வெள்ளி, நவம்பர் 15, 2019

கட்டப் பஞ்சாயத்து (அ) பாபரி மஸ்ஜித் தீர்ப்பு 2.0

டந்த 9/11 2.0 19இல் பாபரி மஸ்ஜித் நிலத்துக்கு இரண்டாவது கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வந்திருக்கிறது - இம்முறை உச்ச நீதிமன்றத்திலிருந்து.

முதல் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பைப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள இங்குச் சொடுக்குக!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மொத்தம் 1045 பக்கங்களுடன் வந்துள்ளது. அதன் இறுதிப் பகுதிகள், பக்கம் 920-929 வரையிலுமுள்ள தீர்ப்பின் வாசகங்களின் சுருக்கம்:

1- பாபரி மஸ்ஜித், கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்படவில்லை; ஆனால் அதன் கீழே இருந்தது வேறு ஏதோவொரு புராதனக் கட்டடத்தின் தூண்கள்.

2- 1949 டிசம்பர் மாதம் 22ஆம் நாளின் நள்ளிரவில் அபிராம் தாஸ் எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு கும்பல் பாபரி மஸ்ஜிதுக்குள் அத்துமீறிப் புகுந்து குழந்தை ராமர் சிலையை அங்கு வைத்தது குற்றச் செயலாகும்.

3- 1992 டிசம்பர் மாதம் 6ஆம் நாளில் பாபரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்தவர்கள் குற்றவாளிகள் ஆவர்.

4- 'பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?' எனும் (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் 30.09.2010 அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னவ் பெஞ்ச் வெளியிட்ட தீர்ப்புகள் செல்லாது.

5- பாபர் மஸ்ஜிதுக்குச் சொந்தமான 67 ஏக்கர் நிலமும், இந்த வழக்கின் முதல் வாதியான 'ராம் லல்லா' எனும் குழந்தை ராமருக்குச் சொந்தமானதாகும்.

***

பாபரி மஸ்ஜிதின் உண்மை வரலாறு

(1468)
பாபரி மஸ்ஜிதின் தொடக்கம் பற்றி, "அயோத்தியை ஆட்சி செய்து கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால், 1468இல் கட்டத் தொடங்கப்பட்டது என்று அந்தப் பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது" என்று தொல்லியலாளர் ஷெர்சிங் (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162) ஆவணப் படுத்தியிருக்கின்றார்.

ஷர்க்கிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த லோடி வம்ச மன்னரான இப்ராஹிம் லோடி, அந்தப் பள்ளிவாசலின் பெரும்பகுதியைக் கட்டினார். அப்போதெல்லாம் அந்தப் பள்ளிவாசல், “லோடி மஸ்ஜித்” என்ற பெயரில்தான் அறியப்பட்டது.

(1526)
21 ஏப்ரல் 1526இல் பானிபட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இப்ராஹிம் லோடி, மொகல் வம்சத்து பாபருடன் முதல் பானிபட் யுத்தத்தில் போரிட்ட போது கொல்லப்பட்டார்.

(1528)
இப்ராஹிம் லோடியை வெற்றிகொண்டதன் நினைவாக பாபர், தன் தளபதி மிர் பாகிக்கு உத்தரவிட்டு 1528இல் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டது. அது முதல் அந்தப் பள்ளிவாசல் ‘பாபர் மஸ்ஜித்’ என்று வழங்கப்பட்டது.

“பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் இந்துக் கோயிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜிதைக் கட்டினார்” என்று கி.பி. 1528 முதல் கி.பி. 1853 வரையிலான 325 ஆண்டுகளில் எவரும் குற்றம் சாட்டவில்லை.

(1853)
325 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாக 1853இல் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.

(1857)
வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக ஆற்காட்டு மவ்லவீ அஹ்மதுல்லாஹ் ஷா தமிழகத்திலிருந்து புறப்பட்டு, சென்ற வழியிலேயே விடுதலைக்கான வீர உரையாற்றி ஆயிரக்கணக்கான இந்து-முஸ்லிம் இளைஞர்களைத் தம் "ஜிஹாது"ப் படையோடு அழைத்துக் கொண்டு அயோத்திவரை சென்று ஆங்கிலேயரை எதிர்கொண்டார்.

பிற்காலத்தில் எதிரியாலும் சிலாகிக்கப்பட்டது அஹ்மதுல்லாஹ் ஷாவின் "ஜிஹாத்" வீரம்:
"The Moulvie was a very remarkable man. Of his capacity as a military leader, many proofs were given during the revolt... No other man could boast that he has twice foiled Sir Colin Campbell in the field. -Colonel G.B. Malleson in his 'Indian Mutiny'.

ஒரு கட்டத்தில், ஆங்கிலேயர் படை மவ்லவியால் முற்றுகையிடப்பட்டு உண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் பட்டினி கிடந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் அனுமான் ஹண்ட் கோயில் பூசாரிகளால் உணவு வகையில் உதவியளிக்கப்பட்ட ஆங்கிலேயப்படை, பின்னர் அதற்குப் பிரதியுபகாரமாகப் பூசாரிகளுக்கு ஒரு பரிசு வழங்கினர் - பாபரி பள்ளி வளாகத்தில். அதுதான் 'ராம் சபூட்ரா (இராமர் திண்ணை)'!

That much before 1855 Ram Chabutra and Seeta Rasoi had come into existence and Hindus were worshipping in the same. It was very very unique and absolutely unprecedented situation that in side the boundary wall and compound of the mosque Hindu religious places were there which were actually being worshipped along with offerings of Namaz by Muslims in the mosque.
(அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு 2010).

"பஜனை பாடிக் கொள்ள" என்று கூறி வெள்ளைக்காரனிடம் 'பரிசு' வாங்கிக் கொண்ட ராம் சபூட்ராதான் 1992 டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் முதல் கடப்பாறை.

(1859)
இந்து மகாசபை சந்நியாசிகள், பஜனை பாடுவதாக அவ்வப்போது பதற்றத்தை உருவாக்கினர். ஒரு காலகட்டத்தில் பதற்றம் அதிகரிக்கவே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர். மசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.

(1885)
மஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் முதன் முதலாக ராமருக்கு அங்குக் கோயில் எழுப்ப அனுமதிக்கக் கோரி ஃபரிதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு (எண் 61/280) தொடர்ந்தார். இந்த வழக்கை பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

(1866)
மஹந்த் ரகுபீர் தாஸ், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். அவரது முதல் அப்பீல் (27)ஐ பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் இரண்டாவது (122) அப்பீல் செய்தார். அதையும் பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

(1934)
பாபர் மஸ்ஜிதின் சுற்றுச் சுவர், இந்து மகாசபையினரால் சேதப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் அரசு, இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரைக் கட்டிக்கொடுத்தது.

 ***

பெரிதாகப் பிரச்சினைகள் ஏதுமின்றி, பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.
சுதந்திர இந்தியா பிறந்தது, பாபர் மஸ்ஜிதுக்குத் தலைவலி தொடங்கியது.

(1949)
22.12.1949 பின்னிரவில் அபிராம் தாஸ், ராம் சகல் தாஸ், சுதர்சன் தாஸ்  ஆகிய இந்து மகாசபையின் சன்னியாசிகள் 50-60 பேர்களுடன் பாபர் மஸ்ஜிதுக்குள் அத்துமீறிப் புகுந்து, முஅத்தின் முகம்மது இஸ்மாயீலைத் தாக்கித் துரத்திவிட்டு, கையோடு கொண்டுவந்த ராம் லல்லா (குழந்தை ராமர் - இந்தச் சிலைதான் 1949 முதல் 2019 ஆண்டுவரை நீதிமன்றங்களில் முதல் வாதியாக வழக்கு நடத்தி(!), இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் வென்றது) சிலையை திருட்டுத் தனமாக மஸ்ஜிதில் இமாம் தொழும் இடத்தில் வைத்து பூஜைகள் செய்த பின்னர் "ராமர் தானாகவே அங்குத் தோன்றினார்" என்று கப்ஸா விட்டனர். அந்த இரவு 'அயோத்தியின் இருண்ட இரவு' என்று இந்திய வரலாற்றில் இடம்பெற்றது (Ayodhya : The Dark Night - The Secret history of RAMA’s appearance in babri Masjid).

மறுநாள் (23.12.1949) காலையில் உத்திர பிரதேச மாநிலம், ஃபைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாஸ், ராம் சகல் தாஸ், சுதர்சன் தாஸ் ஆகிய சந்நியாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்  பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குதல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்தார்.

29.12.1949 அன்று  குற்றவியல் சட்டம் 145இன் கீழ் ஃபைஸாபாத் மாஜிஸ்ட்ரேட் K.K. நாயர், பாபர் மஸ்ஜிதைப் பூட்டி, கையகப்படுத்தினார். (பின்னர் இவர் சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தின் நான்காவது மக்களவையின் உறுப்பினராக ஜனசங்கத்தால் பதவி வழங்கப்பட்டார்) பாபர் மசூதி உள்ள இடம் பிரச்னைக்கு உரியது எனக் கூறி இரு தரப்பினரும் உள்ளே நுழைய மாநில அரசு அனுமதி மறுத்தது.

(1950)
5.1.1950 அன்று பிரியா தத் ராம் என்பவர் 'சர்ச்சைக்குரிய பகுதிக்கு' ரிஸீவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில்  கோபால்சிங் விஷாரத் மற்றும் ராமச்சந்திரதாஸ், ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில், நிலத்தைப் பிளந்துகொண்டு 'தானாகத் தோன்றிய' ராமர் சிலைக்குப் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.

(1958)
நிர்மோஹி அகாரா என்ற சாதுக்களின் அமைப்பு, ‘ராமர் பிறந்ததாகக் நம்பப்படும் இடத்தைத் தங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

(1961)
சன்னி சென்ட்ரல் போர்ட், ‘மசூதிக்குள் உள்ள சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனு தாக்கல் செய்தது.

(1984)
'பிரச்னைக்குரிய இடத்தில்' மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப் பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கிய பங்குவகித்தார். அவைத்யநாத் எனும் சன்னியாசியைத் தலைவராகக் கொண்டு  'தாலா கோலோ' (பூட்டைத் திற) இயக்கம் தொடங்கியது.

(1986)
‘பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று ஹரிசங்கர் துபே என்பவர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.

31.1.1986
வரவிருந்த தேர்தலை மனத்தில் கொண்டு, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, பாபர் மஸ்ஜிதின் கதவுகளை இந்துக்களுக்குத் திறந்துவிடுமாறு உத்தரப்பிரதேச முதல்வர் பீர் பகதூர் சிங்குக்குப் பரிந்துரைத்தார். முஸ்லிம்கள் தரப்பிலிருந்துக் கிளம்பிய கடும் எதிர்ப்பையும் மீறி, நீதிபதி K.M. பாண்டேயின் தீர்ப்பு மூலமாக பாபர் மஸ்ஜித் கதவுகள் இந்துக்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டன.

5.2.1986
பாபர் மசூதி ஆக்'ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.

(1989)
பாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது. இதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

(1990)
வி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர். அதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் சோம்நாத்திலிருந்து அத்வானி, ரத யாத்திரையைத் தொடங்கினார்.

(1991)
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க. ரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.

(1992)
டிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். அதில் அநேகர் முஸ்லிம்கள். இதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த முன்னாள் RSSகாரரான பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.

(1993)
பாபர் மஸ்ஜித் இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. அத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதித் திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

(2001)
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரையும் விடுதலை செய்தது. அப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

(2002)
உயர் நீதிமன்றம், பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா? என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி ‘ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.

(2010)
அலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டது. அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்றத் தீர்ப்பை, அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

(2017)
மார்ச் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில் “ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் ‘கால தாமதம்’ என்பது போன்ற ‘டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

2017 மார்ச் 17 ‘பாபர் மஸ்ஜித் இடிப்புச் சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது. ‘இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

2017 ஏப்ரல் 6 ‘அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னவுக்கு மாற்ற உத்தரவிட்டது.

2017 ஏப்ரல் 19 அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2017 மே 30 அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2017 ஆகஸ்ட் 8 ஷியா மத்திய வக்ஃப் போர்டு உச்ச நீதிமன்றத்திடம், ‘அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய இடத்தை விட்டுச் சற்று தள்ளி இஸ்லாமியர்கள் நிறைந்த மற்றோர் இடத்தில் மசூதி கட்டிக் கொள்கிறோம்’ என்று வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்தது.

2017 ஆகஸ்ட் 11 பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி குறித்த 13 முறையீடுகள் டிசம்பர் 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017 டிசம்பர் 5 பாபர் மசூதி இடிப்பு வழக்கை 2018 பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

(2019)
இடைப்பட்ட காலத்தில் 'நீதி மன்றங்களுக்கு வெளியே' பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளப் போவதாக ஒரு சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஃப்.எம். கலீஃபுல்லாஹ், 'வாழும் கலை' ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஶ்ரீராம் பன்சு ஆகிய மூன்று பேர் அடங்கிய சமரசக் குழு, மார்ச் மாதம் 13 முதல் ஆகஸ்ட் 2 வரை பேசித் தோற்றுப் போனது.

9.11.2019 உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது.
***

1- "பாபரி மஸ்ஜித், கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்படவில்லை; ஆனால் அதன் கீழே இருந்தது வேறு ஏதோவொரு புராதனக் கட்டடத்தின் தூண்கள்"

"சரிங்க மை லார்ட்"

2- 1949 டிசம்பர் மாதம் 22ஆம் நாளின் நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதுக்குள் அத்துமீறிப் புகுந்து குழந்தை ராமர் சிலையை அங்கு வைத்தது சட்டப்படி குற்றமாகும்.

"சரியாச் சொன்னீங்க மை லார்ட்" 

3- 1992 டிசம்பர் மாதம் 6ஆம் நாளில் பாபரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்தவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் ஆவர்.

"ரொம்ப கரெக்ட் மை லார்ட்"  

4- 'பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?' எனும் (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் 30.09.2010 அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னவ் பெஞ்ச் வெளியிட்ட தீர்ப்புகள் சட்டப்படி செல்லாது.

"சரியான தீர்ப்பைச் சொல்லிடுங்க மை லார்ட்"   

5- பாபர் மஸ்ஜிதுக்குச் சொந்தமான 67 ஏக்கர் நிலமும், மஸ்ஜிதை இடித்தவர்களும், இந்த வழக்கின் முதல் வாதியான 'ராம் லல்லா' எனும் குழந்தை ராமரின் குழந்தைகளுமான இந்துக்களுக்குச் சொந்தமானதாகும்.

"போங்கடா நீங்களும் ஒங்க தீர்ப்பும்"