சனி, ஜூலை 31, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 27

னி, "போவோம் குணங்குடிக் கெல்லோரும்".

அதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை சில உள்ளன. இஸ்லாமிய இலக்கியப் புலவர்கள் என்று சொன்னதுமே, "உமருப் புலவர் காப்பியம் பாடியவர்; குணங்குடி மஸ்தான் மெய்ஞானக் கவிஞர் எனப் பலராலும் பாராட்டப் படுபவர்" என்பதுதான் நம்மில் பெரும்பாலோரின் கருத்தில் வரும்.

உமருப் புலவராயினும் குணங்குடி மஸ்தானாயினும் இன்னபிற தமிழ் முஸ்லிம் புலவர்களாயினும் அவர்கள் அனைவரும் இயற்றிய அனைத்துமே இஸ்லாத்துக்கு முரணான குப்பைகள் என்றெல்லாம் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு ஒதுக்கித் தள்ளிவிடுவது நமது நோக்கமன்று.

அவர்களின் பாடல் தொகுப்புகளில் பல நல்ல கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு வேட்டு வைக்கின்ற பல சமூக விரோதச் சங்கதிகளும் அவற்றுள் அடங்கிக் கிடக்கின்றன.

இவர்களுடைய பாடல்களின் 'சிறப்பம்சங்கள்' பற்றி நாம் பல மேடைகளில் பேசியும் பல வால்யூம்களில் எழுதியும் வந்திருக்கிறோம். நாளடைவில் இக்கவிஞர்களை "நாதாக்கள்; வலீயுல்லாக்கள்" எனப் போற்றிப் புகழ்ந்தது போதாதென்று இவர்களுக்கு உரூஸ்களும் நம்மில் சிலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் புலவர்கள், "வலீயுல்லாக்கள்-இறைநேசர்கள்" என்ற அடைமொழிகளோடு இன்றைய தமிழ் உலகத்துக்கு இனங் காட்டப் பட்டுள்ளனர். இதன் விளைவாக, இந்த வலீயுல்லாப் புலவர்களின் ஒட்டுமொத்த எல்லாப் பாடல்களுக்கும் ஒரு 'விலாயத்' எனும் இறைநேச முத்திரை குத்தப்பட்டு அவையெல்லாம் பக்திப் பரவசத்தோடு இன்று பலரால் அணுகப் படுகின்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டன.

இங்கு நாம் இந்தப் புலவர்களின் இறைநேசம் பற்றிப் பேசவரவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. இவர்களுடைய பாடல்களாக நமக்குக் கிடைப்பவற்றை இஸ்லாமிய உரைகல்லில் உரசிப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, குர்ஆன்-ஹதீஸ்களின் கோட்பாடுகளோடு நேரடியாக முரண்படுகின்ற எத்தனையோ கருத்துகள் இப்புலவர்களால் பாடப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது. "இப்புலவர்களின் எல்லாப் படைப்புகளும் கொள்ளத் தக்கவை அல்ல; அவற்றுள் தள்ளத் தக்கவையும் இடம்பெற்றுள்ளன" என்பதை எடுத்துச் சொல்வதே நம் நோக்கமாகும்.

"நம்முடைய இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களிலேயே இஸ்லாத்துக்கு முரணான போக்குகளா? அது எப்படி இருக்க முடியும்? இவற்றைப் பாடிய நாதாக்கள் - ஸூஃபிகள் - வலியுல்லாக்கள் சாமானியமானவர்களா என்ன? கால் குழியிலேயே கஅபத்துல்லாவை தரிசித்தவர்களல்லவா அவர்கள்?" போன்ற தனிமனித வழிபாட்டுத் திரைகளால் தங்கள் அறிவுப் பார்வையை மறைத்துக் கொண்டவர்கள், நமது விளக்கங்களைத் தீண்டத் தகாதவையாகக் கருதுகின்றனர்.

இன்னும் சிலர், "அப்படியே நம்முடைய இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளில் இஸ்லாத்துக்கு முரணான கருத்துகள் இடம்பெற்றிருந்தாலுங்கூட அவற்றை நாமே ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?" எனக் கேட்கின்றனர். "நம்முடைய புலவர்களின் பாடல்களில் உள்ள முரண்பாடுகளைத் தோண்டித் துருவி எடுத்தெழுதும் கோடாறிக் காம்புகளாக நாமே மாறிவிடுவதா?" எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமா நஸ்ரினோ, அருண்ஷோரியோ, ராம் ஸ்வரூப்போ இஸ்லாத்துக்கு முரணான எதையேனும் இஸ்லாம் என்பதாக எழுதினால் ஒட்டுமொத்தமாகக் கொதித்தெழுகின்றனர் நம்மவர். ஆனால், நம்மூர்ப் புலவர்கள் இஸ்லாத்தின்மீது வீசியுள்ள புழுதிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்; அல்லது கண்டுகொள்ள மறுக்கின்றனர். இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நோகடிக்கின்ற - சாகடிக்கின்ற இத்தகையக் கவிதைகள் பல 'இஸ்லாமிய இலக்கியம்' எனும் போர்வையில் உலா வரும்போது, அவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து விலகிக் கொள்வதில் நாம் விழிப்பாயிருத்தல் வேண்டும்.

இந்த வகையில் குணங்குடி மஸ்தானின் நிலை என்ன? என்பதை இனிக் காண்போம். அவருடைய பாடல்களில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.