ஞாயிறு, ஏப்ரல் 29, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13

இதையடுத்து, "முழுமதி போன்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பெண்கள் திருஷ்டி கழித்தார்கள்" (பாடல் 109) எனவும் "பெண்களின் குரவை ஒலியோடு பல்வேறு வாத்திய இசைகள் முழங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கதீஜா நாயகியும் மணவறை புகுந்தார்கள்" (பாடல் 115) எனவும் பாடுகின்றார் புலவர்.

இஸ்லாம் என்னும் ஆற்றில் ஒருகாலையும் கொச்சை வருணனைகள் என்னும் சேற்றில் ஒருகாலையும் பதித்துக் கொண்டு உமறுப் புலவர் தன்னுடைய புராணம் நெடுகிலும் இவ்வாறு தடுமாறி நடந்துச் செல்கிறார்.

சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபதாவது படலம் 'பாத்திமா திருமணப் படலம்' என்பதாகும். இதில் பாத்திமா நாயகி படைக்கப் பட்டமை பற்றி உமறுப் புலவர் பின்வருமாறு பாடுகிறார்:
சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கும் இம்பர்ப் பூண்முலை யவர்க்கும் ஏக நாயகி யென்னப் பூவில் காணுதற் கரியோன் செய்தானென்னிலிக் கவின் - கொண்டோங்கு மாணிழை மடந்தை குற்ற பெற்றியார் வகுக்க வல்லார்? (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 8)
வானவர்களில் ஆண்களோடு தேவலோகத்துப் பெண்களும் உள்ளனர். அவர்கள் கண் இமைக்காத இயல்பினர் என்பது பிறமதப் புராணங்கள் கூறும் செய்தியாகும். "கண் இமைக்காத தேவலோகத்துப் பெண்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் பெண்ணினத்தார் அனைவர்க்கும் ஏக நாயகியாக பாத்திமா நாயகியைப் படைத்தான் பூவில் காணுதற்கு அரியோன்" என்கிறார் உமறுப் புலவர்.

புகைறா கண்ட படலத்தின் இரண்டாவது பாடலில் இடம் பெற்றுள்ள 'வசனத்து இலகு செல்வி' என்னும் தொடர் பிறமதப் பெண் கடவுளாகிய இலட்சுமியைக் குறித்து நின்றதை முன்னர்க் கண்டோம். 'வசனத்து இலகு செல்வி' என்பது எவ்வாறு இலட்சுமியைக் குறிப்பிடுகிறதோ அதுபோலப் 'பூவில் காணுதற்கு அரியோன்' என்னும் தொடர் பிறமதக் கடவுளான பிரம்மதேவனைக் குறித்து வருவதாகும். சைவ, வைணவ இலக்கியங்களில் இந்துக்களின் படைப்புக் கடவுளாகிய பிரம்மதேவனைச் சுட்டுவதற்காக இதே சொல்லாட்சி பல இடங்களில் கையாளப் பட்டுள்ளது. ஆகவே, படைத்தல் தொழிலைச் செய்பவனாகிய பிரம்மதேவன்தான் பாத்திமா நாயகியைப் படைத்தான் எனவும் தேவலோகத்துப் பெண்களை விடவும் அவர்கள் சிறப்புற்றுத் திகழ்ந்தார்கள் எனவும் பாடி அடுக்கடுக்காக முரண் படுகிறார் உமறுப் புலவர்.

வானவர்கள் ஆணுமல்லர் பெண்ணுமல்லர் என இஸ்லாம் கூறுகிறது. ஆனால், உமறுப் புலவரோ தேவலோகத்தில் உள்ள "இமையா நாட்டத் தெரிவையர்" எனப் பாடுகின்றார். இவ்வாறாகவெல்லாம் பிறசமய மரபுகள் என்னும் கோடாரியைக் கொண்டு இஸ்லாமின் ஏகத்துவ வேரில் உமறுப் புலவர் ஓங்கிப் போடுகின்ற இடங்களுள் இதுவும் ஒன்றாகும்.

