அல்லாஹ்வுடைய கையாக ஆகிவிட்ட பிறகு, அந்தக் கை இனி யாரிடம் போய் துஆக் கேட்பது? கேட்பவனும் அவனே; கேட்கப் படுபவனும் அவனே என்று ஆகிவிடவில்லையா? அப்படித்தான் ஆகிவிட்டது வஹ்தத்துல் உஜூதாரிடம். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது; அது ஏகத்துவத்துக்கே உலை வைப்பதாகி விடும் என்பதை உணர்த்திக் காட்டுவதாகவே அதே ஹதீஸின் பிற்பகுதி அமைந்திருக்கிறது. பிற்பகுதி ஹதீஸ் என்ன சொல்கிறது? "அந்த அடியார்கள் இனியும் அவர்களுக்கு எவை தேவையோ அவற்றை என்னிடமே கேட்க வேண்டும். அப்போது நான் அவர்களுக்குக் கொடுப்பேன். என்னிடமே பாதுகாப்புக் கோர வேண்டும். அப்போது அவர்களை நான் பாதுகாப்பேன்" என்கிறான் இறைவன்.
இப்படியாக, அல்லாஹ் தன் அடியானைத் தன்னிலிருந்து வேறாக்கி வைத்து, "நீ என் அடியான் எனும் நிலையிலிருந்து, என் நேசன் எனும் நிலையிலிருந்து என்னிடம் கேள்" எனக் கூறுகிறான்.
ஆக, ஸுஃபிஸவாதிகள் அல்லாஹ்வின் வசனத்தையும் அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸையும் எப்படியெல்லாம் ஞானப்(!) பாட்டைக்குத் தள்ளிக் கொண்டு போய் பங்கு வைத்து விட்டனர் என்பதை அவர்கள் செய்திருக்கும் தகிடுதத்தங்களால் தெரிந்து கொள்ளலாம். இதோடு நின்று விடாமல், ஸூஃபிஸம் பற்றியும் அதன் படித்தரங்கள் பற்றியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமே கூறியிருப்பதாகப் பொய்ச் செய்திகளையும் உண்டு பண்ணினார்கள்.
எவன் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிப் பொய் சொன்னானோ அவன் தனது இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்.
புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ முதலிய ஹதீஸ் நூல்களில் காணப்படும் நபிமொழிகளின் கடும் எச்சரிக்கையையும் புறக்கணித்து விட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பெயராலேயே பொய்ச் செய்திகளைப் பாடினார்கள் ஸூஃபிகள்:
ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நாலாம்ஓதிய ஷரீஅத் தென்றும் உவந்திடு தரீக்கத்தென்றும்நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால்ஆதியைக் காணலாமென் றகுமதர் அருளிச் செய்தார்.
(ஞான மணிமாலை, பாடல் 11).
ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் எனும் நான்கு நிலைகளின் ஊடாகத்தான் இறைவனை அறிய முடியும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறியுள்ளதாக, பீரப்பா பாடுகின்றார்.
ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளிய ஹதீஸ்களில் எதிலும் இப்படி ஒரு செய்தி காணப் படவேயில்லை.
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக