நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட ஈஸா நபி (அலை) அவர்களைக்கூட இந்த ஸூஃபி அறிவிலிகள் அத்துவைதச் சிலுவையில் அறையத் தவறவில்லை. அவரையும் கடவுளாக, கர்த்தராக வழிபடுபவர்கள்தாம் இன்று பெரும்பான்மை ஜனத் தொகையினராவர்.
இந்த அத்துவைதக் கோட்பாட்டை அடித்துத் தகர்த்துவிட்டு, இறுதி நாள்வரை ஏகத்துவ வழிபாடு ஒன்றை மட்டுமே இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக இறைவனால் நபியாக அனுப்பப் பட்டவர்கள்தாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார். அவர்கள் தம் காலத்திலேயே இந்தத் தூய பணியை நிலை நிறுத்தி, அதில் மகத்தான பெருவெற்றியும் கண்டார்கள். அத்துவைதத்துக்கு அடிகோலக் கூடிய சிலைகள் தகர்ந்தன. தரை மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருந்த சமாதிகள் தவிடு பொடியாயின. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் எனும் கொள்கை ஓங்கி வளர்ந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார் எவருமிலர். இருப்பினும் அவர்கள்கூட அல்லாஹ்வின் அடிமையாகிய அடியார்தாம் என்பதை இஸ்லாம் மிக அழுத்தந் திருத்தமாக வரையறுத்து வலியுறுத்திக் கூறியுள்ளது.
நம்முடைய ஈமானைப் பறை சாற்றும் உயிர்க் கலிமாவின் உன்னத வாசகங்களைப் பாருங்கள்:
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ;
வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ!
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியுரைக்கிறேன். அவன் ஏகன்; அவனுக்கு இணை கிடையாது. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நிச்சமாக அவனுடைய அடியாரும் தூதருமாவார் எனவும் சாட்சியுரைக்கிறேன்.
இதுதான் நமது மூல மந்திரத்தின் முழுப் பொருளாகும்.
இந்தக் கலிமாவில் அல்லாஹ் யார்? நபி ஸல்லல்லாஹி அலைஹி வ ஸல்லம் யார்? என்பது மிகத் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப் பட்டுள்ளனர். அல்லாஹ்வுக்குரிய சிறப்பான தன்மைகள் இரண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சிறப்பான தன்மைகள் இரண்டும் இங்குப் பளிச்செனக் காணக் கிடக்கின்றன.
அல்லாஹ் ஒரே ஒருவன்தான். அவனுக்கு எத்தகைய கூட்டும் இல்லை என்பது அல்லாஹ்வுக்குரிய சிறப்பியல்புகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்தாம்; அவர்கள் அவனுடைய தூதராயிருக்கிறார்கள் என்பது நபிகளாரின் சிறப்பியல்புகளாகும்.
இந்தக் கலிமா, அத்துவைதக் கோட்பாட்டைப் புதை குழிக்கு அனுப்புவதற்காகவே புறப்பட்டு வந்தது போல் இல்லையா? ஆம். அதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களுமான ஸஹாபாப் பெருமக்களும் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள் என்பது இஸ்லாமிய வரலாறாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைவிட அல்லாஹ்வுக்கு நெருங்கிய மனிதர் வேறு யார் இருக்கிறார்கள்? அவர்களே அல்லாஹ்வின் அடியார்தாம் என்பதை நாம் சாகும் தறுவாயிலுங்கூட நினைவில் இருத்தத் தவறக் கூடாது.
இந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் அல்லாஹ் வந்து குடியிருந்து கொண்டான் என்றும் எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அல்லாஹ்தான் அல்லது அல்லாஹ்வின் ஒரு கூறுதான் என்றும் எவராவது கருதுவாரானால் அவர் கலிமாவைச் சரியாக விளங்காத பித்தராகத்தான் இருக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு அல்லாஹ்வை இணைத்து அத்துவைதம் பேசுவதே மாபெரும் பாவ காரியமாக இருக்கும்போது, வேறொரு மனிதரைக் கொண்டு அல்லாஹ்வுடன் கூட்டாக்கி அத்துவைத அவியல் சமைப்பது எவ்வளவு தவறான செயல்?
இந்தத் தவறான விஷ உணவுதான் குணங்குடி மஸ்தான் பாடல் முழுக்கப் பரிமாறப் படுகிறது. குணங்குடி மஸ்தான் நூலின் முதற்பாடலை இங்குப் பார்ப்போம்.
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
1 கருத்து:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
//குணங்குடி மஸ்தான் நூலின் முதற்பாடலை இங்குப் பார்ப்போம்.//
ஆர்வமுடன் எதிர்நோக்கியவனாக...!
கருத்துரையிடுக