வெள்ளி, செப்டம்பர் 26, 2008

சாகாத கருப்பு யானை

முறம் போலென்றார் - இல்லை

முற்றிய வாழைத் தாரென்றார்

உரல் போலென்றார் - இல்லை, பாதி

உதிர்ந்த வாருகோலென்றார்


அண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால்

வல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும்

"அல்லாஹு அக்பர்"அழைப்போசையின்

அடிநாதமாய் உயிர் வாழும் நான்,


சாட்சியாளர்களான ஆட்சியாளர்கள்

"சய்யிதுனா"என விளித்த

பிலால் என்ற கருப்பான முழுயானை.


ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=308092510&format=html

திங்கள், செப்டம்பர் 08, 2008

தினமலரைப் புறக்கணிப்போம்! (மீள் பதிவு)

மூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்! இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர் பலவகைகளிலும் உறுதுணை புரிந்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி மக்களிடம் நிலவும் மனிதநேயத்தைச் சீர்குலைத்து வருகின்றனர். 

1995க்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தப் பார்ப்பன மதவெறி செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்திலும் குறிப்பாக தமிழகத்திலும் படுவேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளன. இதற்கான அடையாளமாக கோயம்புத்தூர் படுகொலைகள், தென்காசி குண்டுவெடிப்புகளைக் கூறலாம். இதற்காகச் சங்கபரிவாரத்தின் அறிவிக்கப்படாத தமிழக ஏஜண்டாக ஊடகத்துறையில் தினமலர் எனும் பார்ப்பன தினசரி ஈடுபட்டு வருகிறது.

எங்காவது ஒரு மூலையில் காவல்துறையால் அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டு ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு விட்டால், ஊசி, நூல், வயர் துண்டு, சுத்தியல், ஆணி போன்ற 'அதி பயங்கர ஆயுதங்களின்' பட்டியலை முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து "இஸ்லாமிய தீவிரவாதி" என்ற பதத்தைத் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தப் பெருமை தினமலருக்கு உண்டு. பிள்ளையார் ஊர்வலம் நடக்கும் வேளைகளில் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செய்யப்படும் கலவரங்களைக்கூட, காவல்துறையும் பதிவு செய்யாத "அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து கல் வீசப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டது" என திரித்து முஸ்லிம் சமுதாயத்தை மக்கள் மத்தியில் மோசமான சமுதாயமாகச் சித்தரிப்பதற்குத் தினமலரால் மட்டுமே இயலும்.

இவ்வாறு பல ஆண்டுகாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வந்தமையைச் சகித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் நெஞ்சில் சுடுகனலை வைப்பது போன்று, தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதரைக் கேலி செய்யும் விதமாக டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்டு உலகில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த கேலிச்சித்திரத்தைச் சம்பந்தமே இல்லாமல் தனது கணினிமலரில் வெளியிட்டுள்ளது. இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்று ஒதுக்கிவிட இயலாது.

உலக முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமதான் மாதத் துவக்கத்தில் இந்த மதவெறி தாக்கதலை திட்டமிட்டே தினமலர் அரங்கேற்றியுள்ளது. எதையும் தாங்கும் முஸ்லிம்கள் தங்களின் இறைத்தூதர் இகழப்படுவதை மட்டும் ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்தே இந்நாழிதழ் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டது. எதிர்ப்பு வந்தபொழுது தவறுதலாக நடந்தது எனக் கூறி தன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முயல்கின்றது. அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவோ இனி இதுபோன்ற செயல் தன்பக்கமிருந்து நடைபெறாது என்பதற்கு உத்தரவாதமோ அது கொடுக்கவில்லை. தவறுகூட ஒரு பிரசுரத்தில் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பிரசுரங்களில் அது பிரசுரிக்கப்பட்டது தவறுதலாக நடந்தச் சம்பவமாகப்படவில்லை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சுமூகமாக வாழும் சமூகத்தில் கலகம் விளைவித்து அதன் மூலம் இலாபம் பெற வேண்டும் என்ற சங்கபரிவாத்தின் செயல்திட்டத்தை வலுவான ஊடகம் மூலம் பரப்ப முனையும் தினமலர் பத்திரிக்கையை மேலும் தமிழகத்தில் வளரவிடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். 

செய்த தவறுக்கு நிர்வாகம் காரணமல்ல என்று கூறி வருத்தம் தெரிவித்து நழுவுவது தினமலரின் நிர்வாகச் சீர்கேட்டை பறைசாற்றுகிறது. தினமலரின் மதவெறி செயல்பாட்டை ஒழிக்க, மனித நேயத்தை வளர்க்க சமூக ஆர்வலர்களே முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவை அளியுங்கள். ஒன்றிணைந்து எதிர்ப்போம், மதவெறியை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்! 

செவ்வாய், ஜூலை 22, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19

பூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து, "வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப் போடுங்கள்" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்களாம்:
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).
திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.

அல்லாஹ்வின் கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்?

சுவனத்திலுள்ள 'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும் ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி, திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).
அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா?

வானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவா? அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும் ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச் சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).

உமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, ஜூன் 13, 2008

அறியாப் பொருள் பேசி ...

லமுறை சொன்னதுதான்; மீண்டும் சொல்வதில் தவறில்லை: எந்த ஒன்றைப் பற்றி எழுதத் துணிந்தாலும் அதைப் பற்றி முழுக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் அடிப்படை அளவாவது தெரிந்து கொண்டு எழுதுதல் நலம். இல்லையெனில், சென்ற வாரத் திண்ணையில் 'ஹிட்லிஸ்ட்-ல் பெயர் வருவதற்கு' எழுதிய கார்கில் ஜெய்யும் மலர் மன்னனைப் போலவே இறுதிவரை 'அங்கீகாரம் இல்லாத' வரிசையில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான். 

தனக்கு அறிவில்லாத ஒன்றைப் பற்றி எழுதாமல் இருப்பதே உத்தமம். அதை விடுத்து, "தஸ்லீமா அக்காவிடம் போய்க் கேள்; ரஸூல் அண்ணனிடம் கேள்" என்றெல்லாம் எழுதி, தன் அறியாமையைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமா? அவ்விருவரைக் குறித்து அலசி ஆராயா விட்டாலும் குறைந்த பட்சம் திண்ணையில் மட்டுமாவது என்ன பேசப் பட்டிருக்கிறது என்று அறிந்து கொண்டு ஜெய் எழுதியிருக்கலாம். 

போகட்டும். ஹிட் லிஸ்ட் உருவாகும் அடிப்படையைப் பார்ப்போம்: இலங்கைக்கு நமது அமைதிப் படையை அனுப்பிய 'குற்றம்' செய்ததால் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஹிட் லிஸ்ட்டில் வந்தார். சீக்கியரின் பொற்கோவிலில் இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட 'குற்றம்' செய்ததால் இந்தியாவின் இரும்பு மனுஷி என்றழைக்கப் பட்ட இந்திராகாந்தி ஹிட் லிஸ்ட்டில் ஏறினார். இவ்விரு பிரதமர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெயரும் ஹிட் லிஸ்ட்டில் ஏற்றப் பட்டது. அப்பெயருக்குச் சொந்தமானவர் காந்திஜி. "இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் சொந்த நாடு. அனைவரும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறிய 'குற்றம்' செய்ததால் அவரும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றார். 

இதுபோல் நிறைய காட்டுகள் உள. அவை அனைத்தும் சொல்லும் ஒரேயொரு செய்தி என்னவெனில், "ஹிட் செய்பவர்களின் பார்வையில் 'குற்றம்' செய்பவர்களாகக் கருதப் படுபவர்கள்தாம் ஹிட் லிஸ்ட்டுக்குள் கொண்டுவரப் படுவார்கள்" என்பதே. முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கை என்பதே, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்பதுதான். "ஒருவனே" என்றபோதே, "இரண்டாமவர் இல்லை - அவர் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக இருப்பினும்" என்பது அடக்கம். இந்த அடிப்படையைக்கூட அறியாமல், "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் 'ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?" என்று மலர் மன்னர் திண்ணையில் சவால் விட்டதற்குச் சில சகோதரர்கள் பதில் எழுதினர்; நானும் அவரது கூற்றிலுள்ள அறியாமையைச் சுட்டிக் காட்டி விளக்கம் எழுதி இருந்தேன். முஸ்லிம்களின் கொள்கையைச் சொல்வது 'குற்றம்' என்று கருதும் 'ஜிஹாதி'களுக்கு அவ்வாறு சொல்லும் இபுனு பஷீர் வகையறாக்களை ஹிட் லிஸ்ட்டில் வைக்கும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது.

ஆனால், அது மலர் மன்னனுக்கு எப்படித் தெரியும்? இதே ஐயத்தை ஜெய் கிளப்பியிருக்கிறார். ஒரேயொரு வாய்ப்புள்ளது. மலர் மன்னனுக்கு வடநாட்டில் நிறைய 'முக மதிய' நண்பர்கள் இருப்பதாக அவரே திண்ணையில் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஒட்டுத் தாடியை உடைய 'ஜிஹாதி'களாக இருப்பதற்கும் அவர்களது ஹிட் லிஸ்ட்டில் இபுனு பஷீருடைய பெயரும் அவரைப் போலவே அறிவிப்புச் செய்யும் என் போன்றோரது பெயர்களும் ஏறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அல்லது, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்ற கொள்கையை ஏற்றுச் செயல்படும் 'குற்றம்' செய்பவர்களைத் தமிழக அளவில் அழித்தொழிக்கும் எண்ணத்தோடு தென்காசியில் குண்டு வைத்த 'ஜிஹாதி'களது ஹிட் லிஸ்ட்டில் எங்களுடைய பெயர்கள் இருப்பதற்கோ ஏறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. 

***

அடுத்து, முஸ்லிம்களைத் தடுக்கும் காவல்துறையின் கதி என்னவாகும் என்பது கார்கில் ஜெய்யிக்குத் தெரியாது என்பதால் அதைக் கோவை அல்-உம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். கோவையில் அல்-உம்மா என்ற அமைப்பே துடைத்தெறியப் பட்டதைக்கூட அறியாமல் எழுதும் ஜெய்யிக்குக் கோவைக் கலவவரங்கள் குறித்து நிறைய செய்திகள் சொல்ல வேண்டும். கோவை நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் அதேவேளை சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றை மூன்றாகப் பிரித்துக் கொள்தல் நலம்:
  1. உக்கடம் போக்குவரத்துக் காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை.
  2. காவல்துறையும் காவிகளும் கைகோர்த்துக் கொண்டு கோவையின் முழுமுஸ்லிம் சமுதாயத்துக்கே எதிராக ஆடிய கோரத்தாண்டவம்.
  3. தொடர் குண்டு வெடிப்புகள்.
1. காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை 
கடந்த 1997 நவம்பர் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமையன்று ஒரு பைக்கில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பயணித்ததற்காகக் போக்குவரத்துக் காவலர் செல்வராஜினால் தடுக்கப் பட்டு, அபராதம் செலுத்துமாறு பணிக்கப் பட்டனர். செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டு அபராதத் தொகையை அம்மூவரும் செலுத்தியிருந்தால் கோவை கொழுந்து விட்டு எரிந்திருக்காது. சாத்தானின் ஆணவக் குணம் மேலோங்கியதால் அம்மூவரும் தம் சகாக்கள் சிலரைத் துணைக்கழைத்துக் கொண்டு வந்து, கடமையைச் செய்தக் காவலர் செல்வராஜை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளர் இராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டிலுள்ள அல்-உம்மா அலுவலகத்திற்குக் காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும் அல்-உம்மாவின் பொதுச் செயலாளர் அன்சாரீ தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பாஸ்(22), ஷபி(22), மற்றும் ஷஃபி(20) ஆகிய மூன்று முஸ்லிம் வாலிபர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர். சரணந்தவர்களை விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி, உரிய/உச்சபட்ச தண்டனை வழங்கியிருந்தால் 19 அப்பாவி முஸ்லிம் உயிர்களைப் பலிவாங்கிய கொடுமையையும் முஸ்லிம்களின் கோடிக்கணக்கானச் சொத்துகளின் நாசத்தையும் முஸ்லிம் பெண்களின் மானபங்கத்தையும் கோவை சந்தித்திருக்காது.

***

2. கோவை முஸ்லிம்களுக்கு எதிரான காவி-காவலர்களின் போர் 
காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் (30.11.1997) கோவை நகர் முழுதும் காவி-காவலர்களின் கோரத் தாண்டவம் அரங்கேறியது. காவலர் செல்வராஜின் உடல் வைக்கப் பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையின் வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும் தீவைத்தும் எரித்தனர். அந்தப் பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனைப் பார்த்த காவிக் கலவரக் கும்பல் நேராக அந்த வேனுக்குச் சென்று வேனில் இருந்த ஹபீப் ரகுமான் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றது. சற்று நேரங் கழித்து, மருத்துவமனை வளாக நிலவரம் தெரியாமல் உக்கடப் பகுதிக் கலவரத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரைப் பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிஃபும் சுல்தான் என்பவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவ்விருவரையும் கொல்வதற்குக் காவிப்படை ஓடிவந்தது. அவ்விருவரும் அரசு மருத்துவமனை வாசலிலேயே ஸ்கூட்டரைப் போட்டுவிட்டு ஓடினர். ஆனால் வன்முறைக் காவிகள் அவர்களை விரட்டிப் பிடித்துத் தாக்கினர். ஆரிஃபை அடித்துக் கொன்றனர். சுல்தான் பலத்த காயங்களுடன் தப்பி ஓடி விட்டார். மருத்துவமனை வளாகத்தில் கொலைவெறிக் காவிகள் குவிந்திருப்பதை அறியாமல் லியாகத் அலிகான் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவரை மருத்துவமனையின் வசலிலேயே வன்முறைக் கும்பல் தடியால் அடித்துக் கொன்றது. அந்தக் கலவரத்தில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மட்டும் ஹபீப் ரகுமான், ஆரிஃப், லியாகத் அலிகான் ஆகிய மூவர் கத்தியால் குத்தப் பட்டும் அடித்தும் கொலை செய்யப் பட்டனர். ஹாரிஸ் என்ற இளைஞர் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப் பட்டான். 

அந்தக் கொடுமையை ஜூனியர் விகடன் [7 டிசம்பர் 1997] நம் கண்முன் கொண்டு வருகிறது: "கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஓர் ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க... யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்... அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட - வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகி விட்டது." 

காவிக் கொலைவெறியர்களோடு காவலர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய கோவைக் கொலைகளுள் அரசு மருத்துவமனை வளாகக் கொலைகள் தொடர்பாக மட்டும் 14 காவியரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்து, பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகிய மூவர் விடுதலை செய்யப் பட்டனர். ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேற்காணும் 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, "11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை" என்பதாகக் கூறி அனைவர் மீதும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். கோவை மருத்துவமனை வளாகக் கொலை பாதகர்கள் அனைவரும் அந்த வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலையானபோது நீதிதேவதை கண்களை மட்டுமின்றி முகத்தையே மூடிக் கொண்டாள். இது, 30.11.1997இல் நடந்தேறிய கோவை அரசு மருத்துவமனை வளாக வன்முறைக் கொலைகளும் அவை சார்ந்த வழக்குகள் மட்டுமே. கோவை நகர் முழுதும் நடந்தேறிய காவி-காவலர்கள் ஆடிய கோரத் தாண்டவம் குறித்து பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (13-26 டிசம்பர் 1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்:
"மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (30.11.1997) வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சிசாலை-டவுன்ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவியரும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம்வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கையக் கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. கட்டிடங்கள் தரைமட்டமாயின. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகாரக் கடைகள், காலணிக் கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்துத் தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன. (தான் தேர்தலில் ஜெயித்தால் "முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளைப் போலக் கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்" என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியுமிருந்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்த தண்டபாணி) காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர்; அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபீபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஓர் அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத் தலைவி அழுது கொண்டே 'எனது கல்யாணப் பட்டுச்சேலை எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை' என்று நம்மிடம் சொன்னார். 'அருகிலுள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை' என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்."

பிரபலப் பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் 'எ காங் இன் தி வீல்' என்ற தலைப்பில் 3 ஜனவரி 1998இல் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன; அல்லது சூறையாடப்பட்டன; கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றம் சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு இது சிறிய பிரச்சினை அல்ல. 12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரின் தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை."
தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி 14 டிஸம்பர் 1997 இதழில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:
''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதைக் கடைகள், முதல்தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர்தான் தீ வைப்புச் சம்பவங்களுக்குத் தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில், 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட, சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்''
காவிகளோடு காவலர்கள் கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்களைக் கொடூரமாகக் கொன்றும் அவர்தம் சொத்துகளைச் சூறையாடியும் ஆடிய கோரத் தாண்டவம் வீடியோவாகப் பதிவு செய்யப் பட்டு, டெல்லியில் இயங்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடமும் சமர்ப்பித்து முறையாக நீதி கோரப் பட்டது. அப்போது கிடைக்க வேண்டிய நீதி கிடைத்திருந்தால் கோவை குண்டுவெடிப்பு நாசம் தவிர்க்கப் பட்டிருக்கும். 

***

3. கோவை குண்டு வெடிப்பு
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்தார். அவர் வருவற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 7.4.2000இல் குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 166 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்குத் தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை 7.3.2002இல் தொடங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட 166 பேரில், 3 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்ளை உறுதிப் படுத்தியோ மறுத்தோ, விசாரிக்கப் பட்ட 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அம்மூவரும் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்தது.

இவ்வழக்கில் கைதான சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கையின் எந்த இடத்திலும் இவர்களது பெயர்கள் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் ஒருவரைக் குற்றவாளி/நிரபராதி என்று உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. FIR பதிவு செய்யாமல், எந்தவித ஆவணமும் இல்லாமல், சாட்சிகளும் இல்லாமல் சர்தாரும் அப்துல்லாஹ்வும் சிறைவாசம் அனுபவித்த கொடுமையும் இவ்வழக்கில்தான் நடந்தேறியது.

45 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.

இக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மஅதனி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மஅதனி மனுக் கொடுத்தார். மஅதனியின் மனுவை உச்சநீதி மன்றம் காது கொடுத்துக் விசாரிக்கக்கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது. 

முஸ்லிம் 'தீவிரவாதி' மஅதனியிடம் இப்படிக் கறாராக நடந்து கொண்ட இதே உச்சநீதி மன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்த ஜெயேந்திரருக்கு, அவ்வழக்குத் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது. "மஅதனியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை. சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மஅதனியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரைக் குறைந்தபட்சம் மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். சில மாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓர் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அவ்வறிக்கையில் பேரா. அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர் வீராசாமி, கவிஞர் சுகிர்தராணி, வழக்கறிஞர் ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மஅதனி பிணையில் விடுவிக்கப்படவில்லை. (அந்த அறிக்கையையும் அதில் கையெழுத்திட்டவர்களையும் "தீவிரவாதிகளுக்குப் பால்" வார்ப்பதாகச் சாடி திண்ணையில் ஒரு கட்டுரையும் வந்தது). 

ஆனால் இப்போது மஅதனி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மஅதனியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீஸ் ஆகியவை எப்படி ஈடுகட்டும்? இது மஅதனிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வி

கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டபோது சிறுவன் அப்பாஸுக்கு வயது 16. அவனுக்குச் சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவனுக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவன் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, 'எய்ட்ஸ்' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவனது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனையின் அலட்சியம் என்பதா, அல்லது மருத்துவத் துறையிலும் புகுந்து கொண்டு பழி தீர்த்துக் கொள்ளும் காவிவெறி என்பதா?

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இம்முஸ்லிம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், பிணைகூட கிடைக்காமல் ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது?. 'தடா'சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில்கூட, நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்டுப் பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரணக் குற்றவியல் சட்டங்களின்கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 166 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப் படாத மஅதனிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது. 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மஅதனி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது. 

இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டு்கால 'தண்டனையை' அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில, தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். மஅதனி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போலப் பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. 

தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர். ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், "இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக"க் 'கண்டுபிடித்து'த் தீர்ப்பளித்தது. "இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்" என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், "இந்நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக" எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர். சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலிஸும் நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும். 

கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின்படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும், எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். "இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்துக் காவலர் சில முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; மாறாக, இந்துத் தீவிரவாதிகளும் போலீஸும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய வன்முறை" என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முஸ்லிம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, கோவை கலவரத்தைப் பற்றி சிறப்பு நீதிமன்றம் வாய் திறக்கவே மறுத்துவிட்டது. 

குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே 'அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. "குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ஆனால், "உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக"க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம். இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாஃபைச் சாட்சி சொல்ல போலீஸார் அழைத்து வந்தனர். முனாஃப் நீதிமன்றத்திலேயே, "தன் அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீஸார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை" அம்பலப் படுத்தியதோடு, போலீஸார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார். விசாரணையின்போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபோது, போலீஸாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி 'உதவி' செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியோ, போலீஸாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார். 

 குற்றவாளிகளைச் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீஸார் 'அடையாளம் காட்டி' இருக்கின்றனர். போலீஸாரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை போலீஸார் தயார் படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல. 

 கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்தது. "இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரைப் பிடித்துச் சென்று போலீசில் அன்றே ஒப்படைத்ததையும் போலீஸார் அவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும் அந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும் 'கைது செய்யப் பட்ட' 38 முஸ்லிம்களுக்கும் எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம். 

அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு, சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று 'வெவ்வேறு இடங்களில்' குண்டு வைத்த தீவிரவாதிகளை 'நேரில் பார்த்த சாட்சியாக' விஜயகுமார் என்ற ஒரே ஆள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், 'வேறுபட்டப் பல இடங்களில்' குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை 'நேரில் பார்த்த சாட்சிகளாக' நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், 'இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த வழக்கின் மிக முக்கியமான குற்றவாளியாக முன் நிறுத்தப்பட்ட மஅதனிக்கு எதிராக அழைத்து வரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீஸாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீஸ் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள்; அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா? 

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மஅதனி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, அவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது. 

அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றித் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முஸ்லிம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை

***

நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப் பட்டது. அல்-உம்மாவின் தலைவர் கோவை பாஷாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலாளர் அன்ஸாரீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது. தங்களின் ஆணவத்தால் தங்களையே அழித்துக் கொண்டது மட்டுமின்றி, தங்கள் சொந்தச் சமுதாய மக்களின் விலை மதிப்பற்ற 19 உயிர்களையும் கோடிக்கணக்கில் உடமைகளையும் தம் சமுதாயப் பெண்கள்தம் மானத்தையும் இழந்து வீதியில் நிற்பதற்கு முதல் காரணமானவர்களான அல்-உம்மாவின் அந்த பைக் வீரர்கள் மூவரும் முஸ்லிம்களின் மன்னிப்புக்குக்கூட அருகதை அற்றவர்கள். 

காவலர் செல்வராஜ் கொலை, கோவைக் கலவரம், குண்டு வெடிப்பு ஆகியவை குறித்து இன்னும் ஏராளம் எழுதலாம். இவற்றையெல்லாம் அறியாமல் வெறுமனே, "கோவை அல்-உம்மாவிடம் கேட்டுக் கொள்" என்று இல்லாத ஓர் அமைப்பிடம் போய்க் கேட்கச் சொன்ன கார்கில் ஜெய் இன்னொன்றும் எழுதியிருக்கிறார். நான் பொய் எழுதியிருக்கிறேனாம். மலர் மன்னன் உண்மையை எழுதியிருக்கிறாராம். இரண்டையும் இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறாராம். போகிற போக்கில் சேறடிக்காமல் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை முன்வைத்து எழுதுபவன் என்று திண்ணை வாசகர்களுக்கு வஹ்ஹாபியைப் பற்றி நன்கு தெரியும். உண்மைகளை ஜெய் நிரூபிக்கட்டும். அதற்கு முன்னர் இக்கட்டுரையில் இணைப்பாகவும் ஆறாவது சுட்டியாகவும் கொடுக்கப் பட்டுள்ள உயிரோடு எரிக்கப் படும் இளைஞனையும் அதை ஆசையோடு வேடிக்கை பார்க்கும் கடமை தவறாத காவலரையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.
ஃஃஃ
சுட்டிகள்:
  1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80806056&format=html
  2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html
  3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805152&edition_id=20080515&format=html
  4. http://poar-parai.blogspot.com/2008/01/rss.html
  5. http://newscap.wordpress.com/2008/02/04/
  6. http://to.wahhabi.googlepages.com/Kovai_violance.jpg
  7. http://nihalvu.blogspot.com/2006/06/blog-post.html
  8. http://www.keetru.com/vizhippunarvu/sep07/jawaahirullah.php
  9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=206100610&format=html
  10. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1193:2008-05-04-17-14-12&catid=36:2007&Itemid=78
  11. http://www.hindu.com/2006/03/08/stories/2006030809270500.htm
  12. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1096:2008-05-01-08-55-50&catid=36:2007&Itemid=78

சனி, மே 24, 2008

தமிழ் ருஷ்டி

"ங்குப் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டலாம்" என்று போர்டு வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு "பெயரின் முக்கியத்துவம் பற்றி" சென்ற வாரத் திண்ணையில் அவிழ்த்துக் கொட்டி இருக்கிறார் மலர் மன்னன்.

எவ்வித ஆதாரமும் சொல்லாமல் கொட்டப் பட்ட அவரது புளுகுகள்:
(1) முஸ்லிம்களின் இறைத்தூதரை இழிவாகப் பேசியதால் பாகிஸ்த்தானில் ஓர் இந்து கொல்லப் பட்டார். கொலை செய்த இரு முஸ்லிம்களுக்குத் தண்டனை இல்லை. 

(2) மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை முஸ்லிம்களின் இறைத்தூதரை உருவமாகப் பலர் வரைந்து தள்ளியிருக்கின்றனர். 

(3) பெங்களூர் நகரில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி நடத்தினால் நகர் முழுதும் உள்ள காவல் நிலையங்கள் மூடப் படும். பெங்களூர் நகரின் எல்லாக் காவலர்க்கும் அன்றைக்குக் கட்டாய விடுப்பு. 

(4) முஸ்லிம்களின் இறைத்தூதர் சாத்தானிடம் ஏமாறிப் போனார். 

மேற்கண்டவற்றுள் நான்காவதுதான் அவர் சொல்ல வரும் செய்தி. இதில் வெளிப்படையாகச் சொல்லப்பட வேண்டிய வியப்புக்குரிய ஓர் உண்மை ஒளிந்துள்ளது. தன்னை ஒரு தமிழ் ருஷ்டியாகக் கற்பனை செய்து கொண்டு எழுதிய மலர் மன்னன், ருஷ்டியைப் போலவே இஸ்லாத்தைப் பற்றி ஏதும் அறியாத அறிவிலியாக இருப்பதுதான் அந்த உண்மை. 

"எங்கள் இறைத் தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்" என்று யாராவது ஒரு முஸ்லிம் கூறினால் அவரை ஜிஹாதிகளிடம் மலர் மன்னன் போட்டுக் கொடுத்து விடுவார் என்று சற்றே அச்சம் ஏற்பட்டாலும் உயிருக்கு அஞ்சி உண்மை சொல்லாமல் இருக்க வேண்டாம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்: "எங்கள் இறைத்தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்லர்" மேலும் சொல்கிறேன்: "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே!" 

"அங்கீகாரம் இல்லாதவன்" என்று அடிக்கடி தன்னைத் தானே நொந்து கொள்வார் மலர் மன்னன். அப்போதெல்லாம் எனக்கு "ஐயோ, பாவம்!" என்று தோன்றும்; காரணம் விளங்கி விட்டதால் இனிமேல் அப்படித் தோன்றாது.
ஃஃஃ

வெள்ளி, ஏப்ரல் 04, 2008

அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்

சிரிப்பு என்பது மனிதனுக்கு "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆத்திகர்களும் "இயற்கையின் அன்பளிப்பு" என்று நாத்திகர்களும் வகை பிரிப்பர். வரமோ அன்பளிப்போ, சிரிப்பதால் மனிதனுக்கு நலன் விளைவது மட்டும் உண்மை என்று அறிவியல் கூறுகிறது. கடவுளின் இருப்பை நம்புவது கடவுளை மறுப்பவர்க்குச் சிரிப்பைத் தரும்; அதுபோலவே, கடவுளின் இருப்பை நம்புபவர்க்குக் கடவுளை மறுப்பது சிரிப்பைத் தரும். 

வெறும் உதட்டளவில் இல்லாது மனமாரச் சிரித்ததாகச் சென்ற வாரம் கோபால் ராஜாராம் திண்ணையில் எழுதியிருந்தது மகிழ்வளிக்கிறது! ஆனால், அதற்கு அவர் கூறிய காரணம் இயல்புக்கு முரணாக இருக்கிறது. //எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன்//என்று கோ.ரா. எழுதியிருக்கின்றார். புரியாத மொழியில் எழுதப்பட்ட ஒரு கருத்தை, அம்மொழியைத் தெரியாதவர் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், புரியாத ஏதோ ஒன்றுக்காக, எதிர்க் கருத்து என்பதாக ஒரு கட்டுரையே வடிக்க முடியுமா? 

வடித்திருக்கிறார் கோ.ரா. இதைத்தான் நகைமுரண் என்று கூறுவர் போலும். திண்ணையின் 20 மார்ச் 2008 பதிப்பில் வெளிவந்த எனது கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த,
"எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கை நெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்..." (புகாரீ 6110).
என்ற நபிமொழியில் அரபி மொழி எங்கே இருக்கிறது என்பதை கோ.ரா. தெரியப் படுத்தினால் நன்றியுடையவனாவேன். பெயர்ச் சொற்களைத் தவிர்த்து முடிந்தவரை எளிய தமிழில் எழுத வேண்டும் என்ற எனது விருப்பத்தை, பழக்கத்தைச் செம்மைப் படுத்திக் கொள்ள கோ.ரா. உதவ வேண்டும். //நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும், முன்னோர்களின் மரபணுப் பதிவின் கலவையுமாகப் பிறந்த நான் ஒரு எழுதப் படாத சிலேட் தான். அதற்குப் பின்பு என் பெற்றோர், என் சூழல், என் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப் பாடுகளும், சிந்தனைகளும் பெற்று வளர்ந்து நிற்கிற ஒருவன் நான். எல்லோருமே அப்படித்தான், வஹாபி உட்பட//என்று கோ.ரா. கூறுவது நான் எடுத்தாண்ட நபிமொழியின் வேறொரு கோணமான விளக்கம் என்றே நினைக்கிறேன். 

முன்னொரு காலத்தில் எங்கள் பகுதியில் இதே மாதிரி சிலேட் ஒன்று இருந்தது. அதற்குச் சட்டம் கட்டும்போதே அதன் சாதியின் பெயர் எழுதப்பட்டு விட்டதாக அதனிடம் சொல்லப் பட்டது. அதற்குச் சட்டையும் செருப்பும் அணியும் தகுதி மறுக்கப் பட்டது. தெருக்கள் பெரிதாக இருந்தும் ஓரமாக, பணிவுடன் நடக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப் பட்டது. மற்றவர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிடும்போது எங்கள் சிலேட்டுக்கு மட்டும் பலகாரக் கடைகளின் உள்ளே போகக்கூட அனுமதி மறுக்கப் பட்டது. கல்வி கற்பது தடுக்கப் பட்டது. சிலேட்டுக்குச் சிந்தனை வந்தது. ஒரு நாள் நிமிர்ந்து நின்று சொன்னது: "நான் முஸ்லிமாகிட்டேன்". அந்த சிலேட்டு தாங்கிக் கொண்ட சோதனைகளால் தன் சந்ததியரின் சாதிப் பெயரை அழித்தொழித்து, எல்லா உரிமைகளையும் வரித்தெடுத்துத் தன்மானத்துடன் வாழ வழி செய்தது.

உலகில், நம் நாட்டில், குறிப்பாக நம் தமிழகத்தில் தம் பழைய அடையாளங்களை அழித்துக் கொண்ட சிலேட்டுகள் நிரம்பக் கிடைக்கின்றன.

பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே எழுதப் படாத சிலேட்தான் என்பதில் எனக்கு எதிர்க் கருத்தில்லை. ஒரு குழந்தை இஸ்லாமியக் குடும்பத்தில் பிறப்பதால் மட்டும் 'முஸ்லிம்' ஆகி விடுவதில்லை. அதற்குப் பின்பு அதன் பெற்றோர், அதன் சூழல், அதன் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப்பாடுகளும் சிந்தனைகளும் பெற்று வளர்ந்து, இஸ்லாத்தை முழுதாக மனதளவில் ஏற்று அதன் வழிகாட்டுதல்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும்போதுதான் அது உண்மையான முஸ்லிம் ஆகிறது. எல்லாக் குழந்தைகளுமே தம் வாழ்க்கைப் பயணத்தை ஒரே எல்லைக் கோட்டிலிருந்துதான் தொடங்குகிறார்கள். யாருக்கும் யாரும் உயர்ந்தவர் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை. "வர்ண பேதம், உயர்வு-தாழ்வு, சாதி, மதம், இனம், மொழி போன்ற வெறியோ வேற்றுமையோ ஒரு குழந்தையோடு ஒட்டிக் கொண்டு பிறப்பதில்லை; அவை வளர்ப்பால் வருபவை" என்பதுதான் நான் எடுத்தாண்ட நபிமொழியின் கரு என்பதும் அதில் கடுகளவு பொய்யோ மிரட்டலோ இல்லை என்பதும் சின்னப் பிள்ளைக்கும் தெரியும்; திண்ணை வாசகர்களுக்கும் நன்கு தெரியும். 

***

இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இறுதிநபியைப் பற்றியும் ஏற்கனவே திண்ணையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ள பேரா. நாகூர் ரூமியின் கட்டுரையில் காணப் பட்டப் புகழுரைகளை நான் சுட்டியதன் நோக்கம் மிகத் தெளிவானதாகும். "உலகம் முழுதும் இஸ்லாம் எள்ளி நகையாடப் படுகிறது" என்று போகிற போக்கில் (திண்ணையில்) போட்டு விட்டுப் போனதை மறுக்கும் முகமாகத் திண்ணைச் சான்றுகளை மட்டும் முன் வைத்திருந்தேன். அவையனைத்தும் பிறமதத் தலைவர்களால், புகழ் பெற்ற அறிஞர்களால் கூறப் பட்டவை என்பதால் அவை சான்றுகளாக முன்வைக்கும் தகுதியைப் பெறுகின்றன. அவை மட்டுமின்றி, இதை எழுதத் தொடங்குவதற்குச் சற்றுமுன் படிக்கக் கிடைத்த வாடிகன் செய்தியான,
Islam has surpassed Roman Catholicism as the world's largest religion, the Vatican newspaper said Sunday. "For the first time in history, we are no longer at the top: Muslims have overtaken us," Monsignor Vittorio Formenti said in an interview with the Vatican newspaper L'Osservatore Romano. Formenti compiles the Vatican's yearbook.
போன்ற செய்திகளும் வேதவாக்குகளாக எடுத்துக் கொள்ளப் படவில்லை; பொய் சொல்லி ஆள் சேர்க்கும் அவல நிலையில் இஸ்லாமும் இல்லை; இஸ்லாத்துக்கு வெட்டி விளம்பரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாடிகன் இதழும் இல்லை என்பதே உண்மை. சிலர் போற்றுவதாலும் வேறு சிலர் தூற்றுவதாலும் ஒரு கொள்கை ஆதிக்கம் செலுத்துவதாகவும் பாதிக்கப் படுவதாகவும் இருப்பின் அது கொள்கையேயன்று. 

*** 

கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் நான் பிறந்த ஈரானை விட்டு இஸ்ரேலுக்குக் குடியேற மாட்டேன் என்பதை, "Iran's Jews not for sale" என்ற தலைப்பில் "The identity of Iranian Jews is not tradeable for any amount of money" என்று கூறும் ஈரானிய யூதர்கள் தங்களின் பிரதிநிதியாக மோரிஸ் மொடாமெட் என்பவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்று முழுமதச் சுதந்திரத்தோடுதான் ஈரானில் வாழ்கிறார்கள். குவைத்தை இராக் ஆக்கிரமித்த வளைகுடாப் போரின் தொடக்கத்தின்போது இராக்கின் துணைப் பிரதமராக இருந்த தாரிக் அஸீஸ் ஒரு கிருத்துவர். சமாதானம் செய்வதற்கு வந்த ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் புத்ரோஸ் புத்ரோஸ் காலியும் எகிப்து நாட்டுக் கிருத்துவர். புத்ரோஸின் தந்தை யூஸுஃப், எகிப்து அரசின் நிதியமைச்சராகப் பதவி வகித்த கிருத்துவர். 'அரபு நாட்டில் மதச் சுதந்திரம்' என்ற பேசுபொருளுக்குப் பொருத்தமாக அங்குக் கடந்த 24 மார்ச் 2008இல் புதிய சர்ச் ஒன்றை அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் ஆய்வக அமைச்சர் திறந்து வைத்திருக்கிறார் என்ற செய்தியை இங்குச் சொல்லி வைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவெனில் இதெல்லாம் வஹ்ஹாபி குரல் கொடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் இயல்பாக நடைபெற்று வருகின்றன என்பதைத்தான். 

***

//முகம்மது கார்ட்டூன்களுக்குத் தானே முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மோசஸ், ஏசு பற்றி காமெடியும், கார்ட்டூன்களும் வழமையாய் எல்லா மேற்கு நாடுகளிலும் உண்டே அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே// என்பது கோ.ரா.வின் ஆதங்கம். நாங்கள் இறைத் தூதர்கள் என்று நம்பும் எவர் இழிவு படுத்தப் பட்டாலும் கொதிப்படைவோம். ஏசுவை விமரிசிக்கும் டான் ப்ரவுனின் 'தி டா வின்ஸி கோட்' நாவலாக வெளிவந்தபோதும் திரைப்படமாக அது நீட்சி பெற்ற போதும் முஸ்லிம்கள் வாளாவிருக்கவில்லை. என்னதான் டான் ப்ரவுன் தனது முன்னுரையில், "இந்தக் கதையில் வர்ணிக்கப்படும் கலை, மதம், சம்பிரதாயங்கள் மற்றும் மதக்கோட்பாடுகள் எல்லாம் ஆதாரபூர்வமானவை; எதுவும் கற்பனையில்லை" என்று கதையளந்தாலும் முஸ்லிம்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கவில்லை:
The Da Vinci Code is a novel, a work of fiction. It does not present facts about Jesus's (as) life in a serious and respectful manner. It has fictionalized his life and story, and in this sense it has downgraded this great messenger of Allah. The author of The Da Vinci Code took some historical facts and then spun a mystery story to thrill and chill his readers. Allah's prophets and messengers should not be treated in this manner. They are entitled to receive utmost honor and respect from us. It is for this reason that Islam forbids making pictures of Allah's prophets and messengers and also forbids creating fictitious stories and movies about them. We as Muslims do not want to be known as people who react only when something wrong is done to the blessed name of our Prophet Muhammad(Peace be on him) We stand for the respect of all religious figures of all religions. Furthermore, Jesus (as) is also a blessed prophet for us. We believe in him and honor him. We also have something to say about this novel and movie.
"அன்னை மரியம்" என்று கண்ணியத்துடன் நாங்கள் குறிப்பிடும் மேரி அவர்களின் கற்பையும் ஆண் துணையின்றி அவர் ஏசுவைப் பெற்றெடுத்தது குறித்து விமரிசனம் வந்தபோதும் அதற்கான மறுப்பை ஆதாரங்களோடு ஆவணப் படுத்த முஸ்லிகள் தவறவில்லை:
In their recent books entitled Mary: The Mother of Jesus and Mary: A Dogmatic Journey, two "Catholic" writers, the journalist Jacques Duquesne and the theologian Dominique Cerbelaud, display an overt disbelief in the virginity of Mary the mother of Jesus Christ. Mr. Duquesne argues that it is a belief that is "not compatible with science." Mr. Cerbelaud asserts that the faith in the virgin birth came about "for reasons that spring from collective psychology." I believe both arguments to be inconsistent and based on a flawed understanding of science. Before explaining these, however, let me elaborate on why the virgin birth matters for me—since some non-Muslims might wonder why a Muslim cares about this controversy at all. The Virgin Birth According to the Qur'an As a Muslim, I am a passionate defender of the virgin birth of Christ, and all Muslims should be so. Why? Because this is one of the very important themes in the Qur'an. The Qur'an tells a great deal about the birth, works, and miracles of Jesus (`Isa in Arabic). His story starts with the angels' call to Mary (Maryam in Arabic) by which they declare the miracle of God—a son without a father. Mary is surprised: [She said, "My Lord! How can I have a son when no man has ever touched me?" He said, "It will be so. God creates whatever He wills. When He decides on something, He just says to it, 'Be!' and it is."] (Aal `Imran 3:47) There are many passages in the Qur'an in which Mary is highly praised. We read that angels said to her, ["Maryam, God has chosen you and purified you. He has chosen you over all other women"] (Aal `Imran 3:42). These verses make clear that Mary—along with Jesus himself—is a sacred figure for all Muslims.
நடிகை மாதுரி தீட்ஷித்தின் பரம பக்தரும் தான் பிறந்த ஊரான பந்தர்பூரிலுள்ள 'வித்தோபா' விக்கிரத்தை வணங்கி ஆராதனை செய்பவருமான ஓவியர் எம்.எஃப். ஹுஸைன், இந்து மதத்தினர் தெய்வமென வழிபடும் சரஸ்வதியை நிர்வாண நிலையில் ஓவியமாக வரைந்தபோது அந்தக் கிறுக்குக் கிழவரையும் அவருடைய கிறுக்குத் தனத்தையும் கண்டித்த முஸ்லிம்கள் நம் தமிழ் இணைய உலகிலும் உண்டு. 

 //1400 வருடங்கள் முன்பு இஸ்லாம் தோன்றவில்லை என்று வஹாபி சொல்வதும் எனக்கு விளங்கவில்லை// என்று கோ.ரா. வெளிப்படையாகக் கூறும்போது மீண்டும் நன்றாக விளக்க வேண்டியது என் மீது கட்டாயமாகிறது. மக்கா நகரிலுள்ள 'கஅபா' என்னும் இறையில்லத்துக்குச் சென்று 'ஹஜ்' என்ற வணக்கத்தை நிறைவேற்றுவது முஸ்லிம்களின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றாகும். இது, முஸ்லிம்களுள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கடமையாகும். இந்தக் கஅபாவைத் தம் மகன் இஸ்மாயீல் (இஸ்மவேல்) உதவியுடன் மறு சீரமைப்புச் செய்து கட்டியவர், முஸ்லிம்களின் இறைமறை பெருமை பொங்கப் பேசும் அண்ணல் இபுறாஹீம் (ஆப்ரஹாம்) என்ற இஸ்லாமிய இறைத்தூதர் ஆவார் [இறைமறை 022:026]. Maqaam Ibrahimஇறையில்லத்தைக் கட்டுவதற்காக அவர் நின்ற இடத்தருகில் ஹஜ்ஜுக்குச் செல்லும் முஸ்லிம்கள் வணக்கம் புரிய வேண்டும் என்பது [002:125] இறைக் கட்டளையாகும். இறைதூதர்களில் பலர் இவருடைய வழித்தோன்றி வந்ததால் 'நபிமார்களின் மூலத்தந்தை' என்று முஸ்லிம்களால் போற்றப் படுபவர். அவர்தாம் உலக வரலாற்றில் முதல் சிலைவணக்க எதிர்ப்பாளார். 

அண்ணல் இபுறாஹீம் அவர்களைப் பற்றிக் கூடுதல் விபரம் வேண்டும் எனில், 'கி.மு- கி.பிக்களின் கட்டுடைப்பு' என்ற திண்ணைக் கட்டுரையிலிருந்து பெறலாம். முஸ்லிம்களின் இறைத்தூதர்கள் பலரின் பெரும் பாட்டனார் அண்ணல் இபுறாஹீம் அவர்களின் காலம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அண்ணல் இபுறாஹீம் அவர்களுக்கும் அவர் வழி வந்த இறுதித் தூதரான நபிகள் நாயகத்துக்கும் இடையிலுள்ள இஸ்லாமிய இறைத் தூதர்கள் ஏராளம். எனவே, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் புதிதாகத் தோன்றவில்லை என்பதையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இஸ்லாம் மறு எழுச்சி பெற்றதே உண்மை என்பதையும் மீண்டும் ஒருமுறை நிறுவ விரும்புகிறேன். இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அதை, "இஸ்லாமிய மார்க்கம்" என்று குறிப்பிடுவர். மார்க்கம் என்பது "மார்க்" என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பதால் அதை, "வாழும்வழி", "வாழ்க்கைநெறி" என்று தமிழ்ப் படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மோஸஸும் ஏசுவும் அவ்விருவருக்கும் முப்பாட்டனாரான அண்ணல் இபுறாஹீமும் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைத்த முஸ்லிம் நபிகள் பலருள் மூவர் என்பது முஸ்லிம்களின் இறைமறை வழியாகப் பெறப் பட்ட ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுவதில்லை என்று நம்புகிறேன். 

நன்றி!
ஃஃஃ

ஞாயிறு, மார்ச் 23, 2008

கிழிபடும் POAக்கள்

சென்ற வாரத் திண்ணையில் நேச குமாருடைய கடிதம் படித்ததிலிருந்து என் பள்ளித் தோழன் ஜீனா கணேசன் எனது சிந்தனையில் ஒருவார காலமாக இடம் பிடித்துக் கொண்டான். ஜீனா என்பது அவனுடைய இனிஷியல் அல்ல. அவனுக்கு அபார நினைவாற்றல் இருந்தது. எத்தனை முறை எவ்வளவு தெளிவாகச் சொல்லிக் கொடுத்தாலும் ஒருமுறைகூட மறந்து விடாமல் ஜப்பானை "சப்பான்" என்றும் சீனாவை "ஜீனா" என்றும்தான் சொல்லுவான். அதனால் அவனுக்கு எங்கள் வகுப்பாசிரியர் வைத்த பெயர்தான் "ஜீனா கணேசன்".(நாளக்கி ஜிவாசி படம் போடப் போறாங்கடா). ஒருவரை இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்ட 'முஸ்லிம்' என்று ஒப்புக் கொள்வதற்கும் அல்லர் என்று மறுதலிப்பதற்கும் இஸ்லாத்தில் தெளிவான வரையறை உண்டு. அவற்றை மூன்றாவது தடவையாக இங்குப் பதிய வேண்டிய கட்டாயத்துக்கு நேச குமார் என்னைத் தள்ளி விட்டார்:
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.
இயல்பான மனநிலையிலுள்ள, தமிழைப் படிக்கத் தெரிந்த எவருக்கும் எளிதாக விளங்கும்படி நான் எழுதியிருப்பது நேச குமாருக்கு விளங்கவில்லை; பாவம்! "இஸ்லாம் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகமது என்பவரால் அரேபியாவில் தோற்றுவிக்கப் பட்ட புதிய மதம்" என்ற தவறான தகவல் அவருக்குப் பதிந்து போனதால் சரியானதைச் சொல்லிக் கொடுத்தாலும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை, ஜீனா கணேசனைப் போல். மேற்கொண்டு படிப்பதற்கு முன் தொடர்புடைய சில குறிப்புகள்: * 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற தலைப்பில் மலர் மன்னன் திண்ணணயில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். * இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர்களை 'முகமதியர்' என்று குறிப்பது வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில் "இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அரபு நாட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப் பட்ட ஒரு மதமல்ல" என்று நான் மறுப்பெழுதினேன் அதில்,
சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும்"
என்று நான் சார்ந்திருக்கும் சமயம் பற்றிச் சுருங்கக் கூறியிருந்தேன். இன்னும் சுருக்கமான கூடுதல் விளக்கங்கள்:
"இபுராஹீமுக்கு நாம் இஸ்ஹாக்கையும் (அவரிலிருந்து) யஃகூபையும் வழித்தோன்றல்களாக அருளி, அவ்வனைவரையும் நேர்வழியில் செலுத்தினோம். அவர்களுக்கு முன்னர் நூஹையும் அவருடைய வழித்தோன்றல்களான தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம் ..." [அல்குர்ஆன் 006:084]. "மீக்கூறிய அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர்; அவர்கள் ஆதம், நூஹ், இப்ராஹீம், இஸ்ராயீல் (ஆகிய நம் நபிமார்களின்) வழி வந்த நபிமார்களும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களுமாவர் ... [அல்குர்ஆன் 019:058].
* மலர் மன்னனுக்குத் திண்ணையில் மறுப்பெழுதிய கோபால் இராஜாராமும், 'இஸ்லாம் என்பது ஒரு புதிய மதம்' என்று பிழையாகவே விளங்கினார். ஆயினும், "தம்மை இவ்வாறுதான் விளிக்க/குறிக்க வேண்டுமென்று கூறுபவர்களின் கூற்றுப்படியே விளிப்பது/குறிப்பதுதான் முறையாகும்" என்று 'பெயர்கள் அடையாளங்கள் : முகமதியரா முஸ்லீம்களா?' என்ற தலைப்பில் எடுத்துரைத்தார்:
ஒரு சமூகக் குழு எப்படி பெயரிட்டு, எப்படி இனங்காணப் படுகின்றது என்பது, அந்தச் சமூக குழுவின் வரலாற்றையும் மற்றும் அந்த இனக்குழு மற்ற இனக்குழுக்களால் எப்படி அடையாளம் காணப்படுகின்றது என்பதற்கான வரலாற்றையும் பொருத்த விஷயம். முஸ்லிம்கள், "முகமதியர்கள்" என்று அழைக்கப் பட்டதற்கு ஐரோப்பிய வரலாற்றில் காரணங்கள் உண்டு. ஒரு புதிய மதத்தை அதற்கு வெளியே இருப்பவர்கள் அதன் தலைவர் அல்லது வழிகாட்டியை முன்னிறுத்தி அழைப்பது புதிய விஷயம் அல்ல. உலகம் பூராவும் அதுவே நடைமுறை. பௌத்தம் இன்றும் கூட அதனை ஸ்தாபித்தபவர்களின் பெயரால் தான் அறியப் படுகிறது. கிருஸ்துவம் யாரை முன்னிறுத்துகிறதோ அவர் பெயரால் தான் அழைக்கப் படுகிறது. 1965 வரையில் கூட ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி முகம்மதியர் என்ற வார்த்தையை பிரயோகம் செய்து வந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் சமீப காலத்தில் இந்தப் பெயரைத் தவிர்த்து, முஸ்லிம்கள் என்றே அறியப் படவிரும்புகிறார்கள். எனில் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைப்பதே சரியாகும்.
*எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது என்பதாக 'முஸ்லிம்' என்ற தன்மைப் பெயரை மிகச் சுருக்கமாக [சுட்டி-5] எழுதி இருந்தேன். எல்லாருக்கும் எளிதாக விளங்குவது நேச குமாருக்கு மட்டும் விளங்கமல் போய் விடுகிறது. கூடுதல் விளக்கத்துக்காகச் சில உவமைகள்: "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்று அழையுங்கள்" என்று கூறாதவரைக்கும் இஸ்மாயில் என்ற பெயரைத் தன் கையில் பச்சை குத்திக் கொண்டவனை முஸ்லிம் என்று குறிப்பது தவறாகும். ராமசாமி என்ற பெயரைப் பெற்றிருந்த பெரியார் எப்படி இந்து இல்லையோ அதுபோலவே மஸ்தான் என்ற பெயரை மட்டும் முன்னிறுத்தி குணங்குடியை முஸ்லிம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவ்வாறு அழைக்கப் படுவதை அவ்விருவருமே வெறுத்தனர்; மறுத்தனர். இதுவரைக்கும் பேசுபொருள் முகமதியம்/முகமதியர் என்பதாகவே இருந்தது. * 'பாரதி தரிசனம்' என்ற தலைப்பில் கற்பக வினாயகம் எழுதிய திண்ணைக் கட்டுரையில் பாரதியின் 'முகமதிய'த்தை மேற்கோள் காட்டுவதற்காக நான் எடுத்தாண்டபோது அதிலிருந்த 'பார்ப்பன'ரையும் 'சங்கராச்சாரி'யையும் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார், தன்னை அபார்ப்பனர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளும் நேச குமார். பார்ப்பனர் என்பது சாதாரணச் சொல்லாயிருந்து இப்போது வசைச் சொல்லாக மாறிவிட்டதாம்; நேச குமார் சொல்கிறார். ஆனால், மாறிய தேதியையோ மாற்றம் கண்ட காரணத்தையோ அவர் சொல்லவில்லை. சங்க காலக் குறிப்புகளை ஒதுக்கி விட்டு, "நான் பாப்பாத்திதான்" என்று சட்டமன்றத்தில் பெருமை பொங்க அறிவிப்புச் செய்து செருக்கி நின்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திற்குப் பிறகு மாறியிருக்கக் கூடும் என்று வைத்துக் கொண்டாலும் சுமார் 15 ஆண்டு காலமாக அதன் காரணம் மர்மமாக இருக்க வேண்டிய தேவை என்னவென்று தெரியவில்லை. பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல், வசைச் சொல்லாக மாறிய காரணத்தை விடுத்து அது மாறிய காலகட்டத்தைத் துல்லியமாக அறிய முடியா விட்டாலும் சான்றுகளின் அடிப்படையில் குத்து மதிப்பாகக் கணித்து விடலாம். பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல் வசைச் சொல்லாக மாறியது கடந்த சில மாதங்களுக்குள்ளாத்தான் இருக்க வேண்டும் என்று உறுதிபடச் சொல்லலாம். காரணம், மூச்சுக்கு மூச்சு, வரிக்கு வரி, 'பார்ப்பனர்' என்ற சொல்லைப் பயன் படுத்தி, மலர் மன்னன் எழுதிய கட்டுரையான 'தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்' திண்ணையில் வெளியானது 31 மே 2007இல்தான். ஆனால், வசையான சொல்லாக அது வகை பிரிக்கப் பட்டது யாரால்? எப்படி? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது!

"முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு புதிய மதம்தான் இஸ்லாம்" என்ற வரலாற்றுப் பிழை திண்ணையில் இடம் பெற்று, அதுவே வருங்காலத்தில் பிறரால் எடுத்தாளப் படும் ஆவணமாகி விடக் கூடும் என்ற காரணத்தை முன் நிறுத்தியே - அப்பிழையைத் திருத்தும் முயற்சியாகவே - நான் எதிர்வினைகள் ஆற்றி வருகிறேன். முகமதியர்/முகமதியம் என்பன பிழையான சொல்லாட்சிகள் என்பதைச் சொல்லி வைப்பதுதான் எனது எதிர்வினையின் நோக்கமேயன்றி அவை வசைச் சொற்கள் என்பதற்கான வெற்றுக் குமுறலன்று. இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி, முதல் மனிதனில் தொடங்குவதாகும். பிறப்பால் உயர்வு-தாழ்வு என்பதே இஸ்லாத்தில் இல்லை. பிறக்கும்போதே எந்தக் குழந்தையும் சாதி-மத-வருணங்களோடு பிறப்பதில்லை. வளர்ப்பினால் அவை வலிந்து திணிக்கப் படுகின்றன. இதையே,
"எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்..." (புகாரீ 6110).
என்று எங்கள் தலைவரும் இஸ்லாத்தின் இறுதி நபியுமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கமளித்தார். மேற்காணும் காரண காரியங்களோடு, "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஓர் அஹமதியோ, "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஒரு ஷியாவோ, "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஒரு பஹாயோ இங்கு வேண்டுகோள் வைத்தால் மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை 'முஸ்லிம்' என்று விளிப்பதில்/குறிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. எனவே, அஹமதி, ஷியா, பஹாய் போன்றோரின் POA (Power Of Attorney)க்கள் இனிமேல் நேச குமாருக்கு உதவா என்பதால் அவற்றைக் கிழித்துப் போட்டு விடலாம். அஹமதி, ஷியா, பஹாய் ஆடுகள் நனைவது குறித்து அழ வேண்டிய தேவையும் இனிமேல் நேச குமாருக்கு இல்லாமலாகி விட்டது. 

உலகில் எல்லோராலும் இஸ்லாம் எள்ளி நகையாடப் படுகிறதாம். தன் ஒருவரையே உலகம் என்று நினைத்துக் கொண்டு எழுதும் நேச குமார் சொல்கிறார். ஆனால், அவருடைய கருத்தை மறுக்கும் முகமாக, நேச குமாருடைய சென்னை முகவரிவரை அறிந்து வைத்திருக்கும் அவரின் நண்பர் திண்ணையில் மேற்கோள்களை அடுக்குகின்றார்:
இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது நபியைப் பற்றியும் பிற மதத்தினர், அதுவும் உலகப் புகழ் பெற்ற, அதிகாரத்திலும் அந்தஸ்திலும் இருந்தவர்கள், தலைவர்கள், என்ன சொன்னார்கள் என்று கீழே சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். உண்மை அப்படி இருக்கும்போது இஸ்லாத்தை அசைத்துப் பார்த்துவிட முயலும் முயற்சிகள் எங்கேபோய் முடியும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்:
"அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்" - நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01. "அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது" - ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3. "இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது" - சிஎன்என், டிசம்பர் 15, 1995. "அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவன்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாகப் பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்" - ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998. "இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன்" Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள் - சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167. "அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளின் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது" - டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08. "மனிதர்களுக்கு இடையே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வைத் தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" - ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205. "வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன" - W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix. "இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்" - ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர். முஹம்மது நபி பற்றி, "இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்" - என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா. "இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது. மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது" - லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277. "அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டுவந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை - ஏன் - ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்" - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936). "சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்" - மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33. "அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது" - திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122. "போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்" - பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92. "அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும், அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது" - அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4. "கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்...இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது" - மகாத்மா காந்தி, 'யங் இந்தியா' பத்திரிக்கையில் 1924ல் எழுதியது. "ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார். அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்" - வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920. "ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது" - தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840].
மேற்காண்பவை இஸ்லாத்தையும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான திண்ணையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ள எழுத்துச் சான்றுகள். வெளிச்சான்றுகளும் நிறையவே உள. விரிவஞ்சி அவற்றை இங்குத் தவிர்க்கிறேன். சுட்டிகள் 9-12 வரை ஓய்வு நேரத்தில் காண வேண்டிய காட்சிச் சான்றுகள்.

இறுதியாக, இந்து மதத்தை, "சனாதனக் குட்டை" என்று நான் குறிப்பிட்டதாக அவதூறு எழுதிய நேச குமார், அதற்காகத் திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இல்லையெனில், அவதூறு+ஆட்கொணர்வு வழக்குகளை - திண்ணை/திண்ணையர் சாட்சியாக - நீதிமன்றத்தில் அவர் சந்திக்க நேரலாம் என்பதை அன்போடு சொல்லி வைக்கிறேன்.
ஃஃஃ
திண்ணையில்
தொடர்புடைய சுட்டி
சுட்டிகள்: 01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803135&format=html 02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&edition_id=20080103&format=html 03 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801102&edition_id=20080110&format=html 04 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801241&edition_id=20080124&format=html 05 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802075&edition_id=20080207&format=html 06 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html 07 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20705314&format=html 08 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610062&format=html 09 - http://www.youtubeislam.com/search_result.php?search_id=convert 10 - http://www.youtubeislam.com/search_result.php?search_id=reverts 11 - http://www.youtubeislam.com/channel_detail.php?chid=19 12 - http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=714&Itemid=119

வெள்ளி, மார்ச் 21, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 18

இஃதிவ்வாறிருக்க, மறுபுறம் பாத்திமா நாயகி அவர்கள் தம் தோழிப் பெண்களால் சோடிக்கப் பட்டு மணமுரசு ஒலிக்க, மணப் பந்தலுக்குக் கொண்டு வரப் பட்டார்களாம்.

"மணக்கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார்" (பாடல் 179) எனப் போகிறது புராணக்கதை.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். உமறுப் புலவர் 'ஒலி'யுல்லாஹ் அவர்களுடைய சீறாப் புராணத்தில் மலிந்து கிடக்கும் இத்தகைய அசிங்கங்களை எடுத்தெழுதும்போது வெட்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை; வேதனையை விலக்க முடியவில்லை. சீறாப் புராணத்தை ஒரு வேதநூல் போல இன்றுவரைப் போற்றிக் கொண்டாடும் முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து நேர்வழி பெற வேண்டும் என்ற கடமையுணர்வு, வெட்கத்தையும் வேதனையையும் மிகைத்து நிற்பதால் அசிங்கங்களையும் எடுத்தெழுத வேண்டியது கட்டாயமாகி விட்டது.

குர்ஆன் ஹதீஸின் உண்மையான தாத்பரியங்கள் சென்று எட்டாத, மிகவும் பின் தங்கிய முஸ்லிம் ஜமாஅத்தாருடைய சில ஊர்களில் மரணத் தறுவாயில் கிடப்பவருடைய தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னமும் இந்த சீறாப் புராணம் பாடப் படுகின்றது.

'நேர்வழி நின்று நெறியாட்சி' புரிந்த சிறப்புடையவர்களுள் ஒருவராகிய அலீ(ரலி) அவர்களுக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் நடந்த திருமணத்தை இவ்வாறாகவெல்லாம் கொச்சையாகவும் பச்சையாகவும் வருணித்துப் போகிறார் உமறுப் புலவர். இவருடைய கனவில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஹாளிர்' ஆகி இவரை ஆசீர்வதித்தார்களாம். இந்தக் கர்ண பரம்பரைக் கதையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இந்த 'ஒலி'யுல்லாஹ்வுக்கு உரூஸ் எடுத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

படிப்பவர்களுடைய உள்ளங்களை மாசுபடுத்தக் கூடிய அழுக்குக் கவிதைகளை வைத்துக் கொண்டு இதுதான் நமது ஆத்மக்கறை அகற்றும் சவுக்காரம் எனத் தம்பட்டமடித்துக் கொள்கிறவர்களும் உள்ளனர்.

