சனி, ஜூன் 03, 2006

நன்றி, இபுனு பஷீர் - 1

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது:

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். (முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.) ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’ 
இஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா? இல்லவே இல்லை! குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது! அத்தியாயம் 3 வசனம் 8 "இன்னக அன்தல் வஹ்ஹாப்" என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!’ என்பதாகும். மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: "நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும். 

ஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.' 

இதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல். 

இங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது. இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான்! இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும். 

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்! 

பின்குறிப்பு: "இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்." - நேசகுமார். நல்ல ஜோக்! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/05/17/hgrasool/

கருத்துகள் இல்லை: