ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

தமிழ்ச்செல்வனுக்கு ...

டந்த 08.01.2010 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது.

இந்தியாவின் பிரிவினை சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது" எனும் வரிகளை மறுத்து, "வஹ்ஹாபியின் மோசடி" எனும் தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பார் பாகிஸ்தானுக்குப் போட்டுக் கொடுத்த இந்திய முஸ்லிம்கள் என்பதாக ஐந்து சுட்டிகளைக் கொடுத்திருந்தார் [ சுட்டி-02].

அவற்றுள் முதலாவதில் [சுட்டி-03] அஃப்ரோஸ் என்பவன் நமது இராணுவ முகாம்களைப் பற்றிய தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுக்க' முயன்று கடந்த 11.08.2006ஆம் தேதி ராம்பூரில் கைது செய்யப் பட்டு, 19.02.2009 அன்று லக்னவ் நீதிமன்றத் தீர்ப்புப்படி பத்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவன்.

அஃப்ரோஸ் வழக்கில் நாம் கருத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில், தன் உறவினர்களின் பொது நலன் கருதி அவன் போட்டுக் கொடுத்தவன் அல்லன். யாரோ போட்டுக் கொடுத்ததைக் காசுக்காக "வாங்கிக் கொடுக்க" முயன்று தோற்றுப் போனவன்.

"அஃப்ரோஸிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இரகசியக் குறியீடுகளைக் கொண்டவை என்றும் ஆனால் இரகசியத் தகவல்களை அவன் எவ்வாறு பெற்றான் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நமது இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியிருக்கிறார்" என்பதாக மாவட்டக் குற்றப் பிரிவின் துணை ஆலோசகர் இர்ஃபான் அஹ்மது கான் குறிப்பிட்டதை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் 21.02.2009 இதழ் Pakistani spy gets 10-year jail term என்று பொருள் மயக்கம் தரும் தலைப்போடு வெளியிட்டுள்ளது [சுட்டி-04].

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நடைபெற்ற விசாரணையில் நமது இராணுவ இரகசியங்களை அவனுக்குப் 'போட்டுக் கொடுத்த' புள்ளி யார் எனும் தகவலை அவனிடமிருந்து கறக்க முடியவில்லையா? அல்லது புள்ளி பெரியது என்பதால் வெளியிடவில்லையா? என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்கள்.

தண்டனை கொடுக்கப்பட்ட இன்னொரு வழக்கில், ஜஹான் ஆரா எனும் பெண் வருகிறாள். தொலைக்காட்சி வழியாக உலகம் முழுக்கக் காண்பிக்கப் படும் நமது குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் ஆயுதங்களை நிழற்படம் எடுத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அவனிடமிருந்து 10 கையெறி குண்டுகளைப் பெற்று அவற்றுள் எட்டை முஸாஃபர் நகரைச் சேர்ந்த இஃப்திகார் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் வழக்கு. அவள் 20.09.1994இல் கைது செய்யப்பட்ட இடம் பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகம். Terrorist And Disruptive Activities (Prevention) Act (TADA) மற்றும் Official Secrets Act (OSA) விதிகளின்படி அவளுக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐயாயிரம் அபராதமும் விதித்து (ஏழாண்டுகள் கழித்து) 07.03.2001இல் உ.பி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கையெறி குண்டுகள் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை இஃப்திகாரிடமிருந்து கைப்பற்ற முடியாமல் அரசுத் தரப்புக் கையைப் பிசைந்து நின்றதால் அவன் வழக்கிலிருந்தே விடுவிக்கப் பட்டான் [சுட்டி-05].

மற்ற மூன்று சுட்டிகளில் உள்ள தகவல்கள் கைதுப் படலம்வரை நின்று விடுபவை. வழக்கு நடந்ததா? தீர்ப்பு வந்ததா? போன்ற கூடுதல் விபரங்களைப் பெற முடியவில்லை. அவற்றுள் 1995இல் இராணுவத்தில் இணைந்த முஹம்மது நஸீம் என்பவனது வழக்கு முக்கியமானது. அவன், கார்கில் தியாகி அஹ்மது அலீ [சுட்டி-06] வகித்த Lance Naik பதவி வகித்தவன். அவன் 2006 மார்ச் மாதம் அலீ ஜாட்டூன் எனும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நமது இராணுவ நிலைகள், வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்ற தகவல்களை ஏஜண்டுக்குத் தெரிவித்ததாக 29.06.2007இல் டெல்லியில் வைத்துக் கைது செய்யப் பட்டான்.

நமது இராணுவம் ஒளிந்து கொண்டோ துப்பாக்கிகளை ஒளித்து வைத்துக் கொண்டோ போர் செய்யவில்லை. வேண்டிய தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம் [சுட்டி-07]. அமெரிக்காவினால் இரண்டாவது செல்லப் பிள்ளையாகத் தத்து எடுக்கப்பட்ட பாகிஸ்தான்காரன் இதுபோன்ற சப்பைத் தகவல்களுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறான் [சுட்டி-08] என்றால் நிச்சயம் அவன் கேனையன்தான். அவன் கேனையனாகவே இருக்கட்டும்; அதுதான் நமக்கு நல்லது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்ற மோரீகான் மற்றும் அப்பாஸ்கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தானின் உளவுத்துறையினர் என்று 'சொல்லப் படுகின்ற' சிலர் அணுகி இந்திய இராணுவத்தைக் குறித்துத் தகவல் கேட்டதாகவும் கைப்பேசி வழியாக இருவரும் காசுக்காகத் தகவல்கள் கொடுத்ததாகவும் 'சொல்லப் படுகின்ற' வழக்கும் ஒன்று. இதில் reportedly working as spies, Morey apparently told cops போன்ற சொற்கள் மூலம், வழக்குக் கெட்டிப் படுத்தப் படாமல் இருப்பதாக அறிய முடிகிறது [சுட்டி-09].

இறுதியாக, கைப்பேசிகளும் பாகிஸ்தானியப் பணமும் வைத்திருந்ததாக அனீஸ்கான், அனீக்கான், கோராகான் ஆகிய மூவரை 04.05.2007இல் கைது செய்த வழக்கு [சுட்டி-10]. மூவரையும் Official Secrets Act (OSA) விதியின்கீழ் நமது இராணுவம் கைது செய்து ஃபாஸில்கா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் வெறும் சுட்டிகளாகக் கொடுத்தவற்றைத் தேடிப் பிடித்து இங்கு நான் விளக்கமாக எடுத்து வைப்பதற்குக் காரணம், என்னைப் போன்றே வாசகர்கள் பலருக்கு/சிலருக்கு மேற்காண்பவை புதிய தகவல்களாக இருக்கக் கூடும். இணையத்தில் "உளவு" எனும் சொல் குறித்துத் தேடியபோது மாலிக் என்பவனைப் பற்றி மரைக்காயர் எனும் பதிவர் தனது வலையில் விபரம் கொடுத்திருந்தார் [சுட்டி-11]. அப்பதிவின் அடியில் கண்ட தொடர்புடைய அவரது பழைய பதிவுகளான

ஆகியவற்றைப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனேன்! திண்ணை வாசகர்கள் சிலருக்காவது அவை புதிய தகவலாக இருக்கக் கூடும். தகவல் தெரியாத திண்ணை வாசகர்களை, "மோசடி"க்காரர்கள் என்று தமிழ்ச்செல்வன் சொல்ல மாட்டார் என்று நம்புவோமாக!

எவ்வாறாயினும், எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது" எனும் பேசுபொருளிலும் அவ்வாறு தகாத செயல்களைச் செய்வோர் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியோர் என்பதிலும் தண்டனைக்கு உரியோர் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

நன்றி!
ஃஃஃ


சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001081&format=html
02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001153&format=html
03 - http://newshopper.sulekha.com/man-gets-10-year-jail-for-spying-for-pakistan_news_1038667.htm
04 - http://www.indianexpress.com/news/pakistani-spy-gets-10year-jail-term/426409/
05 - http://www.hinduonnet.com/2001/03/08/stories/0208000q.htm
06 - http://www.kashmir-information.com/Heroes/ali.html
07 - http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=
08 - http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=706300614&cat=&n_date=20070630
09 - http://www.tribuneindia.com/2009/20090620/nation.htm#11
10 - http://www.dailyexcelsior.com/web1/06may07/news.htm#10
11 - http://maricair.blogspot.com/2007/06/raw.html
12 - http://maricair.blogspot.com/2006/08/blog-post.html
13 - http://maricair.blogspot.com/2006/10/blog-post.html
14 - http://maricair.blogspot.com/2006/10/blog-post_24.html
15 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_05.html
16 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_12.html