சல்மான் ரஷ்டியின் நூலை எந்த அளவுக்கு வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு வெறுக்கப் படத்தக்கக் கவிதைகள் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழனியிலும் முற்றிய களைகளாய்ப் பெரிதும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பொருத்தவரை நம்மில் பலர் இலக்கியக் குருடுகளாகவே தட்டழிந்து திரிகின்றனர். ஆக, இத்தகைய விரசமான, மார்க்க முரணான 'சாத்தானின் வரிகள்' சுட்டிக் கட்டப் படுவதன் நோக்கத்தையும் தேவையும் நாம் மறந்து விடலாகாது.

மணமுரசு எங்கணும் முழங்க, அழைத்து வரப் பட்ட பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் இருத்தினராம். "வந்த பொன்மயிலை ... அலியிடத்து இருத்தினாரால்" என அமைகிறது பாடல் (180). மணமகன் அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் மணமகள் பாத்திமா (ரலி) அவர்களை மணப் பந்தலுக்குக் கொண்டு வந்து உட்கார வைக்கிறார் உமருப் புலவர். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் பாடும் இஸ்லாமியத் திருமணத்தின் இலட்சணம் இதுதான் போலும்.

இரு சாட்சிகளின் முன்னிலையில் மணமகளின் தந்தை மணமகனுக்குச் செய்து வைக்கும் வாழ்க்கை ஒப்பந்தம்தான் 'நிக்காஹ்' எனும் இஸ்லாமியத் திருமணமாகும். 220 பாடல்களில் அலீ-பாத்திமா (ரலி) திருமண நிகழ்ச்சிகளை நீட்டி, முழக்கிப் பாடும் உமறுப் புலவருக்கு 'இஸ்லாமியத் திருமணம்' குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே, பிறமதச் சடங்குகளைப் பின்பற்றி மணமேடையில் மாப்பிள்ளையுடன் பெண்ணையும் சேர்த்து வைத்துப் பார்ப்பதில் புலவர் ஆனந்தம் கொள்கிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையான சுன்னத்தின்படி நிக்காஹ் நடைபெறுகிறதோ இல்லையோ; அதுபற்றிக் கவலையில்லை. ஆனால் ஃபாத்திஹா ஓதப் பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் பலர். அதே போக்கை உமறுவிடமும் காண முடிகிறது. பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அடுத்தாற்போல் இருக்கச் செய்து, உற்றார் உறவினர் எல்லோருமாகச் சூழ்ந்திருந்து வாழ்த்தி ஃபாத்திஹா ஓதினார்கள் என்பதை மறவாமல் பாடிச் செல்கிறார் புலவர்:
மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவரெவருஞ் சூழ்ந்து பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திஹா வோதுங் காலை (பாடல் 181).
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

புதன், மார்ச் 12, 2008

பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்

திண்ணை எழுத்தாளர் கற்பக வினாயம் எழுதிய திண்ணைக் கட்டுரையின் ஒரு பகுதியை நான் எடுத்தாண்டால்/பயன் படுத்தினால் அது முழுக்க முழுக்க நான் எழுதியது போல்தானாம், நேச குமார் சொல்கிறார். சரி, "சனாதனக் குட்டை" அவருக்குக் கிடைக்கின்றவரை "பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற இரு சொற்களையும் நானே என் கைகளால் எழுதியதாகவே வைத்துக் கொள்வோம். திண்ணை பிப்ரவரி 1, 2008 பதிப்பில் நேச குமார் என்னைப் பற்றி, //பார்ப்பனர், சங்கராச்சாரி என்பது போன்ற பதங்களை பயன்படுத்துவதை அவர் சற்றும் தவறாக எண்ணவில்லை - இதுவே இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம். என்னைக் கேட்டால் பார்ப்பனர் என்று ஏசுவதும், சங்கராச்சாரியார்களையும் இந்து மதத்தையும் ஏசுவதையும் (இதே திண்ணை வஹ்ஹாபி ஒரு முறை சனாதானக் குட்டை என்ற பதத்தை இந்து சமுதாயத்தைக் குறித்து பயன்படுத்தியிருந்தார்)// என்று குறிப்பிடுகிறார். சொற்களைப் பயன் படுத்தியவன் 'இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம்' கொண்டவனாயின், அவற்றைச் சுயமாய் எழுதிய கற்பக வினாயகமும் 'இஸ்லாமிஸ்ட்' தானே? அவர் மட்டுமா இஸ்லாமிஸ்ட்? "பார்ப்பனர்" என்று யாரெல்லாம் எழுதுகிறார்களோ அவர்களைவரும் இஸ்லாமிஸ்ட் என்றே அறியப் படுவராம். இஸ்லாமிஸ்ட் 'எதேச்சாதிகார மனோபாவ'த்தைக் கட்டுடைப்பதற்காகக் கொஞ்சம் பட்டியல் பார்ப்போம்: தொல்காப்பியர் எனும் இஸ்லாமிஸ்ட்:
பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு அளவியன் மரபின், அறு வகையோரும் களவினில் கிளவிக்கு உரியர் என்ப (தொல்காப்பியச் சூத்திரம் - பொருள் 181).

