இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 25

ரீஅத்தைத் தாண்டி, தரீக்கத்தைக் கடந்து, ஹகீக்கத்தில் எவர் காலூன்றி விடுகிறாரோ அவர் இறைவனோடு ஃபனா ஆகி, மஃரிஃபாவுடைய ஞானத்தைப் பெற்று விடுகிறாராம். அதாவது இறைவனோடு இரண்றக் கலந்து விடுகிறாராம். இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குவர் ஸூஃபிகள். அதாவது,

இஸ்லாம் என்பது ஒரு வட்டம். அதன் வெளிவிளிம்புதான் வெளிரங்கமான ஷரீஅத். வட்டத்தின் மையப் புள்ளியே உள்ரங்கமான ஹகீக்கத்தாம். ஷரீஅத் எனும் வெளிவிளிம்பிலிருந்து ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கிச் செல்லும் ஆரமே தரீக்கத் எனும் ஞானப் பாட்டையாம். இந்தத் தரீக்கத் எனும் கோடு எந்த அளவுக்கு ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கி நெருங்கி, நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன் இறைவனை நெருங்குகின்றானாம். நெருங்கி, நெருங்கி, இறுதியில் இந்தக் கோடு கடைசியாக அந்த மையப் புள்ளியைப் போய்த் தொடுமன்றோ? அப்போது இந்த ஞானவான், இறைவனோடு ஒன்றிக் கலந்து விடுகிறானாம். இவ்வாறு கலந்த நிலையே மஃரிஃபத்தாம்.

மஃரிஃபாவுடைய நிலயை எய்தி, இறைவனோடு ஃபனாவாகி - ஒன்றிக் கலந்து - விட்ட ஸூஃபிக்கு உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் இறைவனாகவே காட்சி வழங்குமாம். அவனும் இறைவன்தானாம். இந்த வழிகெட்ட கோட்பாட்டை ஸூஃபிஸத்தின் ஆரம்ப நிலையில் அனுபவித்த பக்த கோடிகள் அதைத் தம் உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.

"சொல்லத் தகுமல்ல இப்பொருளை
சுருட்டி மறைக்கிறேன் ஷரஹுக்காக"

என்று பீரப்பா பாணியில் ஆரம்பகால ஸூஃபிகள் மஃரிஃபா ஞானத்தை வெளிப் படுத்தினார்களில்லை.

இவ்வாறு ஒளிவு-மறைவாக மஃரிஃபா ஞானம் அடைந்து கிடந்தபோது அதை வெளிப்படுத்தி ஆன்மீக உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு 'புரட்சித் தலைவர்'.

"நேசனும் நேசிக்கப் பட்டவனும் ஒருவனே! என்னைக் காணும்போது அவனைக் காணுகின்றீர்கள். நாங்கள் இருவரும் ஒரே உருவில் ஒன்றிவிட்ட இரு ஆன்மாக்களாகும்" என்று அந்தப் புரட்சியாளர் பகிரங்கமாகப் பறை சாற்றினார்.

"அனல் ஹக் - நானே அல்லாஹ்" என்பது இவருடைய ஆன்மீக கோஷமாயிற்று. உடனே, அப்போதிருந்த ஷரீஅத் கோர்ட் உஷாராயிற்று. அந்தப் புரட்சித் தலைவரான ஹுஸைன் இப்னு மன்ஸூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபியை, காஃபிர் எனத் தீர்ப்புரைத்தது. அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரீ 309ஆம் ஆண்டு இராக்கில் நடந்ததாகும்.

தொடரும் …

செவ்வாய், ஜூலை 22, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19

பூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து, "வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப் போடுங்கள்" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்களாம்:
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).
திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.

அல்லாஹ்வின் கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்?

சுவனத்திலுள்ள 'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும் ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி, திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).
அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா?

வானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவா? அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும் ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச் சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).

உமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, ஏப்ரல் 04, 2008

அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்

சிரிப்பு என்பது மனிதனுக்கு "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆத்திகர்களும் "இயற்கையின் அன்பளிப்பு" என்று நாத்திகர்களும் வகை பிரிப்பர். வரமோ அன்பளிப்போ, சிரிப்பதால் மனிதனுக்கு நலன் விளைவது மட்டும் உண்மை என்று அறிவியல் கூறுகிறது. கடவுளின் இருப்பை நம்புவது கடவுளை மறுப்பவர்க்குச் சிரிப்பைத் தரும்; அதுபோலவே, கடவுளின் இருப்பை நம்புபவர்க்குக் கடவுளை மறுப்பது சிரிப்பைத் தரும். 

வெறும் உதட்டளவில் இல்லாது மனமாரச் சிரித்ததாகச் சென்ற வாரம் கோபால் ராஜாராம் திண்ணையில் எழுதியிருந்தது மகிழ்வளிக்கிறது! ஆனால், அதற்கு அவர் கூறிய காரணம் இயல்புக்கு முரணாக இருக்கிறது. //எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன்//என்று கோ.ரா. எழுதியிருக்கின்றார். புரியாத மொழியில் எழுதப்பட்ட ஒரு கருத்தை, அம்மொழியைத் தெரியாதவர் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், புரியாத ஏதோ ஒன்றுக்காக, எதிர்க் கருத்து என்பதாக ஒரு கட்டுரையே வடிக்க முடியுமா? 

வடித்திருக்கிறார் கோ.ரா. இதைத்தான் நகைமுரண் என்று கூறுவர் போலும். திண்ணையின் 20 மார்ச் 2008 பதிப்பில் வெளிவந்த எனது கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த,
"எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கை நெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்..." (புகாரீ 6110).
என்ற நபிமொழியில் அரபி மொழி எங்கே இருக்கிறது என்பதை கோ.ரா. தெரியப் படுத்தினால் நன்றியுடையவனாவேன். பெயர்ச் சொற்களைத் தவிர்த்து முடிந்தவரை எளிய தமிழில் எழுத வேண்டும் என்ற எனது விருப்பத்தை, பழக்கத்தைச் செம்மைப் படுத்திக் கொள்ள கோ.ரா. உதவ வேண்டும். //நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும், முன்னோர்களின் மரபணுப் பதிவின் கலவையுமாகப் பிறந்த நான் ஒரு எழுதப் படாத சிலேட் தான். அதற்குப் பின்பு என் பெற்றோர், என் சூழல், என் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப் பாடுகளும், சிந்தனைகளும் பெற்று வளர்ந்து நிற்கிற ஒருவன் நான். எல்லோருமே அப்படித்தான், வஹாபி உட்பட//என்று கோ.ரா. கூறுவது நான் எடுத்தாண்ட நபிமொழியின் வேறொரு கோணமான விளக்கம் என்றே நினைக்கிறேன். 

முன்னொரு காலத்தில் எங்கள் பகுதியில் இதே மாதிரி சிலேட் ஒன்று இருந்தது. அதற்குச் சட்டம் கட்டும்போதே அதன் சாதியின் பெயர் எழுதப்பட்டு விட்டதாக அதனிடம் சொல்லப் பட்டது. அதற்குச் சட்டையும் செருப்பும் அணியும் தகுதி மறுக்கப் பட்டது. தெருக்கள் பெரிதாக இருந்தும் ஓரமாக, பணிவுடன் நடக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப் பட்டது. மற்றவர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிடும்போது எங்கள் சிலேட்டுக்கு மட்டும் பலகாரக் கடைகளின் உள்ளே போகக்கூட அனுமதி மறுக்கப் பட்டது. கல்வி கற்பது தடுக்கப் பட்டது. சிலேட்டுக்குச் சிந்தனை வந்தது. ஒரு நாள் நிமிர்ந்து நின்று சொன்னது: "நான் முஸ்லிமாகிட்டேன்". அந்த சிலேட்டு தாங்கிக் கொண்ட சோதனைகளால் தன் சந்ததியரின் சாதிப் பெயரை அழித்தொழித்து, எல்லா உரிமைகளையும் வரித்தெடுத்துத் தன்மானத்துடன் வாழ வழி செய்தது.

உலகில், நம் நாட்டில், குறிப்பாக நம் தமிழகத்தில் தம் பழைய அடையாளங்களை அழித்துக் கொண்ட சிலேட்டுகள் நிரம்பக் கிடைக்கின்றன.

பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே எழுதப் படாத சிலேட்தான் என்பதில் எனக்கு எதிர்க் கருத்தில்லை. ஒரு குழந்தை இஸ்லாமியக் குடும்பத்தில் பிறப்பதால் மட்டும் 'முஸ்லிம்' ஆகி விடுவதில்லை. அதற்குப் பின்பு அதன் பெற்றோர், அதன் சூழல், அதன் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப்பாடுகளும் சிந்தனைகளும் பெற்று வளர்ந்து, இஸ்லாத்தை முழுதாக மனதளவில் ஏற்று அதன் வழிகாட்டுதல்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும்போதுதான் அது உண்மையான முஸ்லிம் ஆகிறது. எல்லாக் குழந்தைகளுமே தம் வாழ்க்கைப் பயணத்தை ஒரே எல்லைக் கோட்டிலிருந்துதான் தொடங்குகிறார்கள். யாருக்கும் யாரும் உயர்ந்தவர் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை. "வர்ண பேதம், உயர்வு-தாழ்வு, சாதி, மதம், இனம், மொழி போன்ற வெறியோ வேற்றுமையோ ஒரு குழந்தையோடு ஒட்டிக் கொண்டு பிறப்பதில்லை; அவை வளர்ப்பால் வருபவை" என்பதுதான் நான் எடுத்தாண்ட நபிமொழியின் கரு என்பதும் அதில் கடுகளவு பொய்யோ மிரட்டலோ இல்லை என்பதும் சின்னப் பிள்ளைக்கும் தெரியும்; திண்ணை வாசகர்களுக்கும் நன்கு தெரியும். 

***

இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இறுதிநபியைப் பற்றியும் ஏற்கனவே திண்ணையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ள பேரா. நாகூர் ரூமியின் கட்டுரையில் காணப் பட்டப் புகழுரைகளை நான் சுட்டியதன் நோக்கம் மிகத் தெளிவானதாகும். "உலகம் முழுதும் இஸ்லாம் எள்ளி நகையாடப் படுகிறது" என்று போகிற போக்கில் (திண்ணையில்) போட்டு விட்டுப் போனதை மறுக்கும் முகமாகத் திண்ணைச் சான்றுகளை மட்டும் முன் வைத்திருந்தேன். அவையனைத்தும் பிறமதத் தலைவர்களால், புகழ் பெற்ற அறிஞர்களால் கூறப் பட்டவை என்பதால் அவை சான்றுகளாக முன்வைக்கும் தகுதியைப் பெறுகின்றன. அவை மட்டுமின்றி, இதை எழுதத் தொடங்குவதற்குச் சற்றுமுன் படிக்கக் கிடைத்த வாடிகன் செய்தியான,
Islam has surpassed Roman Catholicism as the world's largest religion, the Vatican newspaper said Sunday. "For the first time in history, we are no longer at the top: Muslims have overtaken us," Monsignor Vittorio Formenti said in an interview with the Vatican newspaper L'Osservatore Romano. Formenti compiles the Vatican's yearbook.
போன்ற செய்திகளும் வேதவாக்குகளாக எடுத்துக் கொள்ளப் படவில்லை; பொய் சொல்லி ஆள் சேர்க்கும் அவல நிலையில் இஸ்லாமும் இல்லை; இஸ்லாத்துக்கு வெட்டி விளம்பரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாடிகன் இதழும் இல்லை என்பதே உண்மை. சிலர் போற்றுவதாலும் வேறு சிலர் தூற்றுவதாலும் ஒரு கொள்கை ஆதிக்கம் செலுத்துவதாகவும் பாதிக்கப் படுவதாகவும் இருப்பின் அது கொள்கையேயன்று. 

*** 

கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் நான் பிறந்த ஈரானை விட்டு இஸ்ரேலுக்குக் குடியேற மாட்டேன் என்பதை, "Iran's Jews not for sale" என்ற தலைப்பில் "The identity of Iranian Jews is not tradeable for any amount of money" என்று கூறும் ஈரானிய யூதர்கள் தங்களின் பிரதிநிதியாக மோரிஸ் மொடாமெட் என்பவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்று முழுமதச் சுதந்திரத்தோடுதான் ஈரானில் வாழ்கிறார்கள். குவைத்தை இராக் ஆக்கிரமித்த வளைகுடாப் போரின் தொடக்கத்தின்போது இராக்கின் துணைப் பிரதமராக இருந்த தாரிக் அஸீஸ் ஒரு கிருத்துவர். சமாதானம் செய்வதற்கு வந்த ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் புத்ரோஸ் புத்ரோஸ் காலியும் எகிப்து நாட்டுக் கிருத்துவர். புத்ரோஸின் தந்தை யூஸுஃப், எகிப்து அரசின் நிதியமைச்சராகப் பதவி வகித்த கிருத்துவர். 'அரபு நாட்டில் மதச் சுதந்திரம்' என்ற பேசுபொருளுக்குப் பொருத்தமாக அங்குக் கடந்த 24 மார்ச் 2008இல் புதிய சர்ச் ஒன்றை அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் ஆய்வக அமைச்சர் திறந்து வைத்திருக்கிறார் என்ற செய்தியை இங்குச் சொல்லி வைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவெனில் இதெல்லாம் வஹ்ஹாபி குரல் கொடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் இயல்பாக நடைபெற்று வருகின்றன என்பதைத்தான். 

***

//முகம்மது கார்ட்டூன்களுக்குத் தானே முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மோசஸ், ஏசு பற்றி காமெடியும், கார்ட்டூன்களும் வழமையாய் எல்லா மேற்கு நாடுகளிலும் உண்டே அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே// என்பது கோ.ரா.வின் ஆதங்கம். நாங்கள் இறைத் தூதர்கள் என்று நம்பும் எவர் இழிவு படுத்தப் பட்டாலும் கொதிப்படைவோம். ஏசுவை விமரிசிக்கும் டான் ப்ரவுனின் 'தி டா வின்ஸி கோட்' நாவலாக வெளிவந்தபோதும் திரைப்படமாக அது நீட்சி பெற்ற போதும் முஸ்லிம்கள் வாளாவிருக்கவில்லை. என்னதான் டான் ப்ரவுன் தனது முன்னுரையில், "இந்தக் கதையில் வர்ணிக்கப்படும் கலை, மதம், சம்பிரதாயங்கள் மற்றும் மதக்கோட்பாடுகள் எல்லாம் ஆதாரபூர்வமானவை; எதுவும் கற்பனையில்லை" என்று கதையளந்தாலும் முஸ்லிம்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கவில்லை:
The Da Vinci Code is a novel, a work of fiction. It does not present facts about Jesus's (as) life in a serious and respectful manner. It has fictionalized his life and story, and in this sense it has downgraded this great messenger of Allah. The author of The Da Vinci Code took some historical facts and then spun a mystery story to thrill and chill his readers. Allah's prophets and messengers should not be treated in this manner. They are entitled to receive utmost honor and respect from us. It is for this reason that Islam forbids making pictures of Allah's prophets and messengers and also forbids creating fictitious stories and movies about them. We as Muslims do not want to be known as people who react only when something wrong is done to the blessed name of our Prophet Muhammad(Peace be on him) We stand for the respect of all religious figures of all religions. Furthermore, Jesus (as) is also a blessed prophet for us. We believe in him and honor him. We also have something to say about this novel and movie.
"அன்னை மரியம்" என்று கண்ணியத்துடன் நாங்கள் குறிப்பிடும் மேரி அவர்களின் கற்பையும் ஆண் துணையின்றி அவர் ஏசுவைப் பெற்றெடுத்தது குறித்து விமரிசனம் வந்தபோதும் அதற்கான மறுப்பை ஆதாரங்களோடு ஆவணப் படுத்த முஸ்லிகள் தவறவில்லை:
In their recent books entitled Mary: The Mother of Jesus and Mary: A Dogmatic Journey, two "Catholic" writers, the journalist Jacques Duquesne and the theologian Dominique Cerbelaud, display an overt disbelief in the virginity of Mary the mother of Jesus Christ. Mr. Duquesne argues that it is a belief that is "not compatible with science." Mr. Cerbelaud asserts that the faith in the virgin birth came about "for reasons that spring from collective psychology." I believe both arguments to be inconsistent and based on a flawed understanding of science. Before explaining these, however, let me elaborate on why the virgin birth matters for me—since some non-Muslims might wonder why a Muslim cares about this controversy at all. The Virgin Birth According to the Qur'an As a Muslim, I am a passionate defender of the virgin birth of Christ, and all Muslims should be so. Why? Because this is one of the very important themes in the Qur'an. The Qur'an tells a great deal about the birth, works, and miracles of Jesus (`Isa in Arabic). His story starts with the angels' call to Mary (Maryam in Arabic) by which they declare the miracle of God—a son without a father. Mary is surprised: [She said, "My Lord! How can I have a son when no man has ever touched me?" He said, "It will be so. God creates whatever He wills. When He decides on something, He just says to it, 'Be!' and it is."] (Aal `Imran 3:47) There are many passages in the Qur'an in which Mary is highly praised. We read that angels said to her, ["Maryam, God has chosen you and purified you. He has chosen you over all other women"] (Aal `Imran 3:42). These verses make clear that Mary—along with Jesus himself—is a sacred figure for all Muslims.
நடிகை மாதுரி தீட்ஷித்தின் பரம பக்தரும் தான் பிறந்த ஊரான பந்தர்பூரிலுள்ள 'வித்தோபா' விக்கிரத்தை வணங்கி ஆராதனை செய்பவருமான ஓவியர் எம்.எஃப். ஹுஸைன், இந்து மதத்தினர் தெய்வமென வழிபடும் சரஸ்வதியை நிர்வாண நிலையில் ஓவியமாக வரைந்தபோது அந்தக் கிறுக்குக் கிழவரையும் அவருடைய கிறுக்குத் தனத்தையும் கண்டித்த முஸ்லிம்கள் நம் தமிழ் இணைய உலகிலும் உண்டு. 

