்டும்? என்று வாசகர்கள் யாரும் கேட்டு விடக் கூடாது. இவர்தான் 'தீவிர விவாதம்' செய்யும் இஸ்லாமிய (?) முற்போக்கு (??) எழுத்தாளராம்! 

குலாமுடைய உளுத்துப் போன எழுத்துகளை இனங் காட்டுவதற்கு ஒரு வஹ்ஹாபி வீட்டு குலாம் (சிறுவன்) போதும். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களின் பாடங்களுக்கு ஊறு நேர்ந்து விடக் கூடாது என்பதால் நான் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். "தொடர்கிறார்" என்று இங்குக் குறிப்பிடுவதற்குக் காரணம் யாதெனில், 13 ஜனவரி 2006 நாளிட்ட திண்ணை இதழில் வெளியான இவருடைய கட்டுரையில் இறைமறை குர்ஆனில் இடம் பெறும் பல நிகழ்வுகளும் இறைவனின் கட்டளைகளும் இவரால் முன்பே ஏளனம் செய்யப் பட்டிருந்தன [சுட்டி-3]. 

'இறைவேதம்' என்று முஸ்லிம்கள் நம்புகின்றக் குர்ஆனை இவர் நம்ப மறுத்து ஏளனம் செய்வதால் குர்ஆனின் ஓரெழுத்துக்கும் குறைவு வந்து விடாது; இஸ்லாமுக்கு எவ்வித இழப்பும் ஏற்பட்டு விடாது என்பதை இனங் காட்டி, திண்ணையில் விளக்கமளித்திருந்தேன் [சுட்டி-4]. அதையெல்லாம் மறந்து விட்டு இப்போது 'நிழல் சண்டை' என்பதாக மாய்ந்து போகிறார் குலாம். எனக்கு குலாம்களோடு விளையாடுதலே விருப்பம்; சண்டையிடுதலன்று. இனி, விளையாட்டைத் தொடருவோம்: குலாமுக்கு என்னுடைய கேள்வி :
நபிகள் நாயகத்தின் பிறந்த தேதியும் நேரமும் குர் ஆனில் இல்லை என்பதால் இஸ்லாமிற்கு ஏற்படும் இழப்புகள் யாவை?
குலாமுடைய உளறல்:
நபிகள் நாயகம் பிறந்த தேதி, நேரம், குறித்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எதற்கு என பூஞ்சைத்தனமான கேள்வியைக் கேட்கிறார் ஹாபி. (அப்படியா?) குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இல்லை எனில் எதையும் ஏற்கமாட்டோம், நிராகரிப்போம் என்று முழங்கி வருகிறீர்களே... நபிகள் நாயகத்தின் பிறப்பு விவரங்கள் குறித்து எதுவும் குர்ஆனில் இல்லை. உங்கள் தர்க்கவாத அடிப்படையில் குர்ஆன் ஹதீஸ் படி பிறக்காத ஒருவரை எப்படி இறுதிநபியாக பின்பற்றுவீர்கள்? அவர் மூலம் அறிவிக்கப்பட்ட திருக்குர்ஆனை அல்லாவின் வேதமாக எப்படி நம்புவீர்கள்....
கேள்வி என்ன என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத குலாமின் உளறலுக்குக் குர்ஆனின் விளக்கங்கள்: முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறைவனின் தூதர் [003:144] ; [048:029]. இறைவனிடமிருந்து அருள்மறை குர்ஆனை வஹீ எனும் இறைச் செய்தியாகப் பெற்றவர் [002:097, 004:163, 010:002-015, 018:110, 046:009, 053:002-004 ; 076:023]. எம் தலைவரைக் குறிக்கும் கருவுக்குத் தொடர்புடைய வசனங்களை மட்டுமே ஈண்டு எடுத்தாண்டு, மற்ற வசனங்களை விரிவஞ்சி விடுத்தேன். "அரிசியைச் சமைத்துச் சோறாக்கி உண்ணுங்கள்" என்ற அறிவுரையும்தான் குர்ஆனில் இடம் பெறவில்லை. தமிழ் முஸ்லிம்கள் உட்பட பன்னூறாயிரம் முஸ்லிம்கள் அரிசிச் சோறு சாப்பிடுவதால் இஸ்லாமுக்கு என்ன இழப்பு? குர்ஆன் என்பது பிறப்பு-இறப்புப் பதிவுப் புத்தகமன்று என்ற அடிப்படையைக்கூட அறியாத இந்த அறிவுசீவிதான் இறைவனுடைய சொற்களை மனிதர்களின் கவிதை வரிகளின் சாயல் இருப்பதாக ஆய்வாளர்கள் (?) ஒப்பிட்டுக் கூறுவதாகக் கூத்தடிக்கும் இஸ்லாமிய முற்போக்கு எழுத்தாளராம் - சிரிப்பை அடக்கிக் கொள்ளச் சிரமமாயிருக்கிறது!  

"இவர் முதலில் தான் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் புனைவு மொழி கதையாடல்களிலிருந்து இந்த சிறப்புச் செய்திகளை ஆரம்பிப்பதே சரியானதாகும்" என்பதாக வேண்டுகோள் என்ற பெயரில் ஓர் அறிவுரையும் குலாமிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கிறது. எதை, எப்படி ஆரம்பிக்க வேண்டும்; எப்படி 'பெருங்கதையாடல்களை' முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும். குர்ஆனையும் ஹதீஸையும் கதையாடல் என்று குறிப்பிடும் குலாமிடமிருந்தா நான் படித்துக் கொள்ள முடியும்? என்றாலும், குலாமுடைய வேண்டுகோளுக்கிணங்க குர்ஆனின் 19ஆவது அத்தியாயமான 'மர்யம்' வசனங்கள் 016 முதல் 024 வரைக்குமான விளக்கங்கள் இங்குத் தரப் படுகின்றன [சுட்டி-5]. அறிவுரையை அடுத்து, "தர்கா சியாரத்தையும் சாமி கும்பிடுவதையும் ஒன்றெனக் கூறும் வகாபியர்கள், கிராமப்புறங்களில் பத்திர காளி அம்மனுக்கும், கருப்பண்ண சாமிக்கும் ஆட்டை, மாட்டை பலி கொடுப்பதற்கும், முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளன்று ஆடுகளையோ, மாடுகளையோ, ராஜஸ்தானிலிருந்து வரவழைத்த ஒட்டகங்களையோ பலி கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?" என்ற குலாமுடைய வினா ஒன்றுக்கு, குர்ஆன் கூறும் விடையையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
"மேலும், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அல்லாஹ் உணவாக அருளியுள்ள(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவனுடைய பெயர் நினைவு கூரப்பட்டு அறுப்பதற்காகவே பலியிடுதலை(க் கடமையாக) விதித்திருக்கிறோம்" [022:034].
முஸ்லிம்கள் தம் இறைவனின் கட்டளையை ஏற்றுத்தான் ஹஜ்ஜின்போது மினாவில் மட்டுமின்றி, தம் இல்லங்களிலும் பலியிடுகின்றனர் என்பது குலாமுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் இது பாமர முஸ்லிம்களுக்கும் தெரிந்த மிகச் சாதாரணச் செய்தி. பத்ரகாளி அம்மன் மற்றும் கருப்பண்ணசாமிக்குப் பலியிடுவது குறித்தான விளக்கங்களை அவ்வாறு பலியிடும் 'கிராமப் புறத்து' நண்பர்களிடம் குலாம் கேட்டுத் தெளிவடைந்து கொள்ளட்டும். 

இறுதியாக, பொருத்தமான சிறப்புச் செய்தி-2:
"தென்காசிக்கு நாகூர்வலீ ஷாஹுல் ஹமீது வந்தவேளை அங்குக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அவரும் அவருடன் வந்த சீடர்களும் உண்ண உணவின்றித் தவித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாதாகோவில் மாட்டைத் திருடி, பலி கொடுத்து விருந்து வைத்துத் தின்று விட்டனர். இதையறிந்த மாதாகோவில் ஆட்கள் வந்து கேட்டபோது, ஷாஹுல் ஹமீது வலீயும் அவர்தம் சீடர்களும் சாப்பிட்டுப் போட்ட மாட்டின் எலும்புகளை ஒன்று திரட்டி, ஷாஹுல் ஹமீது வலீ தன் கோலால் அடிக்கவே மாடு எழுந்து (!) நின்றது. மாதாகோவில் ஆட்கள் தம் மாட்டை ஓட்டிச் சென்றனர்."
கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 234இல் 15-16 வரிகள் 5ஆவது ஹிக்காயத்தாக இச்சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. 

ஊரான் வீட்டு மாட்டைத் திருடி உண்டு கொழுப்பதுதான் குலாமுடைய கடைச் சரக்கான உளுத்துப் போன 'மரபுவழிப் பண்பாட்டுக் கலாச்சார' மவ்லிதுக் காவியம் என்பது வாசகர்களுக்குத் தெளிவாகியிருக்கும். சமாதிப் புரோகிதர்களின் வயிறுகள் மட்டுமின்றி, எழுத்துப் புரோகிதர்களின் வயிறுகளும் எரிகின்றன என்றால் காரணமில்லாமலா? ஒருகாலத்தில் நிரம்பி வழிந்த உண்டியல்கள் வஹ்ஹாபிகளின் வரவால் இன்றைக்கு அதலபாதளத்தில்! 

சிறப்புச் செய்திகள் தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