அல்லாஹ், ஜிப்ரீல், நபிகள் நாயகம் ஆகியோரைக் தொடர்பு படுத்தி, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான பல புளுகுரைகளையும் உமறுப் புலவர் பாடிச் செல்கின்றார். அடுத்து வருவது அதில் ஒரு பகுதி:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன், வானவர்கோன் ஜிப்ரீல் தோன்றிக் கூறுகிறாராம்: "முஹம்மதே! உமக்கு ஸலாம் உண்டாகட்டும். பாத்திமாவுக்காக இறைவன் வானுகையெல்லாம் அலங்கரிக்குமாறு மலக்குகளுக்குக் கூறினான். அவர்கள் அவ்வாறு அலங்கரித்து முடித்ததும் பாத்திமா-அலீ ஆகியோருக்கு இறைவனே மஹரை நிர்ணயித்து, என்னையும் இஸ்ராயீல், மீக்காயில் ஆகியோரையும் சாட்சியாக வைத்து நிக்காஹ்வை முடித்து வைத்ததாகக் கூறினான்" என்றார்.

"ஜிப்ரீல் இவ்வாறு கூறக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்" எனப் பாடுகிறார் உமறு. இதனை, "புகழ் தர மஹரும் நாட்டி" பாத்திமாவை அலீக்கு அல்லாஹ் நிக்காஹ் செய்து விட்டதாக 32ஆம் பாடலில் பாடுகிறார். ஆனால், தொடர்ந்து வரும் 49ஆம் பாடலிலோ, "நும் புதல்வி உள்ளத்து உறைகின்ற மஹரைக் கேட்டு வருக" என்று ஜிப்ரீலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி இறைவன் கேட்பதாகப் பாடுகின்றார். அடுத்தடுத்த பாடல்களுக்குள்ளேயே ஒன்று கிடக்க ஒன்றைப் பாடி வைக்கிறார் புலவர். இப்படியாக வந்த இறை கட்டளைக்கு இணங்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகள் பாத்திமாவை அணுகி மஹர் குறித்து வினவினார்களாம் (பாடல்கள் 48-50).

அதற்கு, "மறுமை நாளில் பாவிகளான பெண்கள் அனைவருக்காகவும் நான் 'ஷஃபாஅத்' என்னும் பரிந்துரையைக் கோர வேண்டும். இதையே எனக்கு மஹராக இறைவன் ஏற்றருள வேண்டும்" என பாத்திமா நாயகி பதிலுரைத்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்களாம்:
இறுதியில் பவத்தின் மாதர் என்ஷஃபா அத் ஈடேற்றம் பெற மன்றாட்டு அருள வேண்டிப் பேரருள் கபூல்செய்தேனேல் உறுதி நன் மஹர்பெற் றேன் என்று உரைத்தார்(பாடல் 51).
அதை இறைவனும் ஏற்றுக் கொண்டு, பாத்திமாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக ஒரு 'பச்சைக் கடுதாசி'யில் எழுதி ஜிப்ரீல் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்தனுப்பினானாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவுக்கு அதைப் 'படித்து'க் காட்டிவிட்டு, "மஹ்ஷர் நாளில் நீ இக்கடித்தை என் கைகளில் தரவேண்டுமாதலால் இதனை யாரும் தொடாதவாறு பத்திரமாக வைப்பாயாக" எனக் கூறி பாத்திமாவிடம் கொடுத்தார்களாம். அந்தப் 'பச்சைக் கடுதாசி'ப் பாடலை அடுத்து காண்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

1 கருத்து:

Unknown சொன்னது…

திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்தானே மஹர் தர வேண்டும்!.
அவர்கள் கேட்கும் மஹரைத் தர திருமணம் செய்து கொள்ளப் போகிறவருக்குத் தகுதியில்லையே!!.
குழப்பத்தின் மறுபெயர்தான் சீறாப்புராணமா?