முகமதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகமதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 23, 2008

கிழிபடும் POAக்கள்

சென்ற வாரத் திண்ணையில் நேச குமாருடைய கடிதம் படித்ததிலிருந்து என் பள்ளித் தோழன் ஜீனா கணேசன் எனது சிந்தனையில் ஒருவார காலமாக இடம் பிடித்துக் கொண்டான். ஜீனா என்பது அவனுடைய இனிஷியல் அல்ல. அவனுக்கு அபார நினைவாற்றல் இருந்தது. எத்தனை முறை எவ்வளவு தெளிவாகச் சொல்லிக் கொடுத்தாலும் ஒருமுறைகூட மறந்து விடாமல் ஜப்பானை "சப்பான்" என்றும் சீனாவை "ஜீனா" என்றும்தான் சொல்லுவான். அதனால் அவனுக்கு எங்கள் வகுப்பாசிரியர் வைத்த பெயர்தான் "ஜீனா கணேசன்".(நாளக்கி ஜிவாசி படம் போடப் போறாங்கடா). ஒருவரை இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்ட 'முஸ்லிம்' என்று ஒப்புக் கொள்வதற்கும் அல்லர் என்று மறுதலிப்பதற்கும் இஸ்லாத்தில் தெளிவான வரையறை உண்டு. அவற்றை மூன்றாவது தடவையாக இங்குப் பதிய வேண்டிய கட்டாயத்துக்கு நேச குமார் என்னைத் தள்ளி விட்டார்:
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.
இயல்பான மனநிலையிலுள்ள, தமிழைப் படிக்கத் தெரிந்த எவருக்கும் எளிதாக விளங்கும்படி நான் எழுதியிருப்பது நேச குமாருக்கு விளங்கவில்லை; பாவம்! "இஸ்லாம் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகமது என்பவரால் அரேபியாவில் தோற்றுவிக்கப் பட்ட புதிய மதம்" என்ற தவறான தகவல் அவருக்குப் பதிந்து போனதால் சரியானதைச் சொல்லிக் கொடுத்தாலும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை, ஜீனா கணேசனைப் போல். மேற்கொண்டு படிப்பதற்கு முன் தொடர்புடைய சில குறிப்புகள்: * 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற தலைப்பில் மலர் மன்னன் திண்ணணயில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். * இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர்களை 'முகமதியர்' என்று குறிப்பது வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில் "இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அரபு நாட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப் பட்ட ஒரு மதமல்ல" என்று நான் மறுப்பெழுதினேன் அதில்,
சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும்"
என்று நான் சார்ந்திருக்கும் சமயம் பற்றிச் சுருங்கக் கூறியிருந்தேன். இன்னும் சுருக்கமான கூடுதல் விளக்கங்கள்:
"இபுராஹீமுக்கு நாம் இஸ்ஹாக்கையும் (அவரிலிருந்து) யஃகூபையும் வழித்தோன்றல்களாக அருளி, அவ்வனைவரையும் நேர்வழியில் செலுத்தினோம். அவர்களுக்கு முன்னர் நூஹையும் அவருடைய வழித்தோன்றல்களான தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம் ..." [அல்குர்ஆன் 006:084]. "மீக்கூறிய அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர்; அவர்கள் ஆதம், நூஹ், இப்ராஹீம், இஸ்ராயீல் (ஆகிய நம் நபிமார்களின்) வழி வந்த நபிமார்களும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களுமாவர் ... [அல்குர்ஆன் 019:058].
* மலர் மன்னனுக்குத் திண்ணையில் மறுப்பெழுதிய கோபால் இராஜாராமும், 'இஸ்லாம் என்பது ஒரு புதிய மதம்' என்று பிழையாகவே விளங்கினார். ஆயினும், "தம்மை இவ்வாறுதான் விளிக்க/குறிக்க வேண்டுமென்று கூறுபவர்களின் கூற்றுப்படியே விளிப்பது/குறிப்பதுதான் முறையாகும்" என்று 'பெயர்கள் அடையாளங்கள் : முகமதியரா முஸ்லீம்களா?' என்ற தலைப்பில் எடுத்துரைத்தார்:
ஒரு சமூகக் குழு எப்படி பெயரிட்டு, எப்படி இனங்காணப் படுகின்றது என்பது, அந்தச் சமூக குழுவின் வரலாற்றையும் மற்றும் அந்த இனக்குழு மற்ற இனக்குழுக்களால் எப்படி அடையாளம் காணப்படுகின்றது என்பதற்கான வரலாற்றையும் பொருத்த விஷயம். முஸ்லிம்கள், "முகமதியர்கள்" என்று அழைக்கப் பட்டதற்கு ஐரோப்பிய வரலாற்றில் காரணங்கள் உண்டு. ஒரு புதிய மதத்தை அதற்கு வெளியே இருப்பவர்கள் அதன் தலைவர் அல்லது வழிகாட்டியை முன்னிறுத்தி அழைப்பது புதிய விஷயம் அல்ல. உலகம் பூராவும் அதுவே நடைமுறை. பௌத்தம் இன்றும் கூட அதனை ஸ்தாபித்தபவர்களின் பெயரால் தான் அறியப் படுகிறது. கிருஸ்துவம் யாரை முன்னிறுத்துகிறதோ அவர் பெயரால் தான் அழைக்கப் படுகிறது. 1965 வரையில் கூட ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி முகம்மதியர் என்ற வார்த்தையை பிரயோகம் செய்து வந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் சமீப காலத்தில் இந்தப் பெயரைத் தவிர்த்து, முஸ்லிம்கள் என்றே அறியப் படவிரும்புகிறார்கள். எனில் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைப்பதே சரியாகும்.
*எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது என்பதாக 'முஸ்லிம்' என்ற தன்மைப் பெயரை மிகச் சுருக்கமாக [சுட்டி-5] எழுதி இருந்தேன். எல்லாருக்கும் எளிதாக விளங்குவது நேச குமாருக்கு மட்டும் விளங்கமல் போய் விடுகிறது. கூடுதல் விளக்கத்துக்காகச் சில உவமைகள்: "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்று அழையுங்கள்" என்று கூறாதவரைக்கும் இஸ்மாயில் என்ற பெயரைத் தன் கையில் பச்சை குத்திக் கொண்டவனை முஸ்லிம் என்று குறிப்பது தவறாகும். ராமசாமி என்ற பெயரைப் பெற்றிருந்த பெரியார் எப்படி இந்து இல்லையோ அதுபோலவே மஸ்தான் என்ற பெயரை மட்டும் முன்னிறுத்தி குணங்குடியை முஸ்லிம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவ்வாறு அழைக்கப் படுவதை அவ்விருவருமே வெறுத்தனர்; மறுத்தனர். இதுவரைக்கும் பேசுபொருள் முகமதியம்/முகமதியர் என்பதாகவே இருந்தது. * 'பாரதி தரிசனம்' என்ற தலைப்பில் கற்பக வினாயகம் எழுதிய திண்ணைக் கட்டுரையில் பாரதியின் 'முகமதிய'த்தை மேற்கோள் காட்டுவதற்காக நான் எடுத்தாண்டபோது அதிலிருந்த 'பார்ப்பன'ரையும் 'சங்கராச்சாரி'யையும் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார், தன்னை அபார்ப்பனர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளும் நேச குமார். பார்ப்பனர் என்பது சாதாரணச் சொல்லாயிருந்து இப்போது வசைச் சொல்லாக மாறிவிட்டதாம்; நேச குமார் சொல்கிறார். ஆனால், மாறிய தேதியையோ மாற்றம் கண்ட காரணத்தையோ அவர் சொல்லவில்லை. சங்க காலக் குறிப்புகளை ஒதுக்கி விட்டு, "நான் பாப்பாத்திதான்" என்று சட்டமன்றத்தில் பெருமை பொங்க அறிவிப்புச் செய்து செருக்கி நின்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திற்குப் பிறகு மாறியிருக்கக் கூடும் என்று வைத்துக் கொண்டாலும் சுமார் 15 ஆண்டு காலமாக அதன் காரணம் மர்மமாக இருக்க வேண்டிய தேவை என்னவென்று தெரியவில்லை. பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல், வசைச் சொல்லாக மாறிய காரணத்தை விடுத்து அது மாறிய காலகட்டத்தைத் துல்லியமாக அறிய முடியா விட்டாலும் சான்றுகளின் அடிப்படையில் குத்து மதிப்பாகக் கணித்து விடலாம். பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல் வசைச் சொல்லாக மாறியது கடந்த சில மாதங்களுக்குள்ளாத்தான் இருக்க வேண்டும் என்று உறுதிபடச் சொல்லலாம். காரணம், மூச்சுக்கு மூச்சு, வரிக்கு வரி, 'பார்ப்பனர்' என்ற சொல்லைப் பயன் படுத்தி, மலர் மன்னன் எழுதிய கட்டுரையான 'தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்' திண்ணையில் வெளியானது 31 மே 2007இல்தான். ஆனால், வசையான சொல்லாக அது வகை பிரிக்கப் பட்டது யாரால்? எப்படி? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது!

"முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு புதிய மதம்தான் இஸ்லாம்" என்ற வரலாற்றுப் பிழை திண்ணையில் இடம் பெற்று, அதுவே வருங்காலத்தில் பிறரால் எடுத்தாளப் படும் ஆவணமாகி விடக் கூடும் என்ற காரணத்தை முன் நிறுத்தியே - அப்பிழையைத் திருத்தும் முயற்சியாகவே - நான் எதிர்வினைகள் ஆற்றி வருகிறேன். முகமதியர்/முகமதியம் என்பன பிழையான சொல்லாட்சிகள் என்பதைச் சொல்லி வைப்பதுதான் எனது எதிர்வினையின் நோக்கமேயன்றி அவை வசைச் சொற்கள் என்பதற்கான வெற்றுக் குமுறலன்று. இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி, முதல் மனிதனில் தொடங்குவதாகும். பிறப்பால் உயர்வு-தாழ்வு என்பதே இஸ்லாத்தில் இல்லை. பிறக்கும்போதே எந்தக் குழந்தையும் சாதி-மத-வருணங்களோடு பிறப்பதில்லை. வளர்ப்பினால் அவை வலிந்து திணிக்கப் படுகின்றன. இதையே,
"எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்..." (புகாரீ 6110).
என்று எங்கள் தலைவரும் இஸ்லாத்தின் இறுதி நபியுமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கமளித்தார். மேற்காணும் காரண காரியங்களோடு, "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஓர் அஹமதியோ, "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஒரு ஷியாவோ, "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஒரு பஹாயோ இங்கு வேண்டுகோள் வைத்தால் மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை 'முஸ்லிம்' என்று விளிப்பதில்/குறிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. எனவே, அஹமதி, ஷியா, பஹாய் போன்றோரின் POA (Power Of Attorney)க்கள் இனிமேல் நேச குமாருக்கு உதவா என்பதால் அவற்றைக் கிழித்துப் போட்டு விடலாம். அஹமதி, ஷியா, பஹாய் ஆடுகள் நனைவது குறித்து அழ வேண்டிய தேவையும் இனிமேல் நேச குமாருக்கு இல்லாமலாகி விட்டது. 

உலகில் எல்லோராலும் இஸ்லாம் எள்ளி நகையாடப் படுகிறதாம். தன் ஒருவரையே உலகம் என்று நினைத்துக் கொண்டு எழுதும் நேச குமார் சொல்கிறார். ஆனால், அவருடைய கருத்தை மறுக்கும் முகமாக, நேச குமாருடைய சென்னை முகவரிவரை அறிந்து வைத்திருக்கும் அவரின் நண்பர் திண்ணையில் மேற்கோள்களை அடுக்குகின்றார்:
இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது நபியைப் பற்றியும் பிற மதத்தினர், அதுவும் உலகப் புகழ் பெற்ற, அதிகாரத்திலும் அந்தஸ்திலும் இருந்தவர்கள், தலைவர்கள், என்ன சொன்னார்கள் என்று கீழே சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். உண்மை அப்படி இருக்கும்போது இஸ்லாத்தை அசைத்துப் பார்த்துவிட முயலும் முயற்சிகள் எங்கேபோய் முடியும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்:
"அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்" - நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01. "அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது" - ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3. "இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது" - சிஎன்என், டிசம்பர் 15, 1995. "அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவன்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாகப் பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்" - ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998. "இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன்" Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள் - சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167. "அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளின் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது" - டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08. "மனிதர்களுக்கு இடையே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வைத் தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" - ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205. "வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன" - W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix. "இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்" - ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர். முஹம்மது நபி பற்றி, "இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்" - என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா. "இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது. மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது" - லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277. "அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டுவந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை - ஏன் - ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்" - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936). "சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்" - மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33. "அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது" - திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122. "போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்" - பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92. "அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும், அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது" - அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4. "கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்...இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது" - மகாத்மா காந்தி, 'யங் இந்தியா' பத்திரிக்கையில் 1924ல் எழுதியது. "ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார். அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்" - வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920. "ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது" - தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840].
மேற்காண்பவை இஸ்லாத்தையும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான திண்ணையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ள எழுத்துச் சான்றுகள். வெளிச்சான்றுகளும் நிறையவே உள. விரிவஞ்சி அவற்றை இங்குத் தவிர்க்கிறேன். சுட்டிகள் 9-12 வரை ஓய்வு நேரத்தில் காண வேண்டிய காட்சிச் சான்றுகள்.

இறுதியாக, இந்து மதத்தை, "சனாதனக் குட்டை" என்று நான் குறிப்பிட்டதாக அவதூறு எழுதிய நேச குமார், அதற்காகத் திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இல்லையெனில், அவதூறு+ஆட்கொணர்வு வழக்குகளை - திண்ணை/திண்ணையர் சாட்சியாக - நீதிமன்றத்தில் அவர் சந்திக்க நேரலாம் என்பதை அன்போடு சொல்லி வைக்கிறேன்.
ஃஃஃ
திண்ணையில்
தொடர்புடைய சுட்டி
சுட்டிகள்: 01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803135&format=html 02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&edition_id=20080103&format=html 03 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801102&edition_id=20080110&format=html 04 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801241&edition_id=20080124&format=html 05 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802075&edition_id=20080207&format=html 06 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html 07 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20705314&format=html 08 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610062&format=html 09 - http://www.youtubeislam.com/search_result.php?search_id=convert 10 - http://www.youtubeislam.com/search_result.php?search_id=reverts 11 - http://www.youtubeislam.com/channel_detail.php?chid=19 12 - http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=714&Itemid=119

சனி, பிப்ரவரி 09, 2008

முகமதியம்/முகமதியன்

இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, 'கோட்ஸேக்குத் துப்பாக்கி ஏற்பாடு செய்ததே காந்திஜிதான்' என்ற தகவல் கட்டுரை வடிவில் வந்தாலும் வியப்படைந்து விடக்கூடாது. ஏனெனில் அண்மைக் காலமாக காந்திஜியின் வரலாறு அவ்வாறு மாற்றம் பெற்று வருகின்றது.

நிற்க.

முகமதியம்/முகமதியன் விவகாரத்தில் கடைசிச் சாட்சியான காந்திஜியும் கைவிட்டு விட்டச் சூழ்நிலையில், ஆங்கிலேயனிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார் மலர் மன்னன். நம் நாட்டின் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் 'Mohammedan Law' என்ற பெயரில் இருக்கிறதாம். அதனால், "முஸ்லிம்கள் எனப்படுவோருக்குச் சட்டப்படியான பெயர் முகமதியர்தாம்" என்று மலர் மன்னன் நிறுவ முயற்சி செய்திருக்கிறார். செய்த முயற்சியை முழுமையாகச் செய்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும். ஒரு காலத்தில், அதாவது நாட்டு விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கான உரிமைச் சட்டங்கள் 'Anglo-Mohammedan Law' என்ற முழுப் பெயருக்குள் அடங்கி இருந்தன:
Fyzee pointed out that Muslim Personal Law, known earlier as Anglo-Mohammedan law, was itself a product of the inter-action between Islamic jurisprudence and the British colonial legal system, and was, therefore, not equivalent to the shari'ah. In preparing the principles of Anglo-Mohammedan law, colonial jurists drew heavily on British notions of justice, thus modifying traditional jurisprudence in several respects.".
பின்னர், 'Anglo' என்ற சொல் அகற்றப் பட்டு அது 'Mohammedan Law' என்ற பெயரில் சுருங்கியது. அதற்குப் பின்னர் 'Muslim Personal Law' என்றே தற்போது அது அறியப் படுகின்றது. 'Mohammedan' என்பது இந்திய முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயன் வைத்த பெயர் என்ற ஒரு காரணமே போதும், அதை மாற்றியே ஆக வேண்டும் என்பதற்கு. அவன் யார் எங்களுக்குப் பெயர் வைக்க?. இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சட்ட அமைப்பின் பெயர் All India Muslim Personal Law Board (AIMPLB) but not 'Mohammedan Law Board'. இன்னும் இங்குஆங்கிலேய ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு எழுதும் மலர் மன்னனின் வரலாற்று அறிவைப் பற்றி நான் ஏதும் சொல்லிவிடக் கூடாது. "ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான்" கனவில் என்னை சவூதிக்கு அனுப்பி வைக்க முயன்ற மலர் மன்னனுக்கு அங்கு நான் எவ்வாறு அறியப் படுவேன் என்பதை விசாரித்து, அவருடைய கூற்றைத் தவறென நிறுவி இருந்தேன். ஒன்று, தாம் கூறியதே சரியானது என்பதைச் சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், நான் விசாரித்தறிந்த தகவல் பொய்யானது என்றாவது சொல்ல வேண்டும். இங்கும் இரண்டில் ஒன்றுதான். இவ்விரண்டையும் விடுத்து இசைக் கலைஞர்கள் சிலரின் பெயரைப் பட்டியலிட்டிருப்பதை எதில் சேர்ப்பது? எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது.
ஆதியந்தம் கடந்த உமையாள் தன் பாதம் அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம் சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம் தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றி செய்து ...
பாடிய (தாயுமானவரின் தத்துப் பிள்ளையான) குணங்குடியை முழுமையான இந்துவாகவே மலர் மன்னன் வரித்துக் கொள்ளலாம்; எதிர்ப் பேச்சே இல்லை. இறுதியாக, மலர் மன்னன் கேட்டிருந்த ஃபத்வா விஷயத்துக்கு வரலாம். வன்முறையும் பயங்கரவாதமும் மதங்களற்றவை. அவற்றை யார் செய்தாலும் குற்றமே. "அநியாயமாக ஒரு மனிதனைக் கொல்பவன் உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் கொலை செய்தவனுக்கு ஒப்பாவான்" என்று எங்கள் இறைமறை கூறுகிறது:
"திண்ணமாக, ஒரு கொலைக்குப் பதிலாகவோ உலகில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, ஒருவனைக் கொலை செய்கிற இன்னொருவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் -அல் குர்ஆன் [005:032].
("முகமதியக் கடவுளான அல்லாஹ், யூதர்களான இஸ்ரவேலர்களுக்கு விதிப்பதெப்படி?" என்று மலர் மன்னன் சிந்திக்காமலா போவார்?) இனி, திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமியின் கருத்து:
இஸ்லாம் அமைதியான மார்க்கம்தான். ஆனால் நீங்கள் அடித்தால் நாங்கள் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று அதற்குப் பொருளல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொன்ன இயேசுகூட ஒரு கட்டத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டியதாக புனித பைபிள் கூறுகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றால் சாதாரணமாக அது கொலை என்று சொல்லப்படுகிறது. அதையே போர்க்களத்தில் ஒரு ராணுவ வீரன் செய்தால் அது நாட்டுப் பற்று என்றும் தியாகம் என்றும் பாராட்டப்படுகிறது. போலீஸ் 'என்கௌண்ட'ரில் ஒரு தாதா சுட்டுக் கொல்லப்பட்டால் அதையும் சட்டம் கொலை என்று சொல்வதில்லை. தூக்கு தண்டனை கொடுப்பதை கொலை என்று சட்டம் சொல்வதில்லை. ஆனால் இந்த எல்லா உதாரணங்களிலுமே போவது மனித உயிர்கள்தான்.
செயல் நடக்கும் இடத்தைப் (context) பொறுத்து வரையறைகள், இலக்கணங்கள், அளவுகோல்கள் மாறும். மாற வேண்டும். அதுதான் அறிவுடைமை. நீதிமன்றங்களும், தண்டனைகளும், காவல் நிலையங்களும், சட்டங்களும் இருப்பது இதற்காகத்தான். நீங்கள் என்னை என் வீட்டில் வந்து அடிக்க வந்தீர்களென்றால் உங்களைத் திருப்பி அடிக்கும் உரிமையோ அல்லது குறைந்த பட்சமாக என்னை உங்கள் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையோ எனக்கு இருக்கிறது. அமைதி மார்க்கம் என்று சொல்லி கோழையாக இருந்து உயிரை விட அங்கே அனுமதி இல்லை.
இஸ்லாமிய ஃபத்வா என்பது என்ன என்பதை, 'பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்' என்ற எனது திண்ணைக் கட்டுரையில் விளக்கி இருந்தேன்; நேரமிருப்பின் பார்வையிடலாம். நன்றி!.
ஃஃஃ
சுட்டிகள்: 1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801315&format=html 2 - http://www.milligazette.com/Archives/2004/16-31Aug04-Print-Edition/163108200454.htm 3 - http://nrcw.nic.in/shared/sublinkimages/60.htm 4 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610062&format=html 5 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html

வியாழன், ஜனவரி 10, 2008

காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்

சென்ற வாரத் திண்ணையில் 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற கட்டுரை படிக்க நேர்ந்தது. 'தீவிரவாதம்' மற்றும் 'பயங்கரவாதம்' என்ற வருமொழிச் சொல்லாடல்களுக்கு 'இஸ்லாமிய' என்பது நிலைமொழியாக நிறுத்தப் படுவதன் அயோக்கியத்தனத்தைக் குறித்துக் கடந்த 04.10.2007 குங்குமம் இதழில் திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமி சுருக்கமாகத் தொட்டுக் காட்டி விட்டதால், இங்குத் தலையாய பேசுபொருள் 'முகமதியம்/முகமதியர்' என்ற திரிபுவாதம் மட்டுமே. சரி, காந்திஜியும் ஹரிஜனும் இங்கெதெற்கு? என்ற கேள்வி வரலாம். தாழ்த்தப் பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்ற பெயரை முதலில் வழங்கியவராக காந்திஜி அறியப் படுகிறார். ஹரிஜன் என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் காந்திஜியே கூறுகிறார்:
'ஹரிஜன்' என்பதன் அர்த்தம் ஆண்டவனின் அருளை நேரடியாகப் பெறக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதுதான். தெய்வமே துணைக்கு நிற்கும் ஜனங்கள் என்று குறிப்பிட மிகப் பொருத்தமானவர்களாக நான் நினைப்பது இந்த நாதியற்ற, நலிவுற்ற, இழிவாகக் கருதப்படுகின்ற ஜனங்களைத்தான் (ஹரிஜன், 11.2.1933).
ஆனால், காந்திஜியின் விளக்கங்களுக்கு அன்று முதல் இன்றுவரை எழுந்த எதிர்ப்புக் குரல்கள் ஓயவேயில்லை. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. 1939இல் நார்சி மேத்தா என்ற குஜராத்திக் கவிஞர், தனது நாவலில் கோவிலுக்குப் பெட்டுக் கட்டி விடப் பட்டப் பெண்களையும் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் 'ஹரிஜன்' என்று குறிப்பிடுகிறார். அதாவது, தகப்பன் பெயர் தெரியாத தாசிமக்கள் அனைவரும் 'ஹரிஜன்கள்' என்று தெளிவாகச் சொல்கிறார். எனவே, 'ஹரிஜன்' என்று குறிப்பது கடவுளின் பிள்ளை என்ற பொருளிலன்று; மாறக, தாசிமகன் என்ற பொருளிலாம் என்று அறச் சீற்றம் கொள்கிறார் புனிதப்பாண்டியன். ['தலித் மக்களா? தாசி மக்களா?' தலித் அரசியல் தொகுப்பு]. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்று காந்திஜி பெயரிட்டழைத்ததை டாக்டர் அம்பேத்கர் வெறுத்தார். "தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்த வர்ணத்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா?" என்று அப்போதே எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார். குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவேதான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார். "காந்தியடிகள் உருவாக்கிய ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்ற வார்த்தையே தவறானது; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அதனால்தான் நான் உ.பியில் ஆட்சிக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை நீக்கி விட்டு தலித் என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டேன்" என்று சண்டிகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் அமர்வில் உ.பி. முதல்வர் மாயாவதி பேசியது, 'காந்தி மீது மாயாவதி பாய்ச்சல்' என்ற தலைப்புச் செய்தியாகக் கடந்த 28.10.2007இல் வெளியானது. அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் தி.மு.கழகத்திலிருந்து விலகி 1975இல் ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கிய, மறைந்த சத்தியவாணிமுத்து அம்மையாரும் காந்திஜியை 'ஹரிஜன்' பெயர் சூட்டல் காரணத்துக்காகக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு ஹரிஜன் என்று பெயரிட்டு, அதே பெயரில் இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டோரே பேசி இருக்கின்றனர்; பாடி இருக்கின்றனர்; எழுதியுமிருக்கின்றனர்.
"சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்குதவும் - அது தாழ்ந்தவரைக் கை தூக்குமோ"
என்று மணிநீலன் (முத்துக்கிருஷ்ணன்) என்பவர் பாடல் எழுதினார். அவரெழுதிய நூலுக்குப் பெயரே 'காந்தி கண்டன கீதம்' என்பதாகும். (உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1932, பக்கம்.11). "தலித்துகளை ஹரிஜன் என்று அழைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதில் 'ஆதி தமிழர்' என்று அழைக்க வேண்டும். அதுதான் சரியான சொல்லாக இருக்க முடியும்" என்று திருத்தம்(?) கொண்டு வந்திருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார். அதாவது, இந்தியா முழுதும் வாழும் ஹரிஜனங்கள் எந்த மொழி பேசினாலும் அவர்களுக்கு 'ஆதித் தமிழர்' என்பதுதான் பெயராம். சங்கராச்சாரியாரின் திருத்தம்(?) வேடிக்கையாக இருக்கும் அதேவேளை, காந்திஜியின் கதியை நினைத்துப் பார்க்கையில் மத்தளத்து உவமைதான் நினைவுக்கு வருகிறது. 

*** 
தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்திஜியால் ஒரு சமுதாயத்துக்கு நன்னோக்கில் சூட்டப் பட்டப் பெயருக்கே இவ்வளவு கண்டனங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றவெனில், முஸ்லிம்களின் சமயநெறிப் பெயரான இஸ்லாம் என்பதை 'முகமதியம்' என்றும் முஸ்லிம்களை 'முகமதியர்' என்றும் திரும்பத் திரும்ப எழுதித் திரிபுவாதம் செய்யும் மலர் மன்னனுக்குக் கண்டனங்கள் பதிவு செய்யப் படவேண்டாவா? எதைப் பற்றி எழுதினாலும் தொடர்பு இருந்தாலும் இல்லா விட்டாலும் 'முகமதிய மதம்', 'முகமதியர்' பற்றி மறவாமல் கட்டுரைக்குள் குறிப்பு வைத்து விடுவது மலர் மன்னனின் வழக்கமான திரிபுவாத உத்தியாகும். இதை நான் மிகைப்பட எழுதுவதாக யாரும் நினைத்தால் திண்ணையின் தேடுபொறியில் 'முகமதிய' என்ற சொல்லை இட்டுப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். திண்ணையில் நான் தேடிப் பார்த்த வகையில் மலர் மன்னனுக்கு அடுத்தபடியாக வருபவர் முஸ்லிம்களைத் 'துருக்கர்' என்றும் 'முகமதியர்' என்றும் வெறுப்பை உமிழ்ந்து, மலர் மன்னனுக்கு முன்னோடியாக எழுதி வைத்த பாரதியார்.
பாரதி எழுதுகிறார்: 'திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்' ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது. திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான். 1791இல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ: 'There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offence like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras.' இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள், 40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான். பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து. இவ்வெறுப்பின் உச்சத்தை 'சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ' பாடலில் பரக்கக் காணலாம்.
(கற்பக வினாயகம் அவர்களின் திண்ணைப் பதிவிலிருந்து). சென்ற திண்ணை இதழில் மலர் மன்னனது டெக்னிக், கட்டுரைத் தலைப்பிலேயே இடம் பிடித்து விட்டதால் அவருடைய திரிபுவாதத்துக்கு எதிர்வினையாற்றுவது எனக்குக் கடமையானது. "இஸ்லாத்தை 'முகமதிய மதம்' என்றும் முஸ்லிம்களை 'முகமதியர்' என்றும் குறிப்பது குடி முழுகி விடும் தவறா?" என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக் கூடும். கிருத்துவம் தோன்றி 2007 ஆண்டுகளே ஆகின்றன என்பதைக் கிருத்துவர்கள் ஒப்புக் கொள்ளக் கூடும். இஸ்லாம் தோன்றி 1430 ஆண்டுகளே ஆகின்றன என்ற கருத்தில் சில அரை வேக்காடுகள் புலம்பி வைக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் அதை ஒப்புக் கொள்ள மாட்டான்; ஒப்புக் கொண்டால் வரலாற்றின் குடி முழுகித்தான் போகும்.
சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:31, 007:025].
என்று நான் ஏற்கனவே திண்ணையில் பொதுவாக எழுதி இருந்ததைப் படிக்க மலர் மன்னனுக்கு வாய்த்திருக்காது. வாய்த்திருந்தாலும் தனது தவறான கருத்தை நிறுவுவதற்கு, 'முகமதிய மதம்', 'முகமதியர்' என்று திரிபுவாதத்தை வேண்டுமென்றே மலர் மன்னன் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. "என்னது? வேண்டுமென்றே செய்கிறாரா?" என்ற ஐயம் வாசகர்களுக்கு எழலாம். வேண்டுமென்றேதான் செய்து கொண்டிருக்கிறார்:
"There is no doubt in my mind that in the majority of quarrels the Hindus come out second best. But my own experience confirms the opinion that the Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward. I have noticed this in railway trains, on public roads, and in the quarrels which I had the privilege of settling. Need the Hindu blame the Mussalman for his cowardice? Where there are cowards, there will always be bullies. They say that in Saharanpur the Mussalmans looted houses, broke open safes and, in one case, a Hindu woman's modesty was outraged. Whose fault was this? Mussalmans can offer no defence for the execrable conduct, it is true. But I, as a Hindu, am more ashamed of Hindu cowardice than I am angry at the Mussalman bullying. Why did not the owners of the houses looted die in the attempt to defend their possessions? Where were the relatives of the outraged sister at the time of the outrage? Have they no account to render of themselves? My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice." "Hindu-Muslim Tension: Its Cause and Cure", Young India, 29/5/1924; Reproduced in M.K. Gandhi: The Hindu-Muslim Unity, p.35-36.
மலர் மன்னனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு:
முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையிலான) பெரும்பாலான சண்டை சச்சரவுகளில் ஹிந்துக்கள் இரண்டாம் இடத்தைத்தான் வகிக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சொல்லிவைத்தாற்போல் ஒரு முகமதியன் அடாவடிப் பேர்வழியாகவும், ஒரு ஹிந்து கோழையாகவுமே இருக்கிறார்கள் என்பதை என் சொந்த அனுபவப்பூர்வமாகவே அறிந்துள்ளேன். அது ரயிலானாலும் சரி, பொதுவான சாலையானாலும் சரி, நான் தீர்த்துவைக்கும் சண்டை சச்சரவானாலும் சரி, நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஒரு ஹிந்து தனது கோழைத்தனத்திற்காக முகமதியனை ஏன் குறைகூறவேண்டும்? எங்கு கோழைகள் இருக்கிறார்களோ அங்கு அடாவடிப் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். சஹாரன்பூரில் முகமதியர் (ஹிந்துக்களின்)வீடுகளைச் சூறையாடியதாகவும், பெட்டகங்களை உடைத்ததாகவும், ஒரு இடத்தில் ஒரு ஹிந்துப் பெண்மணி மானபங்கம் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இது யாருடைய தவறு? தங்களுடைய அத்துமீறிய நடத்தைக்கு முகமதியர்களால் சமாதானம் சொல்ல இயலாது என்பது உண்மைதான். ஆனால் ஒரு ஹிந்து என்கிற முறையில், முகமதியரின் அடாவடிச் செயலுக்காக அவர்கள் மீது ஆத்திரம் வருவதைவிட ஹிந்துக்களின் கோழைத்தனத்தைக் கண்டு எனக்கு வெட்கம்தான் வருகிறது. பறிகொடுத்த (ஹிந்துக்களான)வீட்டுச்சொந்தக்காரர்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரிழக்காதது ஏன்? தங்கள் சகோதரி மானபங்கம் செய்யப்பட்ட சமயத்தில் அவளுடைய உறவினர்கள் எங்கு போயிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் பொறுப்பு ஏதும் இல்லையா? என்னுடைய அஹிம்சைக் கொள்கை ஆபத்துக் காலத்தில் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய அன்பிற்குரியோரை அம்போவென விட்டுவிட்டு ஓடிப் போவது அல்ல. வன்முறையா, கோழைத்தனமாக ஓடிப் போதலா, இரண்டில் எதைத் தேர்வது என்கிற கேள்வி எழுமானால் கோழைத்தனத்தைக் காட்டிலும் வன்முறையினையே நான் தேர்ந்தெடுப்பேன்.
ஆங்கில மூலத்திலுள்ள சொற்களான 'Muslim' மற்றும் காந்திஜி பயன் படுத்திய Mussalman ஆகிய சொற்களைத் தமிழில் எழுத வேண்டுமானால் முஸ்லிம்கள் என்றல்லவா மொழி பெயர்க்க வேண்டும்? மலர் மன்னன் எந்தச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார் [சுட்டி-11] என்பதைக் கவனித்தால் அவருடைய டெக்னிக் அல்லது திருகுதாளம் தெளிவாகத் தெரிய வரும். கொஞ்சம்போல் இந்தி மொழி தெரிந்தவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் "ஹிந்தி ஹம் ஹை" என்ற உருதுக் கவிஞர் இக்பாலின் கவிதைக்கு "நாம் இந்தியர்கள்" என்று செம்மாந்துச் சொல்லும் தமிழ்ப் பொருள் கொள்ளலாகாதாம். மாறாக, "நாம் இந்துக்கள்" என்பதுதான் அஸ்லீ தர்ஜுமாவாம், இந்தியா முழுக்கச் சுற்றி வந்த செய்தியாளர் மலர் மன்னன் சொல்கிறார். காந்திஜியின் 'முஸல்மான்' என்ற சொல்லையே 'முகமதியர்' என்று மொழி பெயர்த்தவருக்கு, கவி இக்பாலின் 'ஹிந்தி'யை 'இந்து'வாக்குவது பெரிய வித்தையா என்ன? ஆனால், உண்மை நிலை வேறாகவன்றோ இருக்கிறது? இந்தியர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக 'இந்து' என்று குறிப்பிட்டுத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் 'இந்துத்துவா'க்கள், தம் தெற்குத் தஞ்சைப் பகுதிச் சுற்றுப் பயணத்தின்போது, "நான் இந்துவல்ல; மனிதன்" என்று முகத்திலறையும் அறிவிப்புப் பலகைகள் தொங்கும் வீடுகளைக் கவனித்திருக்க மாட்டார்கள்.

 ***
 கடந்த 29.12.2007 ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில், 'அரசியல் சீர்திருத்தம்' என்ற தலைப்பின் கீழ் கரண் தாப்பர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். குஜராத் பொதுத் தேர்தலை அடுத்து மாநிலக் கட்சிகள் இடதுசாரிகள் மட்டுமின்றி, சாதாரண வாக்காளர்களாகிய நாமும் நம் முன்னிருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளதாகக் அக்கட்டுரையில் கூறுகிறார். மேலும் அவர் கூறுவதாவது:
"ஒன்று, மோடித் திட்டத்தோடும் மோடித்துவாவோடும் இயைந்து, அவற்றை ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லது, காந்தியப் பாரம்பரியத்தில் வந்த சோனியா தலைமை ஏற்று நடத்தும் மோடித்துவாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து விடவேண்டும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தை மோடி நம் மீது வலிந்து திணித்து விட்டார். நம் மீது திணிக்கப் பட்டுள்ள இக்கட்டாயம் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால் மோடியின் பதவி நீக்கம் (ஸடன் ரிமூவல்) ஒன்றே வழி"(சுருக்கம்).
ஆங்கிலத்தில்:
For the rest of us, voters rather than politicians, commentators but not participants, we also have to make a critical choice. We can either accept the idea of Modi and Moditva and adapt and adjust to it, or overcome our concerns with the Gandhi dynasty and Sonia in particular, and join the fight she must lead. If I’m right, the middle ground is shrinking, even disappearing. The emergence of a dominant idea on the saffron front and, in response, the creation of an equal but counterveiling force on the other will squeeze out everything else. The more Moditva grows, the more its opposite has to be strengthened. Increasingly the choice will be one or the other. We will have to take sides. Where does this leave the regional parties and the Left? They may retain their identity, even their present base, but they will have to line-up behind Modi or Sonia, in the saffron camp or the liberal/secular one. They may even have to submerge themselves within the broad appeal of the camp they belong to. Only the sudden removal of Narendra Modi can stop this. For he is the agent forcing this change. And whilst he’s with us, he will do just that. I have no doubt Indian politics after Sunday the 23rd is another country. We have to live with new challenges. Some of us have to accept new leaders.
முழுதும் படிக்கும்போது கட்டுரைத் தலைப்பையும் கவனிக்கவும்: ‘Modification’ of politics. ஒரு பதவியில் இருப்பவர் குறித்து ஆளப் படும் Sudden Removal என்ற சொல்வழக்கு, பதவி நீக்கத்தையே குறித்து நிற்கும்.அதுவும் ஊடகத் துறையில் sudden removal என்பது, 'பதவி நீக்கம்' என்ற பொருளில் வெகு இயல்பாகப் பயன் படுத்தப் படுவதாகும். மலர் மன்னனும் sudden removal என்ற சொல்லை,'திடீரென அகற்றப் படுதல்'என்றே குறிப்பிடுகிறார் -'அலுவலகத்திலிருந்து' என்ற சொல்லை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு.அவ்வாறு மொட்டையாய் எழுதினால்தானே 'முகமதிய பயங்கரவாதி'களைத் தலைப்பில் கொண்டு வந்து,ஆளைத் 'தீர்த்துக் கட்டுதல்' என்று திரிபுப் பொருளை அதற்குக் கொடுத்து எழுத்து பயங்கரவாதம் செய்ய முடியும். மலர் மன்னனின் திரிபுவாதத்தின் அடிப்படையில் ஸடன் ரிமூவலுக்குத் 'தீர்த்துக் கட்டுதல்'எனப் பொருள் கொண்டால் உண்டாகும் அபத்தங்கள் சிலவற்றை வரிசைப் படுத்திப் பார்க்கலாம்: (1) இந்திய வேளாண் ஆய்வுக் கழகத் தலைவர் 'தீர்த்துக் கட்டப் பட்டதற்காக' இந்திய விஞ்ஞானிகள் சென்ற வாரம் அமளியில் ஈடுபட்டனர். Indian scientists are in an uproar over the sudden removal last week of the head of the Indian Council of Agricultural Research (ICAR). (2) பீபிப்பூர் பள்ளிக் கூடத்தில் பணியாற்றிய தலித் சமையற்காரியான பூல் குமாரி ரவட் 'தீர்த்துக் கட்டப் பட்டதன்' பின்னணி குறித்துப் பள்ளி நிர்வாகத்தினர், வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் முதல் அமர்வில் விளக்கம் சொல்ல அழைக்கப் பட்டுள்ளனர். The education and administration officials have been called for the first hearing on Thursday and explain the reason behind her sudden removal. (3) சண்டே அப்ஸர்வர் இதழாசிரியர் ராஜ்பால் அபெநாயக்க 'தீர்த்துக் கட்டப் பட்டதற்காக' எங்களது கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறோம். ...register our concern over the sudden removal of The Sunday Observer editor Rajpal Abenayaka.... (4) பாக்கிஸ்தானின் தலைமை நீதிபதி 'தீர்த்துக் கட்டப் பட்டார்' அடுத்து என்ன? CJ of Pakistan sudden removal. Whats next?. இன்னும் அடுக்கலாம்.ஒவ்வொரு சொற்டொருக்கும் முன்னால் சுவாரஸ்யம் வேண்டுமென விரும்பும் வாசகர்கள், 'முகமதிய பயங்கரவாதிகளால்' என்று சேர்த்துக் கொள்க! கரண் தாப்பரின் ஸடன் ரிமூவல் வெளியாகி இரண்டு வாரத்தை நெருங்கும் இந்நாள் வரையிலும் ஒரு 'தீர்த்துக் கட்ட சதி'வழக்கோ 'கொலை முயற்சி வழக்கோ 'தூண்டுதல்'வழக்கோ அட் லீஸ்ட் ஒரு நியூஸென்ஸ் வழக்கோ அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்படாத மர்மம் என்னவென்றால்,மலர் மன்னன் திரித்துக் கூறும் பொருளில் ஸடன் ரிமூவல் அந்த இடத்தில் பயன் படுத்தப் படவில்லை என்பதும் appointஇன் எதிர்மறைச் சொல்லான removalஐத்தான் அங்குத் தாப்பர் பயன் படுத்தி இருக்கிறார் என்பதும்தான். 

***

அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குறைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளும் அல்ல. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் மூடன் மூடன்தான், ஆங்கிலம் தெரியாவிடினும் அறிவாளி அறிவாளிதான். ஆங்கிலத்தை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, விஷயம் தெரிந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதால்தான் சங்கடம் வருகிறது. மேலும் ஒரு விஷயம் பற்றி எதுவும் தெரியாவிடினும் எல்லாம் தெரிந்ததுபோல் பேசத் தொடங்குவதாலும் சங்கட முண்டாகிவிடுகிறது. சான்றோர் சபையில் மூடனும் மவுனம் காப்பதால் சான்றோனாகி விடலாம். வீணாக வாயைக் கொடுத்துப் பெயரை கெடுத்துக் கொள்வானேன்?

மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் எதிர்க் கருத்தே கொண்டிருந்தாலும் தமிழுலகில் நன்கு அறியப் பட்ட ஓர் எழுத்தாளரை இப்படி எள்ளி நகையாடி எழுதலாமா? என்று என்னை முறைக்க வேண்டாம்.ஏனெனில், மேற்காணும் எள்ளல் வரிகளுக்குச் சொந்தக்காரர் சாட்சாத் மலர் மன்னன்தான். இனிமேலாவது 'முகமதிய மதம்'என்பதை விடுத்து 'இஸ்லாம்'என்றும் 'முகமதியர்'என்பதற்குப் பகரம் 'முஸ்லிம்கள்'என்றும் மலர் மன்னன் எழுதப் பழகுவார் என்று எதிர் பார்ப்போம். நன்றி!
ஃஃஃ
திண்ணையில் நன்றிகள்: 01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&format=html 02 - http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=653&Itemid=52 03 - http://sugunadiwakar.blogspot.com/2007/03/blog-post_14.html 04 - http://xavi.wordpress.com/2006/12/06/ambedkar/ 05 - http://thatstamil.oneindia.mobi/news/2007/10/28/2339.html 06 - http://tamilcircle.net/tamil_isai_viza_2003/Ajiram_kalam_11.html 07 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20306193&format=html 08 - http://thatstamil.oneindia.in/news/2003/05/24/kanchi.html 09 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html 10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80704196&format=html 11 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=206042112&format=html 12 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712131&edition_id=20071213&format=html 13 - http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=8368a158-42d4-466c-ba71-685eb2bbc204 14 - http://www.sciencemag.org/cgi/content/summary/290/5496/1477c 15 - http://in.news.yahoo.com/071226/48/6ovr6.html 16 - http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19924 17 - http://rabitazone.blogspot.com/2007/03/cj-of-pakistans-sudden-removalwhats.html 18 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20603241&format=html