"இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" [004:082].மனிதர்களுள் மிகச் சிறந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த அறிஞர்களால் கண்ணும் கருத்துமாக வரையப்பட்ட அரசியல் சாசனச் சட்டங்களேகூட முரண்பாடுகளின் மொத்த உருவமாக அலைக்கழிக்கப் படுவதையும் பலமுறை அவை திருத்தப்படுவதையும் நாம் கண்டு வருகிறோம். அறிவுப் பூர்வமாக அணுகாமல் வெறும் உணர்வுப் பூர்வமாகவும் கற்பனை ரீதியாகவும் செயல்பட்டு, கவிதை புனைகின்ற நிலையிலேயே பெரும்பான்மையான கவிஞர்கள் திகழ்ந்துள்ளார்கள். எனவே, இந்த உணர்ச்சிப் படையல்களில் முரண்பாடே இடம் பெற்றிருக்க இயலாது என்று எங்ஙனம் கூறவியலும்? "Poet's appeal is sensuous, not intellectual. His function is not to prove, but to make to feel" (கவிஞனுடைய அணுகுமுறை உணர்வுப் பூர்வமானது; அறிவுப் பூர்வமானதன்று. அவனது பணி மெய்ப்பித்துக் காட்டுவதன்று; உணரச் செய்வது மட்டுமே) என நெய்ல்ஸன் என்னும் அறிஞர் தமது Essentials of Poetry என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். ஏனைய கவிஞர்களுக்கு இந்த அணுகுமுறை பொருந்தி வரலாம். ஆனால், இஸ்லாமியக் கவிஞனுக்கு இந்த விதியை நாம் செலுத்தவியலாது. ஏனெனில், குர்ஆன்- ஹதீஸ் கூறிடும் உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுதலைப் புறக்கணித்துவிட்டு வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி மனம்போன போக்கில் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.
புதன், ஜூலை 26, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 4
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து மக்கத்துக்காரர்கள் பல தெய்வக் கொள்கையிலும் சிலை வழிபாட்டிலும் பற்றுறுதி கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்ற ஏகத்துவக் கொள்கையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதைக் கேட்ட, பல தெய்வக் கொள்கையில் ஊறிப் போயிருந்த மக்கத்தவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறிப்பிட்டு, "பித்துப் பிடித்த ஒரு கவிஞருக்காக நாங்கள் எங்களுடைய கடவுளர்களை விட்டு விடுவோமோ?" எனப் பிராலாபித்தனர் [அல்குர்ஆன் 037:036].
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துப் பைத்தியக்காரக் கவிஞர் என்றும் அவர்கள் எடுத்தோதிய அல்குர்ஆனைக் கவிதை என்றும் ஒதுக்கித் தள்ளக்கூடிய அளவுக்கு அந்த மக்கள் தங்களுடைய பல தெய்வக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால், நம்முடைய முஸ்லிம் சகோதரர்களில் பலர் - "ஏகஇறைக் கொள்கையில் திடமான ஈமான் கொண்டிருக்கிறோம்" எனக் கூறிக் கொள்பவர்கள் - பைத்தியக்காரக் கவிஞர்களைப் போன்று பாடியுள்ளவர்களை எல்லாம் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் (கனவில்) அடியெடுத்துக் கொடுக்கப்பட்டவர்கள்" என்றும் அக்கவிஞர்களின் பொய்யான கற்பனைகளையெல்லாம் வேதம் போன்றும் காதலித்துத் திரிகின்றனர்.
மக்கத்துக்காரர்கள் வேதத்தைக் கவிதை எனத் தூற்றினர்; இவர்களோ கவிதையை வேதம் எனப் போற்றுகின்றனர். இருசாராரையும் ஒப்பு நோக்கினால், மக்கத்துக் குரைஷியருக்கு அவர்தம் பல தெய்வக் கொள்கையிலிருந்த பிடிமானம்கூட நம்மவருக்குத் தங்களுடைய ஏகஇறைக் கொள்கையில் இல்லாமற் போனது பரிதாபத்திற்குரியதன்றோ!
இவர்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வேதப் புத்தகங்கள் என்பதுபோல் அவற்றின் மீது குன்றாத பக்தி கொண்டிருக்கின்றனர். இந்த இலக்கியங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தால் இந்த இலக்கியப் பித்தர்கள் கொதித்தெழுகின்றனர்.
அல்லாஹ்வின் வேதமும் அந்த வேதத்துக்கு விளக்கமாக அமைந்த, உறுதி செய்யப்பட்ட அவனுடைய தூதரின் வாழ்வியலும்தாம் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை. அவையல்லா எவையும் முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்துவிட இயலாது.
இதனையும் அல்லாஹ்வே தன் வேதத்தில் ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றான்:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக