வியாழன், ஜூன் 22, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1

எது இஸ்லாமிய இலக்கியம்?

அல்லாஹ்விடமிருந்து பெற்ற அருள் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தம் சொல், செயல், அனுமதி மூலம் கற்றுத் தந்தவைகளே இஸ்லாமிய மார்க்கமாகும்.

இந்த 'தீனுல் இஸ்லாம்' என்னும் வழ்க்கை நெறிக்கான அனைத்துக் கோட்பாடுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே நிறைவு செய்யப்பட்டு அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இத்தகைய இஸ்லாமிய நெறி, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மெல்லப் பரவத் தலைப்பட்டது.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள், இலக்கியங்கள் மூலமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடலாயினர்.  

இலக்கியம் என்றால் என்ன? 

இலக்கியம் என்பதற்குப் பலரும் பலவாறாக விளக்கமளித்துள்ளனர். பல்வேறு வரைவிலக்கணங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சுருக்கமாகக் குறிப்பதாயின், "சொல்லின் அழகைப் புலப்படுத்தி, வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியம்" எனலாம். கல்லின் அழகை வெளிப்படுத்தி ஒன்றை வடித்தெடுப்பதைச் சிற்பக் கலை என்று வழங்குவதுபோல், சொல்லின் அழகை வெளிப்படுத்தி வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கியக் கலையாகும்.

உலகெங்கிலுமுள்ள எழுத்து வடிவமுடைய மொழிகள் அனைத்தும் ஏராளமான இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்கின்றன. அதற்கேற்ப, தொண்மையும் செம்மையும் உடைய நம் தமிழ் மொழியிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பல்வகைப்பட்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஐரோப்பியத் தொழில் புரட்சியின் விளைவாக அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர்தான் உரைநடை வடிவம் புகழ் பெறலாயிற்று. அதுவரை இலக்கிய உலகில் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும் செய்யுள் வடிவம்தான் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன.

இலக்கியம் என்று சொன்ன மாத்திரத்தில், அது செய்யுள் அல்லது கவிதையைத்தான் குறிக்கிறது என்று எண்ணுமளவுக்கு இப்போக்கு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது. வாழ்க்கை உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் பல உள்ளன. அதேவேளையில் அழகுபடக் கூறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையைப் பலிபீடத்திற்கு அனுப்பி விட்டு, அழகையே ஆராதித்துக் கொண்டிருந்த இலக்கியங்களும் இங்கு ஏராளம் காணப்படுகின்றன.

உண்மைக்கு முரணான பொய்யும் புனைசுருட்டும் கற்பனையும் செவிவழிச் செய்திகளும் கண், காது, மூக்கு வைத்துப் புனையப்பட்ட கதைகளும் 'அழகியல்' என்னும் பெயர்தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயின. உண்மையை இயம்ப வேண்டும் என்ற தலையாய இலக்கியப் பண்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொய்யாயிருப்பினும் கவர்ச்சியோடு கூறினால் அது போதும், இலக்கியமாகிவிடும் என்னும் எண்ணம் படைப்பவனிடமும் படிப்பவனிடமும் பரவி ஊன்றலாயிற்று.

அல்குர்ஆன் அருளப்பட்டக் காலத்திலும் இந்நிலைதான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே, இறைவன் 'இலக்கியப் படைப்பாளிகள்' என்னும் பொருள்படும் தலைப்பிலேயே ஓர் அத்தியாயத்தை வழங்கி வழிகாட்டிக் கொடுத்தான். அக்காலத்தின் இலக்கியம் என்பதே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை முன்னர் கண்டோம். எனவே, கவிதை அல்லது செய்யுள் வடிவில் இலக்கியம் படைப்பவர்கள் 'கவிஞர்கள்' என அழைக்கப்பட்டனர். இலக்கியப் படைப்பாளிகள் என்னும் பொருள் தரக்கூடிய 'கவிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அல்குர் ஆனின் 26ஆவது அத்தியாயம், இலக்கியம் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது:
"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா?" "இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்" "ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே!" "மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்." "நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா?" "நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்" "(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (கவிப்)பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே!) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.
இஸ்லாம் இலக்கியங்களை ஏற்றுக் கொள்கிறது; வரவேற்கிறது. உண்மையை-யதார்த்தத்தை அழகுறப்பாடி, வாழ்க்கை இலட்சியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்மை அல்லது அளவுக்கு மீறிய கற்பனை என்னும் சவுரிமுடியை வைத்து, பொய்க் கற்பனைச் செய்திகளையே அதிகமாக நீட்டிப்பின்னிடும் நச்சிலக்கியங்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட நச்சுக் கவிஞர்களை - பொய்யர்களை - அல்குர்ஆன், 'ஷைத்தான்கள்' என்றே அடையாளம் காட்டுகின்றது. 

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: