சனி, ஜனவரி 26, 2008

இரண்டில் ஒன்று

சென்ற வாரத் திண்ணையில் மலர் மன்னன் எழுதிய கடிதம் படித்தேன். முஸ்லிம்களை 'முகமதியர்' என எழுதுவது குறித்து, சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெளிவு படுத்திக் கொண்டு எழுதுவதே எழுத்து நேர்மையாகும். ஏனெனில்,
"எந்தவொரு விஷயம் குறித்தும் ஒருவரிடம் விசாரித்து விவரங்களைப் பொது நலன் கருதி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் உரிமையும் ஊடகத்தாருக்கு உண்டு"
என்ற அறிவுரையை எழுதியவரே மலர் மன்னன்தான். போகட்டும். சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாகச் சென்று, கேட்டு முடிவு செய்ய முடியாத நிலை மலர் மன்னனுக்கு இருக்கக் கூடும். அவருக்கு மட்டுமின்றி, திண்ணை வாசகர்களுக்காகவும் கென்னெத் வில்ஸனின் 'The Columbia Guide to Standard American English' அகராதியின் MUHAMMADAN பகுதி:
MUSLIM, MOHAMMEDAN, MOSLEM, MUHAMMADAN (adjs., nn.) A Muslim (variously pronounced, but most commonly MUHZ-luhm, MUHZ-lim, or MUZ-lim) is an adherent of Islam. Moslem (MAHZ-luhm or MAHS-luhm) is a variant of Muslim. Muhammadan and Mohammedan are based on the name of the prophet Mohammed, and both are considered offensive. Muslim, as both noun and adjective, seems to be the most acceptable to all concerned.
முகமதியர்/முகமதியம் ஆகிய இரு சொற்களும் முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் (both are considered offensive) சொற்கள் என்பதுதான் உண்மை. இதற்குப் பின்னரும் முஸ்லிம்களைக் 'காயப் படுத்துதல்' தொடர்வதையோ முடிவுற்றதையோ மலர் மன்னனின் எதிர்கால எழுத்துகளால் வாசகர்கள் இனங் கண்டு கொள்வார்கள். ***
"நான் பழகியவரை வட மாநிலங்களில் முகமதியர் என்றோ முகமதியம் என்றோ குறிப்பிடுவதை எவரும் ஆட்சேபிப்பதில்லை. ஹிந்தி என இக்பால் குறிப்பிட்டது ஹிந்துஸ்தானத்தவர் நாம் என்பதாக என்கிற விஷயத்தைத்தான் நினைவூட்டினேன். அன்பர் வஹ்ஹாபி சவூதிக்குப் போனால் அவரை ஹிந்தி என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்தியன் என்றல்ல!"
என்று மலர் மன்னன் தன் கடிதத்தை முடிக்கிறார். இறுதிச் சொற்றொடரில் அவர் குறிப்பிடும் ' ஹிந்தி' பற்றி நான் விசாரித்து அறிந்து கொண்டவை யாவையெனில், ஒருவேளை நானும் மலர் மன்னனும் சவூதிக்குப் போனால் எனது தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். இஸ்லாமியச் சமயச் சார்பினால் என்னை مسلم என்று அரபியிலும் Muslim என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனாயிருப்பின், தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் சமயம் என்பதில் هندوسي என்று அரபியிலும் Hindu என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனுக்கும் திண்ணை வாசகர்கள் பலருக்கும் சவூதியில் வாழும் நண்பர்கள் இருக்கலாம். விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்க! அப்படியே, காந்திஜி வடநாட்டுக்காரர்தானா? என்று உள்ளூரிலும் விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய புதுக் கட்டாயமும் நமக்கு இப்போது ஏற்பட்டு விட்டது! ஏனெனில், (1) முஸ்லிம்களைத் தனது பேச்சிலும் எழுத்திலும் Muslims, முஸல்மான் என்று முறையே ஆங்கிலத்திலும் ஹிந்தி மொழியிலும் குறிப்பிட்ட காந்திஜி, வடநாட்டுக்காரார் அல்லர். (2) "முஸ்லிம்களை வேண்டுமென்றேதான் முகமதியர் என்று எழுதுகிறேன்" என்று கூறுவதற்குச் சொல்லாண்மை இல்லாத மலர் மன்னன், வடநாட்டுக் கதையளக்கிறார். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அந்த ஒன்று எதுவெனத் திண்னை வாசகர்கள்தாம் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
ஃஃஃ
சுட்டிகள்: 1 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801177&format=html 2 - http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/ 3 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&format=html 4 - http://www.bartleby.com/68/87/3987.html

வியாழன், ஜனவரி 10, 2008

காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்

சென்ற வாரத் திண்ணையில் 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற கட்டுரை படிக்க நேர்ந்தது. 'தீவிரவாதம்' மற்றும் 'பயங்கரவாதம்' என்ற வருமொழிச் சொல்லாடல்களுக்கு 'இஸ்லாமிய' என்பது நிலைமொழியாக நிறுத்தப் படுவதன் அயோக்கியத்தனத்தைக் குறித்துக் கடந்த 04.10.2007 குங்குமம் இதழில் திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமி சுருக்கமாகத் தொட்டுக் காட்டி விட்டதால், இங்குத் தலையாய பேசுபொருள் 'முகமதியம்/முகமதியர்' என்ற திரிபுவாதம் மட்டுமே. சரி, காந்திஜியும் ஹரிஜனும் இங்கெதெற்கு? என்ற கேள்வி வரலாம். தாழ்த்தப் பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்ற பெயரை முதலில் வழங்கியவராக காந்திஜி அறியப் படுகிறார். ஹரிஜன் என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் காந்திஜியே கூறுகிறார்:
'ஹரிஜன்' என்பதன் அர்த்தம் ஆண்டவனின் அருளை நேரடியாகப் பெறக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதுதான். தெய்வமே துணைக்கு நிற்கும் ஜனங்கள் என்று குறிப்பிட மிகப் பொருத்தமானவர்களாக நான் நினைப்பது இந்த நாதியற்ற, நலிவுற்ற, இழிவாகக் கருதப்படுகின்ற ஜனங்களைத்தான் (ஹரிஜன், 11.2.1933).
ஆனால், காந்திஜியின் விளக்கங்களுக்கு அன்று முதல் இன்றுவரை எழுந்த எதிர்ப்புக் குரல்கள் ஓயவேயில்லை. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. 1939இல் நார்சி மேத்தா என்ற குஜராத்திக் கவிஞர், தனது நாவலில் கோவிலுக்குப் பெட்டுக் கட்டி விடப் பட்டப் பெண்களையும் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் 'ஹரிஜன்' என்று குறிப்பிடுகிறார். அதாவது, தகப்பன் பெயர் தெரியாத தாசிமக்கள் அனைவரும் 'ஹரிஜன்கள்' என்று தெளிவாகச் சொல்கிறார். எனவே, 'ஹரிஜன்' என்று குறிப்பது கடவுளின் பிள்ளை என்ற பொருளிலன்று; மாறக, தாசிமகன் என்ற பொருளிலாம் என்று அறச் சீற்றம் கொள்கிறார் புனிதப்பாண்டியன். ['தலித் மக்களா? தாசி மக்களா?' தலித் அரசியல் தொகுப்பு]. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்று காந்திஜி பெயரிட்டழைத்ததை டாக்டர் அம்பேத்கர் வெறுத்தார். "தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்த வர்ணத்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா?" என்று அப்போதே எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார். குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவேதான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார். "காந்தியடிகள் உருவாக்கிய ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்ற வார்த்தையே தவறானது; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அதனால்தான் நான் உ.பியில் ஆட்சிக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை நீக்கி விட்டு தலித் என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டேன்" என்று சண்டிகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் அமர்வில் உ.பி. முதல்வர் மாயாவதி பேசியது, 'காந்தி மீது மாயாவதி பாய்ச்சல்' என்ற தலைப்புச் செய்தியாகக் கடந்த 28.10.2007இல் வெளியானது. அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் தி.மு.கழகத்திலிருந்து விலகி 1975இல் ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கிய, மறைந்த சத்தியவாணிமுத்து அம்மையாரும் காந்திஜியை 'ஹரிஜன்' பெயர் சூட்டல் காரணத்துக்காகக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு ஹரிஜன் என்று பெயரிட்டு, அதே பெயரில் இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டோரே பேசி இருக்கின்றனர்; பாடி இருக்கின்றனர்; எழுதியுமிருக்கின்றனர்.
"சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்குதவும் - அது தாழ்ந்தவரைக் கை தூக்குமோ"
என்று மணிநீலன் (முத்துக்கிருஷ்ணன்) என்பவர் பாடல் எழுதினார். அவரெழுதிய நூலுக்குப் பெயரே 'காந்தி கண்டன கீதம்' என்பதாகும். (உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1932, பக்கம்.11). "தலித்துகளை ஹரிஜன் என்று அழைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதில் 'ஆதி தமிழர்' என்று அழைக்க வேண்டும். அதுதான் சரியான சொல்லாக இருக்க முடியும்" என்று திருத்தம்(?) கொண்டு வந்திருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார். அதாவது, இந்தியா முழுதும் வாழும் ஹரிஜனங்கள் எந்த மொழி பேசினாலும் அவர்களுக்கு 'ஆதித் தமிழர்' என்பதுதான் பெயராம். சங்கராச்சாரியாரின் திருத்தம்(?) வேடிக்கையாக இருக்கும் அதேவேளை, காந்திஜியின் கதியை நினைத்துப் பார்க்கையில் மத்தளத்து உவமைதான் நினைவுக்கு வருகிறது. 

*** 
தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்திஜியால் ஒரு சமுதாயத்துக்கு நன்னோக்கில் சூட்டப் பட்டப் பெயருக்கே இவ்வளவு கண்டனங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றவெனில், முஸ்லிம்களின் சமயநெறிப் பெயரான இஸ்லாம் என்பதை 'முகமதியம்' என்றும் முஸ்லிம்களை 'முகமதியர்' என்றும் திரும்பத் திரும்ப எழுதித் திரிபுவாதம் செய்யும் மலர் மன்னனுக்குக் கண்டனங்கள் பதிவு செய்யப் படவேண்டாவா? எதைப் பற்றி எழுதினாலும் தொடர்பு இருந்தாலும் இல்லா விட்டாலும் 'முகமதிய மதம்', 'முகமதியர்' பற்றி மறவாமல் கட்டுரைக்குள் குறிப்பு வைத்து விடுவது மலர் மன்னனின் வழக்கமான திரிபுவாத உத்தியாகும். இதை நான் மிகைப்பட எழுதுவதாக யாரும் நினைத்தால் திண்ணையின் தேடுபொறியில் 'முகமதிய' என்ற சொல்லை இட்டுப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். திண்ணையில் நான் தேடிப் பார்த்த வகையில் மலர் மன்னனுக்கு அடுத்தபடியாக வருபவர் முஸ்லிம்களைத் 'துருக்கர்' என்றும் 'முகமதியர்' என்றும் வெறுப்பை உமிழ்ந்து, மலர் மன்னனுக்கு முன்னோடியாக எழுதி வைத்த பாரதியார்.
பாரதி எழுதுகிறார்: 'திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்' ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது. திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான். 1791இல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ: 'There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offence like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras.' இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள், 40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான். பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து. இவ்வெறுப்பின் உச்சத்தை 'சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ' பாடலில் பரக்கக் காணலாம்.
