ஞாயிறு, அக்டோபர் 07, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 16

இன்னொரு சாராருடைய கேள்வி என்னவென்றால், "இலக்கியம் என்றாகும்போது இத்தகைய வருணனைகளும் கற்பனைகளும் இடம் பெறத்தானே செய்யும்; இவை இல்லாமல் எப்படி ஓர் இலக்கியம் உருப்பெறவியலும்?" என்பதாகும்.

இங்குத்தான் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் ஏனைய இலக்கியங்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாட்டை விளக்கி உணர்த்த வேண்டும். உள்ளதை உள்ளவாறு பாடுவதுதான் இஸ்லாமிய இலக்கியமாக இருக்க முடியும். "அங்ஙனம் எவ்வாறு பாடவியலும்?" என்ற கேள்வி எழலாம். சதாவதானி செய்குத் தம்பிப் பாவலருடைய 'நபிகள் நாயகம் மான்மிய மஞ்சரி' என்னும் இலக்கியத்தைச் சான்றாக வைத்து இக்கேள்விக்குப் பதிலுரைத்து விடலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸுஹைர் போன்றோர் இஸ்லாமிய வரம்புக்குள்ளேயே நின்று கவிதைகள் இயற்றிய பெருங் கவிஞர்களாவர். எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அக்கவிஞர்களை அங்கீகரித்திருக்கின்றார்கள்; ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமியத் திருமண முறைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய வரம்பையும் மரபையும் மீறிக் கொண்டு, தமிழ் மரபு என்னும் தடத்தில் கால் பதித்து நின்று உமறுப் புலவர், அலி-பாத்திமா திருமண வைபவத்தைச் சீறாப்புராணத்தில் எப்படியெல்லாம் வருணிக்கிறார் என்பதை ஈண்டுக் காண்போம்.

அலி (ரலி) அவர்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஊர்வலம் செல்வதற்காகக் குதிரைமேல் ஏறினார்கள். அப்போது, 'மடவார் குரவைகள் இயம்ப'லாயினர் (பாத்திமா திருமணப் படலம், பாடல் 121). பேரிகை, திமிலை, குடப்பறை, தடாரி, திண்டிமம், முரசு, பாரிசைப் பதலை, பவணம், வாரணி, மொந்தை, பூரிகை, நவுரி, காகளம், சின்னம், கொம்பு, கைத்தாளம் முதலிய இசைக் கருவிகளெல்லாம் பேரிடியை மிஞ்சக் கூடிய அளவுக்கு முழங்கின. (பாடல் 122).

உமறுப் புலவர் 'ஒலி'யுல்லா அக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை இசைக் கருவிகள் இருந்தனவோ அத்தனையையும் பட்டியல் போட்டுப் பாடி விட்டார். இந்த 'ஒலி'யுல்லா பாடிய அளவுக்கு எக்கச் சக்கமான இசைக் கருவிகளுக்கு ஏற்பாடு செய்ய இயலா விட்டாலும் ஒன்றிரண்டையாவது வைத்துக் கலியாண இசை முழங்குவதுதான் 'ஒலி'யுல்லாவுக்குச் செய்கின்ற மரியாதையாகும் என்று எண்ணிச் செயல் படுகின்றவர்கள் இன்றும் பலர் உள்ளனர்.

அலி (ரலி) அவர்கள் ஊர்கோலம் வருகிற அழகைக் காண்பதற்காக அந்த ஊரில் உள்ள பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து மொய்த்தார்களாம். பாதத்தில் அணிந்திருந்தச் சிலம்புகளும் இடையில் அணிந்திருந்த மேகலைகளும் ஆரவாரம் எழுப்ப, மதம் பிடித்த ஆண் யானையின் கொம்புகளைப் போலப் பெண்களின் மார்பணிகள் மின்ன, புதுத் தேனைச் சொரியக் கூடிய பூமாலைகள் நெகிழ, கடலில் நிலவுக் கூட்டம் பூத்தது போலப் பெண்கள் கூடி மொய்த்தனராம்.
பதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக் கதக்களிக் கரியின் கோட்டுக் கதிர் முலைப் பணிகள் மின்னப் புதுக்கடி நறவஞ் சிந்தும் பூங்குழன் மாலை சோர மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு மொய்த்தார். (பாடல் 132).
அலி (ரலி) அவர்களோடு கூடப்பெற மாட்டோமா என்று ஏங்கிய காரணத்தால் அந்தப் பெண்களின் மேனியில் காமத் தாபத்தால் ஏற்படக் கூடிய 'பசலை' என்னும் கொடிய நோய் படர்ந்ததாம். இத்தகைய எண்ணம் கொண்ட பெண்கள் கூட்டம் வீதியில் சூழ்ந்து கொண்டதாம் (பாடல் 134).

ஒரேயொரு மரத்தில் ஏராளமான கொடிகள் படர்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோல அலி (ரலி) என்னும் ஒரேயோர் ஆடவரைச் சுற்றிப் பல பெண்களும் பார்வையில் படர்ந்தனராம்:
குவிபெருந் தானை நார்ப்பண் கூண்டவை யலியென்றோதும் பவனியின் றருவை நோக்கிப் பல கொடி படர்ந்த தொத்த (பாடல் 132). 
தொடரும், இன்ஷா அல்லாஹ்.