'கமலாதாஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள மொழியில் சிறுகதைகளும் சுயசரிதமும் எழுதிய 75 வயதான கமலா சுரையா, புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் கடந்த 31.05.2009 அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலையாள இதழ்களும் தொலைக்காட்சிகளும் அவரைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்தன. தன் மண்ணின் மகளுக்கு மலையாள உலகம் மரியாதை செய்வதில் வியப்பொன்றுமில்லை. அவருக்குத் தமிழ் இணைய உலகிலும் அஞ்சலிகள் செலுத்தப் படுவதைக் காணும்போது அவரது எழுத்தின் வலிமையை, பரவலை உணர முடிகிறது.
கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதி, சிறையில் இவருடைய எழுத்தை வாசித்தார். பிறகு தண்டனைக்குறைவு பெற்று விடுதலையாகி மாதவிக்குட்டியின் வீட்டுக்கு வந்து 'அம்மயுட மடியில் தலைவைத்துக் கிடக்கணும்' எனக் கோரினார்; அது நிறைவேறியது
என்று 'மாதவிக்குட்டிக்கு அஞ்சலி' என்ற பதிவில் நாகார்ஜுனன் குறிப்பிடுகிறார்.
மேலும் மாதவிக்குட்டியைத் தான் சந்திக்க நேர்ந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லும்போது,
டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு அகஸ்மாத்தாக நான் சென்றபோது அங்கே காரில் இவர் ஏறிக்கொண்டிருந்தார். உளவுத்துறை விசாரணை பற்றிய யோசனையிலேயே நான் சென்றதால் என் மோட்டார் சைக்கிள் இவர் காரை உரசிவிட்டது. ஓட்டுநர் என்னை ஏதும் சொல்வதற்குள் 'எந்தா மோனே..' என்று வந்து என் தோளைத் தட்டிச் சிரித்தார். நிறைய நகை அணிந்திருந்தார். கைவளை ஒலி காதுவரை சென்று மீண்டும் சிலிர்த்தேன். அப்போதுதான் தொட்டது மாதவிக்குட்டி என உணர்ந்தேன். "ஓ, என் தப்புதான்.. ஸாரி.... உங்கள் கதைகளை வாசித்திருக்கிறேன்..." "எந்தினா ஸாரி மோனே, என் கதைகளை வாசித்ததற்காகவா.." என் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு சட்டென்று காரில் ஏறிச் சென்றார்
என்று குறிப்பிட்டு விட்டு, மாதவிக்குட்டியின் நினைவாக அவரது "நெய்ப்பாயாசம்" கதையைத் தமிழாக்கித் தந்திருக்கிறார் நாகார்ஜுனன் (நன்றி!).
ஏற்கனவே கீற்று இதழில் குருமூர்த்தியும் நெய்ப்பாயாசத்தை, மெருகேற்றிய தமிழில் தந்திருக்கிறார். அச்சிறுகதையின் இறுதிப் பகுதியான, "அவர்கள் சாப்பிடட்டும்.... அவளுடைய கைப்பட்ட சமையல் இனிமேல் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லையல்லவா" என்று முடிவதைப் படித்தபோது இனிமேல் கமலா சுரையா எழுதப் போவதில்லை என்ற உண்மையின் ஒலியும் நமக்குள் அங்குப் பேசாமல் பேசுகிறது.
பொதுவாக, ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளுமே தங்களது குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதும்போது, அது வறுமை நிறைந்த சூழலுடன் இருந்திருந்தாலும், தாங்கள் அனுபவித்த குழந்தைப் பருவத்தை ஒரு கனாக் காலமாகவே எழுதுவர். ஆனால், கமலாதாஸ் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி, 'Punishment in kindergarten' என்ற கவிதையில் எழுதும் அம்சம் முற்றிலும் மாறுபட்டது
என்று 'அஞ்சலியும் ஆசையும்' எனத் தலைப்பிட்டு 'குளோபன்' எழுதுகிறார். அந்தக் கவிதையில் கமலாதாஸின் உணர்ச்சிகள் ஆங்கிலப் புலமையோடு இரண்டறக் கலந்திருப்பதைக் காண முடிகிறது.
