வெள்ளி, செப்டம்பர் 24, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 28

சுல்தான் அப்துல்கதிர் என்பது குணங்குடி மஸ்தானின் இயற்பெயராகும். பிறப்பு 1207ஹி தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.
"அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் பதாகை (கோவணம்?) அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும்  நீங்கி விட்டனர்.
'முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்' - அப்துர் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1990 - பக்கங்கள் 456, 457.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில் ஹிஜ்ரீ 1254இல் அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான 'தொண்டியார் பேட்டை', இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.

இவர் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஸூஃபிக் கவிஞர் எனச் சுட்டப்படுகிறார். இறைவனையும் நபி (ஸல்) அவர்களையும் பற்றியும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்), நாகூர் ஷாஹுல்ஹமீது (ரஹ்) ஆகியோரைப் பற்றியும் இவர் பாடல்கள் பல பாடியுள்ளார். முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களைத் தம் ஆன்மீக குருவாகக் கொண்டிருந்தார் குணங்குடி.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

1 கருத்து:

Jafar Safamarva சொன்னது…

//தொடரும், இன்ஷா அல்லாஹ்.//

மிக ஆவலுடன்.....