(கற்பக வினாயகம் அவர்களின் திண்ணைப் பதிவிலிருந்து). சென்ற திண்ணை இதழில் மலர் மன்னனது டெக்னிக், கட்டுரைத் தலைப்பிலேயே இடம் பிடித்து விட்டதால் அவருடைய திரிபுவாதத்துக்கு எதிர்வினையாற்றுவது எனக்குக் கடமையானது. "இஸ்லாத்தை 'முகமதிய மதம்' என்றும் முஸ்லிம்களை 'முகமதியர்' என்றும் குறிப்பது குடி முழுகி விடும் தவறா?" என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக் கூடும். கிருத்துவம் தோன்றி 2007 ஆண்டுகளே ஆகின்றன என்பதைக் கிருத்துவர்கள் ஒப்புக் கொள்ளக் கூடும். இஸ்லாம் தோன்றி 1430 ஆண்டுகளே ஆகின்றன என்ற கருத்தில் சில அரை வேக்காடுகள் புலம்பி வைக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் அதை ஒப்புக் கொள்ள மாட்டான்; ஒப்புக் கொண்டால் வரலாற்றின் குடி முழுகித்தான் போகும்.
சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:31, 007:025].
என்று நான் ஏற்கனவே திண்ணையில் பொதுவாக எழுதி இருந்ததைப் படிக்க மலர் மன்னனுக்கு வாய்த்திருக்காது. வாய்த்திருந்தாலும் தனது தவறான கருத்தை நிறுவுவதற்கு, 'முகமதிய மதம்', 'முகமதியர்' என்று திரிபுவாதத்தை வேண்டுமென்றே மலர் மன்னன் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. "என்னது? வேண்டுமென்றே செய்கிறாரா?" என்ற ஐயம் வாசகர்களுக்கு எழலாம். வேண்டுமென்றேதான் செய்து கொண்டிருக்கிறார்:
"There is no doubt in my mind that in the majority of quarrels the Hindus come out second best. But my own experience confirms the opinion that the Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward. I have noticed this in railway trains, on public roads, and in the quarrels which I had the privilege of settling. Need the Hindu blame the Mussalman for his cowardice? Where there are cowards, there will always be bullies. They say that in Saharanpur the Mussalmans looted houses, broke open safes and, in one case, a Hindu woman's modesty was outraged. Whose fault was this? Mussalmans can offer no defence for the execrable conduct, it is true. But I, as a Hindu, am more ashamed of Hindu cowardice than I am angry at the Mussalman bullying. Why did not the owners of the houses looted die in the attempt to defend their possessions? Where were the relatives of the outraged sister at the time of the outrage? Have they no account to render of themselves? My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice." "Hindu-Muslim Tension: Its Cause and Cure", Young India, 29/5/1924; Reproduced in M.K. Gandhi: The Hindu-Muslim Unity, p.35-36.
மலர் மன்னனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு:
முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையிலான) பெரும்பாலான சண்டை சச்சரவுகளில் ஹிந்துக்கள் இரண்டாம் இடத்தைத்தான் வகிக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சொல்லிவைத்தாற்போல் ஒரு முகமதியன் அடாவடிப் பேர்வழியாகவும், ஒரு ஹிந்து கோழையாகவுமே இருக்கிறார்கள் என்பதை என் சொந்த அனுபவப்பூர்வமாகவே அறிந்துள்ளேன். அது ரயிலானாலும் சரி, பொதுவான சாலையானாலும் சரி, நான் தீர்த்துவைக்கும் சண்டை சச்சரவானாலும் சரி, நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஒரு ஹிந்து தனது கோழைத்தனத்திற்காக முகமதியனை ஏன் குறைகூறவேண்டும்? எங்கு கோழைகள் இருக்கிறார்களோ அங்கு அடாவடிப் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். சஹாரன்பூரில் முகமதியர் (ஹிந்துக்களின்)வீடுகளைச் சூறையாடியதாகவும், பெட்டகங்களை உடைத்ததாகவும், ஒரு இடத்தில் ஒரு ஹிந்துப் பெண்மணி மானபங்கம் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இது யாருடைய தவறு? தங்களுடைய அத்துமீறிய நடத்தைக்கு முகமதியர்களால் சமாதானம் சொல்ல இயலாது என்பது உண்மைதான். ஆனால் ஒரு ஹிந்து என்கிற முறையில், முகமதியரின் அடாவடிச் செயலுக்காக அவர்கள் மீது ஆத்திரம் வருவதைவிட ஹிந்துக்களின் கோழைத்தனத்தைக் கண்டு எனக்கு வெட்கம்தான் வருகிறது. பறிகொடுத்த (ஹிந்துக்களான)வீட்டுச்சொந்தக்காரர்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரிழக்காதது ஏன்? தங்கள் சகோதரி மானபங்கம் செய்யப்பட்ட சமயத்தில் அவளுடைய உறவினர்கள் எங்கு போயிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் பொறுப்பு ஏதும் இல்லையா? என்னுடைய அஹிம்சைக் கொள்கை ஆபத்துக் காலத்தில் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய அன்பிற்குரியோரை அம்போவென விட்டுவிட்டு ஓடிப் போவது அல்ல. வன்முறையா, கோழைத்தனமாக ஓடிப் போதலா, இரண்டில் எதைத் தேர்வது என்கிற கேள்வி எழுமானால் கோழைத்தனத்தைக் காட்டிலும் வன்முறையினையே நான் தேர்ந்தெடுப்பேன்.