மலையாளத்தில் அவர் எழுதிய சுயசரிதையான 'எண்ட கதா' (என் கதை) குமுதத்தில் தமிழில் தொடராக வெளிவந்தபோது தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை அது கிளப்பியது.
"என் கதை"யை நீங்கள் எழுதியபோது மக்கள் அதிர்ந்து போயினரே? என்ற ரீடிஃப் ஷோபா வாரியர் விடுத்த கேள்விக்கு, "அதெல்லாமில்லை; அதிர்ந்ததுபோல் பாசாங்குதான் செய்தனர்" என்று தனது வெளிப்படையான எழுத்தை நியாயப் படுத்தினார் கமலா.
தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலாதாஸ் போல அடித்தவர்கள் யாரும் கிடையாது
என்று அவர் எழுதிய 'பொய்கள்' என்ற கதையை மேற்கோள் காட்டுகிறார் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் 'பொடிச்சி':
பிள்ளையைத் தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?). அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை. அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதைத் தன் தாயிடம் தன்னுடைய மொழியில் இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுப் பிள்ளை சொல்லும்போதெல்லாம், பிள்ளை 'பொய்' சொல்வதாகவும் வரவர அவன் பொய்கள் கூடுவதாகவும் தகப்பன் சொல்லுவார். பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, "ஏதேனும் கனவு கண்டியோடா?" என தடவிக் கொடுப்பாள். "உண்மையாத்தான்" என அழுவான் மகன் - கதையின் முடிவு வரை!
***
"அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!" "நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை" "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது" "நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், 'நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!' என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்தக் கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்" என்ற கமலா சுரையாவின் ஆசையை, தம் அஞ்சலிப் பதிவாக்கி இருக்கிறார் மரைக்காயர் என்ற முஸ்லிம் பதிவர்.
இதுவரைக்கும் எல்லாம் சரிதான்.
சுவையான 'நெய்ப்பாயாச'த்தில் கிடக்கும் பொடிக்கல்லைப்போன்ற ஒரு பதிவையும் படிக்க நேர்ந்தது. அது ஜெயமோகனின் பதிவு.
கேரள சாகித்ய அகாடமி அலுவலகத்தில் கமலாதாஸைச் சந்தித்ததாகத் தொடங்கும் 'அஞ்சலி: கமலா சுரையா' என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள பதிவைப் படிப்பவர்களுக்கு அவர் கமலாதாஸைத்தான் சந்தித்தாரா அல்லது வேறு யாரையோவா என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் எழுதுகிறார்:
கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது
இதழ்கள், தொலைக்காட்சிகள் நமக்குக் காட்டுகின்ற இப்போதைய கிழவி கமலாவே ஜெயமோகன் குறிப்பிடும்படி 'அவலட்சணமாக' இல்லை என்பதால் அவரது அப்போதைய 'சந்திப்பு' நிகழ்வு என்பதே கற்பனையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்குக் கமலா சுரையாவின் படமும் இணைத்திருக்கிறேன். வாசகர்கள் முடிவு செய்யட்டும்.
இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் கைது செய்யப்பட்டபோதுமின்றி, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்ற பிறகும் "அவர் சத்தாம் அல்ல; அவரைப்போல் உருவம் கொண்ட டூப்ளிகேட்" என்று சொன்ன சில முஸ்லிம்களையும் அண்மையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் "மாவீரர் தினத்தன்று தோன்றுவார்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களையும் காணும்போது, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கும் மனப்பான்மை அவர்களிடம் குடிகொண்டிருப்பதை உணர்கிறோம். அதேபோன்ற தன் உள்ளக்கிடக்கையில் ஒளிந்து கொண்டிருக்கும் 'அல்ப ஆசை'களை ஜெயமோகன் வெளிப்படுத்துகிறார்:
"... அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே 'பாதுகாப்பான துணை தேடி' மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார்.
