சனி, நவம்பர் 12, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-41

குணங்குடியாருடைய வாழ்க்கைமுறை பற்றியும் அவருடைய ஆன்மஞான பரிபாஷைகள் பற்றியும் அவர் வாய்மொழியாகவே நிறைய பாடல்களைப் பார்க்கின்றோம். குணங்குடியாரின் வாழ்க்கை முறைகள் அவருடைய ஒரிஜினல் வாழ்க்கையன்று. மாறாக, அது வேறொரு மூலபாடத்தின் மறுபதிப்பேயாகும். இப்படிப்பட்ட மறுபதிப்பு வாழ்க்கையைக் குணங்குடியாரிடம் மட்டுமல்ல, இன்னும் பல இஸ்லாமிய ஸூஃபிக் கவிஞர்களிடமும் நாம் நிறையவே காணலாம்.

தமிழ்நாட்டின் சில ஞானிகளுக்கே உரிய இத்தகைய வாழ்க்கை முறைகளைத்தான் நம் தமிழகத்தின் தர்காக்களின் ஸூஃபிக் கவிஞர்களும் கடைப்பிடித்துள்ளனர்.

குணங்குடியாரின் ஆன்மீக வாழ்க்கைமுறை எப்படி இருந்தது? என்பதற்கு விடைகாண வேண்டுமென்றால் தாயுமானவரின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டாலே போதுமானதாகும். ஆகவே, தாயுமானவரின் வாழ்க்கை முறையைப் பற்றி இங்கு நாம் சுருக்கமாகக் காண்போம். இதைக் காண்பதன் மூலம் பின்வரும் பகுதிகளில் குணங்குடியாரை மட்டுமின்றி பீரப்பா போன்றோரையும் நாம் எளிதில் புரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.

‘தாயுமானவர் திருப்பாடல் திரட்டு’ (அமெரிகன் டைமன் அச்சகம், சென்னை. 1919) என்னும் நூலின் 13ஆவது பக்கத்தில் தாயுமான சுவாமிகள் சரித்திரத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

தாயுமானவர் சிவயோகமும், சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்றலாகிய அத்துவைத சாயுச்சிய ஆனந்தமும் கைவரப் பெற்றவர். தாயுமானவருடைய குருவாகிய மௌனகுரு சுவாமிகள் தாயுமானவரை நோக்கி, “சும்மா இரு” எனத் திருவாய் மலர்ந்தருளி உபதேசித்தார். பின்னர் ஒருமுறை தாயுமானவரை அருகழைத்து அவருக்கு ஆன்ம ஞானத்தைப் போதித்து, “ஏ மாணவா! நீ அஞ்செழுத்தால் சில ஆகமப் பூஜைகளை செவ்வனே செய்து முடித்து, வெளிப்புலன்களிலே சிந்தை நாடா வண்ணம் சரீரத்தை, சிரசு, கழுத்து, இடை முதலிய அவயங்கள் நேராகத் தம்பத்தைப் போல் அசையாது நிறுத்தி, இடை பிங்கலைகளின் வழித்தாக இயங்கா நின்ற பிராணவாயுவை அம்ச காயத்திரியாகிய அஜபா மந்திரத்தினாலே தடுத்து, சுழுமுனை நாடியின் வழியாகச் செலுத்தி, இருகண்களும் புருவ மத்தியே நாடியவண்ணமாகச் சிதாகாயமாகிய ஆன்ம நிலய அந்தர் முக நாட்டத்தில் மனத்தை நிலைநிறுத்தித் தியானமாகச் சமாதியிலிருந்து சதா நிஷ்டை புரிந்து வருவாயாக! இதுவே மெஞ்ஞான நிட்டையாகிய சிவயோகமாம். இங்ஙனம் சதா நிஷ்டையிலிருந்து வருங்கால் அந்தர் முகத்திலே நாத ஒலிகளும் விந்து ஒலிகளும் தோன்றும். அவற்றுள் அழுந்தாது ஆன்மாவின்கண் அழுந்தி உறைந்து நிற்றல் வேண்டும். அப்போது அகண்ட பரிபூரணாகார சிற்சிகோதய சின்மயானந்த வஸ்துவாகிய சிவோதயப் பிரகாசமுண்டாகி உன்னை விழுங்கி நிற்குமாதலால், அந்நிலையில் உன் செயல் ஒழிந்து, நீ சிவத்துடன் இரண்டறக் கலந்து, அத்துவைத நிலையடைந்துவிடுவாய். அப்போது  எங்கும் நீ நிவனொன்றையே காண்பாய். இதுவே சித்தாந்த மஹாவாக்கிய உண்மைப் பொருளாகும். இந்நிலையே சலியாது நிலை பெறுக!”

மௌனகுரு சுவாமிகள் தாயுமானவருக்குப் போதித்த இந்த வாழ்க்கையைத்தான் குணங்குடியாரும் மேற்கொண்டிருக்கின்றார். நபி (ஸல்) நமக்குப் போதித்துத் தந்த வாழ்க்கையைப் பற்றி இவர் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

… தொடரும்

வியாழன், அக்டோபர் 13, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-40

கி.பி 1705ஆம் ஆண்டிலிருந்து 1742ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்த தாயுமானவர், ஒரு இந்துமத ஸூஃபிக் கவிஞர். குணங்குடி மஸ்தான் என்ற இஸ்லாமியச் சித்தரோ கி.பி.1788ஆம் ஆண்டில் தொண்டியில் பிறந்தவர். தாயுமானவர் இறந்து, 47 ஆண்டுகளுக்குப் பிறகு குணங்குடி மஸ்தான் பிறக்கின்றார்.

தாயுமானவர் ஒரு ‘முஷ்ரிக்’ கவிஞர். இதில் யாருக்கும் சந்தேகமேயில்லை. இந்த முஷ்ரிக்கின் வழித்தடத்தில் அப்படியே கால் பதித்துக் கவி தொடுக்கின்றார் குணங்குடியார்.

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு’ நூலின் முகப்புப் பக்கத்தில், ஶ்ரீ தாயுமான சுவாமிகளின்’ உருவப் படமொன்று இடம்பெற்றிருக்கக் காணலாம்.


அதுபோலக் ‘குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல் திரட்டி’லும் குணங்குடி மஸ்தானின் உருவப் படமொன்று தவறாமல் தரப்பட்டிருக்கும்.

இரண்டு உருவப் படங்களிலும் எப்படி ஒரு கோவணம் மட்டுமே உடையாக இருக்கின்றதோ இதுபோல இரண்டு புலவர்களின் பாடல்களிலும் ஒரே அத்துவைதக் கோவணமே இழையோடிக் கிடப்பதைக் காணலாம்.

எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை தன்னில் வரித்துக்கொண்டு, அவர்களைப் போன்று செயல்படுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்” என்பது நபிமொழி (அபூதாவூத் 4031).

பிறரின் ஆச்சார-அநுஷ்டானங்களைப் பின்பற்றி, அதுபோன்று நடப்பவன் நம்மைச் சார்ந்தவனல்லன்” என்பதும் நபிமொழி (திர்மிதீ).

மேற்காணும் நபிமொழிகளைப் படித்தறிந்துள்ள நாம், தாயுமானவரின் பிரதிபலிப்பைக் குணங்குடியாரிடம் பார்க்கின்றபோது எத்தகைய முடிவுக்கு வரவேண்டியதிருக்கும்?

அப்படி என்னதான் தாயுமானவரின் பிரதிபலிப்புக் குணங்குடியாரிடம் காணப்படுகிறது என வினவலாம். இரண்டு பேருடைய பாடல் போக்குகள், கருத்துப் பரிமாற்றங்கள், சொல்லடுக்குகள் ஆகியவை மட்டுமல்லாது வாழ்க்கை முறைகளிலும் தாயுமானவரை அப்படியே பின்பற்றி வாழ்கின்றார் குணங்குடியார்.

- தொடரும்

திங்கள், ஜனவரி 24, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 39

குணங்குடி மஸ்தான், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைத் தன்னுடைய ஆன்மீக குருவாகவும் அதற்கும் மேலாக, அல்லாஹ்வுக்கே இணையாகவும் பல பாடல்களில் பாடிச் செல்கின்றார். அத்துவைதக் கவிதைகளைக் குஞ்சு பொரிப்பதற்காக அவர் தமிழ்நாட்டுத் தாயுமானவரிடமிருந்து ஏகப்பட்ட முட்டைகளை எடுத்துக் கொள்கின்றார். தாயுமானவரின் முட்டைகளை மட்டுமல்ல, அவரின் கவிதைப் பறவைகளைக்கூட அப்படியே வளைத்துப் பிடித்து, இலேசாகச் சாயம் தடவி தன்னுடையதாகவே காட்டிக் கொள்கின்றார்.

அப்படிப்பட்ட இடங்களில் மாற்றாருக்குரிய கடவுள் பெயர்கள், அவர்களுடைய பக்திநெறிக் குறியீடுகள் ஆகியவைகூட அப்படியே குணங்குடியாருடைய கவிதை(?)களிலும் இடம்பெறுகின்றன. நந்தீஸ்வரன், மனோன்மணி, வாலை, அம்பலம், சிவம், தட்சிணாமூர்த்தி, மூர்த்தி, திருநடனம், திருக்கூத்து, சிவயோகம், சின்மயம், சிவராஜயோகம், சச்சிதானந்தம், பஞ்சாட்சரம், சரியை, கிரியை, யோகம், ஞானம், பசுபதி, பாசம் போன்ற சொல்லாட்சிகளுக்குக் குணங்குடிப் பாடல்களில் குறைவே இருக்காது.

'இச்சொற்களெல்லாம் உள்ளர்த்தம் பேசும் அகமியக் கருத்துடையவை. இவை, சாமானியருக்குப் புரியாது. இவைகளுக்குரிய இஸ்லாமிய பரிபாஷையே வேறாகும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மீக குருவாகிய ஷெய்க்கைக் கைப்பிடித்தால்தான் இயலும்' என வாய்க்கு வந்தவாறு இஸ்லாத்தோடு முடிச்சுப் போட்டு இவற்றை சிம்பாலிசப்படுத்துவர் சிலர். குர்ஆன் - ஹதீஸைப் புறக்கணித்துவிட்டு, பிறமதச் சித்தாந்தங்களுடன் கொண்டுள்ள கள்ளத் தொடர்பை நியாயப்படுத்துவதற்காக ஸூஃபித் தோன்றல்கள் கட்டிவிடும் கதைகள்தாம் இவை.

இத்தகைய ஒரு கள்ளத் தொடர்பைத் தாயுமானவர் மூலமாக நிலைநாட்டிக் கொண்டவர்தான் குணங்குடியார். யார் இந்தத் தாயுமானவர்?

- தொடரும்