இனி, வ.உக்காரர்கள் தங்கள் கோட்பாட்டுக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பார்ப்போம். புகாரீயில் இடம் பெறும் கீழ்க்காணும் முழு ஹதீஸில் தங்களுக்குச் சாதகமான பகுதியை மட்டும் அவர்கள் மேற்கோளாக எடுத்துப் பேசி, அத்துவைதக் கொள்கைக்கு வக்காலத்து வாங்குவார்கள். அந்த முழு ஹதீஸையும் நாம் பார்ப்போம்:
"என்னுடைய தோழன் ஒருவனோடு பகைமை பாராட்டுபவனோடு நான் பகையாகவே இருப்பேன். என்னுடைய அடியான் என்பவன், நான் அவன் மீது கடமையாக்கி இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவே அல்லாமல் வேறெதையும் கொண்டு என்னை நெருங்க முடியாது. இன்னும் நஃபிலான செயல்களைச் செய்வதன் மூலம் நான் அவனை உவக்கும் காலமெல்லாம் அவன் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவன் மீது அன்பு கொண்டு விட்டால் அவன் செவியுறும் செவியாக, பார்க்கின்ற கண்ணாக, பிடிக்கின்ற கையாக நான் ஆகிவிடுகின்றேன். அவன் என்னிடம் கேட்பானேயானால் அதனை நிச்சயம் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் அடைக்கலம் தேடினால் அதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுக்கின்றேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துச் சொன்ன செய்தியை அபூஹுரைரா (ரலி) வழியாக புகாரீ (6502) பதிவில் பார்க்கிறோம். இந்த ஹதீஸின் முன்-பின் பகுதிகளை மறைத்து விட்டு, "அல்லாஹ்வே அடியானின் காதாக, கண்ணாக, கையாக ஆகிவிடுகிறான் அல்லவா?" எனக் கேட்கும் ஸூஃபிகள், "அல்லாஹ்வும் அடியானும் ஒன்றிக் கலந்து விட்டதைத்தானே இது காட்டுகிறது?" எனக் கேட்டு இணைவைப்புக் கொள்கைக்கு நியாயம் கற்பிப்பார்கள். மேற்காணும் ஹதீஸில் துண்டுப் பார்வை செலுத்தியதால் வந்த வினை இது. இதன் மீது முழுப் பார்வையைச் செலுத்தி இருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது.
அதே பத்ருப் போர் நிகழ்ச்சிகளுடன் இந்த ஹதீஸைப் பொருத்திப் பார்ப்போம். இஸ்லாத்தின் விரோதிகள் அல்லாஹ்வின் நேசர்களாகிய முஸ்லிம் வீரர்களுடன் பகைமை பாராட்டுகிறார்கள். தன்னுடைய நேசர்கள் மீது எவர் பகைமை பாராட்டுகிறாரோ அவர்களுக்கு அல்லாஹ்வே பகைவனாக ஆகிவிடுகின்றான். பத்ரு வீரர்கள் அல்லாஹ்வின் நேசர்களானது எப்படி என்பதையும் மேற்காணும் ஹதீஸ் வரிசையாகச் சொல்லி வருகிறது.
அல்லாஹ் அந்த முஸ்லிம் வீரர்கள் மீது எவற்றையெல்லாம் கடமைகளாக ஆக்கினானோ அவற்றையெல்லாம் அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றனர். அல்லாஹ்வுக்காகத் தங்கள் பிறந்த மண்ணையே பிரிந்து வந்திருக்கின்றனர்.
இவ்வாறாக அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தான் அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருங்கிய நேசர்களானார்கள். அதுமட்டுமின்றி, மென்மேலும் உபரி(நஃபில்) ஆன நற்செயல்களையும் செய்து அவர்கள் அல்லாஹ்வின் முழுப் பொருத்தத்தையும் பெற்றிருந்தார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படிப் பட்ட இறைப் பொருத்தத்தைப் பெறுவதில் முதலிடம் வகித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் வீரர்களுக்குத் தலைமை தாங்கி, வெற்றிக்காக இறைவனிடம் கையேந்தினார்கள். அவர்கள் எந்த வெற்றிக்காகக் கையேந்தினார்களோ அந்த வெற்றியை இறைவன் அவர்களுடைய கைகளில் வாரிக் கொடுத்தான்.
பகைவர்கள் தோற்று, அவல ஓலமிட்டபோது அந்த ஓசையைத் தன் தோழர்களின் செவிகளுக்கு விருந்தாக அல்லாஹ் ஆக்கி வைத்தான்; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிய காட்சியைத் தன் நேசர்களைக் கொண்டு கண்ணாரக் காண வைத்தான்; தன்னுடைய நேசர்களின் சிறிய கூட்டமொன்று பெரியதொரு வெற்றியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அந்தச் சின்னஞ் சிறிய கூட்டத்தினரின் கைகளுக்கும் கால்களுக்கும் ஓர் அற்புத ஆற்றலை வழங்கினான். அல்லாஹ்வே அவர்களுக்கு உற்ற துணையாயிருந்து வெற்றி புரிந்திருக்கிறான்.
இந்த வெற்றி, முழுக்க முழுக்க பத்ரு வீரர்களுடைய அவயங்களின் ஆற்றலால் ஈட்டியதன்று என்பதைச் சுட்டிக் காட்டுவதாகத்தான் "அவனுடைய காதாக, கண்ணாக, கரமாக நான் ஆகி விடுகிறேன்" என்றான் அல்லாஹ். "நம்மோடு காதாக, கண்ணாக, கரமாக அல்லாஹ் இரண்டறக் கலந்து விட்டான்; இனி நாம் வேறு அவன் வேறு என்றில்லை. நாம்தான் அல்லாஹ்; அல்லாஹ்தான் நாம்" என்று அந்த முஸ்லிம் வீரர்கள் எண்ணினார்களா? அப்படி எண்ணத்தான் முடியுமா? அப்படிப் பட்ட எண்ணத்துக்கு இடமேயில்லை என்பதை அதே ஹதீஸின் பிற்பகுதி தெளிவு படுத்துகிறது.
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
1 கருத்து:
அருமையான தெளிவான விளக்கங்கள். அல்லாஹ் உமக்கு நல்லருள் புரிவானாக.
கருத்துரையிடுக