ஞாயிறு, அக்டோபர் 08, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 5

இஸ்லாம் என்பது சான்றாதரங்களாகிய 'இஸ்னாது' என்னும் தூண்களின் மீது நிறுவப் பட்ட வாழ்க்கை நெறியாகும். "நமக்கும் மற்றவருக்குமுள்ள வேறுபாடு, இஸ்னாது எனும் தூண்களாகும்" -அறிவிப்பவர்: இபுனுல் முபாரக், ஆதாரம்: முஸ்லிம். இஸ்லாத்தின் சான்றாதரங்களாகத் திகழும் குர்ஆன்-ஹதீஸ் என்னும் அடிப்படைகளைப் பற்றிக் கவலைப் படாமல், பொய்யும் புனைவும் கலந்து பாடப்பட்ட, மார்க்கத்துக்குப் புறம்பான பாடல்கள் பலவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழனியில் களைகளாக மலிந்துள்ளன. இன்று நம்மிடையே காணப் படுகின்ற இஸ்லாமிய இலக்கியங்கள் பல, இஸ்லாத்துக்கு வலு சேர்ப்பதைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை. இலக்கியத்தின் நாளங்களிலெல்லாம் இரத்தம் பாய்ச்ச வேண்டிய இவை, சீழைச் செலுத்தி இஸ்லாத்தை வியாதிப் படுத்த முயன்றுள்ளன. மார்கத்துக்கு முரணான இத்தகையக் கவிதைகளைப் பற்றி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளம் காட்டிச் சென்றுள்ளார்கள்.
"உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" புகாரீ-5688.
இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகளைக் குர்ஆன்-ஹதீஸ் முன்னால் நிறுத்தி நுணுகி ஆராயும்போது - ஸ்கேன் செய்து பார்க்கும்போது - அவற்றினுள்ளே எந்த அளவுக்குச் சீழ் மண்டியுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஒருவருடைய உடலில் எங்கேனும் சீழ் கட்டியிருப்பது அவருடைய முழு ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஊறு விளைவிப்பதாகும். எனவே, எத்துணை வேதனையாலும் தாங்கிக் கொண்டு, சீழை அப்புறப் படுத்தி, நலம் பெறுவதையே எவரும் விரும்புவர். இப்படியிருக்க, நம் உயிரினுமினிய இஸ்லாத்தின் மீது சீழ் நிரம்பியுள்ள எத்துணையோக் கவிதைக் கொப்புளங்கள் கிளம்பிப் புரையோடிப் போயுள்ளதை நம்மில் பலர் கண்டும் காணாது போகின்றனர். இந்தச் சீழ் வடியும் கவிதைகளைப் பிதுக்கிக் காட்டும்போது, இவர்கள் வேதனையால் துடித்துப் போகின்றனர். இவ்வேதனை எந்த விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளத் தக்கதுவே என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். இஸ்லாத்தைப் புண்படுத்தும் கவிதைகளை அடையாளம் காட்டுவோரை இவர்கள் புண்படுத்தத் தொடங்குகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத்துக்கு முரணான கவிதையைச் "சீழ்" என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, அத்தகையக் கவிதைகளைப் புனையும் கவிஞனை "ஷைத்தான்" எனவும் வெறுத்துக் கூறியுள்ளனர். அல்குர் ஆனின் 026:221ஆவது வசனத்தில் பொய் புனைபவர்களை ஷைத்தான் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றும் அமைந்துள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 'அர்ஜ்' என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்; உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, அவருடைய உள்ளத்தில் சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" என்று கூறினார்கள் - முஸ்லிம் 4193.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: