வெள்ளி, செப்டம்பர் 26, 2008

சாகாத கருப்பு யானை

முறம் போலென்றார் - இல்லை

முற்றிய வாழைத் தாரென்றார்

உரல் போலென்றார் - இல்லை, பாதி

உதிர்ந்த வாருகோலென்றார்


அண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால்

வல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும்

"அல்லாஹு அக்பர்"அழைப்போசையின்

அடிநாதமாய் உயிர் வாழும் நான்,


சாட்சியாளர்களான ஆட்சியாளர்கள்

"சய்யிதுனா"என விளித்த

பிலால் என்ற கருப்பான முழுயானை.


ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=308092510&format=html

திங்கள், செப்டம்பர் 08, 2008

தினமலரைப் புறக்கணிப்போம்! (மீள் பதிவு)

மூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்! இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர் பலவகைகளிலும் உறுதுணை புரிந்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி மக்களிடம் நிலவும் மனிதநேயத்தைச் சீர்குலைத்து வருகின்றனர். 

1995க்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தப் பார்ப்பன மதவெறி செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்திலும் குறிப்பாக தமிழகத்திலும் படுவேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளன. இதற்கான அடையாளமாக கோயம்புத்தூர் படுகொலைகள், தென்காசி குண்டுவெடிப்புகளைக் கூறலாம். இதற்காகச் சங்கபரிவாரத்தின் அறிவிக்கப்படாத தமிழக ஏஜண்டாக ஊடகத்துறையில் தினமலர் எனும் பார்ப்பன தினசரி ஈடுபட்டு வருகிறது.

எங்காவது ஒரு மூலையில் காவல்துறையால் அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டு ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு விட்டால், ஊசி, நூல், வயர் துண்டு, சுத்தியல், ஆணி போன்ற 'அதி பயங்கர ஆயுதங்களின்' பட்டியலை முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து "இஸ்லாமிய தீவிரவாதி" என்ற பதத்தைத் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தப் பெருமை தினமலருக்கு உண்டு. பிள்ளையார் ஊர்வலம் நடக்கும் வேளைகளில் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செய்யப்படும் கலவரங்களைக்கூட, காவல்துறையும் பதிவு செய்யாத "அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து கல் வீசப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டது" என திரித்து முஸ்லிம் சமுதாயத்தை மக்கள் மத்தியில் மோசமான சமுதாயமாகச் சித்தரிப்பதற்குத் தினமலரால் மட்டுமே இயலும்.

இவ்வாறு பல ஆண்டுகாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வந்தமையைச் சகித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் நெஞ்சில் சுடுகனலை வைப்பது போன்று, தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதரைக் கேலி செய்யும் விதமாக டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்டு உலகில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த கேலிச்சித்திரத்தைச் சம்பந்தமே இல்லாமல் தனது கணினிமலரில் வெளியிட்டுள்ளது. இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்று ஒதுக்கிவிட இயலாது.

உலக முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமதான் மாதத் துவக்கத்தில் இந்த மதவெறி தாக்கதலை திட்டமிட்டே தினமலர் அரங்கேற்றியுள்ளது. எதையும் தாங்கும் முஸ்லிம்கள் தங்களின் இறைத்தூதர் இகழப்படுவதை மட்டும் ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்தே இந்நாழிதழ் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டது. எதிர்ப்பு வந்தபொழுது தவறுதலாக நடந்தது எனக் கூறி தன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முயல்கின்றது. அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவோ இனி இதுபோன்ற செயல் தன்பக்கமிருந்து நடைபெறாது என்பதற்கு உத்தரவாதமோ அது கொடுக்கவில்லை. தவறுகூட ஒரு பிரசுரத்தில் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பிரசுரங்களில் அது பிரசுரிக்கப்பட்டது தவறுதலாக நடந்தச் சம்பவமாகப்படவில்லை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சுமூகமாக வாழும் சமூகத்தில் கலகம் விளைவித்து அதன் மூலம் இலாபம் பெற வேண்டும் என்ற சங்கபரிவாத்தின் செயல்திட்டத்தை வலுவான ஊடகம் மூலம் பரப்ப முனையும் தினமலர் பத்திரிக்கையை மேலும் தமிழகத்தில் வளரவிடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். 

செய்த தவறுக்கு நிர்வாகம் காரணமல்ல என்று கூறி வருத்தம் தெரிவித்து நழுவுவது தினமலரின் நிர்வாகச் சீர்கேட்டை பறைசாற்றுகிறது. தினமலரின் மதவெறி செயல்பாட்டை ஒழிக்க, மனித நேயத்தை வளர்க்க சமூக ஆர்வலர்களே முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவை அளியுங்கள். ஒன்றிணைந்து எதிர்ப்போம், மதவெறியை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்!