சீறாப்புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீறாப்புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 22, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19

பூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து, "வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப் போடுங்கள்" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்களாம்:
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).
திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.

அல்லாஹ்வின் கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்?

சுவனத்திலுள்ள 'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும் ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி, திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).
அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா?

வானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவா? அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும் ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச் சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).

உமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, மார்ச் 21, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 18

இஃதிவ்வாறிருக்க, மறுபுறம் பாத்திமா நாயகி அவர்கள் தம் தோழிப் பெண்களால் சோடிக்கப் பட்டு மணமுரசு ஒலிக்க, மணப் பந்தலுக்குக் கொண்டு வரப் பட்டார்களாம்.

"மணக்கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார்" (பாடல் 179) எனப் போகிறது புராணக்கதை.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். உமறுப் புலவர் 'ஒலி'யுல்லாஹ் அவர்களுடைய சீறாப் புராணத்தில் மலிந்து கிடக்கும் இத்தகைய அசிங்கங்களை எடுத்தெழுதும்போது வெட்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை; வேதனையை விலக்க முடியவில்லை. சீறாப் புராணத்தை ஒரு வேதநூல் போல இன்றுவரைப் போற்றிக் கொண்டாடும் முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து நேர்வழி பெற வேண்டும் என்ற கடமையுணர்வு, வெட்கத்தையும் வேதனையையும் மிகைத்து நிற்பதால் அசிங்கங்களையும் எடுத்தெழுத வேண்டியது கட்டாயமாகி விட்டது.

குர்ஆன் ஹதீஸின் உண்மையான தாத்பரியங்கள் சென்று எட்டாத, மிகவும் பின் தங்கிய முஸ்லிம் ஜமாஅத்தாருடைய சில ஊர்களில் மரணத் தறுவாயில் கிடப்பவருடைய தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னமும் இந்த சீறாப் புராணம் பாடப் படுகின்றது.

'நேர்வழி நின்று நெறியாட்சி' புரிந்த சிறப்புடையவர்களுள் ஒருவராகிய அலீ(ரலி) அவர்களுக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் நடந்த திருமணத்தை இவ்வாறாகவெல்லாம் கொச்சையாகவும் பச்சையாகவும் வருணித்துப் போகிறார் உமறுப் புலவர். இவருடைய கனவில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஹாளிர்' ஆகி இவரை ஆசீர்வதித்தார்களாம். இந்தக் கர்ண பரம்பரைக் கதையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இந்த 'ஒலி'யுல்லாஹ்வுக்கு உரூஸ் எடுத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

படிப்பவர்களுடைய உள்ளங்களை மாசுபடுத்தக் கூடிய அழுக்குக் கவிதைகளை வைத்துக் கொண்டு இதுதான் நமது ஆத்மக்கறை அகற்றும் சவுக்காரம் எனத் தம்பட்டமடித்துக் கொள்கிறவர்களும் உள்ளனர்.

சல்மான் ரஷ்டியின் நூலை எந்த அளவுக்கு வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு வெறுக்கப் படத்தக்கக் கவிதைகள் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழனியிலும் முற்றிய களைகளாய்ப் பெரிதும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பொருத்தவரை நம்மில் பலர் இலக்கியக் குருடுகளாகவே தட்டழிந்து திரிகின்றனர். ஆக, இத்தகைய விரசமான, மார்க்க முரணான 'சாத்தானின் வரிகள்' சுட்டிக் கட்டப் படுவதன் நோக்கத்தையும் தேவையும் நாம் மறந்து விடலாகாது.

மணமுரசு எங்கணும் முழங்க, அழைத்து வரப் பட்ட பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் இருத்தினராம். "வந்த பொன்மயிலை ... அலியிடத்து இருத்தினாரால்" என அமைகிறது பாடல் (180). மணமகன் அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் மணமகள் பாத்திமா (ரலி) அவர்களை மணப் பந்தலுக்குக் கொண்டு வந்து உட்கார வைக்கிறார் உமருப் புலவர். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் பாடும் இஸ்லாமியத் திருமணத்தின் இலட்சணம் இதுதான் போலும்.

இரு சாட்சிகளின் முன்னிலையில் மணமகளின் தந்தை மணமகனுக்குச் செய்து வைக்கும் வாழ்க்கை ஒப்பந்தம்தான் 'நிக்காஹ்' எனும் இஸ்லாமியத் திருமணமாகும். 220 பாடல்களில் அலீ-பாத்திமா (ரலி) திருமண நிகழ்ச்சிகளை நீட்டி, முழக்கிப் பாடும் உமறுப் புலவருக்கு 'இஸ்லாமியத் திருமணம்' குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே, பிறமதச் சடங்குகளைப் பின்பற்றி மணமேடையில் மாப்பிள்ளையுடன் பெண்ணையும் சேர்த்து வைத்துப் பார்ப்பதில் புலவர் ஆனந்தம் கொள்கிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையான சுன்னத்தின்படி நிக்காஹ் நடைபெறுகிறதோ இல்லையோ; அதுபற்றிக் கவலையில்லை. ஆனால் ஃபாத்திஹா ஓதப் பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் பலர். அதே போக்கை உமறுவிடமும் காண முடிகிறது. பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அடுத்தாற்போல் இருக்கச் செய்து, உற்றார் உறவினர் எல்லோருமாகச் சூழ்ந்திருந்து வாழ்த்தி ஃபாத்திஹா ஓதினார்கள் என்பதை மறவாமல் பாடிச் செல்கிறார் புலவர்:
மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவரெவருஞ் சூழ்ந்து பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திஹா வோதுங் காலை (பாடல் 181).
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, டிசம்பர் 09, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17

செக்கச் சிவந்த ஆடை அணிந்து, செஞ்சந்தனத்தை மேனியெங்கும் பூசியவர்களாக, செம்மணியிலான ஆபரணங்களையும் சூடிக் கொண்டு, திரண்டு நின்ற பெண்கள் அலீ (ரலி) அவர்களின் அழகைக் கண்ணாரப் பருகினர். அந்தப் பெண்களது உள்ளத்தின் உள்ளே உள்ளக் காமத்தீயின் சிவப்புதான் இவ்வாறு வெளித் தோற்றத்திலும் சிவப்பு மயமாகப் பிரதிபலிக்கிறதோ என வியந்து பாடுகிறார் புலவர் (பாடல் 139).

"அலீயின் அழகைப் பார்ப்பதற்கு இமைகள் இல்லாத ஆயிரம் கண்கள் வேண்டும்" (பாடல் 142).

"பாத்திமா ஒருத்தி மட்டுமோ இந்தப் பேரழகையெல்லாம் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறாள்" (பாடல் 146).

என்றெல்லாம் அங்குத் திரண்டிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்களாம். அவ்வாறு பேசிக் கொண்ட பெண்களின் நிலை பற்றிப் புலவரப்பா பாடுவதைக் கேளுங்கள்:
சிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். (பாடல் 141).
அலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப் பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச் சொட்ட வருணித்துச் செல்கிறார்.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஒவ்வொரு பருவப் பெண்ணின் அங்கங்களையும் வருணிக்கும்போது புலவர் தீட்டுகின்ற சொல்லோவியங்களைப் படித்துப் பார்த்தால், "இதுவும் ஓர் இஸ்லாமிய இலக்கியமா?" என அவை முகம் சுழிக்கச் செய்கின்றன.

ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் கற்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபித்தோழியராம் ஸஹாபியப் பெண்டிரைப் பற்றி இப்படி ஆபாசமாக, அவர்களின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும் விதமாகப் பாடத் துணிந்து விட்டது அவர்மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறன்றோ?

"இளமுலைப் பேதையும்" (பாடல் 148); "குரும்பையின் முலையுடைய பொதும்பையும்" (பாடல் 151); "செம்பொன் குவிமுலை மங்கையும்" (பாடல் 153); "வார் அறுத்து எழுந்து வீங்கும் வனமுலை மடந்தையும்" (பாடல் 155); "கோங்கிள முலை அரிவையும்" (பாடல் 156); அலீ (ரலி) அவர்களைச் சுற்றி நின்று மொய்த்தார்களாம்.

"குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து" நின்ற பெண்களுள் ஒருத்தியாகிய பேரிளம்பெண் என்பவள், "அலீயினைச் சேரா மாதர் அலி என இருத்தல் நன்று" என உரத்துக் கூறி நின்றாளாம் (பாடல் 159).

இவ்வாறாகத் திருவுலா வந்த அலீ (ரலி) அவர்கள் கடைசியாகத் திருமணப் பந்தலை அடைந்தார்கள். பந்தல் வாசலில், "... வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்பக் குரவை எம்மருங்கும் சூழ்ந்து" கடலொலி போல் முழங்கிற்றாம் (பாடல் 166).

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, அக்டோபர் 07, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 16

இன்னொரு சாராருடைய கேள்வி என்னவென்றால், "இலக்கியம் என்றாகும்போது இத்தகைய வருணனைகளும் கற்பனைகளும் இடம் பெறத்தானே செய்யும்; இவை இல்லாமல் எப்படி ஓர் இலக்கியம் உருப்பெறவியலும்?" என்பதாகும்.

இங்குத்தான் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் ஏனைய இலக்கியங்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாட்டை விளக்கி உணர்த்த வேண்டும். உள்ளதை உள்ளவாறு பாடுவதுதான் இஸ்லாமிய இலக்கியமாக இருக்க முடியும். "அங்ஙனம் எவ்வாறு பாடவியலும்?" என்ற கேள்வி எழலாம். சதாவதானி செய்குத் தம்பிப் பாவலருடைய 'நபிகள் நாயகம் மான்மிய மஞ்சரி' என்னும் இலக்கியத்தைச் சான்றாக வைத்து இக்கேள்விக்குப் பதிலுரைத்து விடலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸுஹைர் போன்றோர் இஸ்லாமிய வரம்புக்குள்ளேயே நின்று கவிதைகள் இயற்றிய பெருங் கவிஞர்களாவர். எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அக்கவிஞர்களை அங்கீகரித்திருக்கின்றார்கள்; ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமியத் திருமண முறைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய வரம்பையும் மரபையும் மீறிக் கொண்டு, தமிழ் மரபு என்னும் தடத்தில் கால் பதித்து நின்று உமறுப் புலவர், அலி-பாத்திமா திருமண வைபவத்தைச் சீறாப்புராணத்தில் எப்படியெல்லாம் வருணிக்கிறார் என்பதை ஈண்டுக் காண்போம்.

அலி (ரலி) அவர்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஊர்வலம் செல்வதற்காகக் குதிரைமேல் ஏறினார்கள். அப்போது, 'மடவார் குரவைகள் இயம்ப'லாயினர் (பாத்திமா திருமணப் படலம், பாடல் 121). பேரிகை, திமிலை, குடப்பறை, தடாரி, திண்டிமம், முரசு, பாரிசைப் பதலை, பவணம், வாரணி, மொந்தை, பூரிகை, நவுரி, காகளம், சின்னம், கொம்பு, கைத்தாளம் முதலிய இசைக் கருவிகளெல்லாம் பேரிடியை மிஞ்சக் கூடிய அளவுக்கு முழங்கின. (பாடல் 122).

உமறுப் புலவர் 'ஒலி'யுல்லா அக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை இசைக் கருவிகள் இருந்தனவோ அத்தனையையும் பட்டியல் போட்டுப் பாடி விட்டார். இந்த 'ஒலி'யுல்லா பாடிய அளவுக்கு எக்கச் சக்கமான இசைக் கருவிகளுக்கு ஏற்பாடு செய்ய இயலா விட்டாலும் ஒன்றிரண்டையாவது வைத்துக் கலியாண இசை முழங்குவதுதான் 'ஒலி'யுல்லாவுக்குச் செய்கின்ற மரியாதையாகும் என்று எண்ணிச் செயல் படுகின்றவர்கள் இன்றும் பலர் உள்ளனர்.

அலி (ரலி) அவர்கள் ஊர்கோலம் வருகிற அழகைக் காண்பதற்காக அந்த ஊரில் உள்ள பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து மொய்த்தார்களாம். பாதத்தில் அணிந்திருந்தச் சிலம்புகளும் இடையில் அணிந்திருந்த மேகலைகளும் ஆரவாரம் எழுப்ப, மதம் பிடித்த ஆண் யானையின் கொம்புகளைப் போலப் பெண்களின் மார்பணிகள் மின்ன, புதுத் தேனைச் சொரியக் கூடிய பூமாலைகள் நெகிழ, கடலில் நிலவுக் கூட்டம் பூத்தது போலப் பெண்கள் கூடி மொய்த்தனராம்.
பதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக் கதக்களிக் கரியின் கோட்டுக் கதிர் முலைப் பணிகள் மின்னப் புதுக்கடி நறவஞ் சிந்தும் பூங்குழன் மாலை சோர மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு மொய்த்தார். (பாடல் 132).
அலி (ரலி) அவர்களோடு கூடப்பெற மாட்டோமா என்று ஏங்கிய காரணத்தால் அந்தப் பெண்களின் மேனியில் காமத் தாபத்தால் ஏற்படக் கூடிய 'பசலை' என்னும் கொடிய நோய் படர்ந்ததாம். இத்தகைய எண்ணம் கொண்ட பெண்கள் கூட்டம் வீதியில் சூழ்ந்து கொண்டதாம் (பாடல் 134).

ஒரேயொரு மரத்தில் ஏராளமான கொடிகள் படர்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோல அலி (ரலி) என்னும் ஒரேயோர் ஆடவரைச் சுற்றிப் பல பெண்களும் பார்வையில் படர்ந்தனராம்:
குவிபெருந் தானை நார்ப்பண் கூண்டவை யலியென்றோதும் பவனியின் றருவை நோக்கிப் பல கொடி படர்ந்த தொத்த (பாடல் 132). 
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், ஆகஸ்ட் 02, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15

கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுடைய வரலாற்று நாவல்களை நம்மில் பலர் படித்திருக்கிறோம். வரலாற்று மாந்தர்களோடு தம் சொந்தக் கற்பனையையும் வருணனைகளையும் கலந்து, படிப்பவர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய அளவுக்கு இந்த நாவலாசிரியர்கள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்வர். அதிலும் சாண்டில்யன் போன்றோருடைய படைப்புகளில் விரசமான வருணனைகள் விரிவாக இடம் பெறுவதுண்டு.

அதே சாண்டில்யன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வரலாற்று நாயகரின் புண்ணிய நாயகியரைப் பற்றி அவருடைய 'மாமூலான பாணியில்' விரசமாக வருணிப்பாரானால் முஸ்லிம்கள் அதனைச் சகித்துக் கொள்வார்களா? 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா? ஒருபோதும் மாட்டார்களன்றோ! காரணம்,
"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத் திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த் திகழ்கின்றனர்..."[033:006].
என்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதை மனதில் ஏந்திக் கொண்டு இந்த 'இலக்கிய'ப் பிரச்சினையை அணுகுவோம். இன்றைக்கு நாவல் என்னும் இலக்கிய வடிவம் பெற்றிருக்கின்ற செல்வாக்கினை பதினேழாம் நூற்றாண்டில் செய்யுள் வடிவம் பெற்றிருந்தது. உமறுப் புலவர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் 'வரலாற்று நாவல்'தான் எழுதியிருப்பார். ஆனால், அவருடைய காலம் 17ஆம் நூற்றாண்டாக இருந்தமையால் அக்காலத்தில் வழக்கிலிருந்த 'செய்யுள் வடிவத்தில்' அவர் இலக்கியச் சேவை(!) செய்ய வேண்டியதாகி விட்டது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றை, செய்யுளில் காப்பியமாகப் பாடலானார்.

அவ்வாறு பாடிய உமறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றுக்குப் புறம்பான பல கட்டுக்கதைகளைத் தம் காப்பியம் நெடுகக் கட்டவிழ்த்து விடுகின்றார். அதோடு மட்டுமின்றி, அன்னை கதீஜா முதலியவர்களைப் பற்றிப் புலவர் பாடுமிடங்கள், நம் பார்வையைக் கூசச் செய்கின்றன. கதீஜா நாயகியைப் பற்றிய உமறுவின் வருணனையை ஓரளவு பார்த்தோம்.

அந்நியப் பெண்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கின்றது. ஆனால், உமறுப் புலவரின் எழுத்தாணியோ நமது அன்னையர் திலகங்களைப் பற்றியே திரைக்கப்பால் சென்று தரங் கெட்டு வருணிக்கிறது.

இந்நிலையில், இத்தரங் கெட்ட வருணனைகளைத் தன்னகத்தே கொண்ட சீறாப்புராணத்தைப் பாடியவர் 'உமறு' என்னும் பெயருடைய ஒரு முஸ்லிம் புலவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய வரம்பு மீறிய வருணனைகளை 'இலக்கியங்கள்' என்று நியாயப் படுத்தி நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14

பாவையர் உரைத்த வண்ணம் பச்சைக் கடுதாசின் கண் மேவரக் கனகமையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையின் நினைவு மாறாச் செவ்விய ஜிபுறயீல் பால் ஈவது ஈது என்னவோதி இறையவன் அளித்திட்டானால் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 55)
வரத்தினில் உயர்ந்த பேறே! மகுசறு வெளியில் என்றன் கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை ஒருத்தரும் தீண்டாவண்ணம் உயிரென ஓம்பி ஓர்பால் இருத்தும் என்று இறசூலுல்லா இளந்தளிர் கையில் ஈந்தார் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 62).
கொஞ்சமும் ஆதாரமற்ற புனைசுருட்டான சமாச்சாரங்கள் இவை. அல்லாஹ், ஜிப்ரீல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பாத்திமா நாயகி ஆகியோரைப் பற்றி உமறுப் புலவர் இவ்வாறு புனைவதற்கு எங்கிருந்துதான் ஆதாரங்களைப் பெற்றாரோ? துணிச்சலைப் பெற்றாரோ?

விண்ணுலக நிக்காஹ்வையும் இந்தப் பச்சைக் கடுதாசிச் சங்கதிகளையும் தொடர்ந்து, பாத்திமா நாயகிக்கு மண்ணுலகின் மதினமா நகரில் நிகழ்ந்த நடைமுறைத் திருமணத்தைப் பாடும் போது உமறுப் புலவரின் கற்பனை, இன்னமும் 'பச்சை'யாகப் பரந்து செல்கிறது. அந்தப் பகுதிகளைக் காண்பதற்கு முன் இத்தகைய இஸ்லாமிய(?) இலக்கியங்களைப் பற்றி வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13

இதையடுத்து, "முழுமதி போன்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பெண்கள் திருஷ்டி கழித்தார்கள்" (பாடல் 109) எனவும் "பெண்களின் குரவை ஒலியோடு பல்வேறு வாத்திய இசைகள் முழங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கதீஜா நாயகியும் மணவறை புகுந்தார்கள்" (பாடல் 115) எனவும் பாடுகின்றார் புலவர்.

இஸ்லாம் என்னும் ஆற்றில் ஒருகாலையும் கொச்சை வருணனைகள் என்னும் சேற்றில் ஒருகாலையும் பதித்துக் கொண்டு உமறுப் புலவர் தன்னுடைய புராணம் நெடுகிலும் இவ்வாறு தடுமாறி நடந்துச் செல்கிறார்.

சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபதாவது படலம் 'பாத்திமா திருமணப் படலம்' என்பதாகும். இதில் பாத்திமா நாயகி படைக்கப் பட்டமை பற்றி உமறுப் புலவர் பின்வருமாறு பாடுகிறார்:
சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கும் இம்பர்ப் பூண்முலை யவர்க்கும் ஏக நாயகி யென்னப் பூவில் காணுதற் கரியோன் செய்தானென்னிலிக் கவின் - கொண்டோங்கு மாணிழை மடந்தை குற்ற பெற்றியார் வகுக்க வல்லார்? (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 8)
வானவர்களில் ஆண்களோடு தேவலோகத்துப் பெண்களும் உள்ளனர். அவர்கள் கண் இமைக்காத இயல்பினர் என்பது பிறமதப் புராணங்கள் கூறும் செய்தியாகும். "கண் இமைக்காத தேவலோகத்துப் பெண்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் பெண்ணினத்தார் அனைவர்க்கும் ஏக நாயகியாக பாத்திமா நாயகியைப் படைத்தான் பூவில் காணுதற்கு அரியோன்" என்கிறார் உமறுப் புலவர்.

புகைறா கண்ட படலத்தின் இரண்டாவது பாடலில் இடம் பெற்றுள்ள 'வசனத்து இலகு செல்வி' என்னும் தொடர் பிறமதப் பெண் கடவுளாகிய இலட்சுமியைக் குறித்து நின்றதை முன்னர்க் கண்டோம். 'வசனத்து இலகு செல்வி' என்பது எவ்வாறு இலட்சுமியைக் குறிப்பிடுகிறதோ அதுபோலப் 'பூவில் காணுதற்கு அரியோன்' என்னும் தொடர் பிறமதக் கடவுளான பிரம்மதேவனைக் குறித்து வருவதாகும். சைவ, வைணவ இலக்கியங்களில் இந்துக்களின் படைப்புக் கடவுளாகிய பிரம்மதேவனைச் சுட்டுவதற்காக இதே சொல்லாட்சி பல இடங்களில் கையாளப் பட்டுள்ளது. ஆகவே, படைத்தல் தொழிலைச் செய்பவனாகிய பிரம்மதேவன்தான் பாத்திமா நாயகியைப் படைத்தான் எனவும் தேவலோகத்துப் பெண்களை விடவும் அவர்கள் சிறப்புற்றுத் திகழ்ந்தார்கள் எனவும் பாடி அடுக்கடுக்காக முரண் படுகிறார் உமறுப் புலவர்.

வானவர்கள் ஆணுமல்லர் பெண்ணுமல்லர் என இஸ்லாம் கூறுகிறது. ஆனால், உமறுப் புலவரோ தேவலோகத்தில் உள்ள "இமையா நாட்டத் தெரிவையர்" எனப் பாடுகின்றார். இவ்வாறாகவெல்லாம் பிறசமய மரபுகள் என்னும் கோடாரியைக் கொண்டு இஸ்லாமின் ஏகத்துவ வேரில் உமறுப் புலவர் ஓங்கிப் போடுகின்ற இடங்களுள் இதுவும் ஒன்றாகும்.

அல்லாஹ், ஜிப்ரீல், நபிகள் நாயகம் ஆகியோரைக் தொடர்பு படுத்தி, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான பல புளுகுரைகளையும் உமறுப் புலவர் பாடிச் செல்கின்றார். அடுத்து வருவது அதில் ஒரு பகுதி:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன், வானவர்கோன் ஜிப்ரீல் தோன்றிக் கூறுகிறாராம்: "முஹம்மதே! உமக்கு ஸலாம் உண்டாகட்டும். பாத்திமாவுக்காக இறைவன் வானுகையெல்லாம் அலங்கரிக்குமாறு மலக்குகளுக்குக் கூறினான். அவர்கள் அவ்வாறு அலங்கரித்து முடித்ததும் பாத்திமா-அலீ ஆகியோருக்கு இறைவனே மஹரை நிர்ணயித்து, என்னையும் இஸ்ராயீல், மீக்காயில் ஆகியோரையும் சாட்சியாக வைத்து நிக்காஹ்வை முடித்து வைத்ததாகக் கூறினான்" என்றார்.

"ஜிப்ரீல் இவ்வாறு கூறக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்" எனப் பாடுகிறார் உமறு. இதனை, "புகழ் தர மஹரும் நாட்டி" பாத்திமாவை அலீக்கு அல்லாஹ் நிக்காஹ் செய்து விட்டதாக 32ஆம் பாடலில் பாடுகிறார். ஆனால், தொடர்ந்து வரும் 49ஆம் பாடலிலோ, "நும் புதல்வி உள்ளத்து உறைகின்ற மஹரைக் கேட்டு வருக" என்று ஜிப்ரீலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி இறைவன் கேட்பதாகப் பாடுகின்றார். அடுத்தடுத்த பாடல்களுக்குள்ளேயே ஒன்று கிடக்க ஒன்றைப் பாடி வைக்கிறார் புலவர். இப்படியாக வந்த இறை கட்டளைக்கு இணங்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகள் பாத்திமாவை அணுகி மஹர் குறித்து வினவினார்களாம் (பாடல்கள் 48-50).

அதற்கு, "மறுமை நாளில் பாவிகளான பெண்கள் அனைவருக்காகவும் நான் 'ஷஃபாஅத்' என்னும் பரிந்துரையைக் கோர வேண்டும். இதையே எனக்கு மஹராக இறைவன் ஏற்றருள வேண்டும்" என பாத்திமா நாயகி பதிலுரைத்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்களாம்:
இறுதியில் பவத்தின் மாதர் என்ஷஃபா அத் ஈடேற்றம் பெற மன்றாட்டு அருள வேண்டிப் பேரருள் கபூல்செய்தேனேல் உறுதி நன் மஹர்பெற் றேன் என்று உரைத்தார்(பாடல் 51).
அதை இறைவனும் ஏற்றுக் கொண்டு, பாத்திமாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக ஒரு 'பச்சைக் கடுதாசி'யில் எழுதி ஜிப்ரீல் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்தனுப்பினானாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவுக்கு அதைப் 'படித்து'க் காட்டிவிட்டு, "மஹ்ஷர் நாளில் நீ இக்கடித்தை என் கைகளில் தரவேண்டுமாதலால் இதனை யாரும் தொடாதவாறு பத்திரமாக வைப்பாயாக" எனக் கூறி பாத்திமாவிடம் கொடுத்தார்களாம். அந்தப் 'பச்சைக் கடுதாசி'ப் பாடலை அடுத்து காண்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா நாயகி அவர்களுக்கும் நடந்த திருமணத்தை உமறுப் புலவர் பாடும்போதுகூட, மாற்றாருடைய மரபு முறைகளெல்லாம் அங்கு இடம்பெற்றதாகக் கற்பனை செய்கிறார். பிறசமயப் பண்பாட்டின் தாக்கம் சீறாவில் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்போம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கதீஜா நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்தில் உள்ள பெரியோர்களும் கலந்து பேசினார்களாம். அப்போது அவர்கள் 'பொருத்தம்', 'நல்ல நாளின் முகூர்த்தம்' முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.
பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப பொருவிலாத குருத்தவள மணிமாலைக் குவலிதுபாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு
என, பொருத்தமற்றுப் பாடுகிறார் உமறுப் புலவர் (மணம் பொருத்துப் படலம், பாடல் 56).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா நாயகியை மணமுடிப்பதற்காக கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, "சீதனப் பொருட்களும் வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக" எனக் கேட்டாராம். அதைக் கேட்ட குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் வைத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம். இதனை உமறுப் புலவர் 'மணம் பொருத்துப் படலத்தின் 61-62ஆம் பாடல்களில் வாசகர்களுக்கு அவிழ்த்துப் பரிமாறுகிறார்.

மணம் பொருத்துப் படலத்தை அடுத்து இடம்பெறும் பகுதி, 'மணம்புரி படலம்' என்பதாம். இந்தப் படலத்தில் கதீஜா நாயகி மணக்கோலம் பூண்ட தன்மையை வருணிப்பதாகக் கருதிக் கொண்டு, உமறுப் புலவர் என்னவெல்லாமோ பாடிச் செல்கிறார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட புராணக் கதையளப்புகளில் பிறமதப் புலவர்கள் மனம்போன போக்கில் அக்காப்பிய நாயகிகளை வருணித்துச் செல்வர். அது அவர்களுடைய காப்பிய மரபு. அத்தகைய தரம்தாழ்ந்த மரபுக்குத் தாவிச் சென்று, வரலாற்று நாயகரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியும் முஃமின்களின் அன்னையுமான கதீஜா நாயகியைப் பற்றிக் கொச்சையாக வருணிக்கிறார் உமறுப் புலவர்:
பூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார் பாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார் நாக மென்முலைக் குவட்டினன் மணிவடந் தரிப்பார் மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார் உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார் குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார் திவளு நல்லொளி நுதலிடை திலதங்க ளணிவார் ...
(மணம்புரி படலம், பாடல்கள் 24-25).

இவ்வாறு அன்னை கதீஜா நாயகியை அத்துமீறி வருணிப்பதோடு நாயகியின் நெற்றிக்குப் பொட்டும் இடுகிறார் புலவர்.

இப்படலத்தின் இன்னொரு புறம் மணமகனாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டப் படுகிறது. தண்ணுமை, முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் நடுவே பவனி வந்தார்களாம் (மணம்புரி படலம், பாடல் 42). இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீதிஉலா வரும்போது அந்த ஊரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக் கூடினார்களாம் (பாடல் 51). பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப் புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். "முஹம்மதின் வடிவை நோக்கித் தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி ..." என இதனைப் பாடுகிறார் புலவர் (பாடல் 60).

இந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின் அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம் பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம் இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):
கோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால் தீதற வாரியுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொன் பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்கொல் காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்
மென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின் பவனிக்காக அமைக்கப் பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).

இங்ஙனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊர்வலமாக வந்து மணப் பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும் நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அந்தவேளையில் குரவை ஒலி ஓங்கி முழங்க மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதாகப் புலவர் எழுதிச் செல்கிறார் (பாடல் 103).

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், மார்ச் 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தமனை நோக்கி அல்லாஹ்வின் வீடாகிய கஃபா ஸஜ்தா செய்ததாகப் பாடி ஒரு வகையாக முரண்பட்ட உமறுப் புலவர், இன்னொரு இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்தமனையைப் பற்றிப் பாடும்போது வேறொரு வகையாக முரண்படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பெரிய தந்தையான அபூதாலிபின் வீட்டில் வளருகின்ற காரணத்தால் அபூதாலிபுடைய வீட்டில் செல்வமெல்லாம் செழித்து வளர்கிறதாம்.

அதுமட்டுமல்ல!

