சனி, பிப்ரவரி 25, 2006

ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-3

திண்ணையின் 12.01.2006 பதிப்பில் ஹெச். ஜி. ரஸூல் எழுதியிருந்த கட்டுரையின் மூன்றாவது பத்தியில், 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' (அல்லது மீள்பார்வை அதாவது மறு பரிசீலனை) செய்யப்பட வேண்டிய நூற்றுக் கணக்கானவற்றில் 'மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப் படும்' (அல்லது ஹஜ் கடமையின்) போது முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) செய்யும் 'சடங்குகள்' (அல்லது கடமைச் செயற்பாடுகள்) சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்:

(1) ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ஸஃயுச் செய்தல் (2) மினாவில் ஜம்ராத்துக்குக் கல்லெறிதல் (3) கால்நடைகளை பலியிடுதல் (4) தலைமுடி மழித்தல் 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்' (வஹ்ஹாபிகளால்) விமர்சிக்கப் படுவதால், மேற்கண்பவற்றையும் 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' செய்ய வேண்டுமென்ற காரணத்தை முன் வைத்திருக்கிறார்.

அஃதென்ன 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்'? என்று வாசகர்கள் அதிகம் குழம்ப வேண்டாம். வஹ்ஹாபிகளின் தலைவர் (அல்லது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் போதனைகளின்* அடிப்படையில் வஹ்ஹாபிகளால் கடுமையான விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிக் களையிழந்து போன தர்ஹாக்கள் மற்றும் -அவற்றில் நடைபெறும் சமாதி வழிபாடுகள், சமாதிகளுக்காக நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மொட்டையடித்தல் -இல்லாத பேயை உற்பத்தி செய்தல், பேய் விரட்டும் பித்தலாட்டம் -கந்தூரி அனாச்சாரங்கள் -சமாதிகளின் பெயரால் தட்சணைக் கொள்ளை மற்றும் உண்டியல் சுரண்டல் -தர்ஹாக்களைச் சுற்றிலும் நடக்கும் பல்வகைக் கீழ்த்தொழில்கள் ஆகியன 'பண்பாட்டு உயிர்ப்புக் கூறுகள்' என்ற மேல்பூச்சுக்கு உள்ளேயுள்ளவற்றுள் சில.

இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் அனாச்சாரங்களுக்குக் கட்டுரையாளர், "தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகள்" என்றும் "சூபிகள், சமயஞானிகளின் உறவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள்" என்றெல்லாம் விளக்கம் சொல்லி உயிரூட்ட முயல்கிறார்.

ஹஜ்ஜில் நிறைவேற்றப் படும் கடமைச் சொயற்பாடுகளுக்கு இம்மடலின் இறுதியில் இஸ்லாத்தின் அடிப்படைகளான வஹ்ஹாபின் வார்த்தைகளையும் வஹ்ஹாபிகளின் தலைவருடைய வழிமுறையின் சான்றுகளையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

என்னுடைய தெளிவான ஒரேயொரு கேள்வி என்னவெனில் 'தர்ஹாவுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு?' இறைமறை மற்றும் நபிவழிமுறையின் சான்றுகளை ஹெச். ஜி. ரஸூல் சொல்ல வேண்டும்.

மேலும், இறைவாக்கில் (அல்லது வஹ்ஹாபுடைய அறவுரையில்) அவருடைய பார்வையில் 'விசித்திரங்களாகத் தென்படுகின்ற' நிகழ்வுகளான: (அ) மூஸா நபியின் கைத்தடி பாம்பாக மாறியது [007:117] (ஆ) கடல் பிளந்து வழிவிட்டது [026:063] (இ) நெருப்புக் குண்டம் இபுராஹீம் நபிக்கு குளிர் பொய்கையாய் மாறியது [021:069] (ஈ) அப்ரஹாவின் யானைப் படைகளை (வஹ்ஹாப் அனுப்பிய) பறவைகள் பின்வாங்கச் செய்தது [105:001-005] ஆகியவற்றுக்கு 'அறிவுநிலைப்பட்ட விவாதம்' வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; இறைவாக்கின் உருவாக்கம் (அல்லது வஹ்ஹாப் அனுப்பிய வஹீ) குறித்தும் 'வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையும் மானுடவியல் அணுகுமுறைகளும்' அவசரமாகத் தேவைப் படுவதாகக் கூறி, தம் மீள்பார்வை இலக்கு (அதாவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது) வஹ்ஹாபின் வார்த்தைகளான இறைவேதம்தான் என்று தெளிவாக்குகிறார்.

அவருடைய கட்டுரையை, "வஹ்ஹாபிஸம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது" என்று முடித்திருந்தார். அவர் சொல்ல வரும் செய்தி என்னவெனில், "(அ),(ஆ),(இ),(ஈ) ஆகிய நான்கிலும் 'விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளை' உண்மை என நம்ப வைத்து, வஹ்ஹாப் துரோகம் செய்து விட்டான்" என்பதே!

புத்தக வடிவில் வரவேண்டிய கருத்து! ஏற்கனவே மயிலாஞ்சியில் அசைத்த ஆப்பின் மூலம் வால் மட்டும்தான் நசுங்கியது ...
ஃஃஃ
சான்றுகள்:
(1)"நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் சின்னங்களைச் சார்ந்தவைதாம். எனவே (கஃபா என்னும்) இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் அவ்விரண்டையும் சுற்றி வருவதில் தவறேதுமில்லை ... "அல்-குர் ஆன் 002:158.

வரலாற்றுக் குறிப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்வரை ஸஃபாவில் "அஸாஃப்" மர்வாவில் "நாயிலா" ஆகிய சிலைகளை இணைவைப்பாளர்கள் வழிபட்டு வந்தனர். மக்கத்து வெற்றியின்போது அனைத்துச் சிலைகளும் அழிக்கப்பட்டன. என்றாலும், அவ்விரு சிலைகளும் அறியாமைக் கால அரபியரின் வழிபாட்டு அடையாளங்களாய்த் திகழ்ந்தமையால் அவை இருந்த இடமான ஸஃபா-மர்வாப் பள்ளத்தாக்கின் பக்கம் போவதையும் மக்கத்து வெற்றியின்போது உம்ராவை நிறைவேற்ற வந்த (மதீனத்து) முஸ்லிம்கள் வெறுத்தனர். மட்டுமன்றி, அங்குச் சென்றால் குற்றமாகிவிடுமோ என்றும் அஞ்சினார்கள். அப்போதுதான் மேற்காணும் இறைவசனம் இறக்கியருளப் பெற்றது -தப்ஸீர் இபுனு கஃதீர்.

(2)"கல் வீசப்படும் இடங்கள் ஒற்றைப் படையா(ன மூன்றா)கும்; வீசப்பட வேண்டிய கற்களும் ஒற்றைப் படையா(ன ஏழா)கும்..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2622.

பலியிடும் (துல்ஹஜ் பத்தாம்) நாளின் முற்றிய காலைப் பொழுதில் தங்கள் ஒட்டகத்தில் அமர்ந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வில் ஏழு பொடிக் கற்களை வீசி விட்டு, "நீங்களனைவரும் உங்களுடைய ஹஜ்ஜுக் கடமையின் செயல்களைச் சரியாகச் செய்ய (என்னிடமிருந்து இப்போதே) கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனனில், இந்த ஹஜ்ஜுக்குப் பின்னர் நான் (மீண்டும்) ஹஜ்ஜுச் செய்வேனா என்று எனக்குத் தெரியாது" என்றார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2618-2620.

(3) "...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்" - அல்குர்ஆன் 022:037.

... (ஹஜ் மாதப் பத்தாம் நாளில்) கல் வீசிய பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 63 ஒட்டகங்களைத் தங்கள் கைப்பட அறுத்தார்கள். எஞ்சியதை அலீ (ரளி) இடம் கொடுத்து அறுக்கச் சொன்னார்கள் ... -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2555.

"... அவரவர் வசதியைப் பொருத்து ஓர் ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ ஓர் ஆட்டையோ (பலியிட) ஓட்டிச் செல்லட்டும். ஒன்றுக்கும் வழியில்லாதவர் மூன்று நாட்கள் நோன்பிருக்கட்டும்..." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரளி) - நூல்: புகாரீ, பாகம் 6 பக்கம் 35.

ஹுதைபிய்யா (உடன்படிக்கை) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நாங்களும் (கால்நடைகளைப்) பலியிட்டோம். எழுவருக்கு ஓர் ஒட்டகம் (அல்லது) எழுவருக்கு ஒரு மாடு(என்ற கணக்கில் பலியிடப் பட்டது). -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2636.

வரலாற்றுக் குறிப்பு : ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டில் அருளப் பெற்ற 002:196 இறை வசனக் கட்டளையின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆயிரம் தோழர்களும் உம்ராச் செய்வதற்காக, பலியிட வேண்டிய தங்கள் கால்நடைகளோடு மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நோக்கி வந்தார்கள். குரைஷிகளின் பிரதிநிதியாக ஸுஹைலிப்னு அம்ரு, தமது குழுவினரோடு மக்காவிலிருந்து புறப்பட்டு வந்து ஹுதைபிய்யா என்ற இடத்தில் வழிமறித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் "மக்காவிற்குள் நுழையக் கூடாது" எனத் தடுத்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஸுஹைலுக்கும் இடையில் அங்கு ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். -தஃப்ஸீர் இபுனு கஃதீர், புகாரீ, முஸ்லிம் மற்றும் மிஷ்காத் ஹதீஸ் எண் 4042. (4)

"...ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ தலைச்சிரங்கு உள்ளவராக இருந்து, தலைமுடியை மழிக்க முடியாமலாகி விட்டால் நோன்பு நோற்றோ, தருமம் செய்தோ (இன்னொரு) பலி கொடுத்தோ அதற்கு ஈடு செய்ய வேண்டும் ..." அல்-குர் ஆன் 002:196.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தலைமுடியை (முழுக்க) மழித்துக் கொண்டார்கள். நபித்தோழர்களில் பெரும்பாலரும் அவ்வாறே (முழுக்க மழித்துக் கொண்டனர்). சிலர் முடியைக் கத்தரித்துக் கொண்டனர். -அறிவிப்பவர் : இபுனு உமர் (ரளி) - நூல்: புகாரீ, முஸ்லிம்/ மிஷ்காத் ஹதீஸ் எண் 2646.

·"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...": அஹ்மது 8449, அபூதாவூது 1746.
·"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
·"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
·"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
·"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.

திங்கள், பிப்ரவரி 20, 2006

சூபியின் முகமூடி 'மட்டும்'

சூபி முகம்மது என்பவர் திண்ணையில் என்னுடைய கடிதத்தை விமர்சித்து ஓர் எதிர் மடல் எழுதியிருக்கிறார். அவருடைய மடலில் குறிப்பிட்டுள்ளக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்த அவருக்கும் அச்சேற்றிய திண்ணைக்கும் முதற்கண் என் நன்றி!

"வகாபிய கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்த பல முக்கியமான விடயங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை" என்பதுதான் சூபியுடைய குற்றச்சாட்டு.

அக்குற்றச்சாட்டுக்கு பதில் தருமுன் ஒரு சிறு திருத்தம்: 'வகாபிய கருத்துக்கள்' என்று தனியாக இஸ்லாத்தில் ஏதுமில்லை. எனவே, 'வஹ்ஹாப் உடைய கருத்துக்கள்' என்று திருத்திப் படித்துக் கொள்க! அதற்கு உடன்பட மனமில்லையெனில், 'அல்-குர் ஆன்' என்று மாற்றிக் கொள்க!

இனி, 'பதில் சொல்லப்படாத முக்கிய விடயங்கள்' என்ற குற்றச்சாட்டுகளுக்கு வருவோம். (1அ) "பிரதேச தன்மைகளை அழித்து (1ஆ) அரேபிய வகைப்பட்ட ஒற்றைச் சமய அடையாளம் பேசும் அறிவு வாதம்" (2) "தனி நபர் மைய வாதம்" (3) "லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு" மீக்கூறிய மூன்றில் முதலாவதான (1அ,1ஆ) குற்றச்சாட்டுக்கு திண்ணையில் என் முதல் மடலிலேயே பதில் உள்ளது:
__________

"... தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வஹ்ஹாபிஸத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகை(?)ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்..." சொல்லலாமாம். இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல்?) அப்புறப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். இதில் 'அரபுவகை' என்று தனிவகை ஒன்றுமில்லை. கடமையாற்றுகிறவன் தமிழனாக இருப்பதில் கட்டுரையாளருக்கு என்ன நட்டம்?
__________

'தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள்' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டதைத்தான் 'பிரதேசத் தன்மைகள்' என்று சூபி மொழிபெயர்த்துவிட்டு, அதற்கு பதில் தரவில்லை என்கிறார். ‘நான் சொல்ல வந்தவை வேறு' என்று சூபி மறுத்தாரெனில் வேறு 'பிரதேசத் தன்மை'களுக்கும் பதிலுண்டு:

'உலக மக்களின் மார்க்கம்' (அல்- குர் ஆன் 030:030) என்று பொதுவுடமையோடு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இஸ்லாம், பிரதேசத் தன்மைகளான நாடு, மொழி, மரபு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் மீறிச் செம்மாந்து நிற்கும்போது 'பிரதேசம்' என்ற குறுகிய வட்டதுக்குள் இஸ்லாத்தை அடக்க முயல்வது பேதைமையேயன்றி வேறென்ன?

இரண்டாவதாக, 'தனி நபர் மைய வாதம்' அதாவது, ஒரேயொரு நபருடைய கருத்துகளை/கட்டளைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றவற்றைப் புறந் தள்ளுவது. இதுவும் தவறான குற்றச்சாட்டாகும். ஒரு முஸ்லிம், இருவருடைய கருத்துகளுக்கும் கட்டளைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்:
1. அல்லாஹ்
2. அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்).
அவன்/அவள்தான் உண்மையான முஸ்லிம் (அல்லது வஹ்ஹாபி).

மூன்றாவதும் முடிவானதுமான குற்றச்சாட்டு நகைப்புக்குரியது: "லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு" சூபியே குறிப்பிட்டபடி புரிந்து கொள்ளவே 'சிரமப் படுகின்ற' சொல்லாட்சி(?). அதற்கும் அவரே காரணம் சொல்கிறார் "தமிழுக்கு இவ்விடயங்கள் புதிது". இதுதான் சிக்கல்! வேறென்ன...? தமிழில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனும் 'சிரமப் படாமல்' புரிந்து கொள்வோம். அதை விடுத்து, கிரேக்கத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் அதன் கருப் பொருளை என் போன்றோர் கருத்திலெடுப்பது கடினமன்றோ !

