வியாழன், மே 18, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - முன்னுரை (சுருக்கம்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்! அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! மனித குலம் இம்மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும் என்பதற்காக, மனிதனைப் படைத்த இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியே அல்குர்ஆன் ஆகும். இந்த வாழ்வியல் நெறிக்கேற்ப எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துப் பெருவாழ்வு வாழ்ந்து சென்றவர் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களாவர். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் அல்குர்ஆன் என்னும் இறைமறையும் ஹதீஸ் என்னும் நபி நெறியுமேயாம். இலக்கியம் உள்ளிட்ட மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அழகிய வழிகாட்டுதல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. இலக்கியத் தளத்தில் நின்று தூய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை மேலோங்கச் செய்கின்ற நூல்கள் உலகெங்கும் தோன்றியுள்ளன. தமிழ் மண்ணில் இஸ்லாம் பரவிய ஆரம்பக் காலகட்டங்களில் 'இஸ்லாமியக் கொள்கைகளை எடுத்தியம்புவதற்காக' எனச் சொல்லிக் கொண்டு, தமிழ் இலக்கியங்கள் பல புனையப் பட்டன. இஸ்லாமியப் பழந்தமிழ் இலக்கியம் எனச் சொன்ன மாத்திரத்தில், உமறுப் புலவரின் சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் உடனடியாக நினைக்கத் தக்க அளவுக்கு முதலிடம் வகிக்கின்றன. தக்கலை பீர்முஹம்மது ஸாஹிபு, கோட்டாறு ஞானியார் ஸாஹிபு போன்ற ஸூஃபிப் புலவர்களின் பாடல்கள் அந்தந்த வட்டாரங்களில் சிறப்பாகப் போற்றிப் பயிலப் படுகின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் என அறியப் படுகின்ற இந்த நூல்கள், இஸ்லாம் காட்டுகின்ற இலக்கிய நெறிப்படி அமைந்திருக்கின்றனவா? இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இந்த இலக்கியங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்திப் பாடியுள்ளன? திருமறை-நபிநெறி வெளிச்சத்துடன் இந்த இலக்கியக் கழனியில் 'இறங்கி'ப் பார்க்கிற போது, பயிர்கள் அளவுக்குக் களைகளும் மலிந்துள்ளமையைக் காண முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால் பயிர்களை விடக் களைகளே மிகுதி எனலாம். இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காப்பிய மரபும் சைவசித்தாந்த மரபுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசும் முயற்சியிலேயே முஸ்லிம் புலவர்கள் சிரத்தை எடுத்துள்ளனர். உமறுப் புலவரின் விபரீதக் கற்பனையில் இஸ்லாமிய மாண்புகள் மலினப் படுத்தப் பட்டுள்ளன. ஓரிறைக் கொள்கையைக் கொச்சைப் படுத்துகின்ற அத்துவைதச் சீழ்வடியும் கவிதைகளைப் பாடிப்பாடி, ஞானக் கவிஞர்கள் இலக்கியத் தாகம் தணித்துள்ளனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் குணம் நாடி, அவற்றைப் பாராட்டுகின்ற வகையில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் குணத்தைக் காட்டிலும் மலிந்து காணப் படும் குற்றங்களைப் பேசுகின்ற முழுநூல் எதுவும் இதுவரை வெளிவந்ததில்லை. முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் மீது முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் கொண்டிருக்கும் பாசத்திரையானது, உண்மையைப் புலனாய்ந்திடும் முயற்சிக்குத் தடை போட்டிருக்கலாம்!.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருங்கள். உங்களுக்கோ (உங்களின்) பெற்றோருக்கோ (உங்களின்) நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்காளாக இருங்கள் ..."
என இறைமறை குர்ஆன் [004:135] எடுத்துரைத்துள்ளது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனப் பெயர் பண்ணிக் கொண்டு, தூய இஸ்லாத்திற்கு அநீதி இழைத்துள்ளன பல இலக்கியங்கள். இவற்றைப் பாடியோர் நமது புலவர் பெருமக்களாகிய 'அப்பா'மார்களாக இருக்கலாம். இந்த இலக்கிய அநீதியை எடுத்துரைப்பது, அந்தப் புலவர் பெருமக்களுக்கு விரோதமிழைப்பது போலிருந்தாலும் கூட, அல்லாஹ்வுக்காக நாம் உண்மை சாட்சியுரைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிருத்தியே 'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்னும் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.

இஸ்லாத்துக்கு விரோதமாகப் "பொய்யையும் புனைசுருட்டையும் பாடுகின்ற கவிஞர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர்" என இறைமறை குர்ஆன் எச்சரிக்கிறது.

இஸ்லாத்துக்கு அநீதி இழைத்து இலக்கியம் பாடிவந்த ஒரு கவிஞனை 'ஷைத்தான்' என்றும் அவனது கவிதையை 'நாற்றமெடுத்த சீழ்' என்றும் நபி (ஸல்) அவர்கள், கடுமையான சொற்களால் வைதுள்ளனர்.

அப்பழுக்கற்ற இஸ்லாமியத் தடாகத்தில் அப்பாமார்களின் பாடல்கள் நஞ்சைக் கலந்துள்ளன. இதைக் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நெஞ்சம் கொதிப்பது இயல்பே! அந்த நெஞ்சக் கொதிப்பு, இந்நூலில் சில இடங்களில் வெம்மையான சொற்களில் வெளிப் பட்டிருக்கலாம். அதுவுங்கூட நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதே என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

இம்முயற்சியில் எம்மை ஈடுபடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்குச் சிரம் பணிந்து நன்றி பாராட்டுகிறேன்.

- ஹஸ்ஸான்

யாருக்குச் சொந்தம்?

சென்ற வாரத் திண்ணை [11.05.2006] இதழில் வெளியான மூன்று கடிதங்களுக்கு இங்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். முதலாவதாக,
"ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் - ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்?"
என்று ஒரு கண்டனக் குரல். வேற்றுமொழிப் பெயர்ச் சொற்களை அப்படியே குறிப்பதால் திண்ணையில் தீவிரவாதம் எப்படி ஏற்படும் என்று எனக்கு விளங்கவே இல்லை. தாய்மொழிப் பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் தேவையே. அதற்காக, 'மிஸ்ஸிஸ்ஸிப்பி' என்ற ஊரின் பெயர்ச் சொல்லை "சிப்பி என்பவள் செல்வி" என்று தமிழில் எழுதினாலோ 'மிடில்ஸெக்ஸ்'ஐ "நடு இனம்" என்றோ வேறு ஏதாவது தமிழ்ச் சொல்லால் எழுதினாலோ நன்றாகவா இருக்கும்? திண்ணையில் 'கடித இலக்கியம்' எழுதுபவரின் பெயரை, 'அவைத் தலைவர்' என்று நாம் தமிழில் எழுதுவது சபாநாயகம் அவர்களுக்குப் பெருமை சேர்க்குமா? அதுவும், 'மஹாத்மா'வைக் குறித்து 'பரமாத்மா'வின் 'ஜீவாத்மா'க்கள் திண்ணையில் சொல்லாடிக் கொண்டிருக்கும் 'தமிழ்ச் சூழ'லில் 'பாவாத்மா'க்களைக் குறை சொல்வதற்கு, 'ஜடாயு'வின் 'அந்தராத்மா'வுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ!.
***
இரண்டாவதாக,
"தமிழில் தொழுகை நடத்துவதற்கு வகாபி மறுப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஒருவேளை இப்படியான திருக்குர்ஆனிய சில வசனங்களை எப்படி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி சொல்வது என்ற தயக்கமாக இருப்பின் அல்லாவின் வார்த்தைகள் தான் அவை என்ற வகையில் அந்த தயக்கத்தை விட்டொழிக்க முயல வேண்டும் இவ்வசனங்கள் சொல்லப்பட்ட சூழலையும் கருத்திற்கொள்ள வேண்டும். என்பதே எனது வேண்டுகோள்"
என்று சூபி எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குர்ஆன் பிரதிகளை யாராவது பதுக்கி வைத்துக் கொண்டு அஞ்சியஞ்சி விற்கிறார்களா என்ன? இத்தனை விரைவில் காலம்தான் எப்படி மாறிப் போய்விட்டது பாருங்கள்! சூபிகளே குர்ஆனுடைய 'சில' வசனங்களை எடுத்தெழுதுவது மகிழ்வுக்குரிய மாற்றம்தான்! - நோக்கம் எதுவாக இருப்பினும். அஃதென்ன 'சில வசனங்கள்'? அனைத்து வசனங்களையும் உள்ளடக்கிய குர்ஆன் பதிப்புகள், தமிழ் உட்பட உலகின் எல்லா மொழிகளிலும் மூலைக்கு மூலை கிடைக்கிறதே! காசு கொடுத்து வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்கு இப்போது வலைத் தளங்களிலும் குர்ஆன் 'வெளியே தெரியும்படி' திறந்துதான் கிடக்கிறது! திறந்து கிடந்ததைப் படித்துத்தான் கேட் ஸ்டீவன்ஸ், யூஸுஃப் இஸ்லாமாக மாறிதாகக் கூறுகிறார்:
Following a bout of TB early in his career he undertook an ongoing search for peace and ultimate spiritual truth. After almost drowning in the Pacific Ocean at Malibu he received a translation of the Qur'an as a gift from his elder brother, David. His spiritual quest for answers was fulfilled and he embraced Islam in December, 1977. Six months later he changed his name to Yusuf Islam, walked away from the music business to start a new life and raise a family.
முழுச் செய்தியையும் இங்குப் படிக்கலாம்: http://www.yusufislam.org.uk/biodata.htm உள்ளேயே பூட்டி வைக்காமல், எல்லாருக்கும் வெளியே தெரியும்படி உள்ள குர்ஆனினால் ஈர்க்கப் பட்டோரின் பட்டியல் வெகு நீளம் என்பதும் அதில் குலசையைச் சேர்ந்த தமிழ் வலைப் பதிவர் http://iniyaislam.blogspot.com/ ஒருவரும் அடக்கம் என்பதும் சூபிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு. கனவுலக முகமூடியைக் கழட்டி விட்டு, நனவுலகிற்கு சூபி வரவேண்டும் என்பதே என் அவா.
***
இறுதியாக, 'அல்லாவும் வகாபும்' என்ற தலைப்பில் ஒரு கடிதம். அதிலுள்ள 'வகாபு' என்ற பெயரைப் பற்றிப் பல குழப்பமான செய்திகளுக்கு விளக்கமளிக்கும் முன், நான் என்ன எழுத வேண்டும், அதை எப்படி எழுத வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய முடியும்; வேறு யாரும் முடிவு செய்ய முடியாது - குறிப்பாக, குலாம் ரசூல் செய்யக் கூடாது. இனி,
"அல்லாவின் 99 திருநாங்களில் வகாப் என்று திருத்தல்வாதம் செய்தாலும் இச்சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது"
என்று கடிதம் எழுதிய குலாம் குறிப்பிடுகிறார். பாவம், அவருக்கு என்ன சூழ்நிலையோ? இவர் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் உண்மை, உண்மையில்லை என்றாகி விடுமா என்ன?. மீண்டும் சில பெயர்ச் சொற்களையும் உரிச் சொற்களையும் ஆகு பெயர்களையும் வேற்று மொழியில் பயன் படுத்துவதற்காக ஜடாயு அவர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. அவற்றைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப் பட்டுள்ளேன் - அறியாமையை அகற்றும் விளக்கத்திற்காக. bin / ibn என்ற அரபுச் சொல் s/o என்று ஆங்கிலத்தில் பயன் படுத்தப் படும் சொல்லுக்கு ஒப்பானதாகும். மு.க. ஸ்டாலின் என்ற பெயர்ச் சொல்லை அரபியில், 'ஸ்டாலின் bin கருணாநிதி bin முத்துவேல்' என்று குறிப்பிடுவர். 1. "அப்துல்வஹ்ஹாபின் மகன் பெயர் முஹம்மது", அதே "முஹம்மதின் தந்தை பெயர் ஷெய்க்", "அந்த ஷெய்க் உடைய தந்தை அப்துல்வஹ்ஹாப் ஆவார்". எனில், முஹம்மது என்பாருக்கு அப்துல்வஹ்ஹாப் தந்தையா தாத்தாவா? குழப்பந்தானே! குழப்புவது நானல்ல; குலாம்:
"வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்"

இங்குக் குழப்பப் பட்டவர், முஹம்மது s/o அப்துல்வஹ்ஹாப் s/o ஸுலைமான் என்பவராவார். உறுதிப் படுத்திக் கொள்வதற்கும் கூடுதல் தகவல்களுக்குமான சுட்டி : http://www.ahya.org/amm/modules.php?name=Sections&op=viewarticle&artid=180 . மேற்படி முஹம்மது என்பார் தனெக்கென ஒரு கொள்கையைப் புதிதாக ஏற்படுத்திக் கொண்டு அதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் போராடவில்லை. இறைமறையும் நபிவழிமுறையுமே தமது உயிர் மூச்சு என்றார். கடிதம் எழுதியவரின் அதிமுக்கியக் கவலைக்கும் ஆத்திரத்திற்கும் காரணம் என்னவென்றால், வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியின் மறைவுக்குப் பிறகுக் கொஞ்சங் கொஞ்சமாக அரபு குலாம்களால் புதிதாக ஏற்படுத்தப் பட்ட சமாதி வழிபாட்டையும் வழிபாடு நடந்த சமாதிகளையும் முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் தரைமட்டமாக்கினார் என்பதே. அந்தத் தரைமட்டச் சேவையையும் தமது தலைவரின் கட்டளைப்படியே செய்தார் என்பதுதான் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த வரலாறு. இதோ ஒரு ஹதீஸ் - ஒன்பது சான்றுகளுடன்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175]. தரைமட்டச் சேவைக்கான/தேவைக்கான இன்னும் கூடுதல் சான்றுகள் திண்ணை இதழின் 24.02.200 பதிப்பில் எனது கடித இறுதியில் கிடைக்கும். இனி வஹ்ஹாபிஸத்துக்கு வருவோம். நேபாளத்தின் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை அவ்வரசு விடுதலை செய்யப் போவதாக அண்மைச் செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸத்தைப் பின்பற்றுபவர்களே மாவோயிஸ்டுகளாவர். சீனப் புரட்சித் தலைவர் மாவோ ஸெடுங்கின் கொள்கை-கோட்பாடுகள்தாம் அவருடைய முதற் பெயரால் மாவோயிஸம் என்று வழங்கப் படுகிறது. முஹம்மது [bin அப்துல்வஹ்ஹாப்] என்பவருடைய தனித்த கொள்கை-கோட்பாடு என்று ஒன்றிருந்து, அதை இஸத்தோடு இணைத்து வழங்குவதென்றாலும் 'முஹம்மதிஸம்' என்றல்லவா சொல்ல வேண்டும்? மாறாக, ஏன் வஹ்ஹாபிஸம் என்று சொல்லுகின்றனர்/எழுதுகின்றனர்? இந்த இடத்தில்தான் மேற்கத்திய பூர்ஷ்வாக்களின் நரித்தனம் ஒளிந்திருக்கிறது. முஹம்மதிஸம் என்று சொல்லி விட்டால் நபி முஹம்மதின் கொள்கை என்று உலக மக்கள் புரிந்து கொண்டு விடுவர் என்ற அச்சமும் முஸ்லிம்களைக் கூறு போட வேண்டிய தந்திரமும் சேர்ந்து உருவானதே 'வஹ்ஹாபிஸம்' என்ற சொல். கார்ல் மார்க்ஸின் பெயரால் மார்க்ஸிஸம், விளாடிமீர் லெனினின் பெயரால் லெனினிஸம், ஜோஸஃப் ஸ்டாலினின் பெயரால் ஸ்டாலினிஸம் ஆகியவற்றைப் போல் இரண்டாவது பெயரில் ஓர் இஸத்தை இணைத்து வழங்குவதென்றாலும் நியாயப்படி, 'அப்துல்வஹ்ஹாபிஸம்' என்றுதான் வழங்க வேண்டும்.