தாமரை மலரில் வாழும் சீதாதேவியாகிய செல்வி லட்சுமி என்பவள் அபூதாலிபுடைய வீட்டு முற்றத்தில் நாள்தோறும் வந்து வீற்றிருந்தாளாம். அப்படி லட்சுமி கொலுவிருந்தமையால் அபூதாலிபிடம் வீரமும் கல்வியும் வெற்றியும் குடிகொண்டன எனக் கற்பனை செய்கிறார் புலவர்.

அல்லாஹ்வுடைய வீட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டுக்கு சிரம் சாய்க்கச் செய்ததன் மூலம் இஸ்லாமிய வட்டத்துக்குள்ளே முரண்பட்டு நின்ற உமறுப் புலவர், இந்துமதப் பெண் கடவுளைப் பெருமானார் வளர்ந்து வந்த வீட்டு முற்றத்தில் கொண்டுபோய் குடியமர்த்தி வைத்ததன் மூலம் பிற சமயத்தாரின் வழிபடு தெய்வங்களையெல்லாம் தாமும் வழிமொழிகின்றார். முன்னதை அகமுரண் என்றால் பின்னதைப் புறமுரண் எனலாம். இத்தகைய இருவகை முரண்களும் சீறாப்புராணத்தில் மலிந்து கிடக்கின்றன.

'புகைறா கண்ட படலம்' என்ற படலத்தின் முதல் பாடலில் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிபுடைய வீட்டில் வளர்ந்ததனால் அந்த வீட்டில் ஒன்றுக்குப் பத்தாகச் செல்வம் கொழித்தது" எனப் பாடிய உமறுப் புலவர், அதைத் தொடர்ந்த இரண்டாம் பாடலில் பாடுகிறார்:
சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற் குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய் நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத் திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்.
(சலத ரத்தைநேர்=கருமேகத்தை ஒத்த) (வனசத் திலகு செல்வி=தாமரை மலரில் இலங்கும் லட்சுமி).

இன்னொரு படலமாகிய 'தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படல'ப் பகுதியில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தசைக்கட்டியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கிக் காட்டியதாகப் பாடுகின்ற வேளையிலும் லட்சுமியை மறந்துவிட வில்லை உமறு. "தாமரை மலரிலிருந்து தோன்றி நிற்கின்ற லட்சுமியைப் போன்று தசைக் கட்டியில் உதித்த அந்தப் பெண் எழிலோடு திகழ்ந்தாள்" என வர்ணிக்கிறார் புலவர் "விரிநறைக் கமல மென்மலரில் செய்யவள் இருப்பதென எழில் சிறந்து ..." (பாடல் 25) எனப் போகிறது பாடல்.

புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள் 'லட்சுமி கடாட்ச'த்தின் மீது எந்த அளவுக்கு மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை உமறுவின் புராணம் பிரதிபலித்துக் காட்டுகிறது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, மார்ச் 11, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10

கஃபத்துல்லாஹ் என்பது, கஅபா என்ற, 'புனிதமும் புகழும் பெற்றுச் சிறந்துள்ளது' என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். புனித ஆலயமான கஃபத்துல்லாஹ்வை, 'கியாமன் லின்னாஸ்' - மனிதர்களுக்கு ஆதார ஸ்தலமாக, அபயம் அளிக்கக் கூடியதாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் [005:097]. ஆனால், கஃபாவோ தனக்கே அபயம் தேடக் கூடிய இடமாக ஆமினாவின் வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீட்டை நோக்கி ஸுஜூது செய்ததாகப் பாடுகிறார் உமறுப் புலவர்.

கஃபா என்றாலே புனிதத்தைத் தன்னகத்தே கொண்டது எனப் பொருளிருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா புனிதத்தையே அடைந்தது என்பதாக முரண்படக் கவிதை எழுதியுள்ளார் புலவர்.

"அவர்கள் (நன்றி செலுத்துவதற்காக) இந்த இல்லத்தின் இறைவனையே வணங்கட்டும்" [106:003] என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் இல்லத்தை நோக்கி இறைவனின் இல்லமான கஃபத்துல்லாஹ் ஸுஜூது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.

இவ்வாறு அல்லாஹ்வின் இல்லம், அவனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பவருடைய தாயின் வீட்டுக்கு ஸுஜூது செய்து புனிதமடைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப் புலவர்.
பெருமானாரின் புகழை நிமிர்த்திப் பாடுவதாக நினைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் இல்லமான கஃபத்துல்லாஹ்வின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிக்கின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்வான்? அவனுடைய அடியாரும் தூதருமாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை எப்படி அங்கீகரிப்பார்கள்?
"அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்?" [003:094], [061:007]
என அடுக்கிக் கூறுவதோடு,
"அப்பொய்யர்கள் (மறுமையில்) வெற்றியடைய மாட்டார்கள்" [010:069], [016:116]
என்றும் உறுதி செய்கிறது அருமறை குர்ஆன்.
"என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், தன் இருப்பிடத்தை நரகில் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது)
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் எச்சரிக்கையும் அவன் தூதருடைய எச்சரிக்கையும் இவ்வாறு இருக்க, இந்தச் சீறாப்புராணத்துக் காரருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அவருடைய கற்பனை வண்டவாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக்கொடி காட்டினார்கள் எனக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்?

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மார்ச் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9

இஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப் பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ... ஏராளம்.

தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால், ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம்பெற்றிருக்காது.

ஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக் கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை, 'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது செய்து எழுந்தனவாம்.

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.

சீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும் உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன.

உலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.

புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 106)

பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ஸுஜூது செய்த கஃபத்துல்லாஹ், "இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்" என்று வாய் திறந்து ஓதியதாம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

புதன், பிப்ரவரி 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8

தமிழிலோ அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு குர்ஆனின் மீது ஓர் எட்டாத, அளவுக்கு மீறிய உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன் ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? பிற மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

அந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர் முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள் இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.

படிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.

உமறுப் புலவருக்கு வருவோம்! உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின் அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, "உமறே! நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக!" என்று கூறினார்களாம். அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே! வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது.

சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, "ஷாஹுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும் சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்" எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் "திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய் ..." எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம்.

அதன் பின்னர் நெய்னா லெப்பையைச் சந்தித்து உமறு விபரம் கூற, "நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால் நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்" எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப் படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், பிப்ரவரி 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7

இஸ்லாமுக்கு முரணான கவிதைகள் துர்நாற்றம் பிடித்த சீழைவிட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட 'இஸ்லாமிய இலக்கியம்' என்னும் பெயரால் இஸ்லாமுக்கு முரணானக் கருத்துகளைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.

அல்குர்ஆன், நபிமொழிகள் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாமுக்கு முரணான கருத்துகளைக் கொண்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்' எப்படித்தான் தலையெடுத்தன?

பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வம் இதற்குக் காரணமாகும்.

இன்றுங்கூட புதிதாக இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்கும் சகோதர-சகோதரிகள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு-சம்பிரதாயங்களிலிருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபட இயலாத நிலையில் இருப்பதை நாம் காணுகிறோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு-ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்?

அக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில் இருத்தியே அவர்களுடைய நிலையை அணுக வேண்டியுள்ளது. அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப் போயிருந்த நிலையில், அவற்றை விட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் இருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிலிருந்து இன்னொரு புதிய பண்பாட்டுக்கு மாறுகின்ற கட்டத்தில் (Transitional period) அவர்களுடைய நிலை இருந்தது எனலாம்.

பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதா-காலட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேரோட்டம், ஆனை-குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல், கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிறசமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதனைக் கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் 'அறிஞர்கள்' புதிய முஸ்லிம்களின் தொடரும் பழமைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி? என யோசித்தனர். அதன் விளைவாக, பிறசமயச் சடங்குகளுக்கு ஒப்பாக இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசினர்.

மூர்த்தி உற்சவங்கள் தர்ஹா உரூஸ்-கந்தூரிகள் ஆயின; தேரோட்டம் என்பது சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை-குதிரைடன் உண்டியல் ஊர்வலங்கள் அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கபுறு(மண்ணறை)களுக்குப் பூசும் சந்தன அபிஷேகமாக அட்ஜஸ்ட் செய்யப் பட்டது.

இந்தப் 'போலச் செய்தல்' (To imitate) என்னும் மனித இயல்பு, இஸ்லாமியத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத் துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.

எனவே, புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாசத் தாகத்திற்கு அந்தச் சமகாலப் புலவர்களும் கற்பனை நீர் வார்த்து, பிறமத இலக்கியங்களைப் போல 'இஸ்லாமிய இலக்கியங்களை' இயற்றத் தொடங்கினர்.

இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கு ஆதாரங்களாக அமைந்த குர்ஆன்-ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய கடமையைப் பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, குர்ஆனின் மொழியாகிய அரபுமொழியின் மீது அக்காலத் தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு விதமான தெய்வீக பக்தி ஊட்டப் பட்டது.

தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபுமொழியில் அமைந்த குர் ஆன் ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. வேற்றுமொழியில் குர்-ஆனையோ ஹதீஸ்களையோ மொழிபெயர்ப்பது, அவற்றின் புனிதத்தைக் களங்கப் படுத்துவதாகும் என்ற மடத்தனமான நம்பிக்கை நிலவிய காலம் அது. இவ்வாறாக, இஸ்லாமின் அடிப்படைகளான குர்-ஆனையும் ஹதீஸையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு, அவற்றைத் தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப் பட்டது.

தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துகளை எடுத்தெழுதுவதைத் தவறாகக் கருதிய அக்கால கட்டத்தில், அரபுமொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமீது வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.

மக்களுடைய இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொண்ட சிலர், (தங்களுடைய படைப்புகளுக்குப் புனிதப் பூச்சு வேண்டி) தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அரபு எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடலாயினர். 'அவன் வந்தான்' என்பதை avan vanthaan என (தற்கால யுனிகோடில்) எழுதுவதுபோல் அரபு எழுத்து வடிவத்தில் தமிழை எழுதியமையால் 'அரபுத் தமிழ்' என ஒரு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், இந்த அரபுத்தமிழ் வடிவத்தில்கூட குர்ஆன்-ஹதீஸ்களுடைய பொருளை எழுதி யாரும் வெளியிடவில்லை.

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.