எனினும், நான் 'சிரமப்பட்டு' மூன்றாவது குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டது யாதெனில், 'தன் பொருளாதாரத்தை முதலீடு செய்யும் ஒவ்வொரு வஹ்ஹாபியும் இலாபத்தை எதிர் பார்ப்பான்' சரியா? எனில், மூன்றாவது குற்றச்சாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்து, "எவ்வித உழைப்புமின்றி 'முதலாளி' ஆவதற்குத்தான் இந்தியா முழுதும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை; மக்களை ஏய்த்துப் பிழைத்து வாங்கிய கார்களுக்குப் பெட்ரோல் போடக் காசு சேர்வதில்லை" என்று நான் பொத்தாம் பொதுவாகப் பேசுவதாக சூபி குற்றம் சாட்டுகிறார். "கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை" என்பது என் 'பொத்தாம் பொது'க் கருத்தன்று. உண்மை நிலையை, இப்போது உள்ள நிலவரத்தைக் கண்களால் கண்டு எழுதியதே! வேண்டுமெனில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிரம்பிய உண்டியல் வளத்தையும் இப்போதுள்ள வறட்சி நிலையையும் ஒரு சர்வே எடுத்துப் பார்த்து சூபி தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன்னர், என்றைக்கோ இறந்துபோனவர்களின் சமாதிகளைக் காட்டி, மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் 'முதலாளி'கள் எந்தவகையான உழைப்புச் செய்கிறார்கள் என்று தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

மேலும், ஓர் உலவி புத்தகம் எழுதியும் தொலைக் காட்சி விளம்பரங்கள் வழியாகவும் சம்பாதித்துப் பணக்காரராகிவிட்டாராம். அந்த உலவி ஓர் ஊழல் பேர்வழியாம். அவையும் என் மடலுக்கு பதிலாம். (திண்ணையின் கட்டுப்பாடுகளுள் "Avoid emotional and abusive language" என்பதும் அடங்கும். சூபிக்கு விதிவிலக்கு போலும்). நான் யாரைச் சார்ந்தவன் என்பதை இங்குத் தெளிவாகப் பிரகடனப் படுத்தி விட்டேன். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கும் சூபியின் நிலையை எண்ணிப் பரிதாபப்படுவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

கந்தூரிகளின் வழியே நிரம்பிய தர்கா உண்டியல்கள் தற்போது ஏகத்துவ எழுச்சியால் வறண்டு போனது ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் ஏகத்துவ எழுச்சிக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களின் இயலாமையினால் இந்த அளவுக்குச் சிந்தனையிலும் வறட்சி ஏற்பட்டிருப்பதும் பரிதாபத்திற்குரியதே!

இறுதியாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு இஸ்லாம் (அல்லது வஹ்ஹாபிஸம்) வலியுறுத்துகிறது. சூபிக்காக பிரார்த்தனை செய்வது மட்டுமே இப்போது என்னாலானது.
ஃஃஃ

சனி, பிப்ரவரி 18, 2006

ஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -அருளடியான்

சகோதரர் அருளடியான் அவர்களின் திண்ணைக் கடிதம் அவருடைய அனுமதியோடு இங்கு மறுபதிவு செய்யப் படுகிறது. அவருக்கு நன்றி!

-வஹ்ஹாபி

ஃ ஃ ஃ

'முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது' என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச். ஜி. ரசூல் "தர்கா வழிபாட்டினர் முஸ்லிம்களில் ஏழைகளைப் பிரதிநிதித்துவப்படுத்து"வதாக எழுதியுள்ளார். இது தவறான தகவல் மட்டுமல்ல; மிகவும் நகைச்சுவையான செய்தியும் கூட.

முஹமது நபி(ஸல்) அவர்கள் தானும் தன் குடும்பத்தினரும் இஸ்லாமிய அரசு வசூலித்த ஜகாத் நிதியில் இருந்து எதுவும் எடுக்கக் கூடாது என தடை செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய தர்கா நிர்வாகிகள், தர்காவில் வசூலாகும் தொகை தர்கா நிர்வாகிகளின் குடும்பத்தை தவிர யாருக்கும் கிடையாது என விதிமுறை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் ஏழை முஸ்லிம்களுக்கு என்ன பயன்?

ஓரிறைக் கொள்கையில் உறுதியாய் உள்ள இலட்சக் கணக்கான ஏழை முஸ்லிம்கள் உள்ளனர். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜாக் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினருமே. வளைகுடா நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களாய் உள்ளவர்களும் ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினருமே. செல்வந்த குடும்பத்தினர் மிகச்சிலர் மட்டுமே.