ஆங்கில மூலத்திலுள்ள சொற்களான 'Muslim' மற்றும் காந்திஜி பயன் படுத்திய Mussalman ஆகிய சொற்களைத் தமிழில் எழுத வேண்டுமானால் முஸ்லிம்கள் என்றல்லவா மொழி பெயர்க்க வேண்டும்? மலர் மன்னன் எந்தச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார் [சுட்டி-11] என்பதைக் கவனித்தால் அவருடைய டெக்னிக் அல்லது திருகுதாளம் தெளிவாகத் தெரிய வரும். கொஞ்சம்போல் இந்தி மொழி தெரிந்தவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் "ஹிந்தி ஹம் ஹை" என்ற உருதுக் கவிஞர் இக்பாலின் கவிதைக்கு "நாம் இந்தியர்கள்" என்று செம்மாந்துச் சொல்லும் தமிழ்ப் பொருள் கொள்ளலாகாதாம். மாறாக, "நாம் இந்துக்கள்" என்பதுதான் அஸ்லீ தர்ஜுமாவாம், இந்தியா முழுக்கச் சுற்றி வந்த செய்தியாளர் மலர் மன்னன் சொல்கிறார். காந்திஜியின் 'முஸல்மான்' என்ற சொல்லையே 'முகமதியர்' என்று மொழி பெயர்த்தவருக்கு, கவி இக்பாலின் 'ஹிந்தி'யை 'இந்து'வாக்குவது பெரிய வித்தையா என்ன? ஆனால், உண்மை நிலை வேறாகவன்றோ இருக்கிறது? இந்தியர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக 'இந்து' என்று குறிப்பிட்டுத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் 'இந்துத்துவா'க்கள், தம் தெற்குத் தஞ்சைப் பகுதிச் சுற்றுப் பயணத்தின்போது, "நான் இந்துவல்ல; மனிதன்" என்று முகத்திலறையும் அறிவிப்புப் பலகைகள் தொங்கும் வீடுகளைக் கவனித்திருக்க மாட்டார்கள்.

 ***
 கடந்த 29.12.2007 ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில், 'அரசியல் சீர்திருத்தம்' என்ற தலைப்பின் கீழ் கரண் தாப்பர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். குஜராத் பொதுத் தேர்தலை அடுத்து மாநிலக் கட்சிகள் இடதுசாரிகள் மட்டுமின்றி, சாதாரண வாக்காளர்களாகிய நாமும் நம் முன்னிருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளதாகக் அக்கட்டுரையில் கூறுகிறார். மேலும் அவர் கூறுவதாவது:
"ஒன்று, மோடித் திட்டத்தோடும் மோடித்துவாவோடும் இயைந்து, அவற்றை ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லது, காந்தியப் பாரம்பரியத்தில் வந்த சோனியா தலைமை ஏற்று நடத்தும் மோடித்துவாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து விடவேண்டும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தை மோடி நம் மீது வலிந்து திணித்து விட்டார். நம் மீது திணிக்கப் பட்டுள்ள இக்கட்டாயம் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால் மோடியின் பதவி நீக்கம் (ஸடன் ரிமூவல்) ஒன்றே வழி"(சுருக்கம்).
ஆங்கிலத்தில்:
For the rest of us, voters rather than politicians, commentators but not participants, we also have to make a critical choice. We can either accept the idea of Modi and Moditva and adapt and adjust to it, or overcome our concerns with the Gandhi dynasty and Sonia in particular, and join the fight she must lead. If I’m right, the middle ground is shrinking, even disappearing. The emergence of a dominant idea on the saffron front and, in response, the creation of an equal but counterveiling force on the other will squeeze out everything else. The more Moditva grows, the more its opposite has to be strengthened. Increasingly the choice will be one or the other. We will have to take sides. Where does this leave the regional parties and the Left? They may retain their identity, even their present base, but they will have to line-up behind Modi or Sonia, in the saffron camp or the liberal/secular one. They may even have to submerge themselves within the broad appeal of the camp they belong to. Only the sudden removal of Narendra Modi can stop this. For he is the agent forcing this change. And whilst he’s with us, he will do just that. I have no doubt Indian politics after Sunday the 23rd is another country. We have to live with new challenges. Some of us have to accept new leaders.
முழுதும் படிக்கும்போது கட்டுரைத் தலைப்பையும் கவனிக்கவும்: ‘Modification’ of politics. ஒரு பதவியில் இருப்பவர் குறித்து ஆளப் படும் Sudden Removal என்ற சொல்வழக்கு, பதவி நீக்கத்தையே குறித்து நிற்கும்.அதுவும் ஊடகத் துறையில் sudden removal என்பது, 'பதவி நீக்கம்' என்ற பொருளில் வெகு இயல்பாகப் பயன் படுத்தப் படுவதாகும். மலர் மன்னனும் sudden removal என்ற சொல்லை,'திடீரென அகற்றப் படுதல்'என்றே குறிப்பிடுகிறார் -'அலுவலகத்திலிருந்து' என்ற சொல்லை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு.அவ்வாறு மொட்டையாய் எழுதினால்தானே 'முகமதிய பயங்கரவாதி'களைத் தலைப்பில் கொண்டு வந்து,ஆளைத் 'தீர்த்துக் கட்டுதல்' என்று திரிபுப் பொருளை அதற்குக் கொடுத்து எழுத்து பயங்கரவாதம் செய்ய முடியும். மலர் மன்னனின் திரிபுவாதத்தின் அடிப்படையில் ஸடன் ரிமூவலுக்குத் 'தீர்த்துக் கட்டுதல்'எனப் பொருள் கொண்டால் உண்டாகும் அபத்தங்கள் சிலவற்றை வரிசைப் படுத்திப் பார்க்கலாம்: (1) இந்திய வேளாண் ஆய்வுக் கழகத் தலைவர் 'தீர்த்துக் கட்டப் பட்டதற்காக' இந்திய விஞ்ஞானிகள் சென்ற வாரம் அமளியில் ஈடுபட்டனர். Indian scientists are in an uproar over the sudden removal last week of the head of the Indian Council of Agricultural Research (ICAR). (2) பீபிப்பூர் பள்ளிக் கூடத்தில் பணியாற்றிய தலித் சமையற்காரியான பூல் குமாரி ரவட் 'தீர்த்துக் கட்டப் பட்டதன்' பின்னணி குறித்துப் பள்ளி நிர்வாகத்தினர், வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் முதல் அமர்வில் விளக்கம் சொல்ல அழைக்கப் பட்டுள்ளனர். The education and administration officials have been called for the first hearing on Thursday and explain the reason behind her sudden removal. (3) சண்டே அப்ஸர்வர் இதழாசிரியர் ராஜ்பால் அபெநாயக்க 'தீர்த்துக் கட்டப் பட்டதற்காக' எங்களது கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறோம். ...register our concern over the sudden removal of The Sunday Observer editor Rajpal Abenayaka.... (4) பாக்கிஸ்தானின் தலைமை நீதிபதி 'தீர்த்துக் கட்டப் பட்டார்' அடுத்து என்ன? CJ of Pakistan sudden removal. Whats next?. இன்னும் அடுக்கலாம்.ஒவ்வொரு சொற்டொருக்கும் முன்னால் சுவாரஸ்யம் வேண்டுமென விரும்பும் வாசகர்கள், 'முகமதிய பயங்கரவாதிகளால்' என்று சேர்த்துக் கொள்க! கரண் தாப்பரின் ஸடன் ரிமூவல் வெளியாகி இரண்டு வாரத்தை நெருங்கும் இந்நாள் வரையிலும் ஒரு 'தீர்த்துக் கட்ட சதி'வழக்கோ 'கொலை முயற்சி வழக்கோ 'தூண்டுதல்'வழக்கோ அட் லீஸ்ட் ஒரு நியூஸென்ஸ் வழக்கோ அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்படாத மர்மம் என்னவென்றால்,மலர் மன்னன் திரித்துக் கூறும் பொருளில் ஸடன் ரிமூவல் அந்த இடத்தில் பயன் படுத்தப் படவில்லை என்பதும் appointஇன் எதிர்மறைச் சொல்லான removalஐத்தான் அங்குத் தாப்பர் பயன் படுத்தி இருக்கிறார் என்பதும்தான். 

***

அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குறைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளும் அல்ல. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் மூடன் மூடன்தான், ஆங்கிலம் தெரியாவிடினும் அறிவாளி அறிவாளிதான். ஆங்கிலத்தை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, விஷயம் தெரிந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதால்தான் சங்கடம் வருகிறது. மேலும் ஒரு விஷயம் பற்றி எதுவும் தெரியாவிடினும் எல்லாம் தெரிந்ததுபோல் பேசத் தொடங்குவதாலும் சங்கட முண்டாகிவிடுகிறது. சான்றோர் சபையில் மூடனும் மவுனம் காப்பதால் சான்றோனாகி விடலாம். வீணாக வாயைக் கொடுத்துப் பெயரை கெடுத்துக் கொள்வானேன்?

மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் எதிர்க் கருத்தே கொண்டிருந்தாலும் தமிழுலகில் நன்கு அறியப் பட்ட ஓர் எழுத்தாளரை இப்படி எள்ளி நகையாடி எழுதலாமா? என்று என்னை முறைக்க வேண்டாம்.ஏனெனில், மேற்காணும் எள்ளல் வரிகளுக்குச் சொந்தக்காரர் சாட்சாத் மலர் மன்னன்தான். இனிமேலாவது 'முகமதிய மதம்'என்பதை விடுத்து 'இஸ்லாம்'என்றும் 'முகமதியர்'என்பதற்குப் பகரம் 'முஸ்லிம்கள்'என்றும் மலர் மன்னன் எழுதப் பழகுவார் என்று எதிர் பார்ப்போம். நன்றி!
ஃஃஃ
திண்ணையில் நன்றிகள்: 01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&format=html 02 - http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=653&Itemid=52 03 - http://sugunadiwakar.blogspot.com/2007/03/blog-post_14.html 04 - http://xavi.wordpress.com/2006/12/06/ambedkar/ 05 - http://thatstamil.oneindia.mobi/news/2007/10/28/2339.html 06 - http://tamilcircle.net/tamil_isai_viza_2003/Ajiram_kalam_11.html 07 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20306193&format=html 08 - http://thatstamil.oneindia.in/news/2003/05/24/kanchi.html 09 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html 10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80704196&format=html 11 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=206042112&format=html 12 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712131&edition_id=20071213&format=html 13 - http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=8368a158-42d4-466c-ba71-685eb2bbc204 14 - http://www.sciencemag.org/cgi/content/summary/290/5496/1477c 15 - http://in.news.yahoo.com/071226/48/6ovr6.html 16 - http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19924 17 - http://rabitazone.blogspot.com/2007/03/cj-of-pakistans-sudden-removalwhats.html 18 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20603241&format=html