திங்கள், ஜனவரி 24, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 39

குணங்குடி மஸ்தான், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைத் தன்னுடைய ஆன்மீக குருவாகவும் அதற்கும் மேலாக, அல்லாஹ்வுக்கே இணையாகவும் பல பாடல்களில் பாடிச் செல்கின்றார். அத்துவைதக் கவிதைகளைக் குஞ்சு பொரிப்பதற்காக அவர் தமிழ்நாட்டுத் தாயுமானவரிடமிருந்து ஏகப்பட்ட முட்டைகளை எடுத்துக் கொள்கின்றார். தாயுமானவரின் முட்டைகளை மட்டுமல்ல, அவரின் கவிதைப் பறவைகளைக்கூட அப்படியே வளைத்துப் பிடித்து, இலேசாகச் சாயம் தடவி தன்னுடையதாகவே காட்டிக் கொள்கின்றார்.

அப்படிப்பட்ட இடங்களில் மாற்றாருக்குரிய கடவுள் பெயர்கள், அவர்களுடைய பக்திநெறிக் குறியீடுகள் ஆகியவைகூட அப்படியே குணங்குடியாருடைய கவிதை(?)களிலும் இடம்பெறுகின்றன. நந்தீஸ்வரன், மனோன்மணி, வாலை, அம்பலம், சிவம், தட்சிணாமூர்த்தி, மூர்த்தி, திருநடனம், திருக்கூத்து, சிவயோகம், சின்மயம், சிவராஜயோகம், சச்சிதானந்தம், பஞ்சாட்சரம், சரியை, கிரியை, யோகம், ஞானம், பசுபதி, பாசம் போன்ற சொல்லாட்சிகளுக்குக் குணங்குடிப் பாடல்களில் குறைவே இருக்காது.

'இச்சொற்களெல்லாம் உள்ளர்த்தம் பேசும் அகமியக் கருத்துடையவை. இவை, சாமானியருக்குப் புரியாது. இவைகளுக்குரிய இஸ்லாமிய பரிபாஷையே வேறாகும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மீக குருவாகிய ஷெய்க்கைக் கைப்பிடித்தால்தான் இயலும்' என வாய்க்கு வந்தவாறு இஸ்லாத்தோடு முடிச்சுப் போட்டு இவற்றை சிம்பாலிசப்படுத்துவர் சிலர். குர்ஆன் - ஹதீஸைப் புறக்கணித்துவிட்டு, பிறமதச் சித்தாந்தங்களுடன் கொண்டுள்ள கள்ளத் தொடர்பை நியாயப்படுத்துவதற்காக ஸூஃபித் தோன்றல்கள் கட்டிவிடும் கதைகள்தாம் இவை.

இத்தகைய ஒரு கள்ளத் தொடர்பைத் தாயுமானவர் மூலமாக நிலைநாட்டிக் கொண்டவர்தான் குணங்குடியார். யார் இந்தத் தாயுமானவர்?

- தொடரும்