சனி, ஜனவரி 15, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 30

"னாகி, ஊனில் உயிராகி ..." எனத் தொடங்கும் பாடலில் வானாகி, கானாகி என்றெல்லாம் யாரைச் சொல்கிறார் குணங்குடி மஸ்தான்?

அல்லாஹ்வைச் சொல்கிறாரா? நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சொல்கிறாரா? முஹ்யித்தீன் அப்துல் காதிரைச் சொல்கிறாரா?
அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

யாரைச் சொல்வதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைப்படி இது மாபெரும் முரணுடையதாகும்.

"இப்பாடலில் இறைவனைத்தான் ஊனாகி, உயிராகி ... என்றெல்லாம் குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்" என எஸ்.எம். சுலைமான் ஐஏஎஸ் தமது 'இசுலாமியத் தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்' எனும் நூலில் 'ஞான இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு' எனும் தலைப்பில் குறிப்பிடுகிறார்.

ஊனாக இருப்பவனும் இறைவன்தான்; உயிராக இருப்பவனும் அவன்தான்; ஒன்றாக இருப்பவனும் அவனே; இரண்டாக உள்ளவனும் அவனே; உள், வெளி, ஒளி, இருள், ஊர், பேர், காடு, மலை, கடல் ஆகிய எல்லாமாகவும் அவனே இருக்கிறான். காட்டு விலங்குகளாக இருப்பவனும் அவன்தான். இரவு, பகல், சூரியன், சந்திரன் மட்டுமின்றி, காணும் பொருட்கள், நான், நீ அவன், அவள், நாதம், பூதம் இவை ஒவ்வொன்றாக இருப்பவனும் அவன்தானாம்.

இதன்படி சூரியனை, சந்திரனை, மலையை, கடலை, ஒளியை, இருளை, ஒன்றை, இரண்டை, யாரோ ஓர் அவனை அல்லது அவளை, நாதத்தை, பூதத்தை, காட்டிலுள்ள யானை, புலி, சிங்கம் முதலிய விலங்குகளை, கல்லை, மண்ணை, கண்ட கண்ட பொருட்களை எதை வணங்கினாலும் அல்லாஹ்வை வணங்கியதுபோல்தான் என்று ஆகவில்லையோ?

"அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை; எதுவுமில்லை. அவன் ஏகன், அவனுக்கு இணையாக யாருமில்லை; எதுவுமில்லை எனச் சான்றுரைக்கிறேன்" எனும் இந்த உயிரினும் இனிய உறுதிப் பிரமாணத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி வெளிப்படையாக ஒத்துக் கொண்ட எவரும் இப்படிக் கூறத் துணிவார்களா?

"(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான். ... மேலும் அவனுடன் ஒப்பிடத் தக்கது எதுவுமேயில்லை" (அல்குர் ஆன் 112:001-004).
"அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். உங்களிலிருந்தே (உங்கள்) ஜோடிகளையும் அவன் உங்களுக்காகப் படைத்தான். கால்நடைகளையும் ஜோடி-ஜோடியாகப் படைத்தான். உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்" (அல்குர் ஆன் 042:011).
தொடரும், இன்ஷா அல்லாஹ்.