அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்!
அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
மனித குலம் இம்மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும் என்பதற்காக, மனிதனைப் படைத்த இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியே அல்குர்ஆன் ஆகும். இந்த வாழ்வியல் நெறிக்கேற்ப எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துப் பெருவாழ்வு வாழ்ந்து சென்றவர் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களாவர். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் அல்குர்ஆன் என்னும் இறைமறையும் ஹதீஸ் என்னும் நபி நெறியுமேயாம்.
இலக்கியம் உள்ளிட்ட மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அழகிய வழிகாட்டுதல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. இலக்கியத் தளத்தில் நின்று தூய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை மேலோங்கச் செய்கின்ற நூல்கள் உலகெங்கும் தோன்றியுள்ளன.
தமிழ் மண்ணில் இஸ்லாம் பரவிய ஆரம்பக் காலகட்டங்களில் 'இஸ்லாமியக் கொள்கைகளை எடுத்தியம்புவதற்காக' எனச் சொல்லிக் கொண்டு, தமிழ் இலக்கியங்கள் பல புனையப் பட்டன.
இஸ்லாமியப் பழந்தமிழ் இலக்கியம் எனச் சொன்ன மாத்திரத்தில், உமறுப் புலவரின் சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் உடனடியாக நினைக்கத் தக்க அளவுக்கு முதலிடம் வகிக்கின்றன. தக்கலை பீர்முஹம்மது ஸாஹிபு, கோட்டாறு ஞானியார் ஸாஹிபு போன்ற ஸூஃபிப் புலவர்களின் பாடல்கள் அந்தந்த வட்டாரங்களில் சிறப்பாகப் போற்றிப் பயிலப் படுகின்றன.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் என அறியப் படுகின்ற இந்த நூல்கள், இஸ்லாம் காட்டுகின்ற இலக்கிய நெறிப்படி அமைந்திருக்கின்றனவா? இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இந்த இலக்கியங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்திப் பாடியுள்ளன?
திருமறை-நபிநெறி வெளிச்சத்துடன் இந்த இலக்கியக் கழனியில் 'இறங்கி'ப் பார்க்கிற போது, பயிர்கள் அளவுக்குக் களைகளும் மலிந்துள்ளமையைக் காண முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால் பயிர்களை விடக் களைகளே மிகுதி எனலாம்.
இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காப்பிய மரபும் சைவசித்தாந்த மரபுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசும் முயற்சியிலேயே முஸ்லிம் புலவர்கள் சிரத்தை எடுத்துள்ளனர். உமறுப் புலவரின் விபரீதக் கற்பனையில் இஸ்லாமிய மாண்புகள் மலினப் படுத்தப் பட்டுள்ளன.
ஓரிறைக் கொள்கையைக் கொச்சைப் படுத்துகின்ற அத்துவைதச் சீழ்வடியும் கவிதைகளைப் பாடிப்பாடி, ஞானக் கவிஞர்கள் இலக்கியத் தாகம் தணித்துள்ளனர்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் குணம் நாடி, அவற்றைப் பாராட்டுகின்ற வகையில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் குணத்தைக் காட்டிலும் மலிந்து காணப் படும் குற்றங்களைப் பேசுகின்ற முழுநூல் எதுவும் இதுவரை வெளிவந்ததில்லை.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் மீது முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் கொண்டிருக்கும் பாசத்திரையானது, உண்மையைப் புலனாய்ந்திடும் முயற்சிக்குத் தடை போட்டிருக்கலாம்!.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருங்கள். உங்களுக்கோ (உங்களின்) பெற்றோருக்கோ (உங்களின்) நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்காளாக இருங்கள் ..."
என இறைமறை குர்ஆன் [004:135] எடுத்துரைத்துள்ளது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனப் பெயர் பண்ணிக் கொண்டு, தூய இஸ்லாத்திற்கு அநீதி இழைத்துள்ளன பல இலக்கியங்கள். இவற்றைப் பாடியோர் நமது புலவர் பெருமக்களாகிய 'அப்பா'மார்களாக இருக்கலாம். இந்த இலக்கிய அநீதியை எடுத்துரைப்பது, அந்தப் புலவர் பெருமக்களுக்கு விரோதமிழைப்பது போலிருந்தாலும் கூட, அல்லாஹ்வுக்காக நாம் உண்மை சாட்சியுரைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிருத்தியே 'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்னும் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.
இஸ்லாத்துக்கு விரோதமாகப் "பொய்யையும் புனைசுருட்டையும் பாடுகின்ற கவிஞர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர்" என இறைமறை குர்ஆன் எச்சரிக்கிறது.
இஸ்லாத்துக்கு அநீதி இழைத்து இலக்கியம் பாடிவந்த ஒரு கவிஞனை 'ஷைத்தான்' என்றும் அவனது கவிதையை 'நாற்றமெடுத்த சீழ்' என்றும் நபி (ஸல்) அவர்கள், கடுமையான சொற்களால் வைதுள்ளனர்.
அப்பழுக்கற்ற இஸ்லாமியத் தடாகத்தில் அப்பாமார்களின் பாடல்கள் நஞ்சைக் கலந்துள்ளன. இதைக் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நெஞ்சம் கொதிப்பது இயல்பே! அந்த நெஞ்சக் கொதிப்பு, இந்நூலில் சில இடங்களில் வெம்மையான சொற்களில் வெளிப் பட்டிருக்கலாம். அதுவுங்கூட நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதே என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வார்களாக!
இம்முயற்சியில் எம்மை ஈடுபடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்குச் சிரம் பணிந்து நன்றி பாராட்டுகிறேன்.
- ஹஸ்ஸான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக