இந்த ஸுஃபிச் சன்னியாசிகள்- தர்வேஷ்கள் வழியாகத்தான் சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டுப் பெற முடியும் என்ற எண்ணத்தைப் பாமரர்களிடம் பரப்பி வைத்தார்கள். இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக்கொள்ளும் முஸ்லிம்களும் பெருகினார்கள்.
ஸூஃபி்யான ரூமியின் 'மஸ்னவீ' எனும் நூலை, ஃபார்ஸீ மொழியில் அமைந்தக் குர்ஆன் எனச் சொல்லலானார்கள். இத்தகையப் பிஸ்தாக்களும் பிஸ்தாமிகளும் நாளடைவில் இஸ்லாத்தில் பெருகலானார்கள்.
துறவு நெறியில் வாழும் இத்தகைய ஞானிகளின் வாயிலாகத்தான் மறைஞானத் தத்துவமாகிய இறையிணைவு (Mysticism) இரகசியத்தைப் பெறமுடியும் என்றனர் ஸூஃபிகள். இந்த இறையிணைவு இரகசியம் என்பது இவர்களுக்கு முன்பு யாருமே அறியாத பெரிய விஷயமன்று. கிரேக்கர்கள் கூறிய 'இயல்வன யாவும் இறையுருவே' என்ற Pantheismதான் அது. வேதாந்தத்தின் உட்பொருளாகிய 'அத்துவைதம்' என்பதும் அதுவே.
இதையெல்லாம் மாற்றாரிடமிருந்து தத்தெடுத்துக் கொண்ட ஸூஃபிகள், மாற்றாரைப் பார்த்து, "உங்களிடம் வெறும் அத்துவைதம் மட்டும்தானே இருக்கிறது! எங்களிடமோ அத்துவைதத்துடன் ஏகத்துவமும் இருக்கிறதே" என்று மார் தட்டினர். அது எப்படி அத்துவைதமும் ஏகத்துவம் எனும் துவைதமும் சேர்ந்திருக்க முடியும்? இரண்டுமே வெவ்வேறான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட எதிரெதிர் சமயக் கோட்பாடுகளாயிற்றே எனக் கேட்டால், "பாமரர்களாகிய உங்களுக்கு அப்படித்தான் தெரியும். அத்துவைதமாகிய அனேகத்-துவத்தில் ஏக-ஒரு துவத்தைப் பார்ப்பதற்கு உள்ளொளி பெற்றிருந்தால்தான் முடியும்" என்பார்கள்.
உள்ளொளியாகிய அறிவைப் பெறுவது ஸூஃபிஸத்தின் முதற்படி என்றனர். அதாவது, ஒருவன் தன்னை அறியவேண்டும் என்றும் தன்னை அறிந்தவன் தன் ரப்பை (இறைவனை) அறிந்தவனாவான் என்றும் கூறினர். இந்தத் 'தன்னை அறியும்' கடுந்தவ முயற்சியில், மனைவி, மக்கள், குடும்பம், சமுதாயம் முதலியவை குறுக்கே நிற்பதால் உலகப் பற்றை விட்டு நீங்கித் துறவறம் மேற்கொண்டு தியான நிஷ்டையில் மூழ்க வேண்டும் என்றனர்.
அப்படி மூழ்கி முக்குளித்துத் தன்னிடத்தில் தன் ரப்பைக் கண்டவன் எவனோ அவனுக்குக் காண்பவை எல்லாம் ரப்புடைய திருக்காட்சியாகவே ஆகிவிடுகின்றன என்பதும் எல்லாப் பொருளுமே அல்லாஹ்வைத் தவிர வேறல்ல என்னும் கண்ணோட்டத்தில் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதும் ஸூஃபிஸத்தின் நெறியாகும். இங்ஙனம் அறிவு, துறவு, அன்பு என்னும் மூன்றும் ஸூஃபிஸத்தின் முக்கியப் பண்புகள் எனப்பட்டன.
இப்படியாக, இயல்வன யாவும் இறையுருவே என்னும் அத்துவைதக் கோட்பாட்டைத் தன்மயமாக்கிக் கொண்ட ஸூஃபிஸம், அதற்கு ஒரு அரபுப் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது. அப்போதுதானே இஃது இஸ்லாத்தோடு தொடர்புடையது எனப் பறைசாற்ற முடியும்? ஸூஃபிகள் தம் கோட்பாட்டுக்குச் சூட்டிய அரபுப் பெயர் 'வஹ்தத்துல் உஜூது' என்பதாகும். அதாவது, 'உள்ளவை எல்லாம் ஒன்றே' என்பது இதன் பொருளாகும்.
இந்த வஹ்தத்துல் உஜூதுக் கோட்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர்கள் மேற்கோள் காட்டிய இறைவசனம்:
(முஸ்லிம்களே! பத்ருப் போரில் எதிரிகளான) அவர்களை நீங்கள் வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான். (நபியே! பகைவர் மீது மண்ணள்ளி) நீர் வீசியபோது நீர் வீசவில்லை; அல்லாஹ்வே வீசினான்" (அல்குர் ஆன் 008:017).
இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, அல்லாஹ்தான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக புவியில் அவதரித்தான் என்று கூறினார்கள் ஸூஃபிகள்.
இப்புவியில் ஊனுருவாய் நீ அஹ்மத் ஆவனனே (ஞானப் புகழ்ச்சி - பாடல் 134).நீயே உனக்கு ஸுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய்நீயே புவிக்குள் ரஸூலாக வந்தவன் (ஞானப் புகழ்ச்சி - பாடல் 118).
என்றெல்லாம் பீரப்பாவும் தன் பங்குக்கு இதனைப் பாடி வைத்தார்.
ஆனால், அந்த 008:017 இறைவசனம் அறிவித்திடும் உண்மையான பொருள் அதுவன்று.
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக