வெள்ளி, ஆகஸ்ட் 24, 2007

பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்

திண்ணையிலிருந்து உச்சகட்ட உளறல் செவியைத் தாக்கியபோதுதான் முதன் முதலாகத் திண்ணைப் பக்கம் சென்றேன்; இப்போது மீண்டும் செல்ல வேண்டியதாகி விட்டது. 

"யாருடைய கருவைச் சுமப்பது என்பதை முடிவு செய்யும் கட்டற்ற சுதந்திரம் பெண்களுக்குக் கட்டாயம் வேண்டும்" என்ற முற்போக்குக்(?) கருத்தை 1994இல் 'லஜ்ஜை'யின்றி எழுதி, சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப் பட்டு, தற்போது நம் நாட்டில் 'ஊர் சுற்றி'ப் பார்த்துக் கொண்டிருக்கும் வங்கத்துத் தஸ்லீமாவுக்காகவும் "ஒரு பெண்ணை நபியாகத் தேர்ந்தெடுக்காதது முதல் பல துரோகங்களை அடுக்கடுக்காகச் செய்த ஆணாதிக்கவாதி" என்று முஸ்லிம்களின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றி மயிலாஞ்சி முதல் திண்ணை வரை உளறித் திரிந்த H.G.ரzooலுக்காகவும் ஆதரவுக் குரலாக அன்பர் தாஜ் என்பவரின் "பத்வா என்றொரு நவீன அரக்கம்" என்ற திண்ணையின் 16 ஆகஸ்டு 2007 கட்டுரை படித்தேன். 

'அரக்க' முடிச்சுகளை அவிழ்ப்பதற்குமுன் அவை விழுந்து இறுக்குவது யார் மீது? ஏன்? எப்போது? என்பதை இங்குச் சற்றே அலச வேண்டியதாகிறது. "நான் பக்கத்து வீட்டுக் காரனோடு படுக்கப் போகிறேன்; வரட்டுமா?" என்று தஸ்லீமா சொல்லி விட்டு மட்டும் சென்று விட்டால் எவரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், "உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் என்னைப் போல் சுதந்திரம் தேவை; அவர்களையும் அனுப்பி வையுங்கள்" என்று அழைப்பு விடுக்கும்போதுதான் அங்கு முடிச்சு விழுகின்றது. ஒரு பர்தாவைக் கடையிலிருந்து வாங்கி(யாவது) தன் வீட்டுக்குமுன் தீயிட்டால் தஸ்லீமாவை யாரும் கேட்கப் போவதில்லை. "உங்கள் வீட்டிலுள்ள எல்லாப் பெண்களின் பர்தாவையும் கொளுத்தப் போகிறேன்" என்று அறைகூவல் விடுக்கும்போது இன்னொரு முடிச்சு விழுகின்றது.
Why you don't understand Indian Muslims Fugitive Bangladeshi writer Taslima Nasreen wrote a piece on purdah in a Kolkata-based Bengali daily. Not many took notice of it. But when the same article was translated and published in an English magazine a month later with the provocative title, "Let us burn the burqa," it raised a storm. Nobody bothered to find what millions of Muslim women across the country who don't wear the burqa felt about the issue. This battle is always between the elite. The masses only bear the consequences.
முழுதும் படிக்க [சுட்டி -1]. 

'சுற்றுலாப் பயணி' விசாவில் நம் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள தஸ்லீமா, தாராளமாக ஊர் சுற்றிப் பார்க்கட்டும். அதை விடுத்து, விளம்பரத்தோடு 'தொழில்' செய்ய முனையும்போது - அதுவும் விலைபோகாத ஊரான ஹைதராபாதில் - அடுத்த முடிச்சு விழுகிறது அழுத்தமாக. 

தஸ்லீமாவைத் தாக்கியதாக எம் ஐ எம் கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களோடு 15 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். மேற்கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும்; செய்யட்டும். "நான் அச்சமற்றவள். இந்தியாவை விட்டு எங்கும் போக மாட்டேன்" என்று வசனம் பேசிய வீராங்கனை, அழுத்த முடிச்சின் இறுக்கலால் "என் மரணம் வெகு தொலைவில் இல்லை" என்று இப்போது புலம்புகிறார். 'அளவற்ற வெகுமதி' அறிவிப்பால் தஸ்லீமாவுக்குக் காவல் வலுப் படுத்தப் பட்டுள்ளதாம் [சுட்டி-2]. தஸ்லீமாவின் காவலுக்கு வேண்டுமானால் நம் வரிப் பணத்திலிருந்து செலவு செய்து கொள்ளட்டும்; ஆனால், தம் குடும்பத்துப் பெண்கள் கற்புநெறியோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் வைத்துள்ள எவரும், "தஸ்லீமாவுக்கு ஆதரவு தருகிறேன்" என்று கூறுவது வெறும் பேச்சாகத்தான் இருக்கும்; அல்லது அதற்கு வேறு உள்நோக்கம் இருக்கும்.
*** 
'குடி, குடியைக் கெடுக்கும்' என்று மதுக் கடைகளின் வாசலில் வைக்கப் பட்டிருக்கும் அபத்த விளம்பரங்களைப் போலல்லாது, குடிக்கச் செல்லும் ஒருவரை,
நம்பிக்கையாளர்களே! மது, சூது, சிலைவழிபாடு, அம்புகள் எறிந்து குறி கேட்பது ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்கச் செயல்களைச் சார்ந்தவை. ஆகவே, நீங்கள் அவற்றை விலக்கி விடுங்கள்; வெற்றியடைவீர்கள்.
என்ற [005:090] இறைவனின் கட்டளையை எடுத்துச் சொல்லி, "குடிக்காதே!" எனத் தடுப்பதற்கு மட்டுமின்றி, மீறினால் ஒரு குடிகார முஸ்லிமின் மது நிறைந்த கோப்பையைக் கையால் பறிப்பதற்கும் இன்னொரு முஸ்லிமுக்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது.
79. "He who amongst you sees something abominable should modify it with the help of his hand..."
முழுதும் படிக்க [சுட்டி-3a], மூலத்திலிருந்து படிக்க [சுட்டி- 3b]. 

இஸ்லாம் இவ்வாறு கூறி நிற்க, "குடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறது; ஆனால் அதற்கு நேரம், காலம், அளவு எல்லாம் இருக்கின்றன" என்று வழக்கம்போல் H.G.ரzooல் மே மாத 'உயிர்மை' இதழில் மேதாவித் தனமாக உளறி வைத்தார். (இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் - மெளனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்). 'புதிய வரலாறு படைக்க'ப் புறப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் 'பழைய வரலாறு'களைப் புரட்டிப் பார்க்கலாம்; ஆனால் அவற்றுள் புரட்டுதல் செய்ய முயலக் கூடாது. மீறி முயன்று விட்டு, "மேற்கத்தியர்கள் எழுதி வைத்தவற்றை நம்பி மோசம் போனேனே! ஐயகோ! உள்ளூர் முல்லாக்களின் அரக்கம் பாய்கிறதே" என்று அரற்றித் திரிவதில் பயனேதுமில்லை. ஏனெனில், பழைய வரலாறுகள் அனைத்தும் பதிவு செய்யப் பட்டுப் பாதுகாப்பாக இருக்கின்றன. நாவிதரைத் தம் வீட்டுக்கு அனுப்புவதில்லை என்பதற்காகவும் நோன்பு வருகிறது, கஞ்சி தர மாட்டார்கள் என்பதற்காகவும் தன்னை ஊர் விலக்கம் செய்வதாக அறிவித்த அதே "ஜமாஅத்தின் கொள்கைகள்தாம் என்னுடையதும்" என்று அந்தர் பல்டி (குமுதம் ரிப்போர்டர் 12 ஆகஸ்டு, 2007) அடிக்கும் கொள்கைக் குன்றுக்கு, 'இலக்கிய ஆதரவு' … தேவைதான்.
***
"முரண் கொண்டவர்களால் மதினாவுக்கு விரட்டப் பட்ட நாயகத்திற்கு, அங்கு ஆண்ட கிருஸ்துவ மன்னன் அடைக்கலம் தருகிறான். சரிசமாக இருக்க வைத்து மத ரீதியான ஐய்யப்பாடுகளை கேள்வியாக முன் வைக்கிறான். நபிகள் தனது பக்கத்து தெளிவை முன்வைக்கிறார்கள்" 
என்ற 'புதிய வரலாற்றுச் செய்தி' ஒன்றைக் கட்டுரையில் காண நேர்ந்தது. இஃது எனக்குப் புதிய செய்திதான். இந்தப் புதிய செய்தியை அன்பர் தாஜ் எங்கிருந்து பெற்றார் என்ற சான்றைத் தந்தால் நன்றியுடையவனாவேன்!. இப்போது பதிவு செய்யப் பட்டப் 'பழைய வரலாறு' சொல்வதைப் பார்க்கலாம்:
நபித்துவத்தின் 14 வது ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகல் கி.பி. 622 செப்டம்பர் 23ல் நபி (ஸல்) குபா வந்திறங்கினார்கள் (நூல்: ரஹ்மத்துல்லில் ஆலமீன்). உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) மக்காவிலிருந்து வெளியேறிவிட்ட செய்தியை மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் கேட்டவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவிற்கு வெளியில் உள்ள ஹர்ரா என்ற இடத்திற்கு வந்து காத்திருப்பார்கள். மதிய வெயில் கடுமையானவுடன் மீண்டும் மதீனாவிற்கு வந்து விடுவார்கள். ஒருநாள் மிக நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்து விட்டு மதீனாவுக்குத் திரும்பினார்கள். அது சமயம், யூதர்களில் ஒருவன் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான். நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் வெண்மையான ஆடை அணிந்து வருவதைப் பார்த்தவுடன் "ஓ அரபுகளே! நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது!" என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை வரவேற்க ஹர்ரா நோக்கி ஓடினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி). இப்னுல் கய்ஸ் (ரஹ்) கூறுகிறார்: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும் வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர்த்திப் பேசுவதாலும் ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர் முழக்கம் (அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைந்தனர். வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று "வருக! வருக!" என வரவேற்றனர். நபி (ஸல்) அமைதி தவழ வந்து கொண்டிருந்தார்கள் ... மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.
முழுதும் படிக்க [சுட்டி-4]. 

'யஃத்ரிப்' என்ற பெயரில் அன்றுவரை அறியப் பட்டிருந்த நகர், அன்றிலிருந்து 'மதீனத்துர் ரஸூல் - ரஸூலின் பட்டணம்' என்ற புதுப் பெயரைப் பெற்றது. 'மதீனா' என்று இக்காலை சுருக்கமாக வழங்கப் படும் அந்நகர், நபிகள் நாயகத்துக்கு உறவுகளால் பிணையப் பட்ட நகராகும். அவர்களின் தாயின் பிறந்த மண்ணாகும். நபிகள் நாயகத்தின் தாய்மாமன்கள் மதீனாவில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்திருந்தனர்.

*** 

இறுதியாக, 'அரக்க'த்திற்கு வருவோம். ஃபத்வா (தீர்ப்பு) என்பது, இஸ்லாத்தைப் பொருத்த மட்டில் இரண்டு அடிப்படைகளையோ இரண்டில் ஒன்றையோ அகத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். தீர்ப்பில், குர் ஆனுடைய வசனங்கள் குறிப்பிடப் பட்டு, "இன்ன-இன்ன இறை வசனங்களின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப் படுகிறது" என்று குறிப்பிடப்பட வேண்டும். அல்லது, "நிறுவப் பட்ட உறுதியான இன்ன-இன்ன நபி மொழிகளின் அடிப்படையில் இதை வழங்குகிறோம்" என்று குறிப்பது ஒரு ஃபத்வாவின் அடிப்படை நிபந்தனையாகும். இவ்விரண்டுமோ இரண்டில் ஒன்றோ இல்லாதது இஸ்லாமிய ஃபத்வா ஆகாது. சுருங்கக் கூறின், எந்த ஒரு தனி மனிதனோ குழுவோ சுயமாக இஸ்லாமிய ஃபத்வா வெளியிட முடியாது. உண்மையில் 'இஸ்லாமிய ஃபத்வா'வின் உரிமையாளர்கள் முஸ்லிம்களின் இறைவனான அல்லாஹ்வும் (அவனுடைய தூதர் மற்றும்) முஸ்லிம்களின் தலைவருமாகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்தாம். 'ஊர் விலக்கல்' என்பது இஸ்லாத்துக்கு எதிரானதும் அறியாமைக் கால அரபியரின் வழக்கமுமாகும்:
ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாயினும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் 'முஹஸ்ஸப்' என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்... உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் 'அபூதாலிப் கணவாயில்' ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.
மூன்றாண்டு கால ஊர் விலக்கல் குறித்து முழுதும் படிக்க [சுட்டி-5]. 'தலைக்கு விலை' என்பதும் இஸ்லாத்தின் எதிரிகளுடைய வழிமுறைதான்:
அவசரமாக ஆலோசனை சபையைக் கூட்டிய குறைஷிகள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் பிடிப்பதற்கு அனைத்து வழிகளையும் கையாள வேண்டுமென முடிவு செய்தனர். மக்காவிலிருந்து வெளியேறும் அனைத்துத் திசைகளையும் ஆயுதமேந்திய வீரர்களின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கினார்கள். "நபி (ஸல்) அபூபக்ர் (ரழி) இவ்விருவருள் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரி, அவருக்கு இந்தப் பரிசு உண்டு" என்று பொது அறிவிப்பு செய்தனர். (நூல்: ஸஹீஹுல் புகாரி).
முழுதும் படிக்க [சுட்டி-6]. (புதிய உதாரணமாகத் திகழ்பவர் அமெரிக்க முல்லா புஷ் ஆவார்). முல்லாக்களின் சினவயப்பட்ட சுய முடிவுகளை, இஸ்லாமிய ஃபத்வாக்களாக யாரும் கருதிவிட வேண்டாம் என்பதை வாசகர்களுக்கும் பரபரப்புக்காக ஃபத்வா என்ற சொல்லைப் பயன் படுத்த வேண்டாம் என்பதை எழுத்தாளர்களுக்கும் இங்கு வேண்டுகோள்களாக முன் வைத்து முடிக்கிறேன். 

நன்றி!
ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html

சுட்டிகள்:
1- http://indianmuslims.in/lajja-taslima-nasreen-assaulted-in-hyderabad/
2- http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=5d562b17-64dc-4a90-8396-7cfcaea2d568
3a- http://www.sahihmuslim.com/sps/smm/ (search word 'his hand')
3b- http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=70&doc=1
4- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/third_stage.htm#27
5- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/second_stage.htm#27
6- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/third_stage.htm#25

வியாழன், ஆகஸ்ட் 02, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15

கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுடைய வரலாற்று நாவல்களை நம்மில் பலர் படித்திருக்கிறோம். வரலாற்று மாந்தர்களோடு தம் சொந்தக் கற்பனையையும் வருணனைகளையும் கலந்து, படிப்பவர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய அளவுக்கு இந்த நாவலாசிரியர்கள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்வர். அதிலும் சாண்டில்யன் போன்றோருடைய படைப்புகளில் விரசமான வருணனைகள் விரிவாக இடம் பெறுவதுண்டு.

அதே சாண்டில்யன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வரலாற்று நாயகரின் புண்ணிய நாயகியரைப் பற்றி அவருடைய 'மாமூலான பாணியில்' விரசமாக வருணிப்பாரானால் முஸ்லிம்கள் அதனைச் சகித்துக் கொள்வார்களா? 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா? ஒருபோதும் மாட்டார்களன்றோ! காரணம்,
"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத் திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த் திகழ்கின்றனர்..."[033:006].
என்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதை மனதில் ஏந்திக் கொண்டு இந்த 'இலக்கிய'ப் பிரச்சினையை அணுகுவோம். இன்றைக்கு நாவல் என்னும் இலக்கிய வடிவம் பெற்றிருக்கின்ற செல்வாக்கினை பதினேழாம் நூற்றாண்டில் செய்யுள் வடிவம் பெற்றிருந்தது. உமறுப் புலவர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் 'வரலாற்று நாவல்'தான் எழுதியிருப்பார். ஆனால், அவருடைய காலம் 17ஆம் நூற்றாண்டாக இருந்தமையால் அக்காலத்தில் வழக்கிலிருந்த 'செய்யுள் வடிவத்தில்' அவர் இலக்கியச் சேவை(!) செய்ய வேண்டியதாகி விட்டது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றை, செய்யுளில் காப்பியமாகப் பாடலானார்.

அவ்வாறு பாடிய உமறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றுக்குப் புறம்பான பல கட்டுக்கதைகளைத் தம் காப்பியம் நெடுகக் கட்டவிழ்த்து விடுகின்றார். அதோடு மட்டுமின்றி, அன்னை கதீஜா முதலியவர்களைப் பற்றிப் புலவர் பாடுமிடங்கள், நம் பார்வையைக் கூசச் செய்கின்றன. கதீஜா நாயகியைப் பற்றிய உமறுவின் வருணனையை ஓரளவு பார்த்தோம்.

அந்நியப் பெண்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கின்றது. ஆனால், உமறுப் புலவரின் எழுத்தாணியோ நமது அன்னையர் திலகங்களைப் பற்றியே திரைக்கப்பால் சென்று தரங் கெட்டு வருணிக்கிறது.

இந்நிலையில், இத்தரங் கெட்ட வருணனைகளைத் தன்னகத்தே கொண்ட சீறாப்புராணத்தைப் பாடியவர் 'உமறு' என்னும் பெயருடைய ஒரு முஸ்லிம் புலவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய வரம்பு மீறிய வருணனைகளை 'இலக்கியங்கள்' என்று நியாயப் படுத்தி நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.