புதன், ஜூலை 26, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 4

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து மக்கத்துக்காரர்கள் பல தெய்வக் கொள்கையிலும் சிலை வழிபாட்டிலும் பற்றுறுதி கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்ற ஏகத்துவக் கொள்கையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதைக் கேட்ட, பல தெய்வக் கொள்கையில் ஊறிப் போயிருந்த மக்கத்தவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறிப்பிட்டு, "பித்துப் பிடித்த ஒரு கவிஞருக்காக நாங்கள் எங்களுடைய கடவுளர்களை விட்டு விடுவோமோ?" எனப் பிராலாபித்தனர் [அல்குர்ஆன் 037:036]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துப் பைத்தியக்காரக் கவிஞர் என்றும் அவர்கள் எடுத்தோதிய அல்குர்ஆனைக் கவிதை என்றும் ஒதுக்கித் தள்ளக்கூடிய அளவுக்கு அந்த மக்கள் தங்களுடைய பல தெய்வக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், நம்முடைய முஸ்லிம் சகோதரர்களில் பலர் - "ஏகஇறைக் கொள்கையில் திடமான ஈமான் கொண்டிருக்கிறோம்" எனக் கூறிக் கொள்பவர்கள் - பைத்தியக்காரக் கவிஞர்களைப் போன்று பாடியுள்ளவர்களை எல்லாம் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் (கனவில்) அடியெடுத்துக் கொடுக்கப்பட்டவர்கள்" என்றும் அக்கவிஞர்களின் பொய்யான கற்பனைகளையெல்லாம் வேதம் போன்றும் காதலித்துத் திரிகின்றனர். மக்கத்துக்காரர்கள் வேதத்தைக் கவிதை எனத் தூற்றினர்; இவர்களோ கவிதையை வேதம் எனப் போற்றுகின்றனர். இருசாராரையும் ஒப்பு நோக்கினால், மக்கத்துக் குரைஷியருக்கு அவர்தம் பல தெய்வக் கொள்கையிலிருந்த பிடிமானம்கூட நம்மவருக்குத் தங்களுடைய ஏகஇறைக் கொள்கையில் இல்லாமற் போனது பரிதாபத்திற்குரியதன்றோ! இவர்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வேதப் புத்தகங்கள் என்பதுபோல் அவற்றின் மீது குன்றாத பக்தி கொண்டிருக்கின்றனர். இந்த இலக்கியங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தால் இந்த இலக்கியப் பித்தர்கள் கொதித்தெழுகின்றனர். அல்லாஹ்வின் வேதமும் அந்த வேதத்துக்கு விளக்கமாக அமைந்த, உறுதி செய்யப்பட்ட அவனுடைய தூதரின் வாழ்வியலும்தாம் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை. அவையல்லா எவையும் முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்துவிட இயலாது. இதனையும் அல்லாஹ்வே தன் வேதத்தில் ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றான்:
"இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" [004:082].
மனிதர்களுள் மிகச் சிறந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த அறிஞர்களால் கண்ணும் கருத்துமாக வரையப்பட்ட அரசியல் சாசனச் சட்டங்களேகூட முரண்பாடுகளின் மொத்த உருவமாக அலைக்கழிக்கப் படுவதையும் பலமுறை அவை திருத்தப்படுவதையும் நாம் கண்டு வருகிறோம். அறிவுப் பூர்வமாக அணுகாமல் வெறும் உணர்வுப் பூர்வமாகவும் கற்பனை ரீதியாகவும் செயல்பட்டு, கவிதை புனைகின்ற நிலையிலேயே பெரும்பான்மையான கவிஞர்கள் திகழ்ந்துள்ளார்கள். எனவே, இந்த உணர்ச்சிப் படையல்களில் முரண்பாடே இடம் பெற்றிருக்க இயலாது என்று எங்ஙனம் கூறவியலும்? "Poet's appeal is sensuous, not intellectual. His function is not to prove, but to make to feel" (கவிஞனுடைய அணுகுமுறை உணர்வுப் பூர்வமானது; அறிவுப் பூர்வமானதன்று. அவனது பணி மெய்ப்பித்துக் காட்டுவதன்று; உணரச் செய்வது மட்டுமே) என நெய்ல்ஸன் என்னும் அறிஞர் தமது Essentials of Poetry என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். ஏனைய கவிஞர்களுக்கு இந்த அணுகுமுறை பொருந்தி வரலாம். ஆனால், இஸ்லாமியக் கவிஞனுக்கு இந்த விதியை நாம் செலுத்தவியலாது. ஏனெனில், குர்ஆன்- ஹதீஸ் கூறிடும் உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுதலைப் புறக்கணித்துவிட்டு வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி மனம்போன போக்கில் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 22, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3

இறைவன் சொல்லாத ஒன்றை, அவன் மீது இட்டுக்கட்டிக் கற்பனை செய்து பொய்யுரைப்பது மாபெரும் பாவச் செயலாகும். இவ்வாறு எவர் பொய்யுரைக்கத் துணிகிறாரோ அவருக்கு இறைவன் மாபெரும் தண்டனையை வழங்கியே தீருவான் என்று இறைமறை வன்மையாக எச்சரித்துக் கூறுகின்றது. இறைவனுடைய படைப்புகளிலெல்லாம் அவனுக்கு மிகவும் நேசத்துக்குரிய படைப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழுகின்றார்கள். இறைவன் மீது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி மிகைப்படுத்திக் கூறுதலாகிய வெறுக்கத்தக்கச் செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிஞ்சிற்றும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அப்படியிருந்தும்
இஃது ஒரு கவிஞனின் சொல்லன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே நம்புகின்றீர்கள். (இஃது) ஒரு குறிகாரரின் சொல்லுமன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே அறிவுரை பெறுகின்றீர்கள். (இஃது) அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டது. ஒரு சொல்லையேனும் (நபியாகிய) அவர் எம் மீது கற்பிதமாய்க் கூறினால், அவரை வலக்கரப்பிடியாகப் பிடித்து அவருடைய உயிர்நாடியைத் துண்டித்து விடுவோம் [069:041-046].
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். இந்த எச்சரிக்கை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக நம் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையேயாகும். இந்த அளவுக்குக் கடுமையான கண்டனத்தையும் தண்டனையையும் இறைவன் பிரகடனப்படுத்திய பின்னரும் இதையெல்லாம் பொய்யாக்கிப் புறந்தள்ளிவிட்டு, தம் மனம்போன போக்கில் செயல்படுபவர்களையும் நாம் காணுகின்றோம். இதையும், "உங்களில் இதைப் பொய்யெனக் கொள்பவர் உள்ளனர் என்பதைத் திண்ணமாக நாமறிவோம்" என்பதாக [069:049] இறைவன் முன்னறிவிப்புச் செய்துள்ளான். இவை மட்டுமின்றி, அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பதனை மிக வன்மையாகக் கண்டிக்கக்கூடிய ஏராளமான இறைவசனங்கள் இறைமறையில் மேலும் இடம் பெற்றுள்ளன: [003:024, 003:094, 004:048, 004:050, 005:101, 006:093, 006:138, 006:140, 006:144, 007:037, 007:152, 010:017, 010:039, 010:060, 011:018, 011:035, 016:056, 016:087, 016:105, 016:116, 017:073, 018:015, 020:061, 029:013, 029:068, 034:008, 046:008, 061:007]. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பவர்கள் அநியாயக்காரர்கள், வழிகேடர்கள், சாபத்திற்குரியவர்கள், நரகவாசிகள், பாவிகள் என்றெல்லாம் இவ்வசனங்களில் கடுமையாகக் கண்டித்துள்ளான் இறைவன். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 15, 2006