செத்துப் போனவர் திரும்ப வந்து மறுக்கப் போவதில்லை என்ற தைரியத்தில், நாலாந்தர எழுத்தாளனைப்போல் ஜெயமோகன் எழுதியிருப்பதைப் படிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது!
இவ்வாக்கத்தின் தலைப்பை ஒருமுறை படித்துக் கொள்வோம்.
'செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளல்' என்று சொல்வதுபோல் செத்த பிறகும் ஜெயமோகன் என்ற எழுத்தாளனின் முகமூடியைக் கிழித்தார் கமலா சுரையா. 'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
"என்னைப் பற்றி அவதூறுகள் பரப்புபவர்களையும் தவறாக எழுதுபவர்களையும் பலவேளைகளிலும் சபிக்க வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு அவர்கள் என்னைத் துன்பப்படுத்துகின்றனர். என் மீது இந்த அளவிற்கு அவர்களுக்கு வெறுப்பு வர நான் அவர்களுக்கு என்ன தீமை செய்தேன்?. அன்பு அல்லாமல், யார் மீதும் நான் வெறுப்பு காட்டியதே இல்லை. என்னைக் குறித்துத் தவறான கதைகள் எழுதியதைக் கேள்விப்படும்போது 'நாசமாப் போக' என்று சபிக்கத் தோன்றும். இந்துவாக இருந்திருந்தால் அதைச் செய்திருப்பேன். ஆனால், இப்போது என்னால் முடியாது! துன்பம் இழைப்பவர்களுக்கும் இஸ்லாம் நன்மை செய்யுமாறு கூறுகிறதே! அவர்கள் நன்றாக எழுதட்டும். என்னால் அவர்களைச் சபிக்க இயலாது!"
மேற்காண்பவை, புனாவிலுள்ள கமலா சுரையாவின் மகன் ஜெயசூர்யாவுடைய வீட்டில் வைத்து (சென்ற மாதம்) கைரளி தொலைக்கட்சிக்குக் கமலா சுரையா அளித்த பேட்டியின்போது அவர் கூறியவையாகும். கடந்த 02.06.2009 இரவு கைரளி மக்கள் தொலைக்காட்சி அதை ஒளிபரப்பியபோது அவர் கூறியதாக மளையாள நண்பர் ஒருவர் எனக்குத் தமிழாக்கித் தந்தவை. எழுதி இரண்டு நாட்களுக்குள் ஜெயமோகனின் முகமூடி கிழிபட்டது இப்படித்தான்.
மேலும்,
"பூனாவில் சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்குக் கையில் போதிய பணம் ஏதும் இல்லை. அந்த அளவுக்குச் சேமிக்கவில்லை. எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கணவருக்கும் தனியாக நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்ததால், எனக்கு எழுத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு என் கணவரும் எவ்வித எதிர்ப்பும் காட்டவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது என்பதே தனி ஒரு மகிழ்ச்சி தானே?. கிடைப்பதை எல்லாம் நமக்கே என்று சேர்த்து வைத்து நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகமதிகம் கொடுக்க வேண்டும். ஒருவேளை நான் இஸ்லாத்திற்கு மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்குக் கொடுப்பதைச் சட்டமாக, கடமையாகவே ஆக்கி வைத்திருக்கும் மார்க்கம் அது. எவ்வளவு அழகான மார்க்கம்! வருமானத்தில் 2.5 சதவீதத்தைக் கட்டாயமாக சக்காத்தாக பிறருக்குக் கொடுக்க இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. முன்னரும் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது இன்னும் இன்னும் அதிகமதிகம் கொடுக்கிறேன். 2.5% அல்ல, என்னிடமுள்ளதில் பாதியைக் கொடுக்கிறேன்; இன்னும் காலம் செல்ல முக்கால் பாகம், ஏன் முழுவதையுமே நான் கொடுப்பேன். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோசம், அது ஒரு தனி ரகம்; அனுபவித்தவர்களுக்கே அது புரியும்!"