 //1400 வருடங்கள் முன்பு இஸ்லாம் தோன்றவில்லை என்று வஹாபி சொல்வதும் எனக்கு விளங்கவில்லை// என்று கோ.ரா. வெளிப்படையாகக் கூறும்போது மீண்டும் நன்றாக விளக்க வேண்டியது என் மீது கட்டாயமாகிறது. மக்கா நகரிலுள்ள 'கஅபா' என்னும் இறையில்லத்துக்குச் சென்று 'ஹஜ்' என்ற வணக்கத்தை நிறைவேற்றுவது முஸ்லிம்களின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றாகும். இது, முஸ்லிம்களுள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கடமையாகும். இந்தக் கஅபாவைத் தம் மகன் இஸ்மாயீல் (இஸ்மவேல்) உதவியுடன் மறு சீரமைப்புச் செய்து கட்டியவர், முஸ்லிம்களின் இறைமறை பெருமை பொங்கப் பேசும் அண்ணல் இபுறாஹீம் (ஆப்ரஹாம்) என்ற இஸ்லாமிய இறைத்தூதர் ஆவார் [இறைமறை 022:026]. Maqaam Ibrahimஇறையில்லத்தைக் கட்டுவதற்காக அவர் நின்ற இடத்தருகில் ஹஜ்ஜுக்குச் செல்லும் முஸ்லிம்கள் வணக்கம் புரிய வேண்டும் என்பது [002:125] இறைக் கட்டளையாகும். இறைதூதர்களில் பலர் இவருடைய வழித்தோன்றி வந்ததால் 'நபிமார்களின் மூலத்தந்தை' என்று முஸ்லிம்களால் போற்றப் படுபவர். அவர்தாம் உலக வரலாற்றில் முதல் சிலைவணக்க எதிர்ப்பாளார். 

அண்ணல் இபுறாஹீம் அவர்களைப் பற்றிக் கூடுதல் விபரம் வேண்டும் எனில், 'கி.மு- கி.பிக்களின் கட்டுடைப்பு' என்ற திண்ணைக் கட்டுரையிலிருந்து பெறலாம். முஸ்லிம்களின் இறைத்தூதர்கள் பலரின் பெரும் பாட்டனார் அண்ணல் இபுறாஹீம் அவர்களின் காலம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அண்ணல் இபுறாஹீம் அவர்களுக்கும் அவர் வழி வந்த இறுதித் தூதரான நபிகள் நாயகத்துக்கும் இடையிலுள்ள இஸ்லாமிய இறைத் தூதர்கள் ஏராளம். எனவே, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் புதிதாகத் தோன்றவில்லை என்பதையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இஸ்லாம் மறு எழுச்சி பெற்றதே உண்மை என்பதையும் மீண்டும் ஒருமுறை நிறுவ விரும்புகிறேன். இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அதை, "இஸ்லாமிய மார்க்கம்" என்று குறிப்பிடுவர். மார்க்கம் என்பது "மார்க்" என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பதால் அதை, "வாழும்வழி", "வாழ்க்கைநெறி" என்று தமிழ்ப் படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மோஸஸும் ஏசுவும் அவ்விருவருக்கும் முப்பாட்டனாரான அண்ணல் இபுறாஹீமும் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைத்த முஸ்லிம் நபிகள் பலருள் மூவர் என்பது முஸ்லிம்களின் இறைமறை வழியாகப் பெறப் பட்ட ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுவதில்லை என்று நம்புகிறேன். 

நன்றி!
ஃஃஃ

சனி, ஜனவரி 26, 2008

இரண்டில் ஒன்று

சென்ற வாரத் திண்ணையில் மலர் மன்னன் எழுதிய கடிதம் படித்தேன். முஸ்லிம்களை 'முகமதியர்' என எழுதுவது குறித்து, சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெளிவு படுத்திக் கொண்டு எழுதுவதே எழுத்து நேர்மையாகும். ஏனெனில்,
"எந்தவொரு விஷயம் குறித்தும் ஒருவரிடம் விசாரித்து விவரங்களைப் பொது நலன் கருதி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் உரிமையும் ஊடகத்தாருக்கு உண்டு"
என்ற அறிவுரையை எழுதியவரே மலர் மன்னன்தான். போகட்டும். சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாகச் சென்று, கேட்டு முடிவு செய்ய முடியாத நிலை மலர் மன்னனுக்கு இருக்கக் கூடும். அவருக்கு மட்டுமின்றி, திண்ணை வாசகர்களுக்காகவும் கென்னெத் வில்ஸனின் 'The Columbia Guide to Standard American English' அகராதியின் MUHAMMADAN பகுதி:
MUSLIM, MOHAMMEDAN, MOSLEM, MUHAMMADAN (adjs., nn.) A Muslim (variously pronounced, but most commonly MUHZ-luhm, MUHZ-lim, or MUZ-lim) is an adherent of Islam. Moslem (MAHZ-luhm or MAHS-luhm) is a variant of Muslim. Muhammadan and Mohammedan are based on the name of the prophet Mohammed, and both are considered offensive. Muslim, as both noun and adjective, seems to be the most acceptable to all concerned.
முகமதியர்/முகமதியம் ஆகிய இரு சொற்களும் முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் (both are considered offensive) சொற்கள் என்பதுதான் உண்மை. இதற்குப் பின்னரும் முஸ்லிம்களைக் 'காயப் படுத்துதல்' தொடர்வதையோ முடிவுற்றதையோ மலர் மன்னனின் எதிர்கால எழுத்துகளால் வாசகர்கள் இனங் கண்டு கொள்வார்கள். ***
"நான் பழகியவரை வட மாநிலங்களில் முகமதியர் என்றோ முகமதியம் என்றோ குறிப்பிடுவதை எவரும் ஆட்சேபிப்பதில்லை. ஹிந்தி என இக்பால் குறிப்பிட்டது ஹிந்துஸ்தானத்தவர் நாம் என்பதாக என்கிற விஷயத்தைத்தான் நினைவூட்டினேன். அன்பர் வஹ்ஹாபி சவூதிக்குப் போனால் அவரை ஹிந்தி என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்தியன் என்றல்ல!"
என்று மலர் மன்னன் தன் கடிதத்தை முடிக்கிறார். இறுதிச் சொற்றொடரில் அவர் குறிப்பிடும் ' ஹிந்தி' பற்றி நான் விசாரித்து அறிந்து கொண்டவை யாவையெனில், ஒருவேளை நானும் மலர் மன்னனும் சவூதிக்குப் போனால் எனது தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். இஸ்லாமியச் சமயச் சார்பினால் என்னை مسلم என்று அரபியிலும் Muslim என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனாயிருப்பின், தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் சமயம் என்பதில் هندوسي என்று அரபியிலும் Hindu என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனுக்கும் திண்ணை வாசகர்கள் பலருக்கும் சவூதியில் வாழும் நண்பர்கள் இருக்கலாம். விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்க! அப்படியே, காந்திஜி வடநாட்டுக்காரர்தானா? என்று உள்ளூரிலும் விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய புதுக் கட்டாயமும் நமக்கு இப்போது ஏற்பட்டு விட்டது! ஏனெனில், (1) முஸ்லிம்களைத் தனது பேச்சிலும் எழுத்திலும் Muslims, முஸல்மான் என்று முறையே ஆங்கிலத்திலும் ஹிந்தி மொழியிலும் குறிப்பிட்ட காந்திஜி, வடநாட்டுக்காரார் அல்லர். (2) "முஸ்லிம்களை வேண்டுமென்றேதான் முகமதியர் என்று எழுதுகிறேன்" என்று கூறுவதற்குச் சொல்லாண்மை இல்லாத மலர் மன்னன், வடநாட்டுக் கதையளக்கிறார். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அந்த ஒன்று எதுவெனத் திண்னை வாசகர்கள்தாம் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
ஃஃஃ
சுட்டிகள்: 1 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801177&format=html 2 - http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/ 3 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&format=html 4 - http://www.bartleby.com/68/87/3987.html

ஞாயிறு, டிசம்பர் 09, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17

செக்கச் சிவந்த ஆடை அணிந்து, செஞ்சந்தனத்தை மேனியெங்கும் பூசியவர்களாக, செம்மணியிலான ஆபரணங்களையும் சூடிக் கொண்டு, திரண்டு நின்ற பெண்கள் அலீ (ரலி) அவர்களின் அழகைக் கண்ணாரப் பருகினர். அந்தப் பெண்களது உள்ளத்தின் உள்ளே உள்ளக் காமத்தீயின் சிவப்புதான் இவ்வாறு வெளித் தோற்றத்திலும் சிவப்பு மயமாகப் பிரதிபலிக்கிறதோ என வியந்து பாடுகிறார் புலவர் (பாடல் 139).

"அலீயின் அழகைப் பார்ப்பதற்கு இமைகள் இல்லாத ஆயிரம் கண்கள் வேண்டும்" (பாடல் 142).

"பாத்திமா ஒருத்தி மட்டுமோ இந்தப் பேரழகையெல்லாம் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறாள்" (பாடல் 146).

என்றெல்லாம் அங்குத் திரண்டிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்களாம். அவ்வாறு பேசிக் கொண்ட பெண்களின் நிலை பற்றிப் புலவரப்பா பாடுவதைக் கேளுங்கள்:
சிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். (பாடல் 141).
அலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப் பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச் சொட்ட வருணித்துச் செல்கிறார்.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஒவ்வொரு பருவப் பெண்ணின் அங்கங்களையும் வருணிக்கும்போது புலவர் தீட்டுகின்ற சொல்லோவியங்களைப் படித்துப் பார்த்தால், "இதுவும் ஓர் இஸ்லாமிய இலக்கியமா?" என அவை முகம் சுழிக்கச் செய்கின்றன.

ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் கற்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபித்தோழியராம் ஸஹாபியப் பெண்டிரைப் பற்றி இப்படி ஆபாசமாக, அவர்களின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும் விதமாகப் பாடத் துணிந்து விட்டது அவர்மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறன்றோ?

"இளமுலைப் பேதையும்" (பாடல் 148); "குரும்பையின் முலையுடைய பொதும்பையும்" (பாடல் 151); "செம்பொன் குவிமுலை மங்கையும்" (பாடல் 153); "வார் அறுத்து எழுந்து வீங்கும் வனமுலை மடந்தையும்" (பாடல் 155); "கோங்கிள முலை அரிவையும்" (பாடல் 156); அலீ (ரலி) அவர்களைச் சுற்றி நின்று மொய்த்தார்களாம்.

"குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து" நின்ற பெண்களுள் ஒருத்தியாகிய பேரிளம்பெண் என்பவள், "அலீயினைச் சேரா மாதர் அலி என இருத்தல் நன்று" என உரத்துக் கூறி நின்றாளாம் (பாடல் 159).

இவ்வாறாகத் திருவுலா வந்த அலீ (ரலி) அவர்கள் கடைசியாகத் திருமணப் பந்தலை அடைந்தார்கள். பந்தல் வாசலில், "... வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்பக் குரவை எம்மருங்கும் சூழ்ந்து" கடலொலி போல் முழங்கிற்றாம் (பாடல் 166).

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், ஆகஸ்ட் 02, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15

கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுடைய வரலாற்று நாவல்களை நம்மில் பலர் படித்திருக்கிறோம். வரலாற்று மாந்தர்களோடு தம் சொந்தக் கற்பனையையும் வருணனைகளையும் கலந்து, படிப்பவர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய அளவுக்கு இந்த நாவலாசிரியர்கள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்வர். அதிலும் சாண்டில்யன் போன்றோருடைய படைப்புகளில் விரசமான வருணனைகள் விரிவாக இடம் பெறுவதுண்டு.

அதே சாண்டில்யன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வரலாற்று நாயகரின் புண்ணிய நாயகியரைப் பற்றி அவருடைய 'மாமூலான பாணியில்' விரசமாக வருணிப்பாரானால் முஸ்லிம்கள் அதனைச் சகித்துக் கொள்வார்களா? 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா? ஒருபோதும் மாட்டார்களன்றோ! காரணம்,
"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத் திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த் திகழ்கின்றனர்..."[033:006].
என்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதை மனதில் ஏந்திக் கொண்டு இந்த 'இலக்கிய'ப் பிரச்சினையை அணுகுவோம். இன்றைக்கு நாவல் என்னும் இலக்கிய வடிவம் பெற்றிருக்கின்ற செல்வாக்கினை பதினேழாம் நூற்றாண்டில் செய்யுள் வடிவம் பெற்றிருந்தது. உமறுப் புலவர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் 'வரலாற்று நாவல்'தான் எழுதியிருப்பார். ஆனால், அவருடைய காலம் 17ஆம் நூற்றாண்டாக இருந்தமையால் அக்காலத்தில் வழக்கிலிருந்த 'செய்யுள் வடிவத்தில்' அவர் இலக்கியச் சேவை(!) செய்ய வேண்டியதாகி விட்டது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றை, செய்யுளில் காப்பியமாகப் பாடலானார்.

அவ்வாறு பாடிய உமறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றுக்குப் புறம்பான பல கட்டுக்கதைகளைத் தம் காப்பியம் நெடுகக் கட்டவிழ்த்து விடுகின்றார். அதோடு மட்டுமின்றி, அன்னை கதீஜா முதலியவர்களைப் பற்றிப் புலவர் பாடுமிடங்கள், நம் பார்வையைக் கூசச் செய்கின்றன. கதீஜா நாயகியைப் பற்றிய உமறுவின் வருணனையை ஓரளவு பார்த்தோம்.

அந்நியப் பெண்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கின்றது. ஆனால், உமறுப் புலவரின் எழுத்தாணியோ நமது அன்னையர் திலகங்களைப் பற்றியே திரைக்கப்பால் சென்று தரங் கெட்டு வருணிக்கிறது.

இந்நிலையில், இத்தரங் கெட்ட வருணனைகளைத் தன்னகத்தே கொண்ட சீறாப்புராணத்தைப் பாடியவர் 'உமறு' என்னும் பெயருடைய ஒரு முஸ்லிம் புலவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய வரம்பு மீறிய வருணனைகளை 'இலக்கியங்கள்' என்று நியாயப் படுத்தி நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14

பாவையர் உரைத்த வண்ணம் பச்சைக் கடுதாசின் கண் மேவரக் கனகமையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையின் நினைவு மாறாச் செவ்விய ஜிபுறயீல் பால் ஈவது ஈது என்னவோதி இறையவன் அளித்திட்டானால் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 55)
வரத்தினில் உயர்ந்த பேறே! மகுசறு வெளியில் என்றன் கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை ஒருத்தரும் தீண்டாவண்ணம் உயிரென ஓம்பி ஓர்பால் இருத்தும் என்று இறசூலுல்லா இளந்தளிர் கையில் ஈந்தார் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 62).
கொஞ்சமும் ஆதாரமற்ற புனைசுருட்டான சமாச்சாரங்கள் இவை. அல்லாஹ், ஜிப்ரீல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பாத்திமா நாயகி ஆகியோரைப் பற்றி உமறுப் புலவர் இவ்வாறு புனைவதற்கு எங்கிருந்துதான் ஆதாரங்களைப் பெற்றாரோ? துணிச்சலைப் பெற்றாரோ?

விண்ணுலக நிக்காஹ்வையும் இந்தப் பச்சைக் கடுதாசிச் சங்கதிகளையும் தொடர்ந்து, பாத்திமா நாயகிக்கு மண்ணுலகின் மதினமா நகரில் நிகழ்ந்த நடைமுறைத் திருமணத்தைப் பாடும் போது உமறுப் புலவரின் கற்பனை, இன்னமும் 'பச்சை'யாகப் பரந்து செல்கிறது. அந்தப் பகுதிகளைக் காண்பதற்கு முன் இத்தகைய இஸ்லாமிய(?) இலக்கியங்களைப் பற்றி வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மார்ச் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9

இஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப் பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ... ஏராளம்.

தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால், ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம்பெற்றிருக்காது.

ஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக் கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை, 'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது செய்து எழுந்தனவாம்.

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.

சீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும் உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன.

உலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.

புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 106)

பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ஸுஜூது செய்த கஃபத்துல்லாஹ், "இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்" என்று வாய் திறந்து ஓதியதாம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, அக்டோபர் 08, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 5

இஸ்லாம் என்பது சான்றாதரங்களாகிய 'இஸ்னாது' என்னும் தூண்களின் மீது நிறுவப் பட்ட வாழ்க்கை நெறியாகும். "நமக்கும் மற்றவருக்குமுள்ள வேறுபாடு, இஸ்னாது எனும் தூண்களாகும்" -அறிவிப்பவர்: இபுனுல் முபாரக், ஆதாரம்: முஸ்லிம். இஸ்லாத்தின் சான்றாதரங்களாகத் திகழும் குர்ஆன்-ஹதீஸ் என்னும் அடிப்படைகளைப் பற்றிக் கவலைப் படாமல், பொய்யும் புனைவும் கலந்து பாடப்பட்ட, மார்க்கத்துக்குப் புறம்பான பாடல்கள் பலவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழனியில் களைகளாக மலிந்துள்ளன. இன்று நம்மிடையே காணப் படுகின்ற இஸ்லாமிய இலக்கியங்கள் பல, இஸ்லாத்துக்கு வலு சேர்ப்பதைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை. இலக்கியத்தின் நாளங்களிலெல்லாம் இரத்தம் பாய்ச்ச வேண்டிய இவை, சீழைச் செலுத்தி இஸ்லாத்தை வியாதிப் படுத்த முயன்றுள்ளன. மார்கத்துக்கு முரணான இத்தகையக் கவிதைகளைப் பற்றி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளம் காட்டிச் சென்றுள்ளார்கள்.
"உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" புகாரீ-5688.
இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகளைக் குர்ஆன்-ஹதீஸ் முன்னால் நிறுத்தி நுணுகி ஆராயும்போது - ஸ்கேன் செய்து பார்க்கும்போது - அவற்றினுள்ளே எந்த அளவுக்குச் சீழ் மண்டியுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஒருவருடைய உடலில் எங்கேனும் சீழ் கட்டியிருப்பது அவருடைய முழு ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஊறு விளைவிப்பதாகும். எனவே, எத்துணை வேதனையாலும் தாங்கிக் கொண்டு, சீழை அப்புறப் படுத்தி, நலம் பெறுவதையே எவரும் விரும்புவர். இப்படியிருக்க, நம் உயிரினுமினிய இஸ்லாத்தின் மீது சீழ் நிரம்பியுள்ள எத்துணையோக் கவிதைக் கொப்புளங்கள் கிளம்பிப் புரையோடிப் போயுள்ளதை நம்மில் பலர் கண்டும் காணாது போகின்றனர். இந்தச் சீழ் வடியும் கவிதைகளைப் பிதுக்கிக் காட்டும்போது, இவர்கள் வேதனையால் துடித்துப் போகின்றனர். இவ்வேதனை எந்த விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளத் தக்கதுவே என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். இஸ்லாத்தைப் புண்படுத்தும் கவிதைகளை அடையாளம் காட்டுவோரை இவர்கள் புண்படுத்தத் தொடங்குகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத்துக்கு முரணான கவிதையைச் "சீழ்" என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, அத்தகையக் கவிதைகளைப் புனையும் கவிஞனை "ஷைத்தான்" எனவும் வெறுத்துக் கூறியுள்ளனர். அல்குர் ஆனின் 026:221ஆவது வசனத்தில் பொய் புனைபவர்களை ஷைத்தான் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றும் அமைந்துள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 'அர்ஜ்' என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்; உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, அவருடைய உள்ளத்தில் சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" என்று கூறினார்கள் - முஸ்லிம் 4193.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மே 18, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - முன்னுரை (சுருக்கம்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்! அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! மனித குலம் இம்மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும் என்பதற்காக, மனிதனைப் படைத்த இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியே அல்குர்ஆன் ஆகும். இந்த வாழ்வியல் நெறிக்கேற்ப எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துப் பெருவாழ்வு வாழ்ந்து சென்றவர் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களாவர். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் அல்குர்ஆன் என்னும் இறைமறையும் ஹதீஸ் என்னும் நபி நெறியுமேயாம். இலக்கியம் உள்ளிட்ட மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அழகிய வழிகாட்டுதல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. இலக்கியத் தளத்தில் நின்று தூய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை மேலோங்கச் செய்கின்ற நூல்கள் உலகெங்கும் தோன்றியுள்ளன. தமிழ் மண்ணில் இஸ்லாம் பரவிய ஆரம்பக் காலகட்டங்களில் 'இஸ்லாமியக் கொள்கைகளை எடுத்தியம்புவதற்காக' எனச் சொல்லிக் கொண்டு, தமிழ் இலக்கியங்கள் பல புனையப் பட்டன. இஸ்லாமியப் பழந்தமிழ் இலக்கியம் எனச் சொன்ன மாத்திரத்தில், உமறுப் புலவரின் சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் உடனடியாக நினைக்கத் தக்க அளவுக்கு முதலிடம் வகிக்கின்றன. தக்கலை பீர்முஹம்மது ஸாஹிபு, கோட்டாறு ஞானியார் ஸாஹிபு போன்ற ஸூஃபிப் புலவர்களின் பாடல்கள் அந்தந்த வட்டாரங்களில் சிறப்பாகப் போற்றிப் பயிலப் படுகின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் என அறியப் படுகின்ற இந்த நூல்கள், இஸ்லாம் காட்டுகின்ற இலக்கிய நெறிப்படி அமைந்திருக்கின்றனவா? இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இந்த இலக்கியங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்திப் பாடியுள்ளன? திருமறை-நபிநெறி வெளிச்சத்துடன் இந்த இலக்கியக் கழனியில் 'இறங்கி'ப் பார்க்கிற போது, பயிர்கள் அளவுக்குக் களைகளும் மலிந்துள்ளமையைக் காண முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால் பயிர்களை விடக் களைகளே மிகுதி எனலாம். இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காப்பிய மரபும் சைவசித்தாந்த மரபுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசும் முயற்சியிலேயே முஸ்லிம் புலவர்கள் சிரத்தை எடுத்துள்ளனர். உமறுப் புலவரின் விபரீதக் கற்பனையில் இஸ்லாமிய மாண்புகள் மலினப் படுத்தப் பட்டுள்ளன. ஓரிறைக் கொள்கையைக் கொச்சைப் படுத்துகின்ற அத்துவைதச் சீழ்வடியும் கவிதைகளைப் பாடிப்பாடி, ஞானக் கவிஞர்கள் இலக்கியத் தாகம் தணித்துள்ளனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் குணம் நாடி, அவற்றைப் பாராட்டுகின்ற வகையில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் குணத்தைக் காட்டிலும் மலிந்து காணப் படும் குற்றங்களைப் பேசுகின்ற முழுநூல் எதுவும் இதுவரை வெளிவந்ததில்லை. முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் மீது முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் கொண்டிருக்கும் பாசத்திரையானது, உண்மையைப் புலனாய்ந்திடும் முயற்சிக்குத் தடை போட்டிருக்கலாம்!.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருங்கள். உங்களுக்கோ (உங்களின்) பெற்றோருக்கோ (உங்களின்) நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்காளாக இருங்கள் ..."
என இறைமறை குர்ஆன் [004:135] எடுத்துரைத்துள்ளது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனப் பெயர் பண்ணிக் கொண்டு, தூய இஸ்லாத்திற்கு அநீதி இழைத்துள்ளன பல இலக்கியங்கள். இவற்றைப் பாடியோர் நமது புலவர் பெருமக்களாகிய 'அப்பா'மார்களாக இருக்கலாம். இந்த இலக்கிய அநீதியை எடுத்துரைப்பது, அந்தப் புலவர் பெருமக்களுக்கு விரோதமிழைப்பது போலிருந்தாலும் கூட, அல்லாஹ்வுக்காக நாம் உண்மை சாட்சியுரைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிருத்தியே 'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்னும் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.

இஸ்லாத்துக்கு விரோதமாகப் "பொய்யையும் புனைசுருட்டையும் பாடுகின்ற கவிஞர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர்" என இறைமறை குர்ஆன் எச்சரிக்கிறது.

இஸ்லாத்துக்கு அநீதி இழைத்து இலக்கியம் பாடிவந்த ஒரு கவிஞனை 'ஷைத்தான்' என்றும் அவனது கவிதையை 'நாற்றமெடுத்த சீழ்' என்றும் நபி (ஸல்) அவர்கள், கடுமையான சொற்களால் வைதுள்ளனர்.

அப்பழுக்கற்ற இஸ்லாமியத் தடாகத்தில் அப்பாமார்களின் பாடல்கள் நஞ்சைக் கலந்துள்ளன. இதைக் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நெஞ்சம் கொதிப்பது இயல்பே! அந்த நெஞ்சக் கொதிப்பு, இந்நூலில் சில இடங்களில் வெம்மையான சொற்களில் வெளிப் பட்டிருக்கலாம். அதுவுங்கூட நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதே என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

இம்முயற்சியில் எம்மை ஈடுபடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்குச் சிரம் பணிந்து நன்றி பாராட்டுகிறேன்.

