வியாழன், செப்டம்பர் 17, 2026

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 44

தாயுமானவருடைய குருநாதர்களாகிய சித்தர் குழுவினர் ஏழு கடல்களையும் குடிக்க வல்லவர்களாம். இந்திரலோகத்தையெல்லாம் எடுத்துக் கைக்குள் வைத்துப் பந்தாக விளையாடுவார்களாம். ஆகாய உலகத்தையும் அஷ்டகுல மலைகளையும் கடுகைத் துளைத்து அதில் புகுத்திவிடுவார்களாம். இத்தகைய ஆற்றல் மிக்க சித்தர்களே இந்த அடிமை முன் வர மாட்டீர்களோ என வேண்டுகிறார் தாயுமானவர்.

இந்தப் பாடல், குணஙுடியைப் பாதித்த விதத்தை இனிப் பார்ப்போம்:

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள் அடக்கி

                                                                        விளையாட வல்லீர்

அகிலமோர் ஏழினையும் ஆடும் கறங்கு போல் ஆட்டி

                                                                         விளையாட வல்லீர்

மண்டலத்து அண்டரை அழைத்து அருகிருத்தியே வைத்து

                                                                         விளையாட வல்லீர் 

மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்து அதில்

                                                           மாட்டி விளையாட வல்லீர் 

கண்டித்த கடுகில் எழுகடலைப் புகட்டிக் கலக்கி

                                                                            விளையாட வல்லீர்

கருதரிய சித்தெல்லாம் வல்லநீர் அடிமை என் கண்முன் வரும்

                                                                            சித்தில்லையோ

நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர் நல்லடிக்காளாகியும்

நற்குணனங்குடி கொண்ட பாதுஷாவான குருநாதன் முகிய்யித்தீனே !

முஹ்யித்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்களுக்கு விளையாடுவதைத் தவிர வேறு வேலையே இல்லை என்பது போல குணங்குடி பாடுகின்றார். அதுவும் அன்னார் சாதாரண விளையாட்டு விளையாடவில்லை. அன்னார் பந்தாடுகின்றார் என்றால் அங்குப் பந்தாக இருப்பவை அண்ட கோடிகள்தாம். கறங்கு ஆடும்போதோ ஏழு உலகும் அவர்கள் கையில் காற்றாடி ஓலைகளாகி விடுகின்றன.

- தொடரும் 

சனி, ஆகஸ்ட் 16, 2025

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 43

 

‘மெளன குரு வணக்கம்’, ’சின்மயானந்த குரு’ என்னும் தலைப்புகளின் கீழ் தாயுமானவர் பாடியுள்ள பல்வேறு பாடல்களில்,

 தட்சிணா மூர்த்தியே. சின்மயானந்த குருவே,

எனவும்

சின்மயானந்த சுகவெள்ளம் படிந்து நின்

திருவருள் பூர்த்தியான …………

மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில்

வரு மெளன குருவே

எனவும் தன்னுடைய மெளன குருவைக் கூப்பிடுகின்றார், இந்தக் கூப்பாட்டின் எதிரொலிதான் குணங்குடியில் கேட்கின்றது.

தாயுமானவர், தன்னுடைய குருவான மெளன சுவாமிகளையும் அவருக்கும் குருவான திருமூலரையும் சேர்த்து, ‘சித்தர் கணம்’ எனும் தலைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதிலொரு பாடல் :

திக்கொடு திகந்தமும் மனவேகமென்னவே

சென்றோடியாடி வருவீர்,

எனத் தொடங்கும் அப்பாடல்

…… கையில் உழுந்து அமிழும் ஆசனமாய் ஓரேழு

கடலையும் பருக வல்லீர்

இந்த்ரனுலகும் அயிராவதமுமே கைக்கெளிய

பந்தாயெடுத்து விளையாடுவீர்

ககன வட்டத்தையெல்லாம் கடுகிடையிருத்தியே

அஷ்டகுலவெற்பையும் காட்டுவீர்

மேலும் மேலும் மிக்க சக்திகளெல்லாம் வல்ல நீர் அடிமை

முன் விளங்கலருசித்தியிலரோ

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச்

சித்தர்கணமே

என முடிகிறது.

இதன் தொடக்கவரி குணங்குடியாரின், ‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து’ எனும் பாடலை நினைவுபடுத்தும் அதேவேளையில் ஏனைய வரிகள் மற்றொரு பாடலை நினைவூட்டுகின்றன. அப்பாடலுக்கு வரும்முன் இந்தத் தாயுமானவருடைய பாடலின் பொருளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

தொடரும்.