வெள்ளி, நவம்பர் 05, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 29

இவருக்குக் 'குணங்குடியார்' என்ற பெயர் ஏன் வந்தது? இவர் அதை ஒரு குறிச்சொல்போல் தமது பாடல்களில் கூறுகிறார். அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லும்போது குணங்குடி ஆண்டவன் என்கிறார்:
ஆண்டவன் என்செய்வானோ - குணங்குடி
ஆண்டவன் என்செய்வானோ
ஆண்டவன் அணைத்து என்னை அருகில் வைத்திடுவானோ
தீண்டியும் பார்க்காமல் தெருவில் விட்டிடுவானோ
எனப் பாடுகிறார்.
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே
எனப் போற்றும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்குக் குணங்குடி என்ற அடையைக் கொடுக்கிறார்.
சற்குணங்குடி கொண்ட ஷாஹுல் ஹமீதரசரே
எனச் சொல்லும்போது நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களோடும் குணங்குடியை இணைத்துப் பேசுகின்றார்.
இனி, தன்னைப் பற்றிப் பாடும்போதும் குணங்குடியான் எனச் சுட்டுகிறார்:
ஐயன் குணங்குடியானை அன்றி வேறு
உண்டென்று உள்ளாய்ந்து பார்த்தேன்
ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும்
என்னுள்ளாய்க் காணேன்
ஐயன் குணங்குடியானே யானே
என்று அறிந்த பின்பு, என் அறிவாய் நின்ற ஐயன்
குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே
என அமைகிறது பாடல்.

ஆக, இவருடைய பார்வையில் அல்லாஹ், முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாஹுல் ஹமீது ஆகியோரும் இவரும் குணங்குடியார்கள்தாம். இவருடைய பாடல் போக்கைப் பார்த்து, இந்த நால்வருள் யாரைக் குணங்குடியான் எனச் சுட்டுகிறார் என்பதை, படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ரு சோற்றுப் பதமாக இங்குத் தரப்பட்டுள்ள பாடல்களையும் இவரது நூலிலுள்ள இன்னபிற பாடல்களையும் ஒருங்கு நோக்கிப் பார்க்கும்போது, "எல்லாரும் அல்லாஹ்வே" என்ற கொள்கையை - வஹ்தத்துல் உஜூத் - எனும் அத்துவைதக் கொள்கையை உடையவராகக் குணங்குடி மஸ்தான் இருந்துள்ளார் எனும் முடிவுக்கு வருகின்றோம்.

இதன்படி முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் நாகூர் ஷாஹுல் ஹமீது அவர்களும் இவருடைய பார்வையில் அல்லாஹ்வாகவே படுகின்றனர். இவருடைய உள்ளத்தில் அல்லாஹ் இருக்கிறானாம். அதனால் இவரும் அல்லாஹ் ஆகிவிடுகின்றார்.

"ஐயன் குணங்குடியானே யானே என்று அறிந்த பின்பு ..." எனும் வரியில் குணங்குடியாகிய அல்லாஹ் நானே என்பதைத்தானே சுட்டுகிறார். இன்னும் காண்கின்ற பொருள் எல்லாமே இறைவன்தான் என்பதைப் பறைசாற்றும் பித்தன் மஸ்தானின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்:
ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய் ஒன்றாய் இரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன் பேருமாகிக்
கானாகி அலையாகி அலைகடலுமாகி மலை
கானக விலங்குமாகிக்
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள் எவையுமாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூதமாகி
நாடும் ஒளிபுரிய அடியெனும் உமை நம்பினேன் நன்மை செய்து ஆளுதற்கே
வானோரும் அடிபணிதலுள்ள நீர் பின்தொடர வள்ளல் இரசூல் வருகவே
வளரும் அருள் நிறை குணங்குடி வாழும் என் இரு கண்மணியே முகியித்தீனே.
தொடரும், இன்ஷா அல்லாஹ்.