வள்ளுவர் எனும் இஸ்லாமிஸ்ட்:
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (ஒழுக்கமுடமை 134).
நானூறு இஸ்லாமிஸ்ட்கள்:
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் ... (புறம் 9).
பார்ப்பார்த் தப்பிய கொடுமை ... (புறம் 34).
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ... (புறம் 367).
யாகம் என்றால் என்ன என்றே அறியாதயதவரை, "வேளாப் பார்ப்பான்" என்று குறிக்கும் அகம் (24). இளங்கோ எனும் இஸ்லாமிஸ்ட்:
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ் வானூர் மதியஞ் சகடணைய வானத்துச் சாலி யொருமீன் றகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார் ... (சிலப்பதிகாரம் 1:1:49)
சீத்தலைச் சாத்தனார் எனும் இஸ்லாமிஸ்ட்:
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் யாப்பறை என்றே எண்ணினன் ஆகி ... (மணிமேகலை 22:41,42).
மரியாதை தெரியாத இஸ்லாமிஸ்ட் காளமேகம்:
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும் பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - … (பாடல் 6).
மாடுதின்பான், பார்ப்பான் மறைஓதுவான்குயவன் கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான் பரும்புடைவை தப்பும்;பறை (பாடல் 90).
டிஸ்கி: காற்புள்ளி இருப்பதை மறந்து "மாடு தின்பான் பார்ப்பான்" என்று வாசகர்கள் படித்துக் குழம்பிவிட வேண்டாம். இறுதிச் சொல்லைப் படித்து விட்டு முதற் சொல்லுக்குப் போக வேண்டிய லூப் வகைச் செய்யுளாகுமிது. இதைக் "கடைமொழி மாற்று" என்று கூறுவர். பாரதி எனும் இஸ்லாமிஸ்ட்:
பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால் பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான் (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சமூகம் - மறவன் பாட்டு 6 - பக்கம் 505).
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சுதந்திரப் பள்ளு - பக்கம் 181).
சூத்திர னுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; சாத்திரம் சொல்லிடு மாயின் - அது சாத்திரமன்று; சதியென்று கண்டோம் (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - ஸ்மிருதிகள் 13 - பக்கம் 679).
நெடுங்கண்ணனார் எனும் இஸ்லாமிஸ்ட்:
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கி னன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே (குறுந்தொகை-156)
நல்லாதனார் எனும் இஸ்லாமிஸ்ட்:
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து முறைநிலை கோடா அரசும் ... (திரிகடுகம் 34).
பரஞ்சோதி முனிவர் எனும் இஸ்லாமிஸ்ட்:
மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின் மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளைப் ... (திருவிளையாடற் புராணம் - விருத்த குமார பாலாரான படலம் 23 பாடல் 1460).
சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன ... (திருவிளை. மா. பாத. 28).
மேற்காணும் பழைய இஸ்லாமிஸ்ட்கள் தவிர்த்து, நம் சமகால இஸ்லாமிஸ்ட்களும் நிறைய உள்ளனர். குந்தைவையின் சொற்களைப் 'பயன்படுத்திய' பாலகுமாரன் என்ற இஸ்லாமிஸ்ட்:
சேரதேசத்துப் பார்ப்பனர்களால் மதுரையிலுள்ள வாலிபப் படை ஒன்று போருக்குப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் போர் புதுவகையானது என்று சொல்லப் பட்டது. விடியற்காலை வேளை - அல்லது இருள் பரவும் நேரம் ஓடிவந்து தாக்கி விட்டு மறைந்து கொள்வார்கள். வீடுகளுக்கு நெருப்பு வைத்து விட்டுக் கொள்ளையடிப்பார்கள். மூன்று நான்கு குழந்தைகளாய் கயிற்றில் கட்டி, கொத்தாய் குதிரில் போட்டு ... (உடையார் முதல் பாகம் - பக்கம் 388).
"தண்டச் சோறுண்ணும் பார்ப்பை"ப் 'பயன் படுத்தும்' பல நூறு இஸ்லாமிஸ்ட்கள் இணைய உலகில் இன்னும் வலம் வந்து கொண்டு தங்கள் எதேச்சாதிகார மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அவர்களையெல்லாம் பட்டியலிட்டால் இஸ்லாமிஸ்ட்டுகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, திண்ணையில் 'பயன் படுத்திய' இஸ்லாமிஸ்ட்களை மட்டும் இங்குத் தருகிறேன்:
'சூத்திரற்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று காண்' என்றான் பாரதி. 'இஸ்லாமியருக்கொரு நீதி; விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு வேறொரு நீதி, சங்கர மடம் சொல்லிடுமாயின் அது சமரசமன்று சதியென்று காண்' என்பதல்லவா இந்த நிலைமை
"சமரசமன்று : சதியென்று காண்!" என்ற தலைப்பில் திண்ணையில் எழுதி இஸ்லாமிஸ்ட் ஆனார் ஞாநி.
இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும் தலித்துக்களும் மிகக் குறைவே
என்று திண்ணையில் எழுதிய எ.அ.பாலாவும் இஸ்லாமிஸ்ட்தான்.
பால் வேறு, குலம் வேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள். பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள்.பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர். அந்தணர், ஐயர், அறிபர், தாபதரென்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் கூற்றுகளைத் திண்ணையில் 'பயன் படுத்திய' எஸ்ஸார்சி ஐயமின்றி ஓர் இஸ்லாமிஸ்ட்டேதான்.
வடக்கே ராணுவம், காவல் துறை போன்ற உடல் வலிமை சார்ந்த பிரிவுகளில் பார்ப்பனர்கள் ஏராளமாக இடம்பெற்றிருப்பதையும் கண்டிருக்கிறேன். எனவே எனக்குப் பரிச்சயமான வட மாநிலச் சமூகங்களைச் சேர்ந்த பார்ப்பனர்கள் போர்க்குணம் மிக்கவர்களாகவும், தமது உடல் வலிமையின் காரணமாக மற்ற பிரிவினரால் மிகவும் மதிக்கத் தக்கவர்களாகவுமே இருந்தனர். அத்தகைய பார்ப்பனர்களைப் பார்த்துப் பழகியிருந்த எனக்குத் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் இயலாமையினையும் சுய பச்சாதாபத்தையும் பார்க்கையில் ஆச்சரியமாகவும் வெறுப்பாகவுங்கூட இருந்தது. அந்தக் கால கட்டத்தில் வாய்ப்பேச்சளவிலும் எழுத்து மூலமாகவும் பார்ப்பனர் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்று வந்த போதிலும் மிகவும் அபூர்வமாகவே அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன.பார்ப்பனர் மீது மிகக் கடுமையான எதிர்ப் பிரசாரம் இருந்த போதிலும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு என்பதெல்லாம் எப்பொழுதேனும் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்களாகத்தான் இருக்கும். அவற்றுக்கு ஆளாகிறவர்களும் வறியவராய் நோஞ்சான்களான அப்பாவி அர்ச்சகர்களாகவோ, புரோகிதர்களாகவோ சமையல்காரர்களாகவோதான் இருப்பார்கள். ஒரு வக்கீலாகவோ அரசாங்க அதிகாரியாகவோ இருக்க மாட்டார்கள்! ஆக பார்ப்பன வெறுப்பாளர்களின் தாக்குதலும் கையாலாகாத அப்பாவி பார்ப்பனர்கள் மீதுதான் நடக்கும்.
இதே திண்ணையில் "தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்" என்று தலைப்பே வைத்து, மேற்கண்டவாறு வரிக்கு வரி பார்ப்பனர் என்று 'பயன் படுத்தும்' தீவிர இஸ்லாமிஸ்ட் யாராயிருக்கும்? பார்ப்பனர் என்ற சொல்லைப் 'பயன் படுத்திய' எனக்கெதிராக வழக்காட வந்த, லாயர் நேச குமாருடைய க்ளையண்ட் மலர் மன்னன்தான் அது. மேற்காணும் இத்தனைபேர் "பார்ப்பனர்" என்று 'பயன் படுத்திய' போதெல்லாம் பதறாத - "அபார்ப்பனர்" என்று தன்னை வெளியில் சொல்லிக் கொள்ளும் - நேச குமாருக்கு வஹ்ஹாபி 'பயன் படுத்திய'போது வந்த ஆவேச மர்மப் புதிரை உடைக்கிறார் பாபுஜி என்ற இஸ்லாமிஸ்ட்:
என்னுடைய இக்கேள்வியை, அப்போதே நேச குமாரை பேட்டி எடுத்து ஃபிலிம் காட்டிய ஒரு 'பெட்டிக்கடை'யிலும் பின்னூட்டமாக வைத்திருந்தேன். வழக்கம் போல் பதில் தான் இல்லை.ஆனால் யாரேனும் இவருடைய திரித்தல்களை கேள்வி கேட்டால் 'இஸ்லாமிஸ்ட்' என்று முத்திரை குத்த மட்டும் தயங்குவதில்லை.
விரிவஞ்சி "பார்ப்பனர்" விஷயத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். *** இனி, "சங்கராச்சாரி" என்ற பயன்பாடு பற்றியும் சான்றுகளைப் பார்ப்போம்:
குடமுழுக்குச் செய்வோர் சங்கராச்சாரியையும் சமஸ்கிருதத்தையும் புறக்கணிப்பது சிறந்த பொதுத் தொண்டாகும்.
-"சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு" என்ற தலைப்பில் பெ.மணியரசன்.
சமூகத்துக்கு சாதகமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதைச் செய்தவரின் உள் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதை விடுத்து நிகழ்ச்சியின் சாதகத் தன்மையைப் பாராட்டுகிறோம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் சங்கராச்சாரி ஜயேந்திரர் கைது. தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இதில் என்ன உள் நோக்கம் இருந்தாலும் சரி, சங்கராச்சாரி கைது என்பது சமூக நன்மைக்கு உதவுகிற ஒரு முன்னோடி நடவடிக்கை என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை.
-திண்ணை 16 டிஸம்பர் 2004 இதழில் ஞாநி.
படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் 'பிள்ளை கெடுத்தாள் விளை' - ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே.
-சு.ரா.வின் 'பிள்ளை கொடுத்தாள் விளை'பற்றி ஆதவன் தீட்சண்யா.
தமிழர்கள் வெறுத்த வகுப்புவாதத்தை இந்திய தேசியத்தின் பெயரால் அவர்கள் மீது திணித்ததைத் தவிர சோ தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் செய்தது என்ன? தமிழுக்கு செம்மொழி தகுதி தரப்பட்டதை கிண்டல் செய்தார். தனித் தமிழ் ஈழம் அமைவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தித் திணிப்பை ஆதரித்து எழுதினார். மண்டல் குழு அறிக்கையை எதிர்த்தார். நள்ளிரவு கலைஞர் கைதை தமிழகமே கண்டித்த போது, அதை ஆதரித்தார். சங்கராச்சாரி கைதை தமிழகமே ஆதரித்த போது, அதைக் கண்டித்தார்.
-"அன்புள்ள ஆசிரியருக்கு" அருளடியான், 15 ஏப்ரல் 2005.
சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு! சங்கராச்சாரி மீது கொலைவழக்கு!! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!! நன்றாகப் புரியவைத்த உனக்கு, நன்றி சங்கரா நன்றி! - திண்ணையில் நா.முத்து நிலவன்.
திண்ணை தேடுபொறிக்கு நன்றி; மேற்காணும் அத்தனையும் திண்ணையில் வெளியானவைதாம். போகட்டும். மற்றவர்கள் 'பயன் படுத்துவதி'லாவது இடம்பாடு/உடன்பாடு இருக்கக் கூடும்; இல்லாமலும் இருக்கக் கூடும். (TAMBRAS) வெள்ளி விழா மாநாடு சென்னை அண்ணா நகரில் டி.கே. ரெங்கநாதய்யர் நகர் - ஸ்ரீ கிருஷ்ணா கார்டனில் 24,25 டிசம்பர் 2005 ஆகிய இரு நாட்களிலும் பெரும் பணச் செலவில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய மணிகண்டன் என்பவரின் பிரகடனம்:
"நாம் இன்று ஒன்று கூடி விட்டோம். நான் இத்தனை காலமாக எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றுதான் எனக்காக பேசுகிறேன். இங்கு கூடியிருந்த கூட்டத்தில் பெருமையோடு கூறுகிறேன். நான் ஒரு பார்ப்பான் என்று தமிழ்நாட்டை பார்த்து நாங்கள் இன்று எச்சரிக்கை செய்கிறோம்".
தான் யார் என்றும் தன்னை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று சம்பந்தப் பட்டவரே கூறும்போது அவ்வாறு அழைப்பதுதான் நியாயம். இந்த நியாயத்தைத்தான் மலர் மன்னனிடம் நானும் வேண்டுகோளாக வைத்தேன். அதை, நான் 'பங்ரா' நடனம் ஆடுவதாக நேச குமார் கேலி பேசினார். அவரது மனநிலையைக் கருத்தில் கொண்டவனாக என்னைப் பற்றியதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; திண்ணையும் அதைக் கண்டு கொள்ளவில்லை; அது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை. "பார்ப்பனர்" கருப் பொருள்தான் முடிந்து போய் விட்டதே, மீண்டும் "சங்கராச்சாரி" பகுதியில் மணிகண்டன் ஏன் வரவேண்டும்?" என்று வாசகர்கள் சலித்துக் கொள்ள வேண்டாம். மணிகண்டனைப் போலவே,
"இந்து மதத்தின் குறைகளை திராவிடர் கழகம் விமர்சிப்பது பரவாயில்லை. ஆனால், அதனால் முஸ்லீம்களுக்கு பலம் வந்துவிடுகிறது. எனவே, திராவிடர் கழகம் இந்து மதத்தையோ, சங்கராச்சாரியையோ விமர்சிப்பதற்கு பதிலாக, சேரிகளில் சங்கர மடம் செய்யும் நிவாரணப் பணிகளில், கைகொடுக்கட்டும். எது எப்படியானாலும் முஸ்லீம்களை வளரவிடும் விதத்தில் திராவிடர் கழகம் செயல்படக் கூடாது"
என்று தன்னை எவ்வாறு விளிப்பது/குறிப்பது என்று சம்பந்தப் பட்ட சங்கராச்சாரியே கட்டளை இட்டு விட்டார். தீர்ந்ததா? *** நேச குமாரின் குற்றச் சாட்டுகளில் இப்போது மீந்திருப்பது, //(இதே திண்ணை வஹ்ஹாபி ஒரு முறை சனாதானக் குட்டை என்ற பதத்தை இந்து சமுதாயத்தைக் குறித்து பயன்படுத்தியிருந்தார்)// என்ற "குட்டை" குற்றச் சாட்டு மட்டுமே. அவரது மேற்காணும் குற்றச் சாட்டைச் சான்றுகளோடு அவர் நிரூபித்தே ஆகவேண்டும். இல்லையெனில் தான் மனம் பிறழ்ந்த நிலையில் நிதானமின்றித் தவறாக எழுதி விட்டதாகத் திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். //...அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா?// என்று 27 பிப்ரவரி 2008 திண்ணை இதழில் கேள்வி கேட்கும் இவரை மனம் பிறழ்ந்து நிதானமிழந்தவர் என்று குறிப்பதில் தவறேதுமுண்டோ? இவருடைய பேதலிப்புக்கு எத்தனை முறைதான் எழுத்து வைத்தியம் பார்ப்பது? அவர் கேள்வி வைத்த ஒரு வாரத்திற்கு முன்னரே (21 பிப்ரவரி 2008) பதிப்பான எனது திண்ணைக் கடிதத்திலிருந்து மீண்டும்: "ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.
ஃஃஃ