ஏனெனில், அப்துல்வஹ்ஹாப் என்பது இரண்டு பெயர்கள் அல்ல; ஒரு பெயர்தான் [அப்த்+அல்லாஹ்= அல்லாஹ்வின் அடிமை என்பதுபோல், அப்த்+அல்வஹ்ஹாப்=பெருங் கொடையாளனின் அடிமை]. பலவேளைகளில் தந்திரங்கள் வெற்றி பெற்றாலும் சிலவேளைகளில் உண்மைகளின் முன் தந்திரங்கள் தோற்றுவிடும். மொழியறிவின்றி, தந்திர நோக்கோடு தவறாகக் கொடுக்கப்பட்டிருப்பினும், இறைவனின் பண்புப் பெயர்களுள் ஒன்றான அல்வஹ்ஹாப் [பெருங்கொடையாளன்] என்ற பெயராலேயே அவனுடைய மார்க்கமான இஸ்லாமை 'வஹ்ஹாபிஸம்' என்று வழங்குவதிலும் அந்தப் பெருங்கொடையாளனைச் சார்ந்து நிற்பவரை 'வஹ்ஹாபி' என்று அழைப்பதிலும் நபிகளாரை 'வஹ்ஹாபிகளின் தலைவர்' என்று குறிப்பிடுவதிலும் குழப்பமேதுமில்லை என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வர் - குலாமுக்கு வேண்டுமானால் குழப்பமாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

கேள்வி: 'வஹ்ஹாபி' என்று அழைக்கப் படுவோர் யார்? பதில் : இஸ்லாமிய மார்க்கத்தை அதன் பழைமையான தூய வடிவில் கடைப் பிடிப்போர்.
மேற்காணும் வினாவும் விடையும் எந்த வஹ்ஹாபியும் புதிதாகக் கண்டு பிடித்துச் சொன்னதன்று. மாறாக, +2 வகுப்பிற்கான 'வரலாறு, நவீன உலகம்' என்ற பாடத்திற்கான தினமணி நாளிதழின் மாதிரி வினா-விடைப் பகுதியில் வெளிவந்ததாகும். நாள்: 19 மார்ச் 1984. 'பழைமையான தூய வடிவு' என்றாலே முந்நூறு ஆண்டுகளுக்கே முன்னர் பிறந்த, புதியவரான முஹம்மது அப்துல்வஹ்ஹாப் ஸுலைமான் என்ற 'முழுப் பெயரை' உடையவருக்குப் பழையதில் எவ்விதப் புதிய ஆளுமையும் இல்லை என்பது தெளிவு. [bin நவீனத்துவம் முடிவுக்கு வந்து அதிநவீனத்துவம் ஆரம்பித்து விட்டதால் இப்போதெல்லாம் யாரும் bin போட்டு எழுதுவதில்லை]. என்னுடைய ஆக்கங்களுக்கான 'வஹ்ஹாபிஸ'ச் சான்றுகள் அனைத்தும் வஹ்ஹாபுடைய வேதமான அல்குர் ஆனிலிருந்தும் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியவர்களின் வழிமுறைகளிலிருந்துமே எடுத்தாளப் படுகின்றனவேயன்றி, முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் என்பவரின் 'கிதாபுத் தவ்ஹீத்' என்ற நூலிலிருந்தன்று. 2. அன்னார் எழுதியவற்றுள், நஸீஹத்துல் என்றும் முஸ்லிமீன் என்றும் இரு நூல்களைக் குறிப்பிடுகிறார் குலாம். 'நஸீஹத்துல் முஸ்லிமீன்' [முஸ்லிம்களுக்கு அறிவுரை] என்பது ஒரேயொரு தலைப்பாகும்; இரண்டன்று. தெரியாதவற்றைத் தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டெழுதுவது குற்றமன்று; தெரியாதவற்றைத் தெரிந்ததுபோல் பாசாங்கு செய்து கொண்டு எழுதுவதே குற்றம்.
3. "இமாம் வகாப் அறுநூறுபேர் கொண்ட படையுடன் நேரடியாகப் பங்கேற்று உமர் பின் அல்கதாபின் சகோதரர் அஸ்வரின் சமாதி மக்பராவை இடித்து தள்ளி நிர்மூலமாக்கினார்"

இதுவும் 'அரபு வகைப் பட்ட' வரலாற்று ஆசிரியராகத் தன்னைத் திண்ணைக்கு அறிமுகப் படுத்த முயன்றுள்ள குலாம் எழுதியதுதான். அண்ணல் உமருக்கு அஸ்வர் என்றொரு சகோதரர் இருந்தார் என்பதை மட்டும் சான்றுகளோடு குலாம் நிரூபித்து விட்டால், அவரைப் பேராசிரியர் என்றே அழைக்க நான் தயார். சரி, இல்லையெனில்?

"அப்பட்டமான முட்டாள்தனமும், சமகால வரலாற்று மோசடியாகும்"

இவைதாம் குலாமின் திண்ணைக் கடிதத்தின் இறுதிச் சொற்கள்.

அவை 'யாருக்குச் சொந்தம்?' என்று முடிவுக்கு வர வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.

மயிலாஞ்சி எல்லையோடு நிறுத்திக் கொண்டிருந்தால் 'சவை நடுவே நீட்டோலை வாசியா' வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை குலாமுக்கு ஏற்பட்டிருக்காது!

ஃஃஃ

வெள்ளி, மே 12, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - அறிமுகம்

'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்ற பெயரில், இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனத்தாரால் 1999இல் ஓர் ஆய்வு நூல் வெளியிடப் பட்டது. மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் பணியாற்றியத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எனது அன்புக்குரியவருமான சகோதரர் 'ஹஸ்ஸான்' என்ற ஜமாலுத்தீன் அவர்களின் தெள்ளு தமிழ் நடையில் வெளிவந்த இவ்வாய்வு நூலை, வலைப்பூவில் பதிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை! என் ஆசைக்கு இரு காரணங்கள் உள. 1. அன்னாரின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. 2. அன்னார் மறைந்து விட்டார்; அவர் எழுத்து மறையக் கூடாது. எனவே, அவருடைய மகனாரின் அனுமதி பெற்று என்னாசையை நிறைவேற்றும் முகமாக, இவ்வாரம் முதல் இங்குப் பதிக்கத் தொடங்குகிறேன். இந்நூலுக்கு 'இஸ்லாத்துக்கு எதிரான இலக்கியங்கள்' என்ற தலைப்பே மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து.  

பேரா. ஹஸ்ஸானோடு பணியாற்றிய முனைவர் 'AMSA' கபீர், M.A. PhD அவர்கள், இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையின் சுருக்கம்: 
லக்கிய வளமையும் இலக்கணச் செழுமையும் எண்ணவியலாத் தொன்மையுங் கொண்ட நம் தாய்மொழித் தமிழை, சமயங்களே வளர்த்தன எனலாம். அந்தளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் சமயங்களின் பங்களிப்பு அமைந்திருக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களாயினும் நீதி நூல்களாயினும் சிற்றிலக்கியங்களாயினும் அவை சமயம் சார்ந்தே அல்லது சமயச் சார்பார்ளாராலே இயற்றப் பட்டுள்ளன. சமணரும் பெளத்தரும் சைவரும் வைணரும் வழங்கிய அளவுக்கு முஸ்லிம்களும் எண்ணிலா இலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்த்தனர்.  

பதினான்காம் நூற்றாண்டின் 'பல்சந்த மாலை' முதல் இன்று வரை இஸ்லாமியர் வழங்கிய - வழங்குகின்றத் தமிழ் இலக்கியங்கள் ஏராளம்; ஏராளம். இவற்றைப் பிறருக்கு அறிமுகப் படுத்தி, தமிழுக்கு எங்கள் பங்களிப்பும் எவருக்கும் குறைந்ததன்று என்று காட்ட, "இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்ற முழக்கத்துடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் பல நடத்தப் பட்டன. நம் தமிழரும் இவற்றோடு அறிமுகம் பெற்றனர்; இவைதாம் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்களின் தொகுப்பு என எண்ணத் துவங்கினர்; முஸ்லிம்களில் பலரும் இப்பாடல்களையே இஸ்லாத்தின் ஆதாரமாகக் காட்டத் தலைப் பட்டனர். 

தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட 'ஏகத்துவ மறுபுரட்சி'க்குப் பின், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் நாம் ஆய்வு செய்தபோது, 'ஐயகோ, கைசேதமே!' என்றெல்லாம் துயருறும் அளவுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான - அடிப்படையையே தகர்க்கின்ற அளவுக்கு அபத்தங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செய்திகளும் பொய்களும் அவற்றில் மலிந்திருப்பதைக் கண்டோம்!. எவற்றை "ஆஹா, பாரீர் எம் இலக்கியங்களை" என்று பெருமையுடன் காட்டினோமோ அவற்றையே, "ஐயோ, தொடாதீர்! இஸ்லாத்தையே தகர்கின்றன இவை" என அடையாளம் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டோம்.  

அடையாளத்துக்காகச் சில சான்றுகளைக் காட்டுவது இங்குப் பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன். பெருமானாரின் மனைவியராம் முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் பெருமானாரின் அன்பு மகளார் ஃபாத்திமா அவர்களைப் பற்றியும் உமருப் புலவர் வரம்பு கடந்து வருணித்துள்ளார். அலீ-ஃபாத்திமா திருமணத்தின்போது, அலீ அவர்கள் திருமண உலா வரும் வேளையில் எழுபருவப் பெண்களும் அலீ அவர்களின் அழகைக் கண்டு காதல் கொண்டு நின்றனர் என்பதாக உமருப் புலவர் பாடிச் செல்கிறார்:
" குவிபெருந்தானை நாப்பண் கூண்டவை அலீயென்றோதும் பவனியின் தருவை நோக்கிப் பல கொடி படர்ந்ததன்றே"
(ஃபாத்திமா திருமணப் படலம், பாடல்: 135) நபித்தோழியராம் ஸஹாபிப் பெண்களை இவ்வாறு தரக்குறைவாகப் புலவர் வருணித்துச் செல்வதை இந்நூலாசிரியர் விளக்கமாக எடுத்தெழுதியுள்ளார். இந்துமதச் சித்தாந்தத்தின் 'ஜெராக்ஸ் காப்பி'யாகவே குணங்குடி மஸ்தானின் பாடல்கள் காணக் கிடைக்கின்றன என்பதை இந்நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளது. 

'அஞ்ஞானக் குணங்குடி', 'சன்னியாசியின் சல்லாபம்', 'இஸ்லாமியத் தாயுமானவர்', 'ஜெதிபு யோகம்' ஆகிய தலைப்புகளின்கீழ் ஆசிரியர் இதனை நன்கு ஆராய்ந்துள்ளார்.
"ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நான்காம் ஓதிய ஷரீஅத்தென்றும் உவந்திடும் தரீகதென்றும் நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் காணலாம் என்று அகுமதர் அருளிச் செய்தார்" (ஞானமணி மாலை, பாடல் : 11)
போன்ற பீரப்பாவின் பாடல்கள் மெய்யான ஹதீஸுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டு அமைந்துள்ளன. 'அல்லாஹ்தான் முஹம்மது நபியாக அவதரித்தான்' என்ற கேடுகெட்ட அவதாரக் கொள்கையைப் பீரப்பா இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டிப் பாடியுள்ளார்.
"இப்புவியில் ஊனுருவாய் நீ அகுமது ஆனவனே"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 134)
"நீயே உனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் நீயே புவிக்குள் ரசூலாக வந்தவன்"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 118) இம்மாதிரிப் பாடல்களை மாபெரும் ஸூஃபிஸ இலக்கியங்களாக இஸ்லாமியர் போற்றிப் பயிலுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற இந்த இலக்கிய முரண்பாடுகள் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. மாறாக, இவற்றையே இஸ்லாமியக் கொள்கைகள் எனப் பெரும்பாலான முஸ்லிம்களும் மற்றோரும் நம்பியிருந்தனர்; நம்பியிருக்கின்றனர். அந்தத் தவறான நம்பிக்கையை இந்நூல் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை. 
 
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, மே 05, 2006

தொடரும் வெளிச்சம் - பளீரென்று

"முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர்ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல" என்ற எனது விளக்கத்துக்குப் பதிலாக,
"பிராமணர்கள் கருவறை மொழியாக சமஸ்கிருதத்தை புனிதப்படுத்தி வைத்திருப்பதுபோல் வகாபிகள் அரபு மொழியையும் புனிதப்படுத்தி சொர்க்கத்தின் மொழி அரபு என்று புனைவுபடுத்தியும் வைத்துள்ளார்கள்"
என்று இம்முறை தனது தலைச்சோற்றை இங்குப் புதுக் கூட்டுக் கறி சகிதம்
பரிமாற முனைந்துள்ளார் சூபி. வஹ்ஹாபிஸத்தின் (அல்லது இஸ்லாத்தின்) பார்வையில் மொழி எதுவாக இருப்பினும் அது, தகவல் பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு கருவி; அவ்வளவுதான் - அவ்வளவேதான். அதனாற்றான் ரோமாபுரிக் காரரான ஸுஹைப் அவர்களும் பாரசீக ஸல்மான் அவர்களும் ஆப்பிரிக்க பிலால் அவர்களும் வஹ்ஹாபிகளின் தலைவருக்கு உற்றத் தோழர்களாகத் திகழ முடிந்தது. 

வஹ்ஹாபுடைய வார்த்தைகளைப் படித்தாலே சூபிகளுக்குத் தானாகவே பொங்கும் - அலுப்பும் சலிப்பும். புழுத்துப்போன புத்திகட்கு எட்டுகின்றவரை இறைவசனம் குறித்த வஹ்ஹாபிகளின் அலுத்துப்போன விளக்கங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படத்தானே வேண்டும்? முக்கால்வாசி அலுத்து விட்டார் சூபி; முழுமையாக்க எனக்கு மனமில்லை என்றாலும் 'வஹ்ஹாபை வணங்குவதற்கு அரபுமொழி எதற்கு?' என்ற எனது மிகச் சிறு முன்விளக்கத்தைத் திண்ணை வாசகர்கள் ஒப்பிட்டு நோக்குவதற்காக: 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

5- உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும்.

குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதாம். அதனால் தமிழ்த் தொழுகைதான் வேண்டுமாம். தமிழில் மட்டுமின்றி உலகமொழிகள் பெரும்பாலானவற்றில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டு விட்டது என்பதையும் இங்குச் சொல்லி வைக்க வேண்டியதாகி விட்டது. மொழித் தழுவல்கள் நூறைத் தாண்டினாலும் மூலம் ஒன்றுதான் - அன்றிலிருந்து இன்றுவரை. 

வஹ்ஹாபுடைய கட்டளையைப் புறந்தள்ளி விட்டு, தன் தலைச் சோற்றுச் சவால் பந்தியில் 'வஹ்ஹாபி எப்படி வந்து உட்காருவான்?' என்பதைப் பரிமாறும்போதுகூட எண்ணிப் பார்க்கவில்லை சூபி. வஹ்ஹாபிகளின் தலைவருடைய திருமணத்தைப் பற்றி சூபி குறிப்பிட்ட பின்னரும், 'சோறு இன்னும் குழைந்து விடுமே' என்பதற்காக அவருக்கு நான் பதில் சொல்லாவிட்டால் - அது நன்றாகவாயிருக்கும்? "... இச்சலுகை நாம் உமக்களித்திருக்கும் சிறப்பாகும் ..." அல் குர் ஆன் 033:050. 

கொசுறு - அன்னை ஹதீஜா அவர்களைத் திருமணம் செய்யும்போது அண்ணலார் வெறும் அப்துல்லாஹ்வின் மகன்தாம் - அல்லாஹ்வின் தூதரல்லர்; வஹ்ஹாபிகளின் தலைவருமல்லர். "வரலாற்று ரீதியான உண்மை" என்று பரிமாறலில் கொஞ்சம் சிந்திக் கிடந்தது, எந்த வரலாறு என்ற முகவரி இல்லாது. அண்ணல் இபுராஹீம் நபி அரபியரல்லர் என்று நான் எழுதியதை நிரூபிப்பதற்கு அன்னாரின் பர்த் ஸர்டிஃபிகேட்டை இங்கு அட்டாச் செய்ய வேண்டியதில்ல; அன்னாரது தந்தையிலிருந்து தொடங்கி அவரது பேரப் பிள்ளைகளின் அரபு மொழிக்கு அப்பாற் பட்டப் பெயர்களைத் தெரிந்திருந்தாலே போதுமானது. அதற்குக் குர்ஆனைப் பார்த்துப் படிக்கவாவது தெரிந்திருக்கக் கூடிய 'அடிப்படை அறிவு' வேண்டும்; அவ்வளவே! 

மிர்சா குலாம், எலிஜா முகமது, ரஷாத்கலீபா வழியில் யார் வேண்டுமானாலும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கழிப்பிடத்திற்கு உள்ளே சென்றால் வேலையை முடித்துக் கொண்டுச் சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். காரணம், மிர்சா நப்பி செத்துப் போனது கக்கூஸில்! 

முன்னொரு காலத்தில் சூரக்கோட்டை மைனருக்கு(க் கல்யாணம் ஆகாமலே)ச் சொந்தமாயிருந்து, பின்னர் சுந்தருக்குக் கல்யாணமாகிச் சொந்தப் பட்ட, 'அதி நவீன முஸ்லிம்', 'கற்பு புகழ்' குஷ்பு அம்மணிக்கோ கல்யாணமே ஆகாமல் ஷிப்லிக்குத் தாயான 'உயரதி நவீன முஸ்லிம்' அஸ்ரா நுமானிக்கோ 'தன்னினமே தனக்குதவி' என்று போதுமென்ற பொன்மனம் படைத்த 'முன்நவீன லெஸ்பியன் முஸ்லிம்' இர்ஷாத் மஞ்சானிக்கோ இன்னபிற முன்-பின் நவீன முஸ்லிம்களுக்கோ தன் ஆதரவுக் கரத்தை சூபி நீட்டிக் கொள்ளட்டும்; நமக்குக் கவலையில்லை - அன்னை மர்யம் அவர்களுக்கு வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்! தலைப்பின் கருவைக் காணோமே எனத் திண்ணை வாசகர்கள் தேடி அலுத்துவிட்டிருக்கலாம்! மூன்றாவது பாயிண்டில்தான் சூபியின் வெளிச்சம் - அதுவும் பளீரென அடிக்கிறது:
"நபிமுகமது மூலமாக கி .பி.ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகிறது"
என்று. 

"எங்கள் இறைவா! எங்களின் வழித்தோன்றல்களுக்கு உன்னுடைய வேத வசனங்களை ஓதிக் காட்டி, உன்னுடைய வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பி வைப்பாயாக ..." 002:129 என்று அண்ணல் இபுராஹீம் அவர்களும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களும் அல்லாஹ்விடம் வேண்டி நின்றனர். அண்ணல் இஸ்மாயீல் அவர்களின் வழித்தோன்றியவர்தாம் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி. அண்ணல் இபுராஹீம் அவர்களையும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களையும் இஸ்லாத்துக்கு எப்போது சூபி 'உள் வாங்க'ப் போகிறாரோ தெரியாது.  

"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்காக அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட தூதன். எனக்கு (அருளப் படுவதற்கு) முன்னர் அருளப் பட்ட தவ்ராத்தையும் நான் உண்மைப் படுத்துகிறேன். மேலும், எனக்குப் பின்னர் 'அஹ்மது' எனும் பெயருடைய ஒரு தூதர் வருவதைப் பற்றிய தகவலையும் உங்களுக்கு நற்செய்தியாகக் கூறுகிறேன் ..." 061:005 என்று அண்ணல் ஈஸா என்ற அல்லாஹ்வின் தூதர், அல்லாஹ்வின் இறுதித் தூதரைப் பற்றி நற்செய்தி கூறினார். 
 
"நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கமாக நூஹுக்கு அறிவுறுத்திய (ஓரிறைக் கொள்கை) அறவுரைகளையே (அடிப்படையாக அல்லாஹ்) ஆக்கியிருக்கின்றான். (முஹம்மதே!) நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிப்பதும் இபுராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு அறிவுறுத்தியதும் "ஓரிறைக் கொள்கையில் உறுதி குலையாமல் ஒருமித்து நில்லுங்கள்; பிரிந்து விடாதீர்கள் ...என்பதே" 042:013. பட்டியலில் அண்ணல் நூஹ் அவர்கள் முதல் அண்ணல் ஈஸா அவர்கள் ஈறாகக் காத்துக் கிடக்கின்றனர். 

சூபி மனது வைத்தால் 'உள் வாங்க'லாம்! 

இவ்வார இறுதியாக ஒரு வேண்டுகோள்: எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை வைத்துக் கொள்வது நல்லது - வெளிச்சம் போடுவது உட்பட. அப்பப்பா ... சென்ற வாரம் கண்கள் மிகவும் கூசி விட்டன!
ஃஃஃ