புதன், பிப்ரவரி 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8

தமிழிலோ அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு குர்ஆனின் மீது ஓர் எட்டாத, அளவுக்கு மீறிய உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன் ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? பிற மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

அந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர் முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள் இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.

படிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.

உமறுப் புலவருக்கு வருவோம்! உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின் அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, "உமறே! நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக!" என்று கூறினார்களாம். அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே! வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது.

சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, "ஷாஹுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும் சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்" எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் "திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய் ..." எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம்.

அதன் பின்னர் நெய்னா லெப்பையைச் சந்தித்து உமறு விபரம் கூற, "நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால் நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்" எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப் படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், பிப்ரவரி 19, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7

இஸ்லாமுக்கு முரணான கவிதைகள் துர்நாற்றம் பிடித்த சீழைவிட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட 'இஸ்லாமிய இலக்கியம்' என்னும் பெயரால் இஸ்லாமுக்கு முரணானக் கருத்துகளைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.

அல்குர்ஆன், நபிமொழிகள் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாமுக்கு முரணான கருத்துகளைக் கொண்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்' எப்படித்தான் தலையெடுத்தன?

பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வம் இதற்குக் காரணமாகும்.

இன்றுங்கூட புதிதாக இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்கும் சகோதர-சகோதரிகள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு-சம்பிரதாயங்களிலிருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபட இயலாத நிலையில் இருப்பதை நாம் காணுகிறோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு-ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்?

அக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில் இருத்தியே அவர்களுடைய நிலையை அணுக வேண்டியுள்ளது. அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்க வழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப் போயிருந்த நிலையில், அவற்றை விட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் இருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிலிருந்து இன்னொரு புதிய பண்பாட்டுக்கு மாறுகின்ற கட்டத்தில் (Transitional period) அவர்களுடைய நிலை இருந்தது எனலாம்.

பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதா-காலட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேரோட்டம், ஆனை-குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல், கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிறசமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதனைக் கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் 'அறிஞர்கள்' புதிய முஸ்லிம்களின் தொடரும் பழமைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி? என யோசித்தனர். அதன் விளைவாக, பிறசமயச் சடங்குகளுக்கு ஒப்பாக இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசினர்.

மூர்த்தி உற்சவங்கள் தர்ஹா உரூஸ்-கந்தூரிகள் ஆயின; தேரோட்டம் என்பது சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை-குதிரைடன் உண்டியல் ஊர்வலங்கள் அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கபுறு(மண்ணறை)களுக்குப் பூசும் சந்தன அபிஷேகமாக அட்ஜஸ்ட் செய்யப் பட்டது.

இந்தப் 'போலச் செய்தல்' (To imitate) என்னும் மனித இயல்பு, இஸ்லாமியத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத் துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.

எனவே, புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாசத் தாகத்திற்கு அந்தச் சமகாலப் புலவர்களும் கற்பனை நீர் வார்த்து, பிறமத இலக்கியங்களைப் போல 'இஸ்லாமிய இலக்கியங்களை' இயற்றத் தொடங்கினர்.

இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கு ஆதாரங்களாக அமைந்த குர்ஆன்-ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய கடமையைப் பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, குர்ஆனின் மொழியாகிய அரபுமொழியின் மீது அக்காலத் தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு விதமான தெய்வீக பக்தி ஊட்டப் பட்டது.

தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபுமொழியில் அமைந்த குர் ஆன் ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. வேற்றுமொழியில் குர்-ஆனையோ ஹதீஸ்களையோ மொழிபெயர்ப்பது, அவற்றின் புனிதத்தைக் களங்கப் படுத்துவதாகும் என்ற மடத்தனமான நம்பிக்கை நிலவிய காலம் அது. இவ்வாறாக, இஸ்லாமின் அடிப்படைகளான குர்-ஆனையும் ஹதீஸையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு, அவற்றைத் தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப் பட்டது.

தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துகளை எடுத்தெழுதுவதைத் தவறாகக் கருதிய அக்கால கட்டத்தில், அரபுமொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமீது வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.

மக்களுடைய இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொண்ட சிலர், (தங்களுடைய படைப்புகளுக்குப் புனிதப் பூச்சு வேண்டி) தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அரபு எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடலாயினர். 'அவன் வந்தான்' என்பதை avan vanthaan என (தற்கால யுனிகோடில்) எழுதுவதுபோல் அரபு எழுத்து வடிவத்தில் தமிழை எழுதியமையால் 'அரபுத் தமிழ்' என ஒரு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், இந்த அரபுத்தமிழ் வடிவத்தில்கூட குர்ஆன்-ஹதீஸ்களுடைய பொருளை எழுதி யாரும் வெளியிடவில்லை.

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், பிப்ரவரி 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத குரைஷிக் கவிஞர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் தங்களுடைய மூதாதையரின் வழிபாட்டுக் கொள்கையில் ஊறித் திளைத்தனர். கவிதையை ஓர் இன்பமூட்டும் கருவியாகக் கையாண்டனர். கவிதையைப் பாடுபவர்களும் கேட்பவர்களும் இன்பக் கிளர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக அதீதக் கற்பனைகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பொய் புனைவுகளையும் மிகுதியாகக் கையாண்டனர். இதுபோன்ற ஒரு தன்மையினைத் தமிழ் இலக்கிய மரபிலும் நாம் காண முடிகின்றது. இஸ்லாமிய வாழ்க்கைநெறி தமிழகத்தில் தழைப்பதற்கு முன்பாக இங்கே சைவ, வைணவச் சமயங்கள் செல்வாக்குற்றுத் திகழ்ந்தன. சிவபெருமானை வழிபடுபவர்களும் திருமாலை வணங்குபவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தமிழில் தத்தம் சமய இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். இன்றைய தமிழ் இலக்கியத்தின் செழிப்பிற்கு இச்சமயங்கள் முக்கிய காரணமாய் அமைந்தன. மின்சார வசதியோ பத்திரிகைகள், வானொலி, தொலக்காட்சி போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களோ இல்லாத அக்காலத்தில் மக்களுடைய பொழுதுபோக்கும் கருவிகளாக இத்தகைய இலக்கியங்கள் சிறப்பிடம் வகித்தன. இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், திருவிளையாற்புராணம் போன்ற காப்பியக் கவிதைகளை மக்கள் கூடியிருந்து பெருவிருப்புடன் கேட்டனர். கோவில் திருவிழாக்களில் பெரும் திரளான மக்களை ஈர்ப்பதற்காக இத்தகைய புராண-இதிகாசக் கவிதைகளை எடுத்துரைத்தனர். பல்வேறு கடவுளர்களின் பெயராலும் அவதாரங்களுடைய பெயராலும் அமைந்த இந்தச் சமய இலக்கியங்கள் மக்களிடையே வழிபாட்டுக்குரியனவாகக் கொள்ளப் பட்டன. இப்படிப் பட்ட ஒரு காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் புதிதாக இஸ்லாம் புகத் தொடங்கியது. மெல்ல மெல்ல இஸ்லாம் தமிழ்நாட்டில் பரவத் தலைப் பட்டதும் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்ட தமிழறிஞர்கள் இலக்கியங்கள் வாயிலாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். இவ்வாறாகத் தோன்றிய இலக்கியங்களுள் இன்று அறியப் படக்கூடிய மிகப் பழமையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் 'பல்சந்த மாலை' என்பதாகும். இந்நூல், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகும். இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனவும் சிலர் கூறுவர். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. வெறும் எட்டுப் பாடல்கள் மட்டும் அறிய வந்துள்ளன. இதையடுத்து நமக்குக் கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய 'யாக்கோபு சித்தர் பாடல்கள்' என்பவையாகும். கி.பி. 16ஆம் நூற்றண்டில் 'ஆயிரம் மஸ்அலா', 'மிஃராஜ் மாலை' ஆகிய நூல்களும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் 'சீறாப்புராண'மும் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் காலப் போக்கில் பல்கிப் பெருகலாயிற்று. புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களால் தமது முந்தைய இந்துமதக் கலாச்சாரத் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள இயலவில்லை. எனவே, அவர்கள் கோவில் திருவிழாக்களிலும் புராண-இதிகாச கதா-காலட்சேபங்களிலும் சென்று கலந்து கொண்டனர். இதைத் தடுப்பதற்காக ஆலிப் புலவர் என்பார் 'மிஃராஜ் மாலை' எழுதினார்; உமறுப் புலவர் 'சீறாப்புராணம்' பாடினார். பொய்யைக் கொண்டு இலக்கியத்திற்குச் சுவையேற்றும் இயல்பும் இந்தப் புது வெள்ளத்தால் அடித்து வரப் பட்டு, தூய இஸ்லாமுக்குள் புகுத்தப் பட்டது. இன்றுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. காப்பியம், கலம்பகம், அந்தாதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், மாலை, நாயகம், படைப் போர், மஸ்அலா, அம்மாணை, ஏசல், சிந்து, தாலாட்டு, கும்மி, கோவை, சதகம், முனாஜாத், பள்ளு, குறம், கீர்த்தனம், வண்ணம், கிஸ்ஸா, ஞானப் பாடல்கள் - முதலிய ஒவ்வொரு வகையிலும் ஏராளமான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எழுதப் பட்டன. ஆனால், அவற்றுள் 25 சதவிகிதத்திற்கும் குறைவானவைதாம் தூய்மையான குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 'உண்மையான இஸ்லாமிய இலக்கியங்கள்' எனலாம். இவையல்லாத பெரும்பாலான நூல்களில், பொய்யும் கற்பனைக் கவிதைகளுமே மலிந்திருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் தட்டழிந்து திரியக் கூடியவர்களால் இத்தகைய வழிகேட்டிலக்கியங்கள், வழிபாட்டிலக்கியங்களாகப் போற்றப் படுதலைக் காண்கிறோம். உண்மையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எது? முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இயற்றியுள்ள கவிதைகள் அனைத்தும் இஸ்லாமிய இலக்கியங்கள் ஆகுமா? அவை குர் ஆனுக்கும் ஹதீஸிற்கும் அமைந்திருந்தாலும் அவற்றை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனக் கொள்ளத்தான் வேண்டுமா? முஸ்லிமல்லாத புலவர்கள் குர் ஆன் ஹதீஸிற்கு முரணில்லாத கருத்துகளைப் பாடினால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா? உமையத் இபுனு அபிஸ்ஸல்த்து என்பவருடைய கவிதையைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, "அவருடைய கவிதை ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டு விட்டது; ஆனால், அவருடைய உள்ளம் காஃபிராய் (இறைமறுப்பதாய்) இருக்கிறது" எனக் கூறினார்கள். திரு. வி. கலியாண சுந்தரனார் என்னும் தமிழறிஞர் பாடியுள்ள
அரபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்ற மரபினை வாழச் செய்த முகம்மது நபியே போற்றி!
என்ற இப்பாடலில் இஸ்லாமுக்கு முரண்பட்ட கருத்துகள் எதுவுமில்லை. திரு. வி.க.வின் உள்ளம் காஃபிராயிருப்பினும் அவருடைய இக்கவிதை ஈமான் கொண்டுள்ளதன்றோ? இதேபோன்று, உள்ளம் ஈமான் கொண்ட நிலையில் ஒருவருடைய கவிதை குஃரு(இறை மறுப்பு)க்குத் துணை போகுமானால், அக்கவிதையை மறுதலித்துவிட வேண்டும். இதுவே இஸ்லாமிய இலக்கியத்தை இனங்கண்டு கொள்ளும் வழிமுறையாகும். மிஃராஜ் மாலை, சீறாப்புராணம் போன்ற தொடக்க கால இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் தோற்றத்திற்குரிய காரணங்களை அந்தந்த நூல்களின் முன்னுரைகளே தெளிவாக எடுத்துரைக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், இந்துமதச் சகோதரர்களுடைய கோவில் திருவிழாக்களிலும் கதா-காலேட்சபங்களிலும் பெரும் திரளாகச் சென்று ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதைக் கண்ட முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், இஸ்லாமிற்கு எனக் காப்பியம் இல்லாமையால்தானே இந்த முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களை நாடிச் செல்கின்றனர் எனக் கவலைப் படலாயினர். அந்தக் கவலையின் விளைவாக, இந்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் எழுதப் பட்ட இலக்கியங்கள் அனைத்திலும் முன்னைய தமிழ்ச் சமயங்களின் தாக்கம் தவிர்க்கவியலாத அளவுக்கு இடம் பெறலாயிற்று. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.