500 டாலர் நகைச்சுவை

மவ்லிதுகளின் ஒரேயொரு சொல்லெடுத்தும் பொருள் சொல்லாத 'மவ்லிதுகளின் அர்த்தப் பரப்புகள்' திண்ணையில் சென்ற வாரம் பரத்தப் பட்டிருந்தன. அதில், "அரபு மொழியிலமைந்த மவ்லிதுகளை நேரடி மொழிப்பெயர்ப்பை அளித்து அதற்கு மாசு கற்பிக்கும் உள்நோக்க வியாக்கியானம் செய்யும் அரசியல் வகாபிகளிடம் காணப்படுகிறது" என்ற அறிவார்ந்த? குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டதால் எதிர்வினை எழுத வேண்டியதாயிற்று. இல்லாததை மடியிலிருந்து எடுத்துப் போட்டால்தானே 'உள்நோக்க வியாக்கியானம்' என்று சீறிப் பாயலாம்? நேரடி மொழிபெயர்ப்பிலேயே மாசு படுகிறதென்றால் விளக்கம் சொல்லப் புகுந்தால் என்னவாகும்? மவ்லிது என்றால் தமிழில் 'பிறப்பு' என்ற பொருளையும் அதுவே மீலாது என்று வழங்கப் படுகிறது என்ற சிறு விளக்கத்தையுங்கூட அவ்வளவு பெரிய 'பரப்பில்' காண முடியவில்லை! எவராலும் பெற்றெடுக்கப் படாத, எவரையும் பெற்றெடுக்காத [112: 003] ஏக இறைவனுக்கும் மவ்லிது; எவருக்கும் பிறந்தநாள் கொண்டாடாத இறைத்தூதருக்கும் மவ்லிது. போதாதென்று, அரபு விழுமியங்களுக்கும் ஒரு மவ்லிது பாடுகிறார் கட்டுரையாளர். இவருடைய பாட்டுக்குக் குர்ஆனையும் ஹதீஸையும் தஃப்ஸீரையும் தாளம் போடச் சொல்லிக் கெஞ்சுவதுதான் இதில் உச்சகட்ட நகைச்சுவை:
"மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான திருகுர் ஆன்,ஹதீதுகள், குர்ஆன் விரிவுரைகள்,ஹதீது விரிவுரைகள் மற்றும் வரலாற்று நூல்களில் பதிவுகள் நிறைய இருக்கிறது"
முஜீப் ரஹ்மானின் மேற்காணும் நகைச்சுவைக்கு 500 டாலர் காத்திருக்கின்றது. பரிசு பெறுவதற்காக அவர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mawlid@muttaqun.com மவ்லிது ஆர்வமுள்ள வாசகர்களுக்குத் தமிழில் மவ்லிது இலவசமாகக் கிடைக்குமிடம்: http://www.angelfire.com/tv2/avmaulid/
ஃஃஃ

வெள்ளி, ஜூலை 07, 2006

நியாயமான கேள்விகள்

'கபாவில் சமாதியா?' என்ற தலைப்பில் 'சூபிமுகமது' என்பார் திண்ணையில் [சுட்டி-1] எனக்காகச் சில கேள்விகளை வைத்திருந்தார்: 1) தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது-சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா? பதில்: முடியும் [சுட்டிகள் 2 முதல் 8 வரை] 2) இஸ்லாமியர்களின் ஹஜ் வழிபாடு பிற சமயத்தவரின் பார்வையில் ஒருவகை சமாதி/கல் வணக்கமாகவே கருதப்படுகிறது. பதில்: அது பிற சமயத்தவரின் பார்வை. 3) பணக்காரர்கள் மக்காவின் கபாவுக்கு செல்கிறார்கள். அங்குதான் அல்லாவின் சமாதி இருக்கிறது. பதில்: இல்லை. அல்லாஹ்வுக்கு சமாதி இருப்பதாகச் சொல்லும் சூபிதான் சமாதியைப் படம் பிடித்துப் போட வேண்டும். 4) அரபு பழங்குடிகள் அல்லா என்னும் ஆண்கடவுளை சிலையாக வணங்கி வந்துள்ளார்கள் என்பது சமூக வரலாறு. பதில்: வளமான கற்பனையைச் 'சமூக வரலாறு' என்றெல்லாம் அறிவுடையோர் எவரும் கூறுவதில்லை. சூபி அவ்வாறு கூறிக் கொள்வதில் எனக்கு அட்டியில்லை. 5) கறுப்புக் கல்லை தொட்டு முத்தமிடுவது பிறருக்கு கல் வணக்கமாகவே படுகிறது. பதில்: பிறருக்குத்தானே? படட்டும். ஆனால் முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறு [சுட்டி-9] 6) கபாவின் உட்புறத்தில் என்ன இருக்கிறது வகாபி ஆதாரத்தோடு சொல்லமுடியுமா? பதில்: முடியும். இப்போது காற்று இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கஅபாவின் உட்புறத்தைத் தூய்மை செய்வதைத் தொலைக்காட்சியில் காட்டுவர். அப்போதுத் துப்புரவுத் தொழிலாளர்களையும் பார்க்கலாம். 7) மக்காவின் புனித எல்லைமுழுவதும் மகாமு இபுராகீம் என்றே அழைக்கப்படுகிறது. பதில்: இல்லை. 'ஹரம்' (புனிதம்) என்று அழைக்கப் படுகிறது. 8) கபாவிற்கு உள்ளே அஷ்ட கோண வடிவ மகாம் ஏ இபுராகீமின் பீடம் உள்ளது என்றொரு கருத்தும் உள்ளது. பதில்: யாரிடமுள்ளது? 9) ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக்கல்லை ஸ்ங்கே அஷ்வேத என்னும் பொருள்படும் வெண்மை அல்லாத கல் எனவும் இது சிவலிங்கத்திற்கு ஒப்பானது எனவும் கூட பொருள் கொள்ளப்படுகிறது. பதில்: யாரால் கொள்ளப் படுகிறது?
***
பதில்கள் முடிவுற்று, கேள்விகள் தொடர்கின்றன: திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா? நான்: என்ன சொல்றீங்க? நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே! நான்: எப்படிச் சொல்றீங்க? நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது. நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்? நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா ... திண்ணை பப்ளிஷ் செய்யுமா? நியாயமான கேள்விகள்!
ஃஃஃ
சுட்டிகள்: 1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606303&format=html 2. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal3.html 3. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal4.html 4. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal6.html 5. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal7.html 6. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal8.html 7. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal9.html 8. http://wahhabipage.blogspot.com/2006_02_01_wahhabipage_archive.html 9. http://www.islamworld.net/black_stone.htm

உடன்படிக்கையில் இரு மறுப்புகள்

முஸ்லிம்களின் வேதமான அல்குர்ஆன் அருளப் பட்டது "படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக!" என்ற முதல் கட்டளையோடு [096:001]. இறைமறையை, "படைத்த என் இறைவனின் பெயரால் ..." என்று எந்த முஸ்லிமும் ஓதத் தொடங்குவதில்லையே அது ஏன்? என்று ஹமீது ஜா.பர் சிந்திக்க வேண்டும். மேற்காணும் கட்டளையில் ஆளப் பட்டிருக்கும் 'இறைவன்' என்ற ஒரு சொல்லுக்குள் புதைந்திருக்கும் 'அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்)', 'நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்)', 'வணங்குதற்குரியவன்(அல்லாஹ்)' பெயரால் ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர், (வஹ்ஹாபிகளின் தலைவர்,) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்ததால் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்று தொடங்குகிறோம். சுட்டப் படுபவனை விடுத்து, சொல்லை மட்டும் எடுத்துப் பார்த்தால் 'அல்லாஹ்' (அல்-இலாஹ்) வணங்குதற்குரியவன் என்ற ஒரே பண்பைத்தான் குறிக்குமேயன்றி அவனுடைய எல்லாப் பண்புகளையும் அச்சொல் உள்ளடக்கி நிற்கவில்லை என்பதையும் கூடுதல் விளக்கமாகச் சொல்லாம். "வஹ்ஹாபே, ரஸ்ஸாக்கே! ஜப்பாரே! என் பாவங்களை மன்னித்து விடு" என்று இறைவனை விளித்து வேண்டினாலும் என் பாவங்களை அவன் மன்னிப்பான் என்ற நம்பிக்கையோடு, "ஏன் என்னை கஃப்பாரே என்று விளிக்கவில்லை?" என்று அந்தக் கருணையாளன் எதிர் கேள்வி கேட்க மாட்டான் என்ற உறுதி எனக்குண்டு.
***
இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த 'ஹுதைபிய்யா உடன்படிக்கை' சுவையானதும்கூட. மக்காவிலுள்ள புனித இறையில்லமான கஅபாவில் உம்ரா வழிபாடு செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்த முஸ்லிம்களைத் தடுத்துத் திருப்பியனுப்பிய நிகழ்வின் தொடக்கம் அது. முஸ்லிம்களுக்குப் பாதகமாகவும் மக்கத்துக் குரைஷியருக்குச் சாதகமாகவும் ஹிஜிரி ஆறாம் ஆண்டு (கி.பி 628) எழுதப் பட்ட அந்த உடன்படிக்கை, பிற்காலத்தில் குரைஷியராலே மீறப் பட்டு, முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறிப் போனது.
The Meccans deliberately made their terms as rigorous and provocative as they could, but Muhammad refused to be provoked. As always he wanted peace not bloodshed, therefore he accepted all the terms with all the hardships and all the humiliation they implied. This treaty is known as the Treaty of Hudaibia. It was one of the most outstanding events in the life of Muhammad. According to R.V.C. Bodley in "The Messenger" (London, 1946, p. 257), "In point of fact, that the treaty was Mohammad's masterpiece of diplomacy. It was a triumph." Tor Andrae writes in "Mohammed the Man and his Faith" (London, 1936, p. 229) that, "The self-control which Mohammed revealed at Hodaibiya, his ability to bear occasional humiliation in unimportant issues, in order to achieve an exalted goal, shows that he was a person of unique ability."
"அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்), நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்), அல்லாஹ்வின் பெயரால்.
(முஸ்லிம்களின் சார்பாக) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கும் (முஸ்லிமல்லாத குரைஷியரின் சார்பாக) அம்ருடைய மகன் ஸுஹலுக்கும் இடையே எழுதப் படும் ..." என்று தொடங்கும் அந்த உடன்படிக்கையின் முதலிரு வரிகளிலேயே இரண்டு மறுப்புகளைக் குரைஷிப் பிரதிநிதி ஸுஹைல் தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியிருந்தால் உம்மை மக்காவை விட்டு நாங்கள் துரத்தியிருப்போமா? உம்மோடு போர் புரிந்திருப்போமா?" என்பது ஸுஹைலின் இரண்டாவது மறுப்பு. இனி, திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பரின் கடித வரிகளில் சிலவற்றை நினைவு கூர்ந்து விட்டு, மீதியைத் தொடர்வோம்:

"இறைவனின் எல்லா பெயர்களையும் எல்லா இடத்திலும் உபயோகிக்க முடியாது மட்டுமல்ல உபயோகிக்கவும் கூடாது. அப்படி உபயோகித்தால் அதன் தன்மை முரண்பாடாகிவிடும்."

"அல்லாஹ் சொன்னான் என்றால் அவனது அனைத்து திருநாமங்களும் அவற்றின் பண்புகளும் உள்ளடங்கிவிடுகின்றன."

இதையேதான் ஸுஹைல் முதல் மறுப்பாக வெளியிட்டார்: "அளவற்ற அருளாளனா? யாரது புதுக் கடவுள்? அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டும் இருக்கட்டும்".
ஹமீது ஜா.பரின் "வஹ்ஹாபா? யாரு ... பண்டாரி வஹாபா?" என்ற கேள்வி ஸுஹைலைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது.
ஃஃஃ

செவ்வாய், ஜூலை 04, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2

அல்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பது போலவே, இலக்கியங்கள் அனைத்திலும் ஏராளமான பொய்கள் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். கவிஞர்கள், தாம் கேள்விப்பட்டதை எல்லாம் அப்படியே காவியமாகவும் கவிதையாகவும் வெறும் சுவைக்காகப் பாடிக் குவித்துள்ளமையே இதற்குக் காரணமாகும். தாம் கேள்விப்பட்டவை எந்த அளவுக்கு உண்மையானவை எனச் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருளைக் காணுகின்ற அறிவு பெறுதலை அடகு வைத்து விடுகின்றது கவிதையுள்ளம். பெரும்பாலானக் கவிஞர்கள் நிகழாதவற்றையெல்லாம் நிகழ்ந்தது போலக் கற்பனை செய்து பாடித் தீர்த்தனர். அத்தகைய பொய்ப் பாடிகளை - கவிஞர்களை - ஒரு கூட்டம் பின்பற்றி வழிகேட்டில் மூழ்கிக் கிடக்கக் காண்கிறோம். இந்நிலை, அல்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னரும் இருந்தது; பின்னரும் இருந்தது; இன்றும் இருக்கின்றது.
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது --- உள்ள முறைகள் கதையெனக் கண்டோம் நன்று புராணங்கள் செய்தார் - அதில் --- நல்ல கதைகள் பலப்பலத் தந்தார் கவிதை மிக நல்லதேனும் - அக் --- கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.
என இதனையே தமிழ்ப் பெருங்கவிஞர் பாரதியாரும் பாடுகின்றார். புராணக் கவிதைகள் பலவற்றைக் கவிஞர்கள் பாடினர். கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. எனினும் அக்கவிதை சொல்லும் கதைகள் அனைத்தும் கடைந்தெடுத்தப் பொய்களாகும் என்கிறார் கவி பாரதி. கவிஞர் சுரதா கூறுகின்றார்:
எதார்த்தத்தில் எது உண்மையோ அதை நம்மவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. அடிப்படையை மறந்து விட்டுப் பின்னாளில் அதன் மீது எழுந்தக் கற்பனையைப் பெரிதாக நினைக்கின்றோம். ஒரு நாட்டில் ஒழுக்கம் இருக்க வேண்டுமென்றால் இலக்கியம் வளரக் கூடாது என்று கூடக் கூறுவேன். ஏனென்றால் அது கவர்ச்சி மயக்கத்தை உண்டாக்கும். மூலப் பொருளைக் காட்டாது. இலக்கியம் வந்த பிறகு உழைப்பு வீணாகி விட்டது. இன்னொன்று, கவிதை நயம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். "அருமையாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானே தவிர சரியாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானா? -நேர்காணல் சுபமங்களா, ஆகஸ்ட் 1993.
கவிதை இலக்கியத்தின் தீமையைக் கவிஞர் சுரதா இங்குத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பாலான கவிஞர்களின் பொய்க்கவிதை காரணமாக, கவிதை இலக்கியமே கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஒரேயடியாக இதனை ஒழித்துக் கட்டக் குரல் கொடுக்கிறார் சுரதா. ஆனால், அல்குர் ஆன் இலக்கியத்தை - கவிதையைச் சில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்கிறது. "தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்காகப் பதிலுக்குக் கவிதை பாடுபவர்களாகிய - நம்பிக்கை கொண்ட - நற்செயல்கள் புரிகின்ற - அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற கவிஞர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கின்றான்" எனக் குர்ஆன் [026:227] கூறுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதிரிகளுக்குக் கவிதையால் பதிலடி தருகின்ற கவிஞர்களைக் கீழ்க்காணும் ஹதீஸில் ஊக்குவித்துள்ளார்கள்: "அவர்களுக்கு பதிலடி கொடுங்கள், உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" - முஸ்லிம் 4541. நல்ல கவிதைகளைப் பாடுவோருடன் வானவர் ஜிப்ரீல் இருப்பது போலவே, தீய கவிதைகளைப் பாடுவோருடன் ஷைத்தான் கலந்திருக்கிறான். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியும் ஆர்வம் கொள்ளாமல், தாம் கேள்விப் பட்டதையெல்லாம் கூறுவோரும் கவிஞர்களுள் உளர். அவர்கள் பொய்யையே புகல்கின்றனர். பொய்யுரைக்கும் அந்தப் பாவிகள் ஒவ்வொருவர் மீதும் ஷைத்தான்கள் புகுந்து விடுகின்றனர். இப்படிப் பட்ட இயல்புடைய கவிஞர்களையும் இக்கவிஞர்களைப் பின்பற்றுகிறவர்களையும் 'பாவிகள்' எனவும் 'வழிகேடர்கள்' எனவும் ஒருசேர இறைவன் கண்டித்துள்ளான். அந்த இறைவசனங்களின் அடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அணுகும்போது ஷைத்தான்கள் கோலோச்சுகின்ற எத்தனையோ பொய்மொழிகள் அவற்றினூடே விரவிக் கலந்துள்ளமையைக் காண முடிகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள், "இவர் ஒரு கவிஞர்" என்று பழிக்குற்றம் சாட்டினர் [021:005]. அவர்களுக்குப் பதிலுரைப்பதைப்போல, "நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது இவருக்குத் தகுமானதன்று" [036:069] என்று அல்லாஹ் தன் மறையில் தெளிவுறுத்தினான். வருங்காலத்தில் உறுதியாக இன்னதுதான் நிகழும் என்பதை அறியாத நிலையில் அதைப் பற்றிப் பொய்யாக முன்னறிவிப்புக் கூறுகின்ற குறிகாரனையும் பகுத்தறிவிழந்து உளறுகின்ற பைத்தியக் காரனையும் பொய்புனைந்து பாடும் கவிஞனையும் ஒருசேர வைத்துப் பேசுகின்ற திருமறை வசனங்களும் [052:029-030] காணக் கிடைக்கின்றன. கவிஞர்கள் தங்களுடைய கவித்திறனால் பொய்யான ஒன்றையும் மெய்போலப் பாடிவிடுகின்ற சாதுர்யம் படைத்தவர்கள். இறைவன் சொல்லாதவற்றை "இறைவன் சொன்னான்" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாதவற்றை "நபி கூறினார்" என்றும் பாடும் தன்மையை நம் தமிழ்க் கவிஞர்களிடம் பரவலாகக் காண முடிகிறது. தாம் கேள்விப் பட்டதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டுக் கவிதை புனைகின்ற இவர்களுள் பெரும்பாலோர் பொய்யர்களே எனும் இறைவசனத்திற்கேற்ப, இல்லாதவற்றையெல்லாம் இருப்பதுபோலச் சில கவிஞர்கள் பாடிச் சென்றுள்ளனர். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், ஜூலை 03, 2006

ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்

"வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வ்ருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்"
என்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச் சாட்டு எம் தலைவரை நோக்கியே வீசப் படுவதால் அவர்தாம் இதற்கு பதில் சொல்லத் தகுந்தவர். பிறந்த நாட்டை விட்டுத் துரத்தப் பட்ட அவர், எட்டே முக்கால் ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தபோது அந்த நாடே அவரிடம் தன்னை ஒப்படைத்தது. "இன்றைய நாளில் பழிக்குப் பழி - இரத்தத்திற்கு இரத்தம் என்பதில்லை; எல்லாருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்தவர், உருவங்களையும் (+)உயர்த்திக் கட்டப் பட்ட சமாதிகளையும் அழித்தொழிப்பதில் மட்டும் மிக உறுதியாயிருந்தார். ஆதி இறையில்லமான கஃபாவுக்கு உள்ளே இருந்த தம் பெரும் பாட்டனார், அண்ணல் இபுராஹீமுடைய உருவத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவர்தாம் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
***
"வளக்கமா செய்யிறது .. இந்த வருஷமும் செய்யுறோம். இன்னக்கி ஒங்க தெருவுல வசூலு. எல்லாரும் எளுதியிருக்காங்க. நீங்களும் ஒங்களாலெ ஏண்டதெ .."

என் முன்னே நீட்டப் பட்ட அந்த 40 பக்க நோட்டையும் பக்கத்துத் தெருவிலிருந்து வசூலுக்கு வந்திருந்தவர்களையும் மாறி-மாறிப் பார்த்து விட்டுக் கேட்டேன்: "என்ன வசூலு?"

"அசனார்($) ஒசனாருக்கு(#) வர்ர மாசம் கந்திரில்ல? தம்பிக்கு தெரியாதா? நாங்க பெரிய தைக்கா சார்பா வந்திருக்கோம்"

"ஓ.. ஒரு தடவ ரிக்கார்ட் டான்ஸு ஆட வந்த பொண்ணுங்களோட நம்ம ஆளுக்களும் மேடையிலெ ஏறினதா ..?"

"அது பளய கத தம்பி. அதெ உடுங்க. நீங்க எளுதுங்க "

"எளுதுறது இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா. ஒங்கள மாதிரி இதெ எல்லாம் எடுத்து நடத்துவறங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்கும்"

"என்னா தம்பி?"

"இல்லெ .. இந்த அசனாரு ஒசனாருங்கிறது யாரு சாபு?"

சாபுவின் முகம் சட்டென்று மாறியது. "நெசமாவே தெரியாமத்தான் கேக்கிறியளா? அசனாரு ஒசனாரு ரஸூலுல்லாவோட பேரப் புள்ளைங்க" 

"அசனாரெ மதீனாவுலேயும் ஒசனாரெ கர்பலாவுலேயுமுல்ல அடக்கிருக்கு? அப்போ .. நம்ம ஊர்ல அவுங்களுக்கு எப்டி கபுரு வந்துச்சி?"

"அது வந்து .. தம்பி .."

கூட வந்திருந்த ஒருவர் குறுக்கிட்டார் "சாபு, நோட்ட வாங்கிட்டு வாங்க. இவன் நஜாத்துக்காரன். சரியான வஹ்ஹாபியா இருப்பான்"

ஏற்கனவே வசூல் கொடுத்திருந்த நாலைந்து பேர் எங்களை நோக்கி வந்தனர். நான் சிரித்துக் கொண்டே சாபுவிடம் கேட்டேன்:

"என்ன வேணும்?"

"நோட்டு புக்கு"
***
இந்நிகழ்வுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து ஒருவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது - என்னைச் சந்திக்க விரும்புவதாக. "என்ன விஷயம்?" என்று மட்டும் கேட்டேன். "பள்ளிவாசல் கட்ட வசூல் ஆரம்பிச்சிருக்கோம்; உதவி வேணும்". இடம் சொல்லி வரச் சொன்னேன். சந்தித்துக் கொண்டோம்.

எங்கோ பார்த்த நினைவு. "நீங்க ..."

அறிமுகம் செய்து கொண்டார் அந்த இளைஞர்.

"பள்ளியெ எந்த எடத்துலெ கட்டப் போறீங்க?"

"எங்க தெருப் பக்கமா நீங்க வந்து ரொம்ப நாளாயிட்டுதுன்னு நெனக்கிறேன். கட்டுமான வேல ஆரம்பிச்சாச்சு"

"ஆமா, அதான் எங்கேன்னு கேட்டேன்"

"எங்க பொறுப்புல இருந்த பெரிய தைக்கால இடிச்சுட்டுத்தான்".

வஹ்ஹாபிகளின் கடப்பாரைகளுக்கும் மண்வெட்டிகளுக்கும் வேலை இருந்து கொண்டுதானிருக்கிறது - இப்போது அவர்தம் வீட்டுத் தோட்டத்தில்.
ஃஃஃ
__________________________________________________
(+) அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175].

($) பெருமானாரின் மூத்த பேரன், அண்ணல் ஹஸன் (ரலி)

(#) பெருமானாரின் இளைய பேரன், அண்ணல் ஹுஸைன் (ரலி)

("முகமது நபியைப் பெருமானார் என்று வகாபி தனது கலங்கலான குழப்பமான மொழியில் குறிப்பிட்டு, பெயர் குழப்பத்தின் மூலமாகக் கருத்தியல் குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்"என்ற குற்றச் சாட்டு குலாம் ரஸூலிடமிருந்து வந்தாலும் வரும்).