என்று மூச்சுக்கு மூச்சு, தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாம் குறித்துப் பெருமை பொங்கப் பேசும் கமலா சுரையாவை, "மீண்டும் குருவாயூரப்பன் பக்தை"யாக்கிப் பார்ப்பதற்கு ஜெயமோகனுக்கு அற்ப ஆசை!
கமலா சுரையாவுக்குக் கொலை மிரட்டல்கள்/கொலை முயற்சிகள் இருந்தன என்பது உண்மைதான். அவை எங்கிருந்து வந்தன என்பதை அவரே கூறுகிறார்:
"கொலை மிரட்டல்கள் ... அது ஏராளம். இஸ்லாத்திற்கு மாறிய நாளிலிருந்து ஆரம்பித்தது அது. இதனால் யாருக்கு என்ன நஷ்டம்?. அவ்வப்போது காவல்துறையினர் வந்து ஆலோசனைகள் கூறிச் செல்வர். இப்போதும் சில நாட்களுக்கு முன்னர், இங்குத் தொலைபேசியை மாற்றி வைத்து, நேரடியாகக் காவல்துறை கண்ட்ரோல் அறையுடன் இணைத்துள்ளனர். அழைப்பவர்களின் எண்ணும் தெரிவதுபோல் காலர் ஐடி மெஷின் வைத்துள்ளனர்."
"எழுத்தச்சன் விருது வழங்க, என்னை அழைத்தனர். நான் வீட்டை விட்டு இனி எங்கும் போவதில்லை எனக் கூறி விட்டேன். முக்கியமாக பப்ளிக் மீட்டிங்குகளுக்கு நான் வருவதில்லை என அனைத்தையும் ரத்து செய்து விட்டேன். என்னைக் கொல்ல நினைப்பவர்கள், அந்த இடத்தில் ஒரு குண்டைக் கொண்டு வந்து போட்டு விட்டால் போதும்தானே? நான் இந்த வயசுக்குப் பிறகு இறப்பதால் எனக்கொரு இழப்பும் இல்லை. ஆனால், வாழ வேண்டிய இன்னும் ஒரு நூறு பேர் எனக்காக இறப்பதை நான் விரும்பவில்லை"
"கொச்சியில் இருக்கும் போதும் அப்படித்தான். ஆனால், அங்குக் காவல்துறைக்கும் மேலாக எனக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பாக இருந்தனர். அப்படித்தான் சொல்வேன். கமாண்டோக்கள்தான். 8 பிள்ளைகள். என்னை உம்மா என்றுதான் அழைப்பார்கள். என்.டி.எஃபைச் சேர்ந்தப் பிள்ளைகள். யாராவது உணவு தந்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி என்னைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். சில வேளைகளில் சில பெண்கள் வலுக்கட்டாயமாக என் வாயில் மிட்டாய்களைத் திணிப்பர். அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர்களை எதிர்ப்பதில்லை. வாயில் வாங்கிக் கொண்டு அவர்களைக் காணாமல், குளியலறைச் சென்று துப்பி விடுவேன். அந்தப் பிள்ளைகள் கண்டால் கொதித்து விடுவார்கள். பின்னர் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தப் பின்னரே என்னைச் சாப்பிட அனுமதிப்பர். ஒரு முறை அப்படித்தான், ஒரு பெண் கொண்டு வந்த மிட்டாயை உடனே சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சமது அதை வாங்கி முதலில் சாப்பிட்டுப் பார்த்தான். அதில் என்னைக் கொல்ல விஷம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேரம், பல மருத்துவர்கள் போராடி சமதைக் காப்பாற்றினர். இப்போதும் என்னால் அதை மறக்க முடியாது. மற்றொரு முறை, ஒரு பெண் பிரியாணி செய்து கொண்டு வந்திருந்தாள். அதையும் முதலில் சாப்பிட்ட சமது மீண்டும் ஒருமுறை அதே போன்று மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பினான். என்னைக் கொல்வதற்கு அப்படி என்ன நான் அவர்களுக்குத் துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. எனக்கும் இந்து மதம் தெரியும் தானே? அதில் அப்படி ஒன்றும் இல்லை."
Kamala Das' son M D Nalapat, who has came to Kochi from Delhi, said that they had received a number of threatening telephone calls. The calls appeared to be from Hindu extremists, he added. One caller threatened that he would kill Kamala Das within 24 hours. Nalapat said that his mother had shown extraordinary courage in embracing Islam.
***
'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருந்தேன்.
உயிரோடு இருந்தபோது கமலா சுரையா யாருடைய முகமூடியைக் கிழித்தார் என்று சொல்ல வேண்டுமல்லவா?
'முகமூடி கிழித்துக் கொண்ட வெ.சா' என்று தலைப்பிட்டு நாகூர் ரூமி கமலா சுரையாவைப் பற்றி, திண்ணை 29.09.2006 இதழில் எழுதியது:
"நான் கூறாத பலவற்றையும் அவர்கள் செய்தியாக்குகின்றனர். எனக்கு இஸ்லாம் மதம் மடுத்து என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக, யாருக்காக இதெல்லாம் செய்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. சில பத்திரிக்கையாளர்கள் இங்கு வந்து என் வீட்டின் சமையல்காரிகளிடம் பேசி விட்டுப் போவர். பின்னர் அவற்றையெல்லாம் நான் கூறியதாகக் கூறி செய்தியாக்குகின்றனர். பத்திரிகையாளர்கள் இத்தனை சதிகாரர்களாக மாறி விட்டனரே?" "எனக்கு வாழ்வில் தேடலின் தீர்வை அளித்த என் சமுதாயத்திற்கு நான் என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். எனக்கு மதம் மடுத்து என்று நான் கூறாததைப் பரப்பியது போல் ஒவ்வொருவரும் என்னைப்பற்றி நாளுக்கொரு பொய்யைப் புனைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு எறும்பைக்கூட வேதனைப்படுத்த நினைக்காத என்னை எதற்காக இவர்கள் இப்படி துன்புறுத்துகின்றனர்? எனக்குத் தெரியவில்லை".
"இஸ்லாத்தை மதமாக ஏற்றுப் பின்னர் அதனை எனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டேன். ஒரு மதத்தில் இருந்து தேடலின் தீர்வாக மற்றொன்றை ஏற்றுக்கொண்ட நான் இந்த சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்" "எனது எல்லாக் கேள்விகளுக்கும் கடைசியில் கிடைத்த ஒரே பதில்தான் இஸ்லாம். ஏளனப்படுத்துபவர் ஏளனப்படுத்தட்டும். பிரபஞ்சத்தின் நாயனாகிய அல்லாஹ்வை நான் விசுவசிக்கின்றேன். எல்லாவற்றையும் அவன் நிச்சயிக்கட்டும்." (மொழிபெயர்ப்பு அபூ சுமையா, திண்ணை, 7 செப்டம்பர், 2006). "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." என்று 02-07-06 தேதியிட்ட ஆனந்த விகடனிலும் அவர் பேட்டி கொடுத்திருந்தார். நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ.சா.
***
கடந்த 28.05.2009 திண்ணை இதழில் குர்ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை நாகூர் ரூமியிடம் வெ.சா கேட்டிருந்தார். நாகூர் ரூமி இவ்விதழில் விளக்கம் தராவிடில் அடுத்த வாரம் நிச்சயம் நான் தருவேன் என்று வெ.சாவுக்கு உறுதி தருகிறேன்.
நன்றி!
திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906046&edition_id=20090604&format=html
சுட்டிகள்: 1 - http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_31.html
2 - http://www.keetru.com/literature/short_stories/m_gurumoorthi_12.php
3 - http://globen.wordpress.com/2009/05/31/kamaladas/
4 - http://search.rediff.com/news/1996/3107edas.htm
5 - http://peddai.blogspot.com/2005_05_01_archive.html
6 - http://www.maraicoir.com/2009/05/blog-post_31.html
7 - http://jeyamohan.in/?p=2819
8 - http://www.rediff.com/news/1999/dec/13kamala.htm
9 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609221&format=html
10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக