புதன், மே 06, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 35

‘மனோன்மணிக் கண்ணி’யில் இறைவனை மனோன்மணி என்னும் பெண்ணாக உருவகித்துக்கொண்டு, இவருடைய விரக தாபங்களை எல்லாம் விவரித்துப் பாடுகின்றார். அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்பதற்கு முன்னால், மனோன்மணிக் கண்ணியின் கடைசிப் பாடலாகக் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளதை முதலில் பார்த்தாக வேண்டும்.

அப்பாடல்:
உமையாள் பாதம் முன் நிற்க
ஆதியந்தம் கடந்த உமையாள்தன் பாதம்
   அகண்ட பரி பூரணமாம் ஐயர் பாதம்
சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம்
   தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றிச்செய்து
ஆதியந்தங் கடந்த நந்திபாதம் என்றும்
   வாலை மனோன் மணியம்மை பாதமென்றும்
ஓதியந்தங் கடந்தண்ட மிரண்ட தாக
   ஒன்றுமறியா வறிஞன் உரை செய்தானே

உமையாள் பாதத்தையும் ஐயராகிய சிவபெருமான் பாதத்தையும் கணபதியின் பாதத்தையும் கைகுவித்து வணங்கித் துதி செய்துவிட்டு, நந்திப் பெருமான் பாதத்தையும் இறுதியாக மனோன்மணியம்மை பாதத்தையும் ஓதி உரை செய்தாராம் இந்தப் புலவர்.

“இல்லை இறைவன் அல்லாஹ்வைத் தவிர” என ஈமான் கொண்டவன் எவனும் இவ்வாறு பாடத் துணிய மாட்டானன்றோ? உமையாள் பாதத்துக்குத்தான் இப்புலவன் முன்னுரிமை கொடுக்கின்றான். ‘உமையாள் பாதம் முன் நிற்க’ என்னும் பாடல் தலைப்பு இதைத்தானே காட்டுகிறது? உமையாளை அடுத்து, சிவபெருமானை கும்பிட்டுவிட்டு, அதையடுத்து கணபதி கடவுளுக்குத் தொழுது இறைஞ்சிக் கரம் குவிக்கின்றார். பிறகுதான் இவருடைய மனோன்மணி என்னும் காதலியாகிய அல்லாஹ்வைப் பற்றிப் பாட வருகின்றார்.

இதிலிருந்து குணங்குடி மஸ்தானின் கடவுள் கொள்கையைக் குன்றின் மேலிட்ட விளக்கு போல நாம் சிரமமின்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது.

பெண்ணாக, ஆணாக, குழந்தையாக என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு இறைவனைப் பிற மதத்தார் எப்படியெல்லாம் வழிபட்டார்களோ அதுபோலக் குணங்குடி மஸ்தானும் வழிபடுகின்றார். இறைவனைப் பெண்ணாகக் கருதி அவர் பாடும்போது அவர் அபத்தத்தின் எல்லைகே சென்றுவிடுகின்றார். அதையும் பார்ப்போம்:

கண்ணே என் கண்மணியே கண்குளிர்ந்தக்கட்டழகுப்
     பெண்ணே அமிர்தப்பிழம்பே மனோன்மணியே

எனக் கூப்பிடுகின்றார். இறைவனாகிய பெண்ணோடு மணவறையில் கைகோர்த்துக்கொண்டு அப்பெண்ணின் கண்களில் மைதீட்டி, மார்பில் கைவைத்துக் காமப்பாலைக் குடிப்பதாகவெல்லாம் கனவு காண்கிறாராம் இந்தக் குணங்குடி மஸ்தான்.

மலர்ந்திருக்கும் பொற்கமல மணவறையில் இருவரும் கை
   கலந்திருக்கவும் கனவு கண்டேன் மனோன்மணியே
மைதீட்டவும் கயற்கண் மலரின் மலர் முலையில்
   கைப்பூட்டவும் கனவு கண்டேன் மனோன்மணியே
வாமப் பாலைப் பருக மறுவாலிபம் வருக
   காமப்பாலுண்ணக் கனவு கண்டேன் மனோன்மணியே

இவ்வாறு கனவு கண்ட புலவர், அடுத்து இறைவனிடம் – அதாவது அல்லாஹ்வாகிய காதலியிடம் என்ன கூறுகின்றார் பாருங்கள்:

கூந்தல் இலங்கக் குரும்பைத் தனம் குலுங்க
   நேர்ந்து நடம் புரிந்து நிற்பாய் மனோன்மணியே

மலர்மாலைகள் கிடந்து மார்பில் பின்னலாடும் உன்றன்
   அலர் முலையும் யான் என்று அணைவேன் மனோன்மணியே

பிடியாரைப் போலும் பிடிப்பேன் முலையைக் குணங்
   குடியாரைப் போலும் குடிப்பேன் மனோன்மணியே

காதம்பரிமளிக்கும் கஸ்தூரிப் பொட்டிடுவேன்
   போதும் சவ்வாதுமணிந்து புணர்வேன் மனோன்மணியே

தலைக்கு மினுக்கெண்ணெய் தடவிச் சடை பின்னி வைப்பேன்
   முலைக்கு வன்னக்கச்சு இறுக்கி முடிப்பேன் மனோன்மணியே

இப்படிப் பலவாறாகத் தன் காதலிக்கு அலங்காரம் செய்து அவளைப் புணர விரும்பிய புலவன், பின்னர் அக்காதலிக்கு தீப ஆராத்தி எடுத்து அவளுக்கு உணவு படைக்கின்றானாம்.

கற்பூர மேற்றிக் கரத்தீப ஆலாத்தி
   எப்பாரும் போற்ற எடுப்பேன் மனோன்மணியே

முக்காலமும் பூசை முடிப்பேன் முக்காலமல்லால்
   எக்காலமும் பொங்கலிடுவேன் மனோன்மணியே

சாதம் தளிகை சமைத்துச் சாம்பிராணித் தூபமிட்டுப்
   பாதம் தொழுதிட்டுப் படைப்பேன் மனோன்மணியே

முட்டை பொரிப்பேன் முழுக் கோழியும் பொரிப்பேன்
   தட்டைப் பீங்கானில் தருவேன் மனோன்மணியே

இவ்வாறாக எல்லாம் தன் காதலிக்குப் பணிவிடை செய்வாராம்.

இந்தப் பாடல்களுக்கு உள்ளர்த்தம் பேசி இதைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்ற ஸூஃபிச் சாம்பிராணிகள் அனேகர் உள்ளனர். பிற மதத்தவர் சிவலிங்கத்துக்குக்கூட சிம்பாலிஸம் சொல்வார்கள். அதுபோல சிம்பாலிஸம் பேசியே சீரழிந்து போனவர்கள் இந்த ஸூஃபிஸவாதிகள். இனி, மனோன்மணி கண்ணியைத் தொடருவோம்.

கருத்துகள் இல்லை: