சனி, ஜூன் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 26

தற்குப் பின்னரும் ஸூஃபிஸம் உயிரோடுதான் இருந்தது. அதற்குப் புத்துயிர் ஊட்டியவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஹிஜ்ரீ 450முதல் 505வரை ஈரானில் வாழ்ந்திருந்த கஸ்ஸாலீ ஆவார். அவருக்கும் பின்னர் ஹிஜ்ரீ 560இல் வருகிறார் இப்னு அரபி எனும் ஸூஃபி. இந்த இப்னு அரபிதான், தன் காலத்துக்கு முன் இருந்த ஸூஃபிக் கோட்பாடுகளை எல்லாம் நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பினார். 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரணமும் இவரால்தான் சூட்டப்பட்டது.

இப்னு அரபியை ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றெல்லாம் ஸூஃபிக் கட்சியினரால் ஆஹா, ஓகோ எனப் பாராட்டப்படும். இவர் எந்த அளவுக்கு வழிகேட்டில் ஊறித் திளைத்தார் என்பதை அவருடைய கவிதைகளைப் படித்த மாத்திரத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.

இபுனு அரபி பாடுகிறார்:
வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது.
இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்;
சிலைகள் கொலுவிருக்கும் கோயில்;
அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி;
ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி;
தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே;
குர் ஆன் வேதமும் இதுவே;
நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன்.
அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே.
அன்பு எனும் மதமே என்னுடையது;
அதுவே என் நம்பிக்கை.
சமயங்களின் பெயரால் பிரிவினை பேசுவதை ஸூஃபிகள் வெறுத்தனர். எல்லாச் சமயங்களும் மூலநிலையில் ஒரே உண்மையைச் சொல்கின்றன என்பது ஸூஃபிகளின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இப்னு அரபியிடம் இப்படிக் கவிதையாக உருவெடுக்கிறது.

இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் என்கிறார் இப்னு அரபி:
அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி
அவனுடைய சாயலில் என்னைப் படைத்து
என்னைப் புகழ்கிறான்.

நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி
அவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனைப் புகழ்கிறேன்.

அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இருக்க முடியும்?

இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.
நான் அவனை அறிகிறேன்;
அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.
இஸ்லாத்தில் மட்டுமில்லாமல் ஏனைய மதங்களிலும் தெய்வீக உண்மைகள் பொதிந்திருக்கின்றன; அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இப்னு அரபியின் கருத்தாகும்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே.
மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர்.
காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்.
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய
கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு;
மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை.
அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர்.
ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு மதத்தினரையும் அன்பினால் தழுவிக் கொள்வதற்கேற்ற வகையில் சயமப் பொறுமையையும் அனுசரித்துப் போதலையும் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் இப்னு அரபி.

"ஒரே உண்மைப் பொருளின் ஒப்பற்ற ஜோதிதான் பள்ளிவாசலிலும் கிறித்துவ திருச்சபைகளிலும் கோவிலிலும் எரிகிறது" என்பது இப்னு அரபி போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் கருத்தாகும்.

இன்று வாழும் ஸூஃபிகள், இபுனு அரபியின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களேயாவர்.

எனவே, ஸூஃபிஸமாயிருந்தாலும் அத்துவைதமாக இருந்தாலும் அல்லது வேறெந்தத் தத்துவமாக இருந்தாலும் அவற்றை குர்ஆன்-ஹதீஸில் ஒப்பிட்டுப் பார்த்து, குர்ஆன்-ஹதீஸுக்கு முரண்படுபவற்றைத் தூக்கித் தூர எறிவோமாக!

குர்ஆன்-ஹதீஸை மட்டுமே பின்பற்றி, உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போமாக!

இந்தக் கொள்கை உறுதியை மனத்தில் இருத்திக் கொண்டு, தமிழ்நாட்டு ஸூஃபிப் புலவர்களின் இலக்கியங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: