வெள்ளி, மே 12, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - அறிமுகம்

'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்ற பெயரில், இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனத்தாரால் 1999இல் ஓர் ஆய்வு நூல் வெளியிடப் பட்டது. மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் பணியாற்றியத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எனது அன்புக்குரியவருமான சகோதரர் 'ஹஸ்ஸான்' என்ற ஜமாலுத்தீன் அவர்களின் தெள்ளு தமிழ் நடையில் வெளிவந்த இவ்வாய்வு நூலை, வலைப்பூவில் பதிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை! என் ஆசைக்கு இரு காரணங்கள் உள. 1. அன்னாரின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. 2. அன்னார் மறைந்து விட்டார்; அவர் எழுத்து மறையக் கூடாது. எனவே, அவருடைய மகனாரின் அனுமதி பெற்று என்னாசையை நிறைவேற்றும் முகமாக, இவ்வாரம் முதல் இங்குப் பதிக்கத் தொடங்குகிறேன். இந்நூலுக்கு 'இஸ்லாத்துக்கு எதிரான இலக்கியங்கள்' என்ற தலைப்பே மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து.  

பேரா. ஹஸ்ஸானோடு பணியாற்றிய முனைவர் 'AMSA' கபீர், M.A. PhD அவர்கள், இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையின் சுருக்கம்: 
லக்கிய வளமையும் இலக்கணச் செழுமையும் எண்ணவியலாத் தொன்மையுங் கொண்ட நம் தாய்மொழித் தமிழை, சமயங்களே வளர்த்தன எனலாம். அந்தளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் சமயங்களின் பங்களிப்பு அமைந்திருக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களாயினும் நீதி நூல்களாயினும் சிற்றிலக்கியங்களாயினும் அவை சமயம் சார்ந்தே அல்லது சமயச் சார்பார்ளாராலே இயற்றப் பட்டுள்ளன. சமணரும் பெளத்தரும் சைவரும் வைணரும் வழங்கிய அளவுக்கு முஸ்லிம்களும் எண்ணிலா இலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்த்தனர்.  

பதினான்காம் நூற்றாண்டின் 'பல்சந்த மாலை' முதல் இன்று வரை இஸ்லாமியர் வழங்கிய - வழங்குகின்றத் தமிழ் இலக்கியங்கள் ஏராளம்; ஏராளம். இவற்றைப் பிறருக்கு அறிமுகப் படுத்தி, தமிழுக்கு எங்கள் பங்களிப்பும் எவருக்கும் குறைந்ததன்று என்று காட்ட, "இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்ற முழக்கத்துடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் பல நடத்தப் பட்டன. நம் தமிழரும் இவற்றோடு அறிமுகம் பெற்றனர்; இவைதாம் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்களின் தொகுப்பு என எண்ணத் துவங்கினர்; முஸ்லிம்களில் பலரும் இப்பாடல்களையே இஸ்லாத்தின் ஆதாரமாகக் காட்டத் தலைப் பட்டனர். 

தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட 'ஏகத்துவ மறுபுரட்சி'க்குப் பின், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் நாம் ஆய்வு செய்தபோது, 'ஐயகோ, கைசேதமே!' என்றெல்லாம் துயருறும் அளவுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான - அடிப்படையையே தகர்க்கின்ற அளவுக்கு அபத்தங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செய்திகளும் பொய்களும் அவற்றில் மலிந்திருப்பதைக் கண்டோம்!. எவற்றை "ஆஹா, பாரீர் எம் இலக்கியங்களை" என்று பெருமையுடன் காட்டினோமோ அவற்றையே, "ஐயோ, தொடாதீர்! இஸ்லாத்தையே தகர்கின்றன இவை" என அடையாளம் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டோம்.  

அடையாளத்துக்காகச் சில சான்றுகளைக் காட்டுவது இங்குப் பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன். பெருமானாரின் மனைவியராம் முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் பெருமானாரின் அன்பு மகளார் ஃபாத்திமா அவர்களைப் பற்றியும் உமருப் புலவர் வரம்பு கடந்து வருணித்துள்ளார். அலீ-ஃபாத்திமா திருமணத்தின்போது, அலீ அவர்கள் திருமண உலா வரும் வேளையில் எழுபருவப் பெண்களும் அலீ அவர்களின் அழகைக் கண்டு காதல் கொண்டு நின்றனர் என்பதாக உமருப் புலவர் பாடிச் செல்கிறார்:
" குவிபெருந்தானை நாப்பண் கூண்டவை அலீயென்றோதும் பவனியின் தருவை நோக்கிப் பல கொடி படர்ந்ததன்றே"
(ஃபாத்திமா திருமணப் படலம், பாடல்: 135) நபித்தோழியராம் ஸஹாபிப் பெண்களை இவ்வாறு தரக்குறைவாகப் புலவர் வருணித்துச் செல்வதை இந்நூலாசிரியர் விளக்கமாக எடுத்தெழுதியுள்ளார். இந்துமதச் சித்தாந்தத்தின் 'ஜெராக்ஸ் காப்பி'யாகவே குணங்குடி மஸ்தானின் பாடல்கள் காணக் கிடைக்கின்றன என்பதை இந்நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளது. 

'அஞ்ஞானக் குணங்குடி', 'சன்னியாசியின் சல்லாபம்', 'இஸ்லாமியத் தாயுமானவர்', 'ஜெதிபு யோகம்' ஆகிய தலைப்புகளின்கீழ் ஆசிரியர் இதனை நன்கு ஆராய்ந்துள்ளார்.
"ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நான்காம் ஓதிய ஷரீஅத்தென்றும் உவந்திடும் தரீகதென்றும் நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் காணலாம் என்று அகுமதர் அருளிச் செய்தார்" (ஞானமணி மாலை, பாடல் : 11)
போன்ற பீரப்பாவின் பாடல்கள் மெய்யான ஹதீஸுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டு அமைந்துள்ளன. 'அல்லாஹ்தான் முஹம்மது நபியாக அவதரித்தான்' என்ற கேடுகெட்ட அவதாரக் கொள்கையைப் பீரப்பா இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டிப் பாடியுள்ளார்.
"இப்புவியில் ஊனுருவாய் நீ அகுமது ஆனவனே"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 134)
"நீயே உனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் நீயே புவிக்குள் ரசூலாக வந்தவன்"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 118) இம்மாதிரிப் பாடல்களை மாபெரும் ஸூஃபிஸ இலக்கியங்களாக இஸ்லாமியர் போற்றிப் பயிலுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற இந்த இலக்கிய முரண்பாடுகள் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. மாறாக, இவற்றையே இஸ்லாமியக் கொள்கைகள் எனப் பெரும்பாலான முஸ்லிம்களும் மற்றோரும் நம்பியிருந்தனர்; நம்பியிருக்கின்றனர். அந்தத் தவறான நம்பிக்கையை இந்நூல் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை. 
 
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: