வியாழன், பிப்ரவரி 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத குரைஷிக் கவிஞர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் தங்களுடைய மூதாதையரின் வழிபாட்டுக் கொள்கையில் ஊறித் திளைத்தனர். கவிதையை ஓர் இன்பமூட்டும் கருவியாகக் கையாண்டனர். கவிதையைப் பாடுபவர்களும் கேட்பவர்களும் இன்பக் கிளர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக அதீதக் கற்பனைகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பொய் புனைவுகளையும் மிகுதியாகக் கையாண்டனர். இதுபோன்ற ஒரு தன்மையினைத் தமிழ் இலக்கிய மரபிலும் நாம் காண முடிகின்றது. இஸ்லாமிய வாழ்க்கைநெறி தமிழகத்தில் தழைப்பதற்கு முன்பாக இங்கே சைவ, வைணவச் சமயங்கள் செல்வாக்குற்றுத் திகழ்ந்தன. சிவபெருமானை வழிபடுபவர்களும் திருமாலை வணங்குபவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தமிழில் தத்தம் சமய இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். இன்றைய தமிழ் இலக்கியத்தின் செழிப்பிற்கு இச்சமயங்கள் முக்கிய காரணமாய் அமைந்தன. மின்சார வசதியோ பத்திரிகைகள், வானொலி, தொலக்காட்சி போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களோ இல்லாத அக்காலத்தில் மக்களுடைய பொழுதுபோக்கும் கருவிகளாக இத்தகைய இலக்கியங்கள் சிறப்பிடம் வகித்தன. இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், திருவிளையாற்புராணம் போன்ற காப்பியக் கவிதைகளை மக்கள் கூடியிருந்து பெருவிருப்புடன் கேட்டனர். கோவில் திருவிழாக்களில் பெரும் திரளான மக்களை ஈர்ப்பதற்காக இத்தகைய புராண-இதிகாசக் கவிதைகளை எடுத்துரைத்தனர். பல்வேறு கடவுளர்களின் பெயராலும் அவதாரங்களுடைய பெயராலும் அமைந்த இந்தச் சமய இலக்கியங்கள் மக்களிடையே வழிபாட்டுக்குரியனவாகக் கொள்ளப் பட்டன. இப்படிப் பட்ட ஒரு காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் புதிதாக இஸ்லாம் புகத் தொடங்கியது. மெல்ல மெல்ல இஸ்லாம் தமிழ்நாட்டில் பரவத் தலைப் பட்டதும் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்ட தமிழறிஞர்கள் இலக்கியங்கள் வாயிலாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். இவ்வாறாகத் தோன்றிய இலக்கியங்களுள் இன்று அறியப் படக்கூடிய மிகப் பழமையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் 'பல்சந்த மாலை' என்பதாகும். இந்நூல், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகும். இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனவும் சிலர் கூறுவர். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. வெறும் எட்டுப் பாடல்கள் மட்டும் அறிய வந்துள்ளன. இதையடுத்து நமக்குக் கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய 'யாக்கோபு சித்தர் பாடல்கள்' என்பவையாகும். கி.பி. 16ஆம் நூற்றண்டில் 'ஆயிரம் மஸ்அலா', 'மிஃராஜ் மாலை' ஆகிய நூல்களும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் 'சீறாப்புராண'மும் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் காலப் போக்கில் பல்கிப் பெருகலாயிற்று. புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களால் தமது முந்தைய இந்துமதக் கலாச்சாரத் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள இயலவில்லை. எனவே, அவர்கள் கோவில் திருவிழாக்களிலும் புராண-இதிகாச கதா-காலட்சேபங்களிலும் சென்று கலந்து கொண்டனர். இதைத் தடுப்பதற்காக ஆலிப் புலவர் என்பார் 'மிஃராஜ் மாலை' எழுதினார்; உமறுப் புலவர் 'சீறாப்புராணம்' பாடினார். பொய்யைக் கொண்டு இலக்கியத்திற்குச் சுவையேற்றும் இயல்பும் இந்தப் புது வெள்ளத்தால் அடித்து வரப் பட்டு, தூய இஸ்லாமுக்குள் புகுத்தப் பட்டது. இன்றுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. காப்பியம், கலம்பகம், அந்தாதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், மாலை, நாயகம், படைப் போர், மஸ்அலா, அம்மாணை, ஏசல், சிந்து, தாலாட்டு, கும்மி, கோவை, சதகம், முனாஜாத், பள்ளு, குறம், கீர்த்தனம், வண்ணம், கிஸ்ஸா, ஞானப் பாடல்கள் - முதலிய ஒவ்வொரு வகையிலும் ஏராளமான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், அவற்றுள் 25 சதவிகிதத்திற்கும் குறைவானவைதாம் தூய்மையான குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 'உண்மையான இஸ்லாமிய இலக்கியங்கள்' எனலாம். இவையல்லாத பெரும்பாலான நூல்களில், பொய்யும் கற்பனைக் கவிதைகளுமே மலிந்திருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் தட்டழிந்து திரியக் கூடியவர்களால் இத்தகைய வழிகேட்டிலக்கியங்கள், வழிபாட்டிலக்கியங்களாகப் போற்றப் படுதலைக் காண்கிறோம். உண்மையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எது? முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இயற்றியுள்ள கவிதைகள் அனைத்தும் இஸ்லாமிய இலக்கியங்கள் ஆகுமா? அவை குர் ஆனுக்கும் ஹதீஸிற்கும் அமைந்திருந்தாலும் அவற்றை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனக் கொள்ளத்தான் வேண்டுமா? முஸ்லிமல்லாத புலவர்கள் குர் ஆன் ஹதீஸிற்கு முரணில்லாத கருத்துகளைப் பாடினால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா? உமையத் இபுனு அபிஸ்ஸல்த்து என்பவருடைய கவிதையைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, "அவருடைய கவிதை ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டு விட்டது; ஆனால், அவருடைய உள்ளம் காஃபிராய் (இறைமறுப்பதாய்) இருக்கிறது" எனக் கூறினார்கள். திரு. வி. கலியாண சுந்தரனார் என்னும் தமிழறிஞர் பாடியுள்ள
அரபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்ற மரபினை வாழச் செய்த முகம்மது நபியே போற்றி!
என்ற இப்பாடலில் இஸ்லாமுக்கு முரண்பட்ட கருத்துகள் எதுவுமில்லை. திரு. வி.க.வின் உள்ளம் காஃபிராயிருப்பினும் அவருடைய இக்கவிதை ஈமான் கொண்டுள்ளதன்றோ? இதேபோன்று, உள்ளம் ஈமான் கொண்ட நிலையில் ஒருவருடைய கவிதை குஃரு(இறை மறுப்பு)க்குத் துணை போகுமானால், அக்கவிதையை மறுதலித்துவிட வேண்டும். இதுவே இஸ்லாமிய இலக்கியத்தை இனங்கண்டு கொள்ளும் வழிமுறையாகும். மிஃராஜ் மாலை, சீறாப்புராணம் போன்ற தொடக்க கால இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் தோற்றத்திற்குரிய காரணங்களை அந்தந்த நூல்களின் முன்னுரைகளே தெளிவாக எடுத்துரைக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், இந்துமதச் சகோதரர்களுடைய கோவில் திருவிழாக்களிலும் கதா-காலேட்சபங்களிலும் பெரும் திரளாகச் சென்று ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதைக் கண்ட முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், இஸ்லாமிற்கு எனக் காப்பியம் இல்லாமையால்தானே இந்த முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களை நாடிச் செல்கின்றனர் எனக் கவலைப் படலாயினர். அந்தக் கவலையின் விளைவாக, இந்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் எழுதப் பட்ட இலக்கியங்கள் அனைத்திலும் முன்னைய தமிழ்ச் சமயங்களின் தாக்கம் தவிர்க்கவியலாத அளவுக்கு இடம் பெறலாயிற்று. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.

1 கருத்து:

Jafar ali சொன்னது…

//ஒவ்வொரு நிலையிலும் தட்டழிந்து திரியக் கூடியவர்களால் இத்தகைய வழிகேட்டிலக்கியங்கள், வழிபாட்டிலக்கியங்களாகப் போற்றப் படுதலைக் காண்கிறோம்.//

மிக அருமையான வரிகள்!!