- ஹஸ்ஸான்

வெள்ளி, மே 12, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - அறிமுகம்

'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்ற பெயரில், இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனத்தாரால் 1999இல் ஓர் ஆய்வு நூல் வெளியிடப் பட்டது. மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் பணியாற்றியத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எனது அன்புக்குரியவருமான சகோதரர் 'ஹஸ்ஸான்' என்ற ஜமாலுத்தீன் அவர்களின் தெள்ளு தமிழ் நடையில் வெளிவந்த இவ்வாய்வு நூலை, வலைப்பூவில் பதிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை! என் ஆசைக்கு இரு காரணங்கள் உள. 1. அன்னாரின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. 2. அன்னார் மறைந்து விட்டார்; அவர் எழுத்து மறையக் கூடாது. எனவே, அவருடைய மகனாரின் அனுமதி பெற்று என்னாசையை நிறைவேற்றும் முகமாக, இவ்வாரம் முதல் இங்குப் பதிக்கத் தொடங்குகிறேன். இந்நூலுக்கு 'இஸ்லாத்துக்கு எதிரான இலக்கியங்கள்' என்ற தலைப்பே மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து.  

பேரா. ஹஸ்ஸானோடு பணியாற்றிய முனைவர் 'AMSA' கபீர், M.A. PhD அவர்கள், இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையின் சுருக்கம்: 
லக்கிய வளமையும் இலக்கணச் செழுமையும் எண்ணவியலாத் தொன்மையுங் கொண்ட நம் தாய்மொழித் தமிழை, சமயங்களே வளர்த்தன எனலாம். அந்தளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் சமயங்களின் பங்களிப்பு அமைந்திருக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களாயினும் நீதி நூல்களாயினும் சிற்றிலக்கியங்களாயினும் அவை சமயம் சார்ந்தே அல்லது சமயச் சார்பார்ளாராலே இயற்றப் பட்டுள்ளன. சமணரும் பெளத்தரும் சைவரும் வைணரும் வழங்கிய அளவுக்கு முஸ்லிம்களும் எண்ணிலா இலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்த்தனர்.  

பதினான்காம் நூற்றாண்டின் 'பல்சந்த மாலை' முதல் இன்று வரை இஸ்லாமியர் வழங்கிய - வழங்குகின்றத் தமிழ் இலக்கியங்கள் ஏராளம்; ஏராளம். இவற்றைப் பிறருக்கு அறிமுகப் படுத்தி, தமிழுக்கு எங்கள் பங்களிப்பும் எவருக்கும் குறைந்ததன்று என்று காட்ட, "இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்ற முழக்கத்துடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் பல நடத்தப் பட்டன. நம் தமிழரும் இவற்றோடு அறிமுகம் பெற்றனர்; இவைதாம் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்களின் தொகுப்பு என எண்ணத் துவங்கினர்; முஸ்லிம்களில் பலரும் இப்பாடல்களையே இஸ்லாத்தின் ஆதாரமாகக் காட்டத் தலைப் பட்டனர். 

தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட 'ஏகத்துவ மறுபுரட்சி'க்குப் பின், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் நாம் ஆய்வு செய்தபோது, 'ஐயகோ, கைசேதமே!' என்றெல்லாம் துயருறும் அளவுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான - அடிப்படையையே தகர்க்கின்ற அளவுக்கு அபத்தங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செய்திகளும் பொய்களும் அவற்றில் மலிந்திருப்பதைக் கண்டோம்!. எவற்றை "ஆஹா, பாரீர் எம் இலக்கியங்களை" என்று பெருமையுடன் காட்டினோமோ அவற்றையே, "ஐயோ, தொடாதீர்! இஸ்லாத்தையே தகர்கின்றன இவை" என அடையாளம் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டோம்.  

அடையாளத்துக்காகச் சில சான்றுகளைக் காட்டுவது இங்குப் பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன். பெருமானாரின் மனைவியராம் முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் பெருமானாரின் அன்பு மகளார் ஃபாத்திமா அவர்களைப் பற்றியும் உமருப் புலவர் வரம்பு கடந்து வருணித்துள்ளார். அலீ-ஃபாத்திமா திருமணத்தின்போது, அலீ அவர்கள் திருமண உலா வரும் வேளையில் எழுபருவப் பெண்களும் அலீ அவர்களின் அழகைக் கண்டு காதல் கொண்டு நின்றனர் என்பதாக உமருப் புலவர் பாடிச் செல்கிறார்:
" குவிபெருந்தானை நாப்பண் கூண்டவை அலீயென்றோதும் பவனியின் தருவை நோக்கிப் பல கொடி படர்ந்ததன்றே"
(ஃபாத்திமா திருமணப் படலம், பாடல்: 135) நபித்தோழியராம் ஸஹாபிப் பெண்களை இவ்வாறு தரக்குறைவாகப் புலவர் வருணித்துச் செல்வதை இந்நூலாசிரியர் விளக்கமாக எடுத்தெழுதியுள்ளார். இந்துமதச் சித்தாந்தத்தின் 'ஜெராக்ஸ் காப்பி'யாகவே குணங்குடி மஸ்தானின் பாடல்கள் காணக் கிடைக்கின்றன என்பதை இந்நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளது. 

'அஞ்ஞானக் குணங்குடி', 'சன்னியாசியின் சல்லாபம்', 'இஸ்லாமியத் தாயுமானவர்', 'ஜெதிபு யோகம்' ஆகிய தலைப்புகளின்கீழ் ஆசிரியர் இதனை நன்கு ஆராய்ந்துள்ளார்.
"ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நான்காம் ஓதிய ஷரீஅத்தென்றும் உவந்திடும் தரீகதென்றும் நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் காணலாம் என்று அகுமதர் அருளிச் செய்தார்" (ஞானமணி மாலை, பாடல் : 11)
போன்ற பீரப்பாவின் பாடல்கள் மெய்யான ஹதீஸுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டு அமைந்துள்ளன. 'அல்லாஹ்தான் முஹம்மது நபியாக அவதரித்தான்' என்ற கேடுகெட்ட அவதாரக் கொள்கையைப் பீரப்பா இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டிப் பாடியுள்ளார்.
"இப்புவியில் ஊனுருவாய் நீ அகுமது ஆனவனே"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 134)
"நீயே உனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் நீயே புவிக்குள் ரசூலாக வந்தவன்"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 118) இம்மாதிரிப் பாடல்களை மாபெரும் ஸூஃபிஸ இலக்கியங்களாக இஸ்லாமியர் போற்றிப் பயிலுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற இந்த இலக்கிய முரண்பாடுகள் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. மாறாக, இவற்றையே இஸ்லாமியக் கொள்கைகள் எனப் பெரும்பாலான முஸ்லிம்களும் மற்றோரும் நம்பியிருந்தனர்; நம்பியிருக்கின்றனர். அந்தத் தவறான நம்பிக்கையை இந்நூல் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை. 
 
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.