தர்கா வழிபாட்டுக்கு இலட்சக்கான ரூபாய் கொட்டித் தருபவர்களில் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினரும் இதைவிட சற்று அதிகமாக தர்காவழிபாட்டில் உள்ளனர் என்பது உண்மைதான். அந்த பகுதிகளில் கல்வியறிவு வளரும் போது, அந்த குடும்பங்களில் இளைய தலைமுறை தர்கா வழிபாட்டில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறது.

ஹெச். ஜி. ரசூல் மக்காவில் நடைபெறும் ஹஜ் சடங்குகளையும், தமிழ் நாட்டின் தர்கா வழிபாடுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். ஹஜ்ஜில் நிறைவேற்றப்படும் சடங்குகள் குர்ஆன், நபிகளாரின் வழிமுறையான ஹதீஸ் ஆகிய மூல நூல்களின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்படுபவை. தர்கா வழிபாடு அவ்வாறு அல்ல. இறைவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை, இறந்த ஒரு மனிதருக்கும் இருப்பதாக நம்புவதும் அவரிடம் நம் தேவைகளை கேட்பதும் இஸ்லாத்தில் இல்லாத புதுமைச் செயல் மட்டுமல்ல; இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவமாகும்.

ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்பது தமிழ் நாட்டின் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரான பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கருத்தாகும். அவர் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இக்கொள்கையை ஏற்றுள்ளனர். இதனை பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் மக்களும் ஏற்கவில்லை. ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு பல தவறான தகவல்களை எழுதி தன் தர்கா வழிபாட்டுக் கொள்கைக்கு ஆதரவு தேடியுள்ளார்.

எனக்குத் தெரிந்தவரை, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களே தர்கா வழிபாட்டாளர்களை விட ஏழைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.

- அருளடியான் aruladiyan@yahoo.co.in

வியாழன், பிப்ரவரி 16, 2006

ஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -பாபுஜி

திண்ணையில் ஹெச். ஜி. ரஸூல் எழுதிய கட்டுரைக்குத் திண்ணையிலேயே மேலும் மூவரால் எதிர்வினையாற்றப் பட்டிருக்கிறது. அவற்றை இங்கு மீள்பதிப்புச் செய்வது பொருத்தமாயிருக்கும். மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்த வகையில், முதலாவதாக அனுமதியளித்தச் சகோதரர் பாபுஜி அவர்களின் திண்ணைக் கடிதம் நன்றியோடு இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது. 

 -வஹ்ஹாபி 
ஃஃஃ

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன்.

இரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய முஸ்லிம்களைப் பொருத்த வரை, பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களாகத் தொடர்பவர்களில் சமீப காலங்களாகத்தான் சரியான இஸ்லாமை ஆய்ந்தறிந்து பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

இந்தியாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியப் போது ஆர்வத்தின் காரணமாக சில முஸ்லிம்களால் செய்துக்கொள்ளப்பட்ட 'சமாளிப்புகள்'(Adjustments) இஸ்லாமிய சமூகம் மீதான பண்பாட்டுத் தாக்குதலுக்கு வழி வகுத்தன.

இதன் விளைவாகத்தான் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமல்லாத பழக்க வழக்கங்கள் (எ.கா., தாலி, தர்கா வழிபாடு, அத்வைத கோட்பாடு போன்றவை) செல்லுபடியாயின. எனினும் அவை இஸ்லாமின் அடிப்படையான ஓரிறைக் கோட்பாட்டையும் சாதிகளற்ற, அடிமைத்தனமற்ற சமுதாயத்தையும் பெரிதாக பாதிக்க இயலவில்லை.

சமூக மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிய சக்திகள் கிறிஸ்தவத்திலும் சாதியை புகுத்தி இந்திய கிறிஸ்தவத்தை 'இந்து மயம்' ஆக்கியதைப் போல இஸ்லாமிய சமூகத்தில் சாதியை புகுத்துவதில் வெற்றி காண முடியாத நிலையில், 'கலாச்சார வண்ணத்தை' மாற்றிக்கொண்ட முஸ்லிம்களை (தற்காலிகமாக) விட்டு வைப்போம், சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களை முதலில் கவனிப்போம் என்று 'நேசமாக'ப் புறப்பட்டனர். 'அடிப்படை' விளங்காத தீவிரவாதிகளுடன் 'சரியான முஸ்லிம்களையும் இஸ்லாமையும் சம்பந்தப்படுத்தி 'தான் சார்ந்த' நலன்களுக்காக வரிந்து கட்டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் மு.பி.வாஜ்பேயியின் 'இரண்டு வகை இஸ்லாம்' பற்றிய பேச்சையும், 'இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ வேண்டுமானால் ராமனையும் கிருஷ்ணனையும் ஏற்றுக்கொண்டு வாழட்டும்' என்ற பரிவாரக் கூச்சல்களையும் நாம் பார்க்க வேண்டும். 

வஹாபிஸம் என்ற பெயரால் ஹெச்.ஜி.ரசூல்களால் பழிக்கப்படும் சரியான இஸ்லாம்தான் இன்றைக்கும் வரதட்சணை, புரோகிதம், வட்டி, சிசுக்கொலை, (பெண்)கருக்கலைப்பு போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி வருகிறது. (கிரெக்க புராண அத்வைத பூச்சுக்களிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்த ஒரு அறிஞரின் பெயராலாயே வஹாபிசம் என்ற வார்த்தை வழங்கி வருகிறது.)

இன்றைக்கு 'பண்பாட்டு இஸ்லாம்' என்பதை பேசுகிற ஹெச். ஜி. ரசூல்களின் கூப்பாடு சமூக மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் 'புரோகிதத்தை'யும் பூர்ஷ்வாதனத்தையும் வளர்க்க உதவும்.

- பாபுஜி

புதன், பிப்ரவரி 01, 2006

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2

வகாபிசமும் நவீன முதலாளியமும் என்ற தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை-2
இஸ்லாமிய அடித்தள (அறிவுகூட கற்பிக்கப் படாத பாமர) மக்கள் முன்வைக்கும் பாரம்பரிய (பிறமத) மரபுகள், (மூட)நம்பிக்கைகள், (போலிச்)சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் (அடிப்படையான இறை)விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை(?) வரை சென்று தர்க்க ரீதியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் (பாற்படாத) விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை(ப்) பயன்படுத்த(த்) தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் (இஸ்லாத்திற்குத் தொடர்பில்லாத) சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், (இஸ்லாத்தின் அடிப்படையான இறைமறை மற்றும் நபிவழிப்) பெருமரபு மீது பரிபூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது.
(")விஞ்ஞானங்களின் தாயாக(த்) திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அறிவு சார்ந்த மார்க்கம் வேறில்லை" என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே "அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும்" என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.
அடைப்புக் குறிகள் தவிர்த்த மேற்காணும் கருத்துகள், ஹெச். ஜி. ரஸூலுக்குச் சொந்தமானவை. அடைப்புப் குறிக்குள் உள்ளவை என்னுடையவை.

'அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளும் ஒரு நம்பிக்கையாளன் அறிவாளியாக இருக்க முடியாது அல்லது தன்னை அறிவாளி என்று சொல்லிக் கொள்பவன், மேற்காணும் நம்பிக்கை கொள்ளக் கூடாது' என்பதுதான் கட்டுரையாளர் கூற முனையும் கருத்தாக இருக்க முடியும்.

கட்டுரையாளரின் கற்பனையில் உதித்த போலிஅறிவாளியